Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சமயம்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஜூலை 2020|
Share:
உள்ளம் உள்கலந்து ஏத்தவல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவானலன்
வெள்ளமும் அரவும் விரவும் சடை
வள்ளலாகிய வான்மியூர் ஈசனே.

(திருநாவுக்கரசர் தேவாரம்)

சென்னை - புதுச்சேரி கடற்கரை வழியில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சென்னை புறநகர்ப் பேருந்து நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை மண்டலத் தலங்களில் இது 25வது தலம். மூலவர் திருநாமம் மருந்தீஸ்வரர். தாயார், திரிபுரசுந்தரி. தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் பஞ்சதீர்த்தம். தலத்தின் புராணப்பெயர் திருவான்மிகியூர். திருஞானசம்பந்தர், திருநாவுக்காரசர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். மூலவருக்கு மருந்தீஸ்வரர், வான்மீகர், அமுதீஸ்வரர், பால்வண்ண நாதர் என்ற பெயர்களும் உண்டு.

கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் சோழ அரசர்களால் விரிவுபடுத்தப்பட்டது. மருந்தீஸ்வரர் கோவில் நோய் தீர்க்கும் ஆலயமாகக் கருதி வணங்கப்படுகிறது. தன்னை வணங்கித் திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தடியில் காட்சி தந்து அருள் வழங்கியதால் இத்தலம் திருவால்மிகியூர் என்று பெயரிடப்பட்டு, நாளடைவில் மருவி திருவான்மியூர் ஆனது. அகஸ்திய முனிவருக்குப் பலவித மருத்துவ மூலிகைகள்மூலம் பல நோய்களைக் குணப்படுத்தக் கற்றுத் தந்ததால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என்று போற்றப்பட்டார். இறைவன் வால்மீகி, அகஸ்தியர் இருவருக்கும் வன்னி மரத்தடியில் காட்சி தந்தார். இந்த வைபவம் பங்குனி பிரம்மோத்சவத்தின் போது நடைபெறுகிறது.



கோவிலின் ஐந்தடுக்கு ராஜகோபுரம் கிழக்குப் பார்த்து உள்ளது முருகன், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், சன்னிதிகள் உள்ளன. நுழைவாயிலில் ஐந்தடுக்கு விமான கோபுரம், மண்டபம், சிவன், சோமாஸ்கந்தர், 36 தூண்கள், கோவிலினுள் சைவசித்தாந்த மண்டபத்தில் சிற்பங்கள் உள்ளன. கோவிலினுள் தினந்தோறும் சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. முன்மண்டபத்தை அடுத்துள்ள அம்மன் திரிபுரசுந்தரி சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. விநாயகர், முருகன் சன்னிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. மூலவர் மருந்தீசர் சன்னிதியின் உள்சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தேவயானையுடன் முருகன் சன்னிதி, நடராஜர், 108 சிவலிங்கங்கள், காலபைரவர், கேதாரீஸ்வரர், ராமநாதேஸ்வரர், சுந்தரேசர், உண்ணாமுலை அம்மை, ஜம்புகேஸ்வரர், நாயன்மார்கள், விநாயகர், நால்வர் உள்ளனர். கருவறைச் சுற்றில் துர்கை, சண்டிகேஸ்வரர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கணபதி உள்ளனர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீட்சிதர் என்னும் சிறந்த சிவபக்தருக்கு ஒருமுறை வெள்ளத்தினால் சிவனைத் தரிசிக்க இயலாமல், பின்பக்கம்தான் தரிசனம் செய்யமுடிந்தது. "நீ எனக்கு உதவமாட்டாயா உன்னைப் பார்க்க?" எனக் கெஞ்சியதைக் கேட்டு மனமிரங்கி, மேற்குப் பக்கம் திரும்பி தீட்சிதருக்கு தரிசனம் தந்தார் ஈசன். இந்தக் கோவிலில் மட்டும்தான் மேற்கு நோக்கிய தரிசனம்.

வசிஷ்டர் சிவனை நோக்கித் தவம் செய்தபோது, அவருக்கு உதவ இந்திரன் காமதேனுவை அனுப்பினான். ஒருமுறை காமதேனு பால் சொரியத் தாமதமானது. சினத்தில் வசிஷ்டர், காமதேனுவை, "தெய்வீக சக்தியற்ற சாதாரண பசுவாகக் கடவது" என்று சபித்துவிட்டார். சாபம் நீங்க, "வான்மிகியூர் தலத்திற்கு வந்து ஈசனை வணங்கி இழந்த சக்தியைப் பெறலாம்" என்று சாப விமோசனமும் சொன்னார். காமதேனுவும் அவ்வாறே இங்கு வந்து, ஈசனை வணங்கி, ஈசன்மேல் பால் சொரிந்து பூஜித்து சாப விமோசனம் பெற்றது. அதனால் சிவனுக்குப் பால்வண்ணநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. வால்மீகி இறைவனை வணங்க வந்தபோது, பயத்தில் காமதேனு தனது காலடியைச் சிவலிங்கத்தின் தலையில் பதித்துவிட்டது. அந்தத் தடத்தை மூல லிங்கத்தின்மேல் இன்றும் காணலாம். சிவனுக்குப் பாலபிஷேகம் செய்து விபூதிப் பிரசாதம் உண்டால் தீராத நோய்களும் பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை.

பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். வன்னி மரத்தைச் சுற்றி வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றனர். முக்கியத் திருவிழாக்களான விநாயக சதுர்த்தி, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்றவை விமரிசையாக நடைபெறுகின்றன.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline