|
|
|
டாக்டர் கோபி நல்லையன், MBBS, MS, MCH, DNP பட்டங்கள் பெற்ற, குழந்தைகளுக்கான சிறப்பு இருதய அறுவை சிகிச்சை மருத்துவர். சென்னை, பெங்களூரு, லண்டன், வாஷிங்டன் போன்ற இடங்களின் பிரபலமான மருத்துவமனைகளில் பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் பணியாற்றிய போது, மருத்துவத்தைச் சேவையாகவே செய்யும் உந்துதலைத் தந்தது. மருத்துவ விழிப்புணர்வும், தொழில்நுட்ப வசதிகளும், பணமும் இல்லாமையால் ஏழைக் குழந்தைகள் இதயநோயால் இறப்பதைக் கண்டு மனம் குமைந்தவர், தனது மனைவி டாக்டர் ஹேமலதாவின் துணையுடன் மதுரையில் ஆரம்பித்ததுதான் 'லிட்டில் மொப்பட் ஹார்ட் ஃபவுண்டேஷன்'.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். சிறந்த மருத்துவ சேவைக்காக சத்தீஸ்கர் முதல்வர் கையால் பெற்ற சிறந்த மருத்துவர், புதிய தலைமுறை இதழ் மற்றும் சேனல் வழங்கிய நம்பிக்கை நாயகன், மதுரையின் மாமனிதர், சாதனையாளர் விருது எனப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
★★★★★
கே: உங்களது இளமைப்பருவம் குறித்துச் சொல்லுங்கள்? ப: பிறந்த ஊர் சேலம், சொந்த ஊர் ராசிபுரம் அருகே சிங்கலாந்தபுரம். மத்தியதரக் குடும்பம். அப்பா அஞ்சல் அலுவலக குமாஸ்தா. நான்கு வருடத்துக்கு ஒருமுறை இடமாற்றம் ஆகும். சேலம், நாமக்கல், ஈரோடு என்று பல ஊர்களில் படித்தேன். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் MBBS, மதுரை மருத்துவக்கல்லூரியில் MS, ஹைதராபாதில் MCH படித்தேன். சென்னை, பெங்களூர் என்று பல இடங்களில் குழந்தை மருத்துவத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். 2013ல் ராய்ப்பூரில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. கன்சல்டன்ட் பீடியாட்ரிக் சர்ஜனாக அங்கு சேர்ந்தது வாழ்வில் திருப்புமுனை என்று சொல்லலாம்.
குணமடைந்த சிறாருடன் Dr. கோபி
கே: என்ன அந்தத் திருப்புமுனை? ப: நான் படிப்பை முடித்தது முதல் தனியார் பணிகளில்தான் இருந்தேன். நோயாளி முதலில் என்னிடம் வரமாட்டார். என்னுடைய பாஸ், சீனியர்ஸ், டீச்சர்ஸ் எல்லாம் பார்த்த பின்தான் நான் பார்ப்பேன். நான் வெளிநோயாளிகளைப் பார்த்தது கிடையாது. அதனால் மக்கள் ஆபரேஷனுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், எத்தனை பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பது தெரியாது.
மாதக் கடைசியில் எல்லா நடுத்தரக் குடும்பங்கள் மாதிரி எங்களுக்கும் பணக்கஷ்டம் வரும். இருந்தாலும் ஒரு மருத்துவனாக ஆரம்பக் காலத்தில் நோயாளிகளின் கஷ்டங்களை நான் அறிந்திருக்கவில்லை. அவற்றை நான் புரிந்துகொண்டது ராய்ப்பூருக்குச் சென்ற பிறகுதான். அவர்கள் கீழ்த்தட்டு மக்கள். ரொம்ப ஏழைகள். அங்கு அரசு மருத்துவ அமைப்பில்கூட இதயநோய்த் துறையே கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஆரம்பித்தார்கள். அதனால் மக்கள் தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். அரசு சில திட்டங்கள் மூலம் இதய நோயாளிகளுக்கு மானியத்தொகை கொடுத்துக்கொண்டிருந்தது. அதற்கு ஒரு மருத்துவர் தேவை என்று என்னைப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.
அமெரிக்க மருத்துவமும் இந்திய மருத்துவமும் அமெரிக்காவில் மருத்துவம் மிக உயர்தரத்தில் இருக்கிறது. அதாவது எக்மோ மூலம் நூறுநாள் வரைகூட ஒரு குழந்தையை வைத்துப் பராமரிக்க முடிகிறது. அதாவது ஆபரேஷன் முடிந்தும் சுவாசம் மீளவில்லை என்றால், எக்மோ மூலம் செயற்கைச் சுவாசம் அளித்துப் பல நாட்களுக்கு மானிடர் செய்ய முடிகிறது. தமிழ்நாட்டில் எக்மோவைத் தொடங்கவே சில லட்சங்கள் செலவாகும். பின்னர் அதைப் பராமரிப்பதில் நிறையச் சிக்கல் உண்டு.
வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை நான் அங்கேதான் பார்த்தேன். இங்கு ஒரு நோயாளியைச் சில நாட்களுக்குமேல் ஐ.சி.யூ.வில் வைத்திருந்தால், அதற்கான செலவைக் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அங்கே அப்படி இல்லை. அதைக் காப்பீடு பார்த்துக்கொள்கிறது. மருத்துவத்தைப் பொறுத்தவரை நமக்கிருக்கும் பெரிய பிரச்சனை நிதிதான். மற்றபடி இங்கே திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள். பணம் இருந்தால் தேவையான கருவிகளை வாங்கிவிட முடியும். டாக்டர் கோபி நல்லையன்
அந்த மக்களிடம் நோய் பற்றிய புரிதல் இருக்கவில்லை. வசதியில்லாதவர்களின் அறுவை சிகிச்சைக்கு அரசு உதவினாலும், அவர்கள் ஊரிலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு, தங்குவதற்கு, உணவுக்கு எல்லாம் செலவழிக்கப் பணம் இல்லை. அவர்கள் தினக்கூலிகள். அன்றைக்குச் சம்பாதித்தால்தான் சாப்பாடு. "ஆபரேஷனுக்காக ஒரு வாரம் தங்கவேண்டும்" என்றால் "யோசித்துச் சொல்கிறேன்" என்பார்கள். "உங்களுக்குத்தான் அரசு சிகிச்சைக்கான செலவுகளைத் தருகிறதே" என்று கேட்டால், "வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது, மனைவி இருக்கிறார். நான் வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. இங்கு தங்கினால் அவர்களுக்கு யார் சாப்பாடு போடுவார்கள்?" என்று பதில் வரும். ஏதாவது ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போவார்கள், பலர் திரும்ப வரமாட்டார்கள்.
இப்படித் தொடர்ந்து பார்க்கப் பார்க்க அவர்களது கஷ்டங்கள் புரிந்தன. என்னுடைய குடும்பத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கமுடிந்தது. அப்போது என்னுடைய பையனுக்கு நான்கு வயது. இரண்டாவது பெண் குழந்தையும் அங்குதான் பிறந்தாள். இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது.
Dr. கோபி மனைவி Dr. ஹேமலதாவுடன்
கே: என்ன செய்தீர்கள்? ப: என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்தேன். என்றாலும் முழுமையாக அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்க அது போதுமானதல்ல. அங்கு உயர்மட்டத்தினர், பின்தங்கியவர்கள் என்று இரண்டு பிரிவினர்தாம். நடுத்தர வர்க்கம் என்பதே கிடையாது. உயர் வர்க்கத்தினர் ராய்ப்பூரில் சிகிச்சை செய்துகொள்ள மாட்டார்கள் டெல்லி, மும்பை, கல்கத்தா என்று பறந்துபோய் சிகிச்சை எடுத்துக்கொள்வர். ஏழைகளோ, அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சிகிச்சைக்கு வரமாட்டார்கள். இதுதான் நிலைமை!
தினமும் மனைவியிடம் போய்ப் புலம்புவேன். அவரும் என்ன செய்யலாம் என்று கேட்பார். ஒரு தொண்டு நிறுவனம் இருந்தால் குழந்தைகளுக்கு உதவலாம், குடும்பத்தாருக்கும் உதவலாம், அடிப்படைக் கல்வி அளிக்கலாம் என்றெல்லாம் சொன்னேன். அன்றாட வாழ்வே அவர்களுக்குப் பிரச்சனை. அதனால் நோய் பற்றியோ, சிகிச்சைகள் பற்றியோ யோசிக்க விரும்பாத சூழலில் இருந்தார்கள். அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.
மேற்கூறிய எண்ணத்தில் பல பணிகளை முன்னெடுத்தோம். ஆனால் அங்கு பத்திரப் பதிவில் ஆரம்பித்து நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எங்களுக்கு உதவ, வழிகாட்ட யாரும் இல்லை. அதனால் முயற்சி தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அதையும் மீறி இயன்றைதைச் செய்தோம். இரண்டு வருடங்களுக்கு மேல் அங்கு பணியாற்றிய பின், மதுரையில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது.
கே: ஓ. உடன் மதுரைக்கு வந்தீர்களா? ப: ஆம். மதுரைக்கு வந்தேன். இங்கும் ராய்ப்பூர் மாதிரியே ஏழைகள் நிறைய வந்தனர். அவர்களிடமும் அறியாமை, பயம், வாழ்வாதாரப் பிரச்சனைகள் என்று நிறைய இருந்தன. சிவகாசி, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி போன்ற நகரங்களில் இருந்து மதுரைக்கு வருவார்கள். சில பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத சூழலில் பெங்களூர், சென்னை, கொச்சின் அல்லது திருவனந்தபுரம் போங்கள் என்று சொன்னால் போகமாட்டார்கள். பயந்து விடுவார்கள். "அவ்வளவு தூரம் எங்களால் போகமுடியாது. நான் வேலைக்குப் போனால்தான் வீட்டில் உலை வைக்கமுடியும்" என்பார்கள்.
சிலர், "சார் என்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை வித்துதான் பாப்பாவுக்கு ஆபரேஷன் செய்யப் பணம் கொண்டுவந்தேன். கொஞ்சம் பில்லைக் குறைத்துக் கொள்ளுங்கள்" என்பார்கள். நான் அதனைச் செய்யமுடியாத சூழலில் இருந்தேன். காரணம், நான் ஒரு பணியாளர்தான். நிர்வாகம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். அதனால் கை கட்டப்பட்டதாக நான் உணர்ந்தேன்.
மேலும் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே VSD, PDA எனச் சிலவிதக் கோளாறுகள் இருக்கும். இதயத்தில் நல்ல ரத்தமும் கெட்ட ரத்தமும் கலந்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு இதய வீக்கம், வளர்ச்சி சரியில்லாமை, ஓட்டை, வால்வுப் பிரச்சனை என்று பலதும் இருக்கும். அவற்றை ஆறு மாதம், ஒரு வருட, இரு வருட இடைவெளிக்குள் சிறிய அளவில் க்ளோஸ்டு ஹார்ட் சர்ஜரியாகச் செய்து குணப்படுத்திவிட முடியும். சிறு வயதிலேயே செய்ய வேண்டிய ஒன்று. ஆனால், அப்படி ஒரு 11 வயதுக் குழந்தையைப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
ரோட்டரி கிளப் வழங்கிய விருது
கே: அந்த நிலைமைக்கு என்ன காரணம்? ப: காரணம், மக்களின் அறியாமை. ஆபரேஷன் செய்யவேண்டும் என்று தெரியாத நிலைமை. வழிகாட்ட யாருமில்லை. அறுவை சிகிச்சை பற்றிய புரிதலும் இல்லை. சிறிய வயதில் செய்ய வேண்டிய ஆபரேஷன்களைச் செய்யாமல் விட்டால் அவை சரியாக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடும். அது உயிருக்கு அபாயம். இப்படி நிறையக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
சிலரோ, "கிராமத்தில் காட்டினோம். அந்த டாக்டர் 'சின்னக் குழந்தையாக இருக்கும்போது பண்ண வேண்டாம். உடம்பு தாங்காது. வளர வளர தானாச் சரியாயிடும். அப்படி ஆகலன்னா பெரிசா ஆனப்புறம் பண்ணிக்கோ' என்று சொன்னார்" என்பார்கள். அப்படித் தவறான வழி சொன்னது யாரென்று பார்த்தால், முறையாகப் படித்த டாக்டர்கள் கிடையாது. கத்துக்குட்டிகள். மதுரையில் நாம் ஏதாவது சொன்னால்கூட, "நம்மூரு டாக்டர்கிட்ட கேட்டு முடிவு பண்ணுவோம்" என்பார்கள். நான் பார்த்தவரையில் மூன்று விஷயங்கள் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தன. |
|
கே: என்ன அவை? ப: 1. அவர்களுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. சிறார் இதயநோய் மையம் என்பது இல்லை. அங்கே போனால் சரி செய்ய முடியும் என்ற வழிகாட்டலோ, விழிப்புணர்வோ இல்லை. அப்படிச் சொல்லப்பட்டாலும் தொலைதூரம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள யோசிக்கிறார்கள்.
2. அறியாமை. மற்ற குழந்தைகளோடு தன் குழந்தைகளை ஒப்பிடுவது. அவ்வாறு ஒப்பிட்டு தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது. அல்லது தவறான நபர்களை அணுகித் தவறான முடிவெடுப்பது.
3. மூன்றாவது நிதிப் பிரச்சனை. சிறார் அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் விசேட மருந்துகள், உபகரணங்கள், நுகர்பொருட்கள், ரத்தம், ஐ.சி.யு., மருத்துவர் கட்டணம் என்று லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும்.
இவைதான் ஆபரேஷனைத் தள்ளிப் போட முக்கியக் காரணங்கள். இதனால் நோய் முற்றி, சிக்கலாகி விடுகிறது. ஆபரேஷனில் ரிஸ்க் அதிகம் ஆகிவிடும். நூறு சதம் குணத்துக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. இதுபற்றிய விழிப்புணர்வைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்தினால், சரியான வயதில் அறுவை சிகிச்சை செய்தால், வெற்றி வாய்ப்பு அதிகம். 95-100% வெற்றிபெறும், குழந்தைகள் பிழைத்துக்கொள்ளும்.
நிறைய நண்பர்கள் உள்ள ஊர் இது. இங்குதான் எம்.எஸ். படித்தேன். அதனால் இங்கேயே ஒரு சேவை அமைப்பை ஆரம்பிக்கலாம் என்று மனைவியுடன் கலந்தாலோசித்தேன். அவரும் சரி என்றார். அப்படி ஆரம்பித்ததுதான், லிட்டில் ஹார்ட் மொப்பெட் ஃபவுண்டேஷன்.
புதிய தலைமுறையின் 'நம்பிக்கை நட்சத்திரம்' விருது
கே: அரசு வேலையைத் துறந்துவிட்டுச் சேவையில் ஈடுபடக் குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததா? ப: நான் MS முடித்த சமயத்தில், 2005ல், எனக்கு அரசு வேலை கிடைத்தது. அப்போது MCH படிக்க இடமும் கிடைத்திருந்தது. அரசு வேலைக்குப் போகலாமா, மேலே படிக்கலாமா என்று மனம் திண்டாடியது. அப்பா, "இன்னும் படிக்கறேன்னு சுத்திக்கிட்டிருக்காத. அரசு வேலையில ஜாயின் பண்ணிக்கோ" என்று சொன்னார். அம்மாவுக்கும் அந்த ஆசை இருந்தது. அம்மா எனக்கு எப்போதுமே சப்போர்ட். எது உன் மனதுக்கு நல்லதாகப் படுகிறதோ அதைச் செய் என்பார். எனக்கு அப்போது உதவித்தொகை 4500 ரூபாய்தான் கிடைத்தது. ஆகவே நான் படிப்புச் செலவு தவிர எந்த அவசரச் செலவானாலும் அப்பாவைச் சார்ந்துதான் இருந்தேன். அம்மா, "உனக்கு 27 வயது ஆகிவிட்டது. கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். திருமணத்திற்குப் பிறகு எங்களிடமோ, பெண் வீட்டிலோ படிக்கக் காசு வாங்குவது நன்றாக இருக்காது. நீதான் முடிவு செய்யவேண்டும். எது உனக்கு நல்லதாகப் படுகிறதோ, அதைச் செய்" என்றார்.
எனக்கு இருதய அறுவைசிகிச்சைத் துறையில் மேலே படிக்கத் தீவிர ஆர்வம் இருந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைக்கு நியமித்து ஆர்டர் அனுப்பியிருந்தார்கள். வேலையில் சேர்ந்தால், நான்கைந்து வருடம் வேலை பார்த்த பின்புதான் அடுத்ததை யோசிக்க முடியும். அரசு மருத்துவமனைப் பணி என்பதுதான் உண்மையான மக்கள் சேவை. ஹைதராபாதில் MCH படிக்க இடம் கிடைத்திருந்தது. கடைசியில் துறைமீது இருந்த காதல் ஜெயித்தது. MCH சேர்ந்தேன்.
யோசித்துப் பார்த்தால், நான் அரசாங்க வேலையைத் தேர்ந்தெடுத்துப் பணியாற்றியிருந்தால் இந்த ஃபவுண்டேஷனை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். நான் பிரைவேட்டில் வேலை பார்த்ததால் தான் இந்த ஃபவுண்டேஷனை ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றியது. அரசுப்பணியில் இருந்திருந்தால் எத்தகைய சிக்கலான ஆபரேஷனாக இருந்தாலும் இவ்வளவு பணம் தேவை என்று நோயுற்றோரிடம் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது. அப்போது எனக்கு மக்கள் படும் பணக்கஷ்டம் தெரிய வந்திருக்காது. இந்த ஃபவுண்டேஷனும் ஆரம்பிக்கப்பட்டிருக்காது.
MCH முடித்த பிறகு அரசு வேலை கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். இதிலும் உதவித்தொகை உண்டு. இதைப் பெற்றோர்களிடம் விளக்கிச் சொல்லி நான் அதிலேயே சேர்ந்தேன்.
கொரோனோ வைரஸ் கொரோனோவிலிருந்து தப்பிக்கத் தனிமைப்படுத்திக் கொள்வதே தற்போதைக்கு முதல் தீர்வாக உள்ளது. கையை முகத்தருகில் கொண்டு போகாமல் இருத்தல், அடிக்கடி கையை சோப்புப் போட்டுக் கழுவுதல், இருமல் தும்மலுக்கு வாயை மூடிக்கொள்வது போன்றவற்றை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் மறைக்காமல் உடன் மருத்துவமனையை நாடியாக வேண்டும். மற்றவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். அரசு அறிவித்திருக்கும் லாக் டவுனை அவசியம் பின்பற்றுவோம்.
லாக் டவுனால் நம் அனைவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம். நம்மால் முடிந்த உதவிகளை நாம் ஏழை, எளிய மக்களுக்குச் செய்வோம். பயணங்களைத் தவிர்ப்போம். பாதுகாப்பாய் இருப்போம். இதற்காக பயப்படவோ சோர்ந்து போகவோ தேவையில்லை. அரசின் அறிவிப்புகளை மதித்து எல்லாரும் சிரத்தையாகப் பின்பற்ற வேண்டும். ஒன்றுகூடி வெல்வோம். மீண்டு வருவோம். நம்பிக்கையுடன் இருப்போம். டாக்டர் கோபி நல்லையன்
கே: உங்கள் ஃபவுண்டேஷன் செய்யும் பணிகள் என்னென்ன? ப: லிட்டில் மொப்பட் ஹார்ட் ஃபவுண்டேஷன் 2016 செப்டம்பர் இறுதியில் ட்ரஸ்ட்டாகப் பதிந்தோம். நவம்பர் 13, (மறுநாள் குழந்தைகள் தினம்) அன்று குழந்தைகளுக்கான முதல் இருதய அறுவைச் சிகிச்சை முகாம் நடத்தினோம்.
உடல்நலக் கல்வி, விழிப்புணர்வு, ஆபரேஷன் வேண்டுமென்றால் அதனை மதுரையிலேயே செய்யலாம் என்கிற உறுதியைக் கொடுப்பது, நிதியுதவி தருவது போன்றவை எங்கள் நோக்கம். அதற்காக மதுரை மருத்துவமனைகளிலும், டாக்டர்களிடமும் பேசி ஒரு புரிந்துணர்விற்கு வந்திருந்தோம்.
ஃபவுண்டேஷன் ஆரம்பிக்கும் முன்பே பலர் உதவத் தயாராக இருந்தார்கள். அதுதான் எங்களுக்குப் பெரிய தைரியம். எனது மனைவியின் வலைப்பூவின் வாசகர் ஒருவர் "குழந்தைகளுக்கு நான் உதவுகிறேன். ஆனால், என் பெயரை வெளியே சொல்லக்கூடாது" என்று சொல்லி, நாங்கள் ரெஜிஸ்டர் செய்யும்போதே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். இன்றுவரை நான் அவரை நேரில் பார்த்ததில்லை. பெங்களூரில் இருக்கிறார் என்பதுதான் தெரியும். டிசம்பர் முதல் வாரத்தில் முதல் குழந்தைக்கு ஆபரேஷன் நடத்தினோம். இதுவரை 244 குழந்தைகளுக்கு எங்கள் ஃபவுண்டேஷன் மூலம் அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம்.
கே: நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீங்கள் எப்படி அடையாளம் காண்கிறீர்கள்? ப: பிறவி இருதயக்கோளாறு என்பது நோயல்ல. அது குழந்தை வயிற்றில் உருவாகும்போதே ஏற்படும் குறைபாடு அல்லது மாற்றம். கருவின் ஐந்தாவது வாரத்தில் உருவாகும் முதல் உறுப்பு இதயம்தான். அது பின்னர் வளர்ச்சி அடையும். அப்படி வளரும் போது சில சமயம் சரியாக வளராமல் உருமாறிப் போகலாம். இதயத்தில் சில ஓட்டைகள் இருக்கலாம். அவை பிறந்தவுடன் தானாக மறைந்துவிடும்.
குழந்தை பிறந்து நுரையீரல் வேலை தொடங்கியதும், பல மாற்றங்கள் நடக்கும். மூன்று வாரம் முதல் மூன்று மாதங்களுக்குள் எல்லா ஓட்டைகளும் மூடிவிடும். அப்படி மூடாவிட்டால் அது பிரச்சனையாக மாறும். இம்மாதிரியான குழந்தைகளுக்கு சில நோய்க்குறிகள் இருக்கும். நுரையீரல்களுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ ரத்தம் செல்வது, வால்வு அடைப்பு என்பவற்றைச் சொல்லலாம்.
நுரையீரல்களுக்கு அதிக ரத்தம் சென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். பால் குடிக்கும்போது சிரமப்படும். அதாவது நார்மல் குழந்தைகள் ஒரே மூச்சில் சப்பிப் பால் குடித்துவிடும். வயிறு நிரம்பியதும் குடிக்காது.
ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பால் சரியாகக் குடிக்க முடியாது. கஷ்டப்பட்டுத்தான் குடிக்கும். அதாவது நாம் ஒவ்வொரு மாடியாக மூச்சு வாங்க ஏறி நின்று, நின்று அடுத்த மாடிக்குச் செல்வதுபோல, அவர்கள் கொஞ்சநேரம் குடிப்பார்கள், சிறிது நேரம் கழித்து மீண்டும் குடிப்பார்கள். நெற்றியில் வியர்க்கும்.
அடுத்தது, விளையாடும்போது எளிதில் களைத்துவிடும் குழந்தைகள். அதிகம் வியர்க்கும். இதெல்லாம் நுரையீரலுக்கு அதிக ரத்தம் பம்ப் ஆவதால் வருவது. ரத்தம் குறைவாகப் போனால் அதனை சைனோசிஸ் என்பார்கள். விரல் நுனி, மூக்கு நுனி, நாக்கு நுனி எல்லாமே சற்று நீலமாக இருக்கும். ரத்தம் குறைவாகப் போவதாலும், சரியாகச் சுத்திகரிக்கப்படாத ரத்தம் போவதாலும், ஆக்சிஜன் குறைவாகப் போவதாலும் வருவது இது. கவனிக்காமல் விட்டால் உடல் முழுவதும் நீலமாகிவிடும். வயதுக்கேற்ற உடல் எடை இருக்காது.
இந்த அறிகுறிகளைப் பெற்றோர்கள் கவனித்து, எக்கோ போன்ற பரிசோதனைகளைச் செய்தால் நிலைமையைத் தெரிந்துகொண்டு தேவையான சிகிச்சைகளைச் செய்யலாம்.
நோயுற்ற குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது, எந்த வகையான சிகிச்சைகளை அளிப்பது, தமிழகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் சிகிச்சை செய்வீர்களா, நிதித் தேவைகள் என்ன, எதிர்காலத் திட்டங்கள் என்பவைபற்றி நேர்காணலின் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
முகம் தெரியாத நபரின் சில்லறைக் காசுகள்! வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சில்ட்ரன்ஸ் நேஷனல் மெடிகல் சென்டரில், ரிச்சர்ட் ஜோனாஸ் அவர்களின் கீழ் நான் இருந்தேன். அவர்தான் இதயசிகிச்சைத் துறையில் அங்கு மிகச் சிறந்தவர். அவர் இந்தத் துறை தொடர்பாகப் பாடநூல்கள் எழுதியிருக்கிறார். அமெரிக்காவுக்கு நான் சென்றது அதுதான் முதல் முறை. எனக்கு யாரையுமே தெரியாது. நண்பர்கள் ஓரிருவர் இருந்தார்கள். ஆனால், அவர்களுடன் தொடர்பில்லை.
நண்பர் அனஸ்தெசிஸ்ட் செந்தில்ராஜாவின் நண்பர் ஒருவர் கலிஃபோர்னியாவில் இருப்பதாகச் சொல்லி அவரது எண்ணைக் கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டபோது வாஷிங்டனில் ஹோட்டல் எடுத்துத்தான் தங்க முடியும். வீடு/அறை கிடைப்பது கஷ்டம். நான் விர்ஜீனியா அல்லது மேரிலாந்தில் பேயிங் கெஸ்ட் ஆகத் தங்கமுடியுமா என்று விசாரித்துப் பார்த்துச் சொல்கிறேன் என்று சொன்னார். அதன்படி அறை ஒன்றை ஏற்பாடு செய்தார். கிரீன்பெல்ட் என்ற இடத்தில் ஒரு நேபாளி வீட்டில் அறை ஒன்றில் தங்கினேன். அவர்கள் சனி, ஞாயிறில்தான் வீட்டில் இருப்பார்கள். ரொம்பத் தனிமையாக இருந்தது. பஸ், மெட்ரோ பிடித்து டெர்மினல் போய் அங்கிருந்து ஹாஸ்பிடலுக்கு நடந்து போகவேண்டும்.
முதல்நாள் நான் பேருந்தில் ஏறியபோது என்னிடம் சில்லறை இல்லை. டாலர் நோட்டாக இருந்தது. டிரைவரும் சில்லறை இல்லை, யாரிடமாவது வாங்கி பாக்ஸில் போடுங்கள் என்றார். யாருமே இல்லை என்று சொல்லிவிட்டனர். ஒரே ஒரு பெண்மணி மட்டும், தன் பர்ஸில் இருந்து தேடித்தேடிக் காயின்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் அதற்காகக் கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நம் ஊர் மதிப்பில் நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும். எனக்கு மிகவும் மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. இப்போதும் அவரை, அந்த உதவும் மனதை நினைத்துக் கொள்கிறேன். நம் ஊரில்கூட யாராவது டீசன்ட்டாக ட்ரெஸ் செய்து கொண்டு வந்து சில்லறை இல்லை, ஒரு பத்து ரூபாய் கொடுங்கள் என்று கேட்டால் நான் கொடுத்திருப்பேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். சில்லறை இல்லை என்று நகர்ந்துவிடுவேன். ஆனால், முன்பின் தெரியாத தேசத்தில், முன்பின் தெரியாத ஒருவர் உதவியது நெகிழ்ச்சியாக இருந்தது.
"உதவி என்பது இதுதான். நீயும் இப்படித்தான் செய்யவேண்டும்" என்று எனக்கு அவர் சொல்லிக் கொடுத்ததாகத் தோன்றியது. அதையே நானும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தேன். நாம் ஒருவரிடம் உதவி பெற்றிருக்கிறோம்; அதுபோல நாம் வேறொருவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற விதை என் உள்ளத்தில் விழுந்தது அன்றுதான். டாக்டர் கோபி நல்லையன்
உரையாடல்: அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|