Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பத்தி
தர்மத்தின் வாழ்வுதனை....
- |டிசம்பர் 2006|
Share:
Click Here Enlargeஅண்மையில் நடந்து முடிந்திட்ட அமெரிக்க தேர்தல்களைக் குறித்து, இராக்கில் புனருத்தாரணப் பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற முறையில் கொஞ்சம் விலாவாரியாகச் சிந்திக்கலாமே என்ற ஒரு எண்ணம் என்னுள் எழுந்த போது தோன்றிய ஒரு சிக்கல்: சில வார்த்தைகளைத் தமிழாக்கம் செய்வதில் வரும் பிரச்சினை. உதாரணத்திற்கு ரிபப்ளிகன் கட்சியை குடியரசுக் கட்சி என்று சொல்லிவிடலாம். டெமாக்ரடிக் கட்சியை சுதந்திரா கட்சி என்று தமிழாக்கம் செய்யும் போது ஏதோ நெருடுவது போல, எனக்கு அதில் ஒரு அசெளகரியம் இருப்பதாய் உணர்கிறேன். தமிழ்நாட்டில் நான் வாழ்ந்த அந்த நாட்களில் சமூக, பொருளாதார, குறிப்பாக அரசியல் பிரச்சினைகளை ஒரு மனுநீதிச் சோழனுக்கு ஒப்பாக சிறப்பாகச் சொன்னவர் தினமணி ஆசிரியர் திரு.ஏ.என். சிவராமன் என்பார். திரு. சுஜாதா அவர்கள் தனக்கே உரிய 'இடக்கு' கலவாமல் எழுதுவ தில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட பொருள் பற்றி திரு. சிவராமனுக்கு இணையாகச் சொல்லி வருபவர் என் பெருமதிப்பிற்குரிய போராசிரியர் டாக்டர் வ.செ. குழந்தைசாமி அவர்கள். பட்டுக் கத்தரித்தது போல திரு. சிவராமன், டாக்டர் குழந்தைசாமி போன்றோரால் எப்படிச் சொல்லிவிட முடிகிறது என்று எண்ணிப் பார்க்கையில் அவர்கள் வார்த்தை நயத்துக்காக தேடி அலையாமல், பாரதி சொன்னது போலே ''தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்'' என்பது இச்சான்றோர்களின் வழிமுறையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். முறையான தமிழில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

கொஞ்சம் பின் சென்று பார்ப்போம்

செப்டம்பர் 11, 2001ல் இந்த அமெரிக்க மண்ணிலும், விண்ணிலும் தீவிரவாதிகள் இழைத்திட்ட கொடுமைகள் இன்று நினைத்தாலும் கொலை நடுங்கச் செய்வன. 'உலகின் எந்த ஒரு மூலையிலும் வறுமை, நோய்க் கொடுமை, புயல், நிலநடுக்கம் போலும் இயற்கை விளைவிக்கும் துயர்கள் எதுவானாலும் கையைக் கட்டிக் கொண்டு நின்றுவிடாது ஓடிச் சென்று விழி நீரைத் துடைக்க ஓடிடும் அமெரிக்காவுக்கா இப்படி ஒரு சோதனை' என்று உலகம் உண்மையிலேயே கண்ணீர் விட்டது. 'உங்களுக்கு எந்த வகையில் நாங்கள் உதவ முடியும்?' என்று ஏறத்தாழ எல்லா நாடுகளுமே கரம் நீட்டின. அந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு நான் சென்றிருந்த போது உடன் பயணித்தோர் டாக்சி ஓட்டுவோர், எங்கள் கிராமத்து ஆசிரியர்... என்று எல்லோருமே ஒரு கரிசனத்தோடு கேட்டார்கள்.

ஓசாமாவைப் பிடித்துவிடும் நோக்கோடு ஆப்கானிஸ்தானத்தில் போர் தொடுத்த போது பெரும்பாலான நாடுகள் ''அது சரிதானே'' என்று ஆமோதித்தன. ஓசாமாவைப் பிடித்தோமோ இல்லையோ, ஆப்கான் நாட்டோ டு நடத்திய குறுகிய போர் மதத் தீவிரவாதிகளை-ஒரு குறுகிய காலம் வரையிலாவது-ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது எனலாம்.

இதுவரை - அதாவது ஆப்கான் போர் முடிவுறும் வரை - அமெரிக்க அதிபரும் ஆளும் கட்சியும் (ரிபப்ளிகன் கட்சி) போர் வியூகத்தைப் படைத்த முறைக்கு அமெரிக்க மக்களிடமிருந்து ஒருமித்த ஒப்புதல் இருக்கவே செய்தது.

''தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறிகட்டியது'' என தென் மாவட்டங்களில் ஒரு 'சொலவடை' - சொல் வழக்கு உண்டு. இரட்டைக் கோபுரங்களை வீழ்த்தியதற்கு முழுப் பொறுப்பு ஓசாமாவும் அவரின் அல் கொய்தா இயக்கமும் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால், ஆப்கானிஸ் தான் போர் முடிந்த கையோடு ஈராக் மீது போர். சதாம் உசேன் பேரழிவு யுத்த தளவாடங்களின் மொத்த பொக்கிஷம், அவருக்கும் அல் கொய்தாவுக்கும் பெருத்த தொடர்புண்டு என்ற பொய்க் கணக்கை அவர்களே நம்பிக் கொண்டது, பின்னர் 'ஈராக்கியர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பது இப்போரின் நோக்கம்' என்ற ஒரு சப்பைக்கட்டு.

