Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ராஹாப்
"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்"
- ஜே. ரகுநாதன்|டிசம்பர் 2020|
Share:
சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமை மாலை ஆறரை மணி.

சின்ன சுப்புக்குட்டி கொட்டாவி விட்டபடி கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வாடிக்கை யாரும் இல்லை. கடைப்பையன் சன்னாசிகூட ஏதோ வேலை என்று நாலு மணிக்கே போய்விட்டான். வயிறு கொஞ்சம் நமநமவென்று குடையவே சின்ன சுப்புக்குட்டி கைப்பிடி முந்திரியை எடுத்துத் தின்ன ஆரம்பித்த அந்த வேளையில்தான் அவன் கடைக்கு நேரெதிரே தெருவில் ஒரு வயதான ஆசாமியை இரண்டு முரடர்கள் அடி அடி என்று அடித்து, ரத்த விளாறாய்ப் போட்டுவிட்டு அவனுடைய பர்சைக் கவர்ந்துகொண்டு வேகமின்றி அசால்ட்டாக நடந்து சென்றதைப் பார்க்க நேர்ந்தது.

சுப்புக்குட்டிக்கு வெலவெலத்துப் போய்விட்டது. கையிலிருந்த முந்திரி நழுவ, தபதபவென்று ரோடுக்கு ஓடினான். பயத்தில் மறுபடி கடைக்கு ஓடினான். இரண்டு தடியர்களும் தெருத்திருப்பத்தில் மறைய சுப்புக்குட்டி கொஞ்சம் தைரியம் பெற்று மறுபடி ரோடுக்கு ஓடினான். அடிபட்ட ஆசாமி முனகல்கூட இல்லாமல் கிடந்தார். முகம் ரத்தக்காடு. காது அறுந்து தொங்க, கர்ப்பத்தினுள் இருக்கும் சிசுவைப்போல கிடந்தார். வயிற்றுப்பகுதியில் சட்டை கிழிந்து உதைபட்ட இடத்திலும் ரத்தம். கண்கள் மூடி இருந்ததால் உயிர் இருக்கும் என்று சுப்புக்குட்டி தீர்மானித்தான்.

"அய்யோ! யாராவது வாங்களேன்!" என்று கத்தியவாறு ரோடில் அங்கேயும் இங்கேயும் கார் வரும் சமயத்தில் கடக்கும் கோழிக்குஞ்சுமாதிரி அலை பாய்ந்து, கொஞ்சம் சுதாரித்து, நினைவு வந்தவனாய் அவன் கடையிலேயே இருந்த ஒரு ரூபாய் ஃபோனில் 100ஐ டயல் செய்தான்.

"கயாங் கயாங்" என்ற சத்தத்தோடு ஆம்புலன்ஸ் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய்விட, சற்றே நடுங்கியவாறே உட்கார்ந்திருந்த சுப்புக்குட்டியை அணுகினர் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு, கூடவே கான்ஸ்டபிள் ஜோசஃப். இதற்குமேல் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு என்ன பண்ணினார் என்பதோ சுப்புக்குட்டியோ இந்தக்கதையில் இனி வரப்போவதில்லை.

சனிக்கிழமை இரவு மணி ஒன்பதரை.

"ப்யூலா! அவினாஷ், நிர்மலா ஆவ்ரில்….. எங்க எல்லோரும்? கிளம்பியாச்சா?"

"எல்லாரும் எமர்ஜென்ஸில இருக்காங்க புரொஃபசர்?"

"அது யாரு அப்பேர்ப்பட்ட விஐபி?"

"ஒரு வயசான ஆள்! வழிப்பறில அடிச்சு நொறுக்கிட்டாங்க! வெரி சீரியஸ்!"

"என்னது! சென்னையிலயா? வழிப்பறி அஸால்ட்! நானே போய்ப் பாக்கறேன்!"

எமர்ஜென்சியில் பெரியவர் நுழைந்தபோது மற்ற டாக்டர்கள் வழி விட்டு விலக, பேஷண்ட்டைப் பார்த்தார்.

வயதானவர். வழுக்கைத்தலையில் முள்ளுமுள்ளாக வெள்ளை முடி ஒட்டியிருந்தது. காய்ந்த ரத்தம். முகத்தில் கிழிபட்டு மூக்குச்சில்லு பெயர்ந்திருக்க, உதடுகள் அடியில் வீக்கம். மார்பில், வயிற்றில் கையில் முழங்காலில் அடி.

"பிளகாட்! வயசானவர எப்படி அடிச்சிருக்கான்! பணத்துக்காக இத்தன வன்முறையா! உடனே ஐசியூக்கு அனுப்புங்க! போலீஸெல்லாம் வந்து பார்த்தாச்சா?"

"ஆச்சு டாக்டர்!"

அடுத்த இரண்டு மணி நேரம் பெரியவரே இருந்து ட்ரீட் பண்ணினதைப் பார்த்தார்.

"டாக்டர்ஸ்! செக் லிஸ்ட்?"

"எஸ் புரொஃபஃபசர் !"

"ஃபிஸிகல் எக்ஸாமினேஷன் அண்ட் அல்ட்ராசோனோகிராஃபி?"

"செக்!"

"ஹெமடொதோரக்ஸ்?"

"செக்!"

"எமர்ஜென்ஸி தொராகொடொனமி தேவையா?"

"செக்! யெஸ்!"

"அவினாஷ்! நிர்மலா! அவர் கண்டிஷனப் பாருங்க! பாவம்! பல்மனரி இடீமா செட் ஆயிருக்கு. இன்டென்ஸ் கன்கஷன். மண்டையில் பலமான அடி. ரத்தப்போக்குவரத்து பிளாக் ஆகி மூளைப்பகுதி வீங்கிப் போயிருக்கு. இந்த க்ளாட் மூளையின் இன்னொரு பகுதிக்குப் போறதுக்கு மின்ன அரெஸ்ட் பண்ணியாகணும்! லங்க்ஸுக்குப் போயிட்டா உயிருக்கே ஆபத்து!. பல்மொனரி எம்போலிஸம்தான் என்னோட டையக்னோஸிஸ்!"

"யெஸ் புரொஃபசர்!"

"என்ன பாத்துண்டே நிக்கறீங்க! உடனே எமர்ஜென்ஸி சர்ஜரி ஆரமிங்க! பிராம்ப்ட் ரெஸ்டொரேஷன் ஆஃப் ஆர்கன் ஸ்ட்ரக்சர் தான் நம் முதல் குறிக்கோள்! கெட் கோயிங்! அவினாஷ்! பேஷண்ட் ஐடி கிடச்சுதா?"

"ஒரே ஒரு எவிடென்ஸ்! பென்ஷன் கார்ட்! ஆர்மி கார்ப்போரல்! பேரு ரங்கநாதன்!"

"தட் எக்ஸ்ப்ளெயின்ஸ்! அவர் தோள் பட்டையைக் கவனிங்க! புல்லெட் காயம்! ஆபரேட் ஆகியிருக்கு! சுத்த வீரமான சோல்ஜர்!"

"யெஸ் புரொஃபசர்!"

"என்னய்யா நடக்குது இந்த தேசத்துல? ஆர்மி சோல்ஜர்கிட்டயே வழிப்பறி! கேவலம்! ப்யூலா! அந்த ஐடி கார்டை எடுத்துண்டு ரூமுக்கு வா!"

"ஆர்மி பென்ஷன் ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி பேஷண்ட் பத்தி முழு விவரம் வாங்கு! இல்லேன்னா போலிஸுக்குப் பேசு. அவங்க கலெக்ட் பண்ணியிருப்பாங்க!"

ஞாயிற்றுக்கிழமை இல்லை. திங்கள் கிழமை. காலை ஒன்பதரை.

"ப்யூலா! பேஷண்ட் டீடெய்ல் கேட்டேனே?"

"இதோ புரொஃபசர்! பேசிட்டு இருக்கேன்!"

ஐந்தாவது நிமிடம் வந்தாள். தயக்கம். கலவரம்.

"யெஸ்?"

"டீடெய்ல் ஒண்ணும் கிடைக்கல!"

"என்னது? ரெண்டு நாளாச்சு! ப்ளஸ் இன்னிக்கு 40 நிமிஷம் ஆச்சு!"
போலீஸ்ல இன்னும் விவரம் வாங்கலையாம்!"

"வாட் அபவுட் பென்ஷன் ஆஃபீஸ்!"

"அவங்க சிஸ்டம் டவுனாம். இன்னும் மூணு மணி நேரத்துக்கு அப்புறம் காண்டாக்ட் பண்ணச்சொல்றாங்க புரொஃபசர்!"

"இன்காரிஜிபிள்!"

மேலே ஸ்ரீரங்கம் ரங்கநாதன் படத்தைப் பார்த்தவாறே யோசித்தார்.

பெரியவருக்கு ஏதோ பொறி தட்டியது.

மொபைலை எடுத்து ஸ்ரீரங்கம் விஜயராகவனுக்கு ஃபோன் போட்டார்.

"விஜி நாந்தான் வைகுண்டம் பேசறேன்! மெட்ராஸ்லேர்ந்து!"

"டாக்டர் வைகுண்டமா? என்ன டாக்டர் விசேஷம்?"

"ஒரு ஹெல்ப் பண்ணுங்கோ! அங்க நம்மாத்துல, அதான் உங்களுக்குத் தெரியுமே என்னோட மாமா ஆராமுதன் வீடு, மேலச்சித்திரை வீதியில…."

"நன்னாத் தெரியும் டாக்டர்! நம்ம ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுல வருஷா வருஷம் ஆராமுது மாமாதானே கொடியேத்துவார்!"

"ஆ அவரேதான்! அங்க ஆத்துல ஒரு குரூப் ஃபோட்டோ இருக்கும், ஹாலுல புஸ்தக அலமாரிக்கு மேல பிரைஸ் வாங்கற ஃபோட்டோ! அங்க போய் உங்க மொபைல் ஃபோன் கேமரால, அந்த ஃபோட்டோவ ஒரு க்ளிக் பண்ணி எனக்கு வாட்ஸப்புல அனுப்பறீங்களா! ரொம்ப தாங்க்ஸ் விஜி."

ஐந்தாவது நிமிடம் அந்த இமேஜ் வந்துவிட்டது.

★★★★★


அடுத்த நாள் மதியம்.

"அவினாஷ்! கார்ப்போரல்?"

"ஸ்டேபிள் பட் அன்கான்ஷியஸ் புரொஃபசர்!"

"எங்க இருக்கார்?"

"ஐசியுவுலதான்! நினைவு வரணுமே! வந்தவுடனே ஜெனரல் வார்டுக்கு மூவ் பண்ணிடலாம்!"

"நோ! நாளைக்கு அவரை விஐபி ரூமுக்கு மாத்திடு. எல்லா ஐசியூ பாரஃபெர்னேலியவும் விஐபி ரூம்ல கொண்டு வரணும்! இன்னும் ஒரு வாரமாவது அங்கயே இருக்கணும்!"

"புரொஃபசர்? விஐபி ரூமா?"

"சொல்றதச் செய் அவினாஷ்!"

★★★★★


செவ்வாய்க்கிழமை காலை.

"புரொஃபசர்! ஐஜி ஆஃபீஸ்லேர்ந்து கால்!"

"நான் ஐஜியோட செக்ரட்ட்ரி பேசறேன்! அந்த விஐபி ரூமை ரெடியா வெக்க முடியுமா? ஐஜியோட சித்தப்பாவுக்கு ஏதோ உடம்புக்கு முடியலியாம்! அதனால ஒரு வாரம் அங்க தங்கி எல்லா டெஸ்டும் பண்ணிடலாம்னு டிசைட் பண்ணியிருக்காங்க!"

"யாரு டிசைட் பண்ணியிருக்காங்க?"

"ஐஜி!"

"அத நாந்தானே டிஸைட் பண்ணனும்! உங்க ஐஜி கிட்ட சொல்லிடுங்க, விஐபி ரூம் இப்ப காலி இல்லை! அதனால தரமுடியாது."

"டாக்டர்! ஐஜியே சொல்லச்சொன்னார்!"

"ஸோ வாட்? இந்த ஆஸ்பத்திரிக்கு நாந்தான் டீன்! உங்க ஐஜி இல்ல!"

அடுத்த பத்தாவது நிமிடம் மீண்டும் ஃபோன்.

"ப்யூலா! நா விஐபி பேஷண்ட்டோட பிஸியா இருக்கேன். பேச முடியாது. விஐபி ரூம்தான் வேணும்னா ராயப்பேட்டாவுல டிரை பண்ணச்சொல்லு. இங்க வேகன்ஸி இல்லை!"

அவினாஷும் நிர்மலாவும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள்.

"புரொஃபசர்! ஐஜிக்கே விஐபி ரூம் கிடையாதா! அவரைவிட கார்ப்போரல் என்ன ஸ்பெஷல்? நம்ம பேஷண்ட் வெறும் கார்ப்போரல்தானே?"

வைகுண்டம் அந்தப் பழைய ஃபோட்டோவை வாட்ஸப்பிலிருது காட்டினார். "சாம் மானெக்‌ஷாவிடமிருந்து மெடல் வாங்கறது இந்த கார்ப்போரல்! அவர் பேரு ரங்கநாதன்!"

பங்களாதேச விடுதலைக்கான சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தைச்சரணடையச்செய்ய இந்தியாவுக்குத்தேவைப்பட்டது பதிநாலு நாட்களே. பாகிஸ்தான் சரணடைந்த தினம் டிசம்பர் 16, 1971.

நமக்கு முக்கியமானது அதற்கு அடுத்த நாள். டிசம்பர் 17. இடம் பங்களாதேசத்தின் சிட்டகாங் நகரம்.

ஷம்ஷத் அலி கான் என்னும் பாகிஸ்தானிய மேஜர் அந்தப் பகுதியில் சரணடையவேண்டிய பாகிஸ்தானிய வீரர்கள் மற்றும் அவர்களின் ஆயுதங்கள், ஜீப், லாரி, வண்டிகள் இவற்றைக் கொண்டுபோய் இந்திய ராணுவத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த பிரிகேடியர் சிந்துவிடம் ஒப்படைக்கப்போகிறார். Faujdarhat Cadet College வளாகத்தில் சரணடைய உத்தரவு. ஷம்ஷத் அலிகான் ஜீப்பில் முதலில் போகிறார். காலேஜுக்கு 500 மீட்டர் முன்பே இந்திய மேஜர் அவரை வரவேற்றுத் தன்னுடைய ஜீப்பில் ஏறும்படி பணித்து ஜீப் ஓட்டுபவரை வேகமாகக் காலேஜ் வளாகத்துக்குள் போக ஆணையிடுகிறார். வளாகத்துக்கு வெளியே ஏகப்பட்ட பங்களாதேசி மக்கள் கூடிக் கோலாகலமாகத் தங்கள் விடுதலையையும் இந்திய ராணுவ வெற்றியையும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஜீப்பில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களைப் பார்த்து மக்கள் கூட்டம் பெருமையாக கூச்சல் போட்டு கைகளை ஆட்டிப் பாராட்டுதலைத் தெரிவிக்கின்றனர்.

அந்தச் சமயத்தில் கூட்டத்தினுள் இருந்த ஒரு சில முக்தி வாஹினிக்கள், ஷம்ஷத் அலிகானைப் பார்த்துச் சுட்டுவிட, ஜீப்பின் டிரைவர் சடாரென ஜீப்பைத் திருப்பி ஒரு குண்டுகூட இரண்டு மேஜர்கள்மீதும் படாமல் காப்பாற்றுகிறார். திருப்பின வேகத்தில், குண்டு வரும் பாதையில் சிக்கிய டிரைவரின் தோளில் இரண்டு குண்டுகள்! ஜீப் தடுமாற, இந்திய மேஜர் சட்டென்று டிரைவரை நகர்த்தி, தான் ஸ்டீயரிங்கைப் பிடித்து ஜீப்பை நிறுத்துகிறார். முக்தி வாஹினிக்கள் கூட்டத்தில் கரைந்துவிட, அங்கு களேபரம்.

கேடட் காலேஜுக்குள் இயங்கின தற்காலிக முகாமில் இருந்த இந்திய ராணுவ டாக்டர் அடிபட்ட டிரைவரை ஆபரேஷன் படுக்கைக்கு அழைத்துச்சென்று….

டாக்டர் வைகுண்டம் வெகு அபூர்வமாகப் பதட்டத்தில் பேசினார்,

"அந்த கார்ப்போரல்தான் இரண்டு நாட்டு மேஜர்களையும் காப்பாத்தி ஒரு மிகப்பெரிய சர்வதேச அவமானத்திலிருந்து தேசத்தைக் காப்பாத்தினான். அதுக்குத்தான் அவனுக்கு விருது! ஸோ இங்க விஐபி ரூம்."

"ஆனா புரொஃபசர்! உங்களுக்கு எப்படி…..?"

டாக்டர் வைகுண்டம் ஃபோட்டோவைக் காண்பித்தார்.

தலைநிறைய முடியுடன் கொஞ்சம் புஷ்டியான வைரத்தேக ரங்கநாதன்! சாம் மானெக்‌ஷாவிடம் விருது வாங்குகிற ஃபோட்டோ. பக்கத்தில் டாக்டர் வைகுண்டத்தின் மாமா மேஜர் ஆராவமுது. 1971 பங்களாதேசப் போர்!

கதைக்கான ஆதாரம்:
"Suddenly, one of the Indian officers caught me by the arm and pulled me back, covering me, while yelling, "catch him". I noticed a young boy holding a sten gun, fired and ran out of the crowd. No one followed him. The boy was trying to shoot at me but the Indian officer saved me.

- As told by Shamshad Khan, Published in 'The Express Tribune' on December 16, 2011.


ஜே. ரகுநாதன்,
சென்னை
More

ராஹாப்
Share: 
© Copyright 2020 Tamilonline