Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் கோபி நல்லையன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூன் 2020|
Share:
(சென்ற இதழ் தொடர்ச்சி)

டாக்டர் கோபி நல்லையன், MBBS, MS, MCH, DNP பட்டங்கள் பெற்ற, குழந்தைகளுக்கான சிறப்பு இருதய அறுவைசிகிச்சை மருத்துவர். 'லிட்டில் மொப்பட் ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை மதுரையில் அமைத்து, குழந்தைகளுக்கு வரும் இதய நோய்களுக்கு இலவச சிகிச்சை செய்துவருகிறார். இதில் அறுவைசிகிச்சைகளும் அடங்கும். எப்படி ராய்ப்பூரில் இருக்கும்போது ஏழைகள் படும் பாட்டைக் கண்டு மனம் உருகியது எனவும் அதுவே மதுரைக்கு மாற்றலாகி வந்த பின்னர், லிட்டில் மொப்பெட்டைத் தொடங்க உந்துதலாக ஆனது எனவும் சென்ற இதழில் விளக்கியிருந்தார். இந்த விழிப்புணர்வு தரும் நேர்காணலை மேலும் படியுங்கள். பகிருங்கள். உதவுங்கள்...

★★★★★


கே: ஒரு குழந்தைக்கு இதயநோய் பாதிப்பு உள்ளது என்பதை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?
ப: முதலில் ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்க்கும்போதே 'லப் டப்'பைத் தொடர்ந்து, இதயத்தில் ஓட்டை அல்லது அடைப்புள்ள குழந்தைகளுக்கு 'மர்மர்' என்று சொல்லும்படி, சிறிய வித்தியாசமான ஒலி ஒன்று கேட்கும். இதை வைத்து ஊகிக்கலாமே தவிர எக்கோ போன்ற சோதனைகள் மூலம்தான் அது என்ன வகையான பாதிப்பு என்பது நமக்குத் தெரிய வரும். 95% கண்டுபிடித்து விடலாம். மேலும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம், சி.டி. ஸ்கேன் போன்றவை உதவும்.

முகாம்களுக்கு எக்கோ கார்டியோகிராம் மிஷனை நாங்களே கொண்டு போவோம். கார்டியாலஜிஸ்ட் தான் எக்கோகிராம், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ ப்ளாஸ்டி எல்லாம் செய்யலாம். நான் சர்ஜன் என்பதால் அவர்கள் செய்யாத ஆபரேஷன், ஓபன் ஹார்ட் சர்ஜரி போன்றவற்றைச் செய்வேன். அதனால் இந்த அறக்கட்டளை ஆரம்பித்த சமயத்தில் நான் அகமதாபாத் சென்று எப்படி எக்கோ செய்வது என்பதை அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டேன். பின்னர்தான் மெஷினை வாங்கினேன்.

எங்கள் முகாமில், குழந்தைக்கு இருதய நோய் இருக்கிறதா, அது எந்தவகை நோய், எந்த நிலையில் இருக்கிறது, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் முடிவாகிவிடும். தேவைப்பட்டால் நோயின் தீவிரம் குறித்து அறிய ரத்தப் பரிசோதனை செய்வோம். எல்லாவற்றையும் நாங்களே செய்வதால், மக்கள் அதற்காக அலையவேண்டிய தேவை குறைகிறது.

அறுவைசிகிச்சை முடிந்த நிறைவில்



கே: எத்தனை வயதுமுதல் உள்ள குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது?
ப: தற்போது நாங்கள் 6-7 கிலோவுக்கு மேல் எடையுள்ள, பிறந்து ஆறு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்குத்தான் அறுவைசிகிச்சை செய்கிறோம். ஏனென்றால் அதற்குக் கீழேயுள்ள குழந்தை என்றால், அதிக கவனம் தேவைப்படும். 24 மணி நேரமும் சர்ஜன், மயக்க மருந்து நிபுணர், கார்டியாலஜிஸ்ட் எல்லாரும் தேவைப்படுவர். இன்னும் பல வசதிகள் தேவைப்படும். அவை எங்களுடைய ஃபவுண்டேஷனில் தற்போது இல்லை.

இவை எல்லாமே டீம் வொர்க்தான். இதில் ஆபரேஷன் என்பது 50% வேலைதான். அதை அடுத்து ஐ.சி.யூ.வில் பராமரிப்பது, செயற்கை சுவாசத்தைக் கண்காணிப்பது உட்படப் பல அம்சங்கள். இது மிகப்பெரிய டீம் வொர்க்.

நாங்கள் அடிப்படை வேலைகள்தாம் செய்கிறோம். மேலும் சிக்கலான வேலைகளுக்குப் போகவில்லை. அதற்கு நிறைய உள்கட்டமைப்பு வசதிகள், உதவி அமைப்புகள், வால்வு பேங்க், ரத்த வங்கி என்று நிறைய தேவைப்படும். அவற்றில் இறங்கவில்லை. மற்றப்படி முக்கியமான அனைத்தையும் செய்கிறோம். சில குழந்தைகளுக்கு ஆறேழு வயதிலேயே, நோய்த்தொற்றினால் இதய வால்வு பாதிக்கப்படும். அவர்களுக்கு நாங்கள் அறுவைசிகிச்சை செய்வதில்லை. பிறவி இதயக் கோளாறுகளுக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். சற்றே வயது அதிகமிருந்தால்கூட நாங்கள் செய்கிறோம்.

நம்மை மீறிய சக்தி!
ராஜபாளையம் அருகே ஒரு கேம்ப். அந்தக் குழந்தைக்கு ஒரு வயசு அல்லது 9 மாதம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் சிக்கலான ஆபரேஷன். ரிஸ்க் எடுத்துதான் செய்ய வேண்டும். பெற்றோர்களுக்கும் அச்சம். பின்னர் ஆபரேஷன் நடந்தது. சில ஆபரேஷன்களில் நாம் எதிர்பாராத சிக்கல் வரும். அந்த ஆபரேஷனிலும் ஏற்பட்டது. ஆபரேஷன் முடிந்த பிறகும் குழந்தைக்கு ஹார்ட் ஃபங்ஷன், ரெகவரி என்று நிறையச் சிக்கல்கள் இருந்தன. நிலைமை சிக்கலாகிக் கொண்டே போனது.

நான்கு நாட்கள் நாங்கள் மெஷினில் வைத்திருந்தோம். வெளியே எடுத்தால் அவன் சுவாசிக்கக் கஷ்டப்பட்டான். இப்படியே நிலைமை தொடர்ந்தது. டியூப் போட்டோம். அதுவும் ஏழு நாளைக்கு மேல் ஆகிவிட்டது. ட்யூப் எடுப்பதற்கான சாத்தியமே தென்படவில்லை. மெஷின் இல்லாவிட்டால் இதயம் நின்றுவிடும் என்கிற நிலைமை.

வாய் வழியாக ட்யூப் போட்டால் மூச்சுக்குழாய் அடைப்பு வர வாய்ப்பிருந்தது. அதனால் மூச்சுக்குழாய்க்கே நேரடியாக ட்யூப் போட்டுவிட முடிவுசெய்து தொண்டையில் அதற்கு ஆபரேஷன் செய்ய நினைத்தோம். இது டாக்டர்கள் குழு சேர்ந்து விவாதித்து எடுத்த முடிவு.

எங்கள் முயற்சிகளைப் பெற்றோரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களிடம் அதனால் குழந்தைக்குக் கொஞ்ச நாள் பேசமுடியாது என்பதைச் சொல்லி விளக்கினோம். ஆனால், அவர்களோ, "வேண்டாம், குழந்தையை இதற்குமேல் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நீங்களும் கஷ்டப்பட வேண்டாம். நாங்கள் வீட்டுக்குக் கூட்டிப் போகிறோம்" என்றனர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. ஏழைக் குடும்பம். கணவன், மனைவி இருவர்தான். உதவிக்கு யாருமில்லை. ஒரு தாத்தா மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வார்.

நான், "அந்த ட்யூபை எடுத்தால் அவனால் மூச்சுவிட முடியாது. நான்கைந்து மணி நேரம்கூடத் தாங்காது" என்றேன். அவர்களோ தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். அவர்களுடைய சம்மதம் இல்லாமல் அறுவைசிகிச்சையைச் செய்யவும் முடியாது. வேறு வழியே இல்லாமல் மிகுந்த மனவேதனையுடன், ஆம்புலன்ஸில் அவனை ஏற்றியபின் ட்யூபை எடுக்குமாறு சிஸ்டரிம் சொல்லி அனுப்பி வைத்தோம்.

அன்று இரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும். ஒரு ஃபோன். அந்தக் குழந்தையின் பெற்றோர்கள். நான் பேசுவதற்கு முன்பே "சார், குழந்தைக்கு பால், கஞ்சி ஏதாவது கொடுக்கலாமா?" என்றனர்.

அவர்கள் சென்றது இரவு ஏழு மணிக்கு. காலை எட்டு மணிக்கு இப்படி ஃபோன் செய்கிறார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. ஆக்சிஜன் இல்லாமல் எப்படிக் குழந்தை பிழைத்தது என்று திகைப்பாக இருந்தது.

குழந்தை எப்படி இருக்கிறான் என்று விசாரித்தேன். "நன்றாக இருக்கிறான் சார். நன்றாக மூச்சு விடுகிறான்" என்றனர். கொடுக்க வேண்டிய உணவுமுறை பற்றிச் சொல்லிவிட்டு, ஆச்சரியம் அகலாமல், "அப்புறமாகக் குழந்தையை செக்கப்புக்குக் கூட்டிக்கொண்டு வாருங்கள்" என்றேன். அவர்களும் கூட்டி வந்தார்கள். கொஞ்சம் சளி இருந்தது. மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக இருந்தான்.

நான் "மானிட்டர் பண்ணிப் பார்க்க வேண்டும்" என்று சொல்ல அவர்கள், "சார், அதெல்லாம் வேண்டாம். மாத்திரை, மருந்து கொடுங்கள். நாங்கள் போகிறோம்" என்றனர். மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். ஒரு வாரத்திற்குப் பிறகு ஃபோன் செய்து, "குழந்தை மிகவும் நன்றாக இருக்கிறான். தாத்தாவுடன் விளையாடுகிறான்" என்று சொன்னார்கள்.

இப்போது ஓடியாடி விளையாடுகிறான். இரண்டு வயது ஆகிவிட்டது. 'நமக்கு எல்லாம் தெரியும்; நிறையப் படித்திருக்கிறோம்' என்று தலைகனத்தோடு இருக்கக்கூடாது; நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து எல்லாவற்றையும் நடத்துகிறது என்ற உண்மையை இந்த நிகழ்வு எங்களுக்குப் புரியவைத்தது.
டாக்டர் கோபி நல்லையன்


அறக்கட்டளை தொடக்க விழா



கே: இதுவரை எத்தனை குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றி இருக்கிறீர்கள்?,
ப: அறக்கட்டளை தொடங்கி நான்காம் வருடம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 244 குழந்தைகளுக்கு இலவச அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். சில குழந்தைகளுக்கு முதல்வரின் காப்பீடுத் திட்டம் உதவும். அந்தத் தொகை போக மற்ற செலவினங்களை எங்கள் தொண்டு நிறுவனம் அளிக்கிறது.

இதில் 14 குழந்தைகளை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. நான் முன்பே சொன்னதுபோல, நோய் முற்றிய நிலை, தாமதமாக வந்தது போன்றவைதான் காரணங்கள். மீதி 230 குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

கே: சென்னை உட்படப் பிற நகரங்களில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளும் சிகிச்சைக்காக உங்களை அணுகலாமா? ஆம் என்றால் எப்படி?
ப: தாராளமாக அணுகலாம். ஆனால், சென்னை தமிழகத்தின் தலைநகரம். அங்கே எங்களைப்போலப் பல சேவை அமைப்புகள் உள்ளன. குழந்தைகளின் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பவர்கள் இருக்கின்றார்கள். மதுரையில் நாங்கள் கவனம் செலுத்தக் காரணம் குழந்தைகளைச் சென்னைக்கு அனுப்புவது, சிகிச்சை பெறுவது போன்றவற்றில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் மக்களின் தயக்கம் போன்றவை காரணமாகத் தான்.

நாங்கள் தெலுங்கானாவில் சூர்யபேட் என்ற ஊருக்குப் போய் முகாம் நடத்தியிருக்கிறோம். ராமையா என்ற 80 வயதுப் பெரியவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். முகாமில், நான்கு குழந்தைகளை அறுவைசிகிச்சைக்குக் கண்டறிந்தோம். அங்கிருந்து ஹைதராபாத் 3 மணி நேரம்தான். அவர்கள் மதுரைக்கு வர விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் மூலம் பேசி, ஹைதராபாதிலேயே அறுவைசிகிச்சை நடக்க ஏற்பாடு செய்தேன்.

எங்களைப்பற்றி மீடியா மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் கேள்விப்பட்டு, எங்களைத் தொடர்புகொண்டு, இங்கு வந்து சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆகவே, பாதிப்புள்ளவர்கள் எங்கள் இணையதளத்தில் உள்ள எண்ணுக்கு ஃபோன் அல்லது வாட்ஸப் மூலம் தொடர்பு கொண்டால் போதும்.

மனைவி என்னும் வரம்
2014ல் என் மனைவி டாக்டர் ஹேமலதா 'மை லிட்டில் மொப்பெட்' என்று ஒரு ப்ளாக் ஆரம்பித்தார். குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான சத்தான உணவுகள், என்று பல விஷயங்களை ஒரு தாயாகவும், மருத்துவராகவும் அதில் எழுதி வந்தார்.

2014-15ல் ராய்ப்பூரில் இருக்கும்போதே இதனைச் செய்தார். பின் நாங்கள் மதுரைக்கு வந்தோம். வலைப்பூவை வாசித்த பலரும் "இந்த உணவுகளை நீங்கள் பிளாகில் போடுவதைவிட எங்களுக்குச் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்; செய்து தருவீர்களா?" என்று கேட்டனர்.

பலரும் இப்படிக் கேட்டதால் நவம்பர் 2015ல், நாங்கள் ஒரு சின்ன பிசினஸாக எங்கள் வீட்டிலேயே இதனைத் தொடங்கினோம். அந்த பிசினஸை இன்றுவரை அவர்தான் பார்த்துக் கொள்கிறார். தற்போது 25 பேர் எங்களிடம் ஒரு குடும்பம்போல இணைந்து வேலை செய்கின்றனர். அதே சமயம் அறக்கட்டளைக்கும் அவர் உறுதுணையாக இருக்கிறார். எல்லா கேம்ப்பிலும் டாக்டராக அவரும் கலந்துகொள்வார். நிர்வாக வேலைகளையும் பார்க்கிறார். கூடவே முகநூல் பக்கத்தையும் (https://www.facebook.com/LittleMoppetHeartFoundation) அவர்தான் நிர்வகிக்கிறார். க்ரௌட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்ட உதவுகிறார். நோயாளிகள், சிகிச்சை, மருத்துவர்கள் போன்றவற்றை நான் பார்த்துக்கொள்ள, நிர்வாகம் முழுவதையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். அதனால்தான் என்னால் நிம்மதியாகச் செயல்பட முடிகிறது.

அவருடைய துணை எனக்கு ஒரு வரம். அவர் சோர்ந்து போனால் நானும், நான் சோரும்போது அவரும் துணையாக இருக்கிறோம். நான் மட்டும் தனியாக இதைப் பொறுப்பிலிருந்து செய்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
டாக்டர் கோபி நல்லையன்


முகாமில் பணி செய்தவர்களோடு



கே: இவற்றில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள் என்னென்ன?
ப: முதல் சிக்கல் மக்களின் அறியாமை, தயக்கம், பயம். அதைப் போக்க நாங்கள் கவுன்சலிங் கொடுக்கிறோம். அடுத்தது பணப் பிரச்சனை. அதை எங்கள் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்கிறோம். இதில் சிக்கல் என்னவென்றால், சில சமயம் வசதி உள்ளவர்களும், ஏழை என்று சொல்லிச் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதுவரை இங்கே வருபவர்களின் பின்புலத்தை நாங்கள் ஆராய்ந்ததில்லை. இனிமேல் அதையும் ஆராயவேண்டும் போல இருக்கிறது. ஏனென்றால், இப்படிச் செய்துகொள்பவர், உண்மையான ஏழை ஒருவர் இலவசமாக ஆபரேஷன் செய்து கொள்ளும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறார்.

ஆபரேஷன் செய்ய வரும்போது ஏழைபோல் வருபவர்கள் அடுத்தடுத்து செக்கப்புக்குக் காரில் வருகிறார்கள். சிலருக்குச் சொந்த வீடு, கார், நிலம் இருக்கிறது. இவர்களால் உண்மையானவர்களும் தகுதியுள்ளவர்களும் பின்தங்கிய ஏழைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவறு.

ஆறு மாதத்திற்குக் கீழே, ஆறு கிலோவுக்குக் கீழே உள்ள குழந்தைகள், சிக்கல் அதிகமான குழந்தைகள் வரும்போது, திருவனந்தபுரம் சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் பணியாற்றும் என் நண்பர்களுக்கு ஃபோனில் நானே சொல்லி, இவர்களை அங்கே போக வலியுறுத்துவேன். என்னால் இயன்ற பொருளாதார உதவியும் செய்கிறேன்.

ஹோசூர் ஸ்பந்தனா விருது



கே: குழந்தைகள் இதயநோய் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த நீங்கள் செய்யும் முயற்சிகள் என்னென்ன?
ப: முகாம்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள், விளம்பர பேனர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறோம். தேனியில் அடுத்த மாதம் கேம்ப் என்றால், ஒரு மாதம் முன்பே எங்கள் குழுவினர் அதுபற்றி மக்களிடம் தகவல் கொண்டு சேர்ப்பார்கள். எங்கள் அறக்கட்டளையின் கார்த்திக் அங்கு அந்தப் பணியைச் செய்கிறார். ஃபவுண்டேஷன் ஆரம்பித்த காலம் முதலே அவர் எங்களுடன் இருக்கிறார். அங்கன்வாடி, பள்ளிகள், ஆசிரியர்கள், மக்கள் கூடும் இடங்கள் என்று பல இடங்களிலும் சென்று தகவல் சொல்கிறோம். பஞ்சாயத்துத் தலைவர்கள், கடைகள், ஆட்டோ ஓட்டுநர்கள், லோகல் கேபிள் டி.வி. விளம்பரம் என்று பல வழிகளையும் பயன்படுத்துவோம். சிறு சிறு கிராமங்களுக்கும் தகவல் போய்விடும்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 7 முதல் 14 வரை விழிப்புணர்வு வாரம் நடத்துகிறோம். அப்போது, ஆபரேஷன் செய்து குணமான குழந்தைகளை வைத்து, ஆபரேஷன் நடக்க இருப்போருக்கு நிகழ்ச்சி நடத்துவோம். நான் சொல்வதைவிட, பலன்பெற்ற குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் சொல்வது அதிகப் பயன் தருவதாக அமைகிறது. அறக்கட்டளை ஆரம்பித்த நாளான நவம்பர் 14 அன்றும் மக்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டம் நடத்துவோம். தவிர, முகநூல், வாட்ஸப் மூலமும் விளம்பரம் செய்து, விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறோம், அடுத்து யூ ட்யூப் மூலம் செய்ய இருக்கிறோம். அதுபோக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவச் சமூக சேவகர்கள் போன்றோரும் எங்களுக்கு உதவுகின்றனர்.

நிதியும் உழைப்பும்
ஒரு மருத்துவர் உருவாக 5 1/2 வருடங்கள் ஆகின்றன. 4 1/2 வருடம் படிப்பு. 1 வருடம் பயிற்சி. அறுவைசிகிச்சை என்றால் மேல்படிப்பு, பயிற்சி, வேலை. ஒருவர் சிறந்த அறுவைசிகிச்சை நிபுணராக வேண்டுமென்றால் சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆகும்.

தவிர, உளவியல் பக்குவமும் வேண்டும். நோயாளிகளின் நிலை கண்டு உணர்ச்சி வசப்படாமல் இருக்கவேண்டும். இரக்கம், கருணை, அன்பு எல்லாம் மனித இயல்பு. அவற்றைத் தாண்டி மருத்துவ அறிவோடு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உறுதியான முடிவை எடுக்கவேண்டும்.

எங்களுடைய மிகப்பெரிய சவாலே உழைப்பும், சிகிச்சைச் செலவுகளும்தான். நான் ஒருவன் இலவசமாகச் செய்யலாம் என்று நினைத்தால் செய்யலாம். என்னுடைய பணிக்கான தொகையை நான் குறைத்துக்கொள்ள முடியும். ஆனால், கன்ஸ்யூமபிள்ஸ் செலவுகளைக் குறைக்கவோ, தவிர்க்கவோ முடியாது. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளைக் குறைக்கமுடியாது. அப்படிச் செய்யவேண்டும் என்றால் ஒத்த எண்ணம் உள்ளவர்கள் கிடைக்க வேண்டும். நல்ல மருத்துவ வசதிகள் வேண்டும். பிற வேலைகளைச் செய்யும் மருத்துவ டீம் வேண்டும்.

தரத்தில் சமரசம் கிடையாது. உலகத் தரம் இருக்கவேண்டும். இது ஒரு குழந்தையின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அறக்கட்டளை மூலமாகவும் எனது மருத்துவ நண்பர்கள் மூலமாகவும், சில மருத்துவமனைகளுடன் கை கோத்துக் கொண்டும், அவர்களது உதவியுடனும் நல்லவிதமாகச் செய்து கொண்டிருக்கிறோம்.
டாக்டர் கோபி நல்லையன்


கே: இத்தகைய சேவைப்பணிகளுக்கு சக மருத்துவர்களின் ஆதரவு உள்ளதா?
ப: நிச்சயமாக. ஆனால், மருத்துவர்கள் என்றாலே பணம் சம்பாதிக்கத்தான் பார்க்கிறார்கள் என்று மக்களிடம் தவறான புரிதல் உள்ளது. அது உண்மையல்ல. எல்லா டாக்டர்களுமே நோயாளி குணமாக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பணம் தேவைதான். ஆனால், அதையே நோக்கமாகக் கொண்டு மருத்துவர் செயல்படுவதில்லை.

என்னைச் சந்திக்கும் சிலர், "இந்தக் காலத்துல உங்களை மாதிரி டாக்டர்களைப் பார்க்கிறது ரொம்பக் கஷ்டம் சார்" என்று புகழ்வார்கள். எல்லா டாக்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். அது மக்களுக்குத் தெரிவதில்லை. சக டாக்டர்களிடமிருந்தும், மருத்துவமனைகளில் இருந்தும் எனக்கு நல்ல ஒத்துழைப்புக் கிடைக்கிறது. சில மருத்துவர்கள் எந்தத் தொகையும் பெற்றுக்கொள்ளாமல் தாமாக முன்வந்து உதவி செய்கின்றனர். சிலர் 40-50% கட்டணத்தை எனக்காகக் குறைத்துக் கொள்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் எல்லோராலும் இலவசமாகச் சிகிச்சை அளிக்கமுடியாது. பல மருத்துவர்கள் செய்யும் இலவச சேவை வெளியில் தெரிவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். சக மருத்துவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் எனது பணி சாத்தியமே இல்லை.

சேவை மனம் கொண்ட மருத்துவ மாணவர்களோடு



கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: 2016ல் அறக்கட்டளை ஆரம்பித்தோம். மனைவி டாக்டர் ஹேமலதா. எனது வெற்றிகளுக்குக் காரணம் அவர்தான். இதைத் தொடங்க அவரது தூண்டுதல் மிக முக்கியக் காரணம். அவரும் டாக்டர்தான். குழந்தைகள் பிறந்ததால் அவரால் மேலே படிக்க முடியவில்லை.

என் பெற்றோர் அவரது பெற்றோர் எல்லாரும் இதெல்லாம் சரிப்பட்டு வருமா, சாத்தியமா என்றெல்லாம் முதலில் யோசித்தனர். எங்களுக்குத் தெளிவும் உறுதியும் இருந்தது. நாளடைவில் அவர்களும் புரிந்துகொண்டு ஆதரவளித்தனர். இப்போது அவர்களும் எங்கள் கேம்ப்புக்கு வந்து, உதவுகின்றனர். என் தம்பி ஊட்டியில் பல்மருத்துவராக இருக்கிறார்.

நாங்கள் சனி, ஞாயிறில் கேம்ப்புக்குச் செல்வோம், அவர்களுடன் இருக்கமாட்டோம் என்பது தெரிந்தும், என் குழந்தைகள் அதைப் புரிந்துகொண்டு பொறுப்பாக இருப்பார்கள். பையனுக்கு 10 வயது, ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். பெண் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அவர்களே எங்களிடம் "நாங்கள் சமர்த்தாக இருக்கிறோம், நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள்" என்று தைரியம் கொடுத்து அனுப்புகிறார்கள்.

மனைவி என்னும் வரம்



கே: எதிர்காலத் திட்டங்கள்..
ப: என்னுடைய ஆசை, குழந்தைகளுக்கான எல்லா இதயம் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் 6 கிலோவுக்குக் குறைவான எடையுள்ள குழந்தைகளை வேறு வழியில்லாமல் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம். அப்படி அனுப்பாமல் அவர்களுக்கும் இங்கே சிகிச்சை அளிக்கவேண்டும். உலகிலுள்ள உயர்தர வசதிகள் எல்லாவற்றையும் கொண்ட மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். அது தற்சார்பு கொண்டதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சொல்லலாம். இலவச சிகிச்சையும் உண்டு, கட்டண சிகிச்சைக்கும் இடமுண்டு. ஆனால், தரம் ஒன்றுதான். கட்டண சிகிச்சைமூலம் வரும் வருவாய் ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவும். அதுபோன்ற அனைவருக்குமான மருத்துவமனையை உருவாக்க ஆசை. ஒருநாள் இந்தக் கனவு நனவாகும்.

டாக்டர் கோபி நல்லையன், "பணத்தின் தேவை நமது திருப்தியைப் பொறுத்தது. நாங்கள் திருப்தியாக வாழ்கிறோம். எங்களை கஷ்டப்படுத்திக் கொண்டு நாங்கள் சேவை செய்யவில்லை. கடவுள் எங்களுக்கு அனுக்கிரகம் செய்திருப்பதற்கேற்ப மகிழ்ச்சியுடனும், நல்ல மனநிறைவுடனும் வாழ்ந்து வருகிறோம்" என்கிறார். அவரது தன்னலமற்ற கனவு நனவாக வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

நீங்கள் உதவ விரும்பினால்...
என்னிடம் ஆபரேஷன் செய்துகொண்டு போன ஒரு குழந்தையின் தந்தை - ஒரு கொத்தனார் - தன் பஞ்சாயத்துத் தலைவரிடம் பேசி, அந்த ஊரில் ஒரு கேம்ப் ஏற்பாடு செய்தார். இப்படிப் பலரும் தங்களால் இயன்றதைச் செய்கின்றனர். எங்களைப் பற்றிக் கேள்விப்படுபவர்கள், பத்திரிகையில் படித்தவர்கள், காண வருபவர்கள் என்று பலரும் அளிக்கும் நிதியில் இந்த சேவை நடந்து வருகிறது. இது ஒரு சவாலான பணிதான். மனத்திருப்தியுடன் செய்து வருகிறோம்.

நீங்கள் நிதி உதவ விரும்பினால் இங்கே பார்க்கவும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

நேர்காணலின் முதல் பகுதி
Share: 




© Copyright 2020 Tamilonline