ஈராக் போரினால், இன்று, எத்தனையோ இளம் அமெரிக்கர்களைப் போரில் இழந்து கொண்டிருக்கிறோம். ஆயிரமாயிரமாய் ஈராக்கியர்கள் குழந்தைகள், முதியோர் என்ற கணக்கு வழக்கின்றிச் செத்து மடிகிறார்கள். உலக நாகரீகத்துக்கே சுழி போட்ட மெசபெடோ மியா இன்று சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் வருந்திச் சேர்த்திட்ட வரிப் பணம் வாரி இறைக்கப்படுகிறது. ஒரு கூடை நிறைய துணி வெளுக்க இங்கு நாம் பத்து அல்லது இருபது டாலர் செலவிட, ஈராக்கிலோ (நமது படையினரின்) துணிகளைத் துவைத்துக் கொடுக்க ஒரு கூடைக்கு தொளாயிரம் டாலரைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த காண்டராக்ட் கம்பெனியின் முன்னாள் தலைவர் இந்நாள் அமெரிக்கத் துணை அதிபரோடு இந்தத் தேர்தல் முடிந்த கையோடு ஒரு நேர்காணல்.

"உங்கள் ஆட்சிப் பொறுப்பு இன்னும் இரண்டு ஆண்டிற்குப் பின் முடிவுற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?"

''ஓய்வாக மீன் பிடிக்கப் போகிறேன்.''

இப்படி ஒரு பதிலைக் கேட்ட போது அன்று பாரதி சுதந்திர தாகத்தில் சொன்ன வரிகள் போல் சுடுவதாக உணர்ந்தேன்.

இரண்டாயிரத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தல்கள் என்னை வெகுவாகக் குழப்பின. வெகு ஜன வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படாமல் பின்னர் 'எலக்டொரேட்' முறையிலும் இழுபறி யோடு குறுகிய வாக்குகளோடு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி அமெரிக்க அதிபராக டபிள்யூ வென்றபோது இந்தக் கூட்டத்தின் போர்க்குணமோ தான் தோன்றியாய் அரசோச்சும் ஆணவங்களோ, வெளிப்படையாய்த் தோன்றவில்லை.
மீண்டும் 2004 தேர்தல் முடிவுகள் மூலம் வியட்நாம் போரில் போரிட்ட ஒரு பழுத்த அரசியல்வாதியை ஓரம் கட்டிவிட்டு மீண்டும் டபிள்யூவையே அமெரிக்க நாடு தேர்ந்தெடுத்த வேளையில் நான் இராக்கில் ஓர் பொறியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தேவையே இல்லாத இராக் போரை நியாயப்படுத்திக் கொண்டது மட்டுமில்லாமல் தீவிரவாதிகள் நம்மை என்றும் தாக்கக்கூடும் என்று 'பூச்சாண்டி' காட்டியதோடு 'உங்கள் துயர் தீர்க்கும் துணிவு ரிபப்ளிகன் கட்சிக்கு மட்டுமே உண்டு; யான் அதன் தலைவன்' என்ற பொய்மையில் இந்நாடு மயங்கிப் போனது என்று உணர்ந்தேன். 'இது ஒரு தேவையற்ற போர்' என்று என்றேனும் சொல்லத் துணிந்தால், அவ்வளவுதான், தொலைந்தது 'ஓ, இவன் ஓர் நாட்டுப் பற்றற்றவன்' என்று முத்திரை குத்தி விடுவார்கள்

'இடிப்பாரை இல்லா ஒரு ஏமரா மன்னன்' அம்மன்னன் தட்டிக் கொடுத்தே வளர்த்திட்ட போர்த் தளபதி, ஈராக் போரில் தொடங்கி அதன் பின் விளைவுகள் அத்தனைக்கும் காரணமான, தட்டிக் கேட்க ஆளில்லாத ஆளும் கட்சியினரின் அத்தனைப் பொம்மலாட்டங்களுக்கும் சூத்ர தாரியான ஓர் துணை மன்னன்......சகுனி என்றால் சாலப் பொருத்தமோ? செப்டம்பர் பதினொன்று முடிந்த ஆறுமாதங்களுக்குப்பின் நடந்திட்ட அத்தனை அவலங்களுக்கும் இவர்கள் மட்டுமே மூல காரணம் என நெற்றியில் அடித்தது போல் இப்பொது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மூலம் தீர்ப்பளித்துள்ளனர் அமெரிக்க மக்கள்.

லஞ்சம், ஒழுக்கமின்மை இவைதான் அரசியல் வாதிகளின் தோல்விகளுக்குக் காரணம் என்பது வாக்காளர்களை நேரில் கேட்ட போது சொன்ன பதிலாக இருக்கலாம். ஆனால் ஈராக் போர் வியூகத்தை விட்டு வெளிவர முடியாத இக்கட்டான நிலை, அதை ஒத்துக் கொள்ள மறுத்திட்ட அதிகாரத்தின் ஆணவப் போக்கு, கட்ரீனாவின் போது வந்திட்ட துயர்களைக் கண்டும் கண்களை மூடிக் கொண்டது. இவைதான் தலையாய காரணங்கள்.

''தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்'' என்ற பாரதியின் வரிகள் மீது எனக்கு என்றுமே அசையாத நம்பிக்கையுண்டு. அந்த நம்பிக்கை வீண் போகாதபடி அண்மையில் வந்த தேர்தல் முடிவுகள் நம்பிக்கை வேருக்கு நீர் ஊற்றியுள்ளன.

இறுதியாக, அமெரிக்கர்கள் 'ஆளும் கட்சியினருக்கு சூடு போடத்தான் இந்தப் பதில். மாற்றுக் கட்சியினர் மீது கொண்ட பரிவினால் அல்லஒ என்பதை மாற்றுக் கட்சியும் உணர வேண்டும். ஈராக் போருக்கு ஓர் முடிவு, அமெரிக்கர்களின் உடல் நலம், கல்வி- இதுபோலும் அடிப்படைