Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
சமயம்
திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2020|
Share:
தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூருக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம்.

இத்தல இறைவனின் நாமம் கம்பஹரேஸ்வரர். தமிழில் நடுக்கம்தீர்த்த பெருமான். அம்பாளின் நாமம் அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி. தலத்தில் ஆறு தீர்த்தங்கள் உள்ளன. அவை சரப தீர்த்தம், தேவ தீர்த்தம், ஞான தீர்த்தம், வியாச தீர்த்தம், பிருக தீர்த்தம், சித்த தீர்த்தம் ஆகியனவாகும். வருணன் முதலானோர் இவற்றில் நீராடி இறைவன் அருள் பெற்றுள்ளனர். திருமாலுக்கு அருளியதால் இத்தல இறைவனுக்கு சரப மூர்த்தி என்ற பெயரும் உண்டு. சிவன், விஷ்ணு, காளி, துர்கை ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் சரபேஸ்வரர். இவர், நரசிம்ம அவதாரத்தின் போது, சீற்றம் கொண்ட நரசிம்மரை சரபப் பறவையாக வடிவெடுத்து சினத்தை அடக்கினார் என்பது வரலாறு.

இத்தலத்தின் பழைய பெயர்கள் திரிபுவன வீரபுரம், திரு புவனேஸ்வரம் என்பதாகும். தேவேந்திரன், அக்னி, சூரியன், சந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது இத்தலம். மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ஆலயம். வரகுண பாண்டியன் என்னும் மன்னன் பொது சகாப்தம் 792ம் ஆண்டு முதல் 735ம் ஆண்டுவரை அரசாண்டான். அவன் இவ்வாலாயத்திற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான். மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துத் துன்புற்றபோது திருவிடைமருதூருக்கு வந்து தங்கி அருள்மிகு மஹாலிங்க சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். ஆனாலும் மன்னனுக்கு உடல்நடுக்கம் நீங்கவில்லை. திருவிடைமருதூருக்கு மேற்கே உள்ள திருபுவனம் வழியாக பாண்டி நாட்டுக்குப் புறப்பட்டபோது திருபுவனம் எல்லை வந்ததும் தன்னுடைய நடுக்கம் நீங்கப்பெற்றான். திருப்பணி செய்து வழிபட்டான். அதனால் இத்தல இறைவன் நடுக்கம் தீர்த்த பெருமான் என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் இரண்டு கோபுரங்கள் மூன்று நுழைவாயில்கள் கொண்டது. கிழக்கு நோக்கிய கோயில். இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறைக் கோபுரம் கருங்கல்லால் ஆன சிற்பங்கள் கொண்ட பெரிய கோபுரம். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கருவறைக் கோபுரம் போன்று இங்கு விமானம் அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தைச் சுற்றி திருச்சுற்று மாளிகை. இந்தப் பிரகாரத்தின் நடுவில் நடுக்கம் தீர்த்த கம்பஹரேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. மூலவருக்கு வடபுறம் அம்மன் சன்னிதி உள்ளது. வடகிழக்கே சரபர் சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு நான்கு கைகள். அட்சர மாலை, தாமரைப் பூவோடு நின்ற நிலையில் அபயம் அளிப்பவளாகக் காட்சியளிக்கிறாள். அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது. கோயிலைச் சுற்றி விநாயகர் ஐயனார், பிடாரி கோயில்களும் உள்ளன. கருவறை விமானம், மண்டபங்கள், சரபர் சன்னிதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் சிற்பக் கலைத்திறன் மிக்கவையாக உள்ளன.
சரபேஸ்வரர் மூலவர். கோயிலுக்கு வடகிழக்கில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான், சரபப் பறவையாக வடிவெடுத்து நரசிம்மரின் சினத்தை அடக்கினார் என்பது வரலாறு. சரபர் யாளி முகமும், மனித உடலும், எட்டுக் கால்களும், நான்கு கைகளும், இறக்கைகளும் கொண்டு விளங்குகிறார். நரசிம்மரின் சினத்தை சரபர் அடக்கியதும் நரசிம்மர் சாந்தம் அடைந்து சிவபெருமானை வணங்குகிறார். பக்தர்கள் பிரார்த்தனை செய்துகொண்டு, நிறைவேறியதும் சந்தனக்காப்பு செய்து வழிபடுகின்றனர். செவ்வரளிப் பூ, மரிக்கொழுந்து, வில்வம், சண்பகப் பூ போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது முக்கிய நேர்த்திக் கடனாகக் கருதப்படுகிறது. சுவாமிக்கு ருத்ராபிஷேகம், சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

கோயிலில் தினசரி ஐந்து கால பூஜை நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று பிரம்மோற்சவம். சரபேஸ்வரருக்குப் பங்குனியில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. கோயில் தருமபுர ஆதீனத்திற்குட்பட்டது.

சரபேஸ்வரரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லை, கிரக தோஷம், விவாகத் தடை நீங்குதல் யாவும் நிறைவேறுகிறது. கம்பஹரேஸ்வரரை வணங்குபவருக்கு நடுக்கம், நரம்புத்தளர்ச்சி நீங்கி, ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் கிடைக்கிறது. அம்பாள் தர்மசம்வர்த்தினி. தர்மத்தைக் காப்பவள் என்பதால் அவளை வணங்கினால் பாவங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம், பிரிந்த தம்பதியர் இணைதல் என யாவும் நடைபெறுகிறது

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline