|
|
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கி வளம் சேர்ப்பவர் பலர். இருப்பினும் சம காலத்தில் படைப்பாக்கத்திறனுடன் மட்டுமல்ல நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை தமிழ்ச்சிந்தனை மரபில் இழையோடவிட்டு புதுவளம் சேர்ப்பதில் தீவிரமாகவும் இருப்பவர். மேலும் உலக சினிமா அயல் சினிமா என காட்சி ஊடகம் சார்ந்த பெரு வெளியில் கரைந்து தமிழ் சார் காட்சிப் புரிதலுக்கு புதிய பரிமாணம் வேண்டி இயங்குபவர். நவீன கலை இலக்கியம் சார்ந்த புரிதலும் பிரக்ஞையும் மிக்க படைப்பாளியாக வும் சிந்தனையாளராகவும் இயங்குபவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
தமிழில் புதிய கதை மொழியை உருவாக்க புதிதாக கதை சொல்லும் கதை சொல்லியாக ராமகிருஷ்ணன் மேற்கொள்ளும் பயணம் தெளிவானது, உறுதியானது. கனவுகளும் ரகசியங்களும் கொண்டதன் புனைவு வெளியை தொடர்ந்து அகவித்து ஆழப்படுத்தி வருகின்றார். குறிப்பாக 1990 களுக்குப் பிறகு உருவான எழுத்தாளர்களுள் எஸ்.ராம கிருஷ்ணன் முக்கியமானவராக உள்ளார். பத்திரிகையாளராகத் தனது பயணத்தை தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் சமகால தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கிய மானவர். நவீனத்துவ எழுத்தாளருக்குப் பிறகு தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் கதைப் போக்கை அதன் மொழியை மாற்றியமைத்தவருள் ஒருவர். தமிழ்ச் சிறுகதையில் ஒரு புதிய தன்மையையும் உணர்திறனையும் உருவாக்கி புதிய பிரக்ஞையுடன் படைத்து வருபவர். தனது கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், உரையாடல்கள் மூலம் சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் பாதிப்பை நிகழ்த்துபவராக உள்ளார்.
வெளியில் ஒருவன், 'காட்டின் உருவம்', 'தாவரங்களின் உரையாடல்', வெயிலைக் கொண்டு வாருங்கள்', போன்ற சிறுகதைக் தொகுப்புக்களையும் 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி' போன்ற நாவல்களையும் 'வாக்கியங்களின் சாலை', 'விழித்திருப்பவனின் இரவு' போன்ற கட்டுரைத் தொகுப்புக்களையும் மற்றும் பல மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் 'உலக சினிமா' எனும் நூலைக்கூட வெளியிட்டுள்ளார். பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். தமிழ்த் திரைப்பட உலகிலும் காலடி எடுத்து வைத்திருப்பவர். பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டு வருபவர் மட்டுமல்ல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவராகவும் உள்ளார். இவரது இந்தப் பல்பரிமாணம் இவரது ஆளுமையின் மதிப்பீடுசார் புரிதல்களுக்குத் திறந்த களங்கள் எனலாம். |
|
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுய அனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஒரு சாராருக்கும், மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்ற படி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசிரியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்ளும் ராமகிருஷ்ணன், அத்தகையவர்களில் ஒருவர் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. அதைவிட அப்பொழுது உருவாகி வந்த தலைமுறை முன்னைய தலைமுறை எழுத்தாளர்களது கதையாடல் மரபுகளை விட்டு விலகி யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமாக மட்டும் புரிந்து கொள்ளாமல் யதார்த்தம் பல தளங்களை உடையது என்ற புரிதலுடன் செயற்பட்டார்கள். பன்முகத்தன்மை மிகு கதையாடல் களங்களில் உயிர்ப்புடன் இயங்கி வந்தார்கள். இந்த மரபு செழுமைப்பாங்குடன் பலநிலைகளில் வளர்ச்சி கண்டது. இந்தத் தொடர்ச்சிக்கு எஸ். ராமகிருஷ்ணனும் தனது பங்குக்கு பங்களிப்பு நல்கியவராகவே உள்ளார். கடந்தகால எழுத்தாளர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை. தங்கள் எழுத்து உண்மையைக் கண்ணாடி போல பிரதிபலிக் கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றித்தான் பிரதிபலிக்கும் என்ற நிஜத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது என்று ராம கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆனால் அவரவர் அந்தந்தக் காலத்து சிந்தனை மரபுகளை இலக்கியப் புரிதல்கள் சார்ந்து இயங்கியுள்ளார்கள். இதனை நாம் வேடிக்கையாக நோக்கமுடியாது. மாறாக அவர்களை அவர்களது வாழ்முறை சார்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் போட்ட அந்தப் பாதை நாம் சுகமாக புதுமையாக பயணம் செய்ய உதவியுள்ளது. இந்தப் புரிதல் எந்த எழுத்தாளருக்கும் தேவை. இது ராமகிருஷ்ணனுக்கும் பொருந்தும். இன்று நமக்குள்ள வாய்ப்புகளும் வளங்களும் அதிகம். பன்னாட்டு இலக்கியம் சார்ந்த உரையாடல்களும் தமிழ் மரபை கதைவெளியை ஆழமாக்கும் நுண்ணுணர்வுகளைக் கொண்டுள்ளன. இவை புதிய சாளரங்களைத் திறந்து விடுகின்றன. இதனால் ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் சிறக்க முடிகிறது. படைப்பிலக்கியம் சார்ந்து ராமகிருஷ்ணனின் முயற்சிகள் தனித்துவமாகவும் பலரது கவனிப்புக்கும் உரியவை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இதைவிட வாக்கியங்களின் 'சாலை விழித்திருப்பவனின்' இரவு போன்ற கட்டுரைத் தொகுப்புகள் ஒரு தேர்ந்த வாசகருக்கு கலை பிரக்ஞையையும், வாழ்வியல் சார்ந்த புதிய அனுபவ வெளிகளை திறந்துவிடக் கூடியவையாக உள்ளன. மேலும் சில இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் அனுபவமும் தேடலும் வேட்கையும் விரிவாகத் தூண்டிவிடப்படும் தன்மைகளைக் கொண்டவை. படைப்பு படைப்பாளி குறித்த தீவிர விசாரணையையும் அழகியல் தேடலையும் தன்னளவில் கொண்டுள்ளன.
மொத்தத்தில் ராமகிருஷ்ணன் சமகால கலை இலக்கியப் புலத்தில் மாறுபட்ட வித்தியாசமான அனுபவத் தேட்டத்தின் மற்றும் படைப்பாளியின் சவால்களுக்கான எதிர் கொள்ளும் மனவுறுதியை வழங்கும் பண்பு கொண்டவை. அதற்கான வீரியமும் படைப்புத்திறனும் ராமகிருஷ்ணனின் படைப்புலகில் நாம் தெளிவாக இனங்காணலாம். தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|