|
சென்னை திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் |
|
- சீதா துரைராஜ்|செப்டம்பர் 2020| |
|
|
|
|
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில், சித்திரக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்.
பெருமாள் பெயர் ஆதிகேசவர். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்பது பொருள். தாயார் பெயர் மயூரவல்லி. மயூரம் என்றால் மயில். பெருமாள் மயூர விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். தீர்த்தம்: கைரவணி தீர்த்தம். ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர்.
திரேதாயுகத்தில் இங்குள்ள கைரவணி குளக்கரையில் ரிஷிகள் யாகம் நடத்தியபோது, அசுரன் ஒருவன் பல இடையூறுகள் செய்ததால் ரிஷிகள், மகாவிஷ்ணுவை வேண்டினர். அவர்களுக்குக் காட்சி தந்த மஹாவிஷ்ணு, அசுரனை அழித்தார். அவர்களின் வேண்டுதலுக்காக ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் இத்தலத்தில் எழுந்தருளினார்.
விஷ்ணு, லக்ஷ்மியை பிருகு மகரிஷிக்குப் பெண்ணாகப் பிறக்க அருளினார். அவளை வளர்த்துப் பிறகு பெருமாளுக்கு மணம் செய்து கொடுத்தார் மகரிஷி. பிருகு மகரிஷிக்குப் பிறந்த பார்கவியை விஷ்ணு மணந்தார். இத்தலத்தில் மகாலட்சுமி மயூரவல்லி என்ற பெயரில் அருள் புரிகிறார். இங்கு வெள்ளிக்கிழமை காலையில் விசேஷ ஹோமம், மாலையில் ஸ்ரீசூக்தம் சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
கோயில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. பத்தடி உயர மதிற்சுவர்களுடன் நுழைவாயில், ஐந்தடுக்கு கோபுரங்கள் கொண்டது. கேசவர் நின்ற நிலையில் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறார். பெரிய திருவடியான கருடன் கேசவரைப் பார்த்த நிலையில் எதிரில் நிற்கிறார். பிரார்த்தனை மண்டபம் குறுகலான அர்த்த மண்டபம் வழியாகப் பெருமாளை தரிசிக்கலாம். கருடன் சிலைக்குப் பின்னால் த்வஜ ஸ்தம்பம், பிரார்த்தனை மண்டபத்தில் இருபுறமும் ஆழ்வார்கள் சிலைகளைக் காணலாம். மயூரவல்லித் தாயார் சன்னிதி மேற்குப்புறம் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. வீர ஆஞ்சநேயர், ராமர், சக்கரத்தாழ்வார் சன்னிதிகளும் உள்ளன. |
|
திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான 'நந்தகம்' என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. அதனை ஏற்று, அந்த வாளை பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் உபதேசம் செய்வதாகவும் அன்னை மகாலட்சுமி அறிவித்தாள். அதன்படி 'நந்தகம்', கைரவணி தீர்த்தத்தில் பூத்திருந்த அல்லி மலரில் மானிட வடிவாகப் பிறந்தது. இவருக்கு 'மகதாஹ்வயர்' என்ற பெயர்.ஏற்பட்டது. பின்னர் இவரே பேயாழ்வார் ஆனார். இத்தலத்தில் பெருமாளுக்கு மாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு மகாலட்சுமி உபதேசம் செய்ததால் 'வித்யாலட்சுமி' என்று தாயார் அழைக்கப்படுகிறார். திருமண தோஷம் நீங்க, கல்வி, ஆரோக்கியம் சிறக்க பக்தர்கள் பூஜித்து சன்னிதிக் கதவில் கட்டிய இரண்டு மணிகளைத் தாயாரின் பாதத்தில் வைத்து வழிபடுகின்றனர்.
பங்குனி மாதம் பிரம்மோத்சவம். கார்த்திகை மாதம் சதய நட்சத்திரத்தில் மகாலட்சுமி, பேயாழ்வாருக்கு உபதேசம் செய்யும் வைபவம். தை அமாவாசை சமயம் தெப்பத் திருவிழா. தமிழ் மாதப் பிறப்பு சமயம் ஆதிகேசவர் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பூர நட்சத்திரத்தில் ஆண்டாளுடன் பவனி வருகிறார். வெள்ளிக்கிழமை தாயார் பவனி நடக்கிறது. ராமர் மற்றும் ஆழ்வார்கள் தங்களுக்குரிய நட்சத்திரத்திலும் பவனி வருவர்.
தினசரி காலை 6.30 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணிமுதல் 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குட்பட்டது.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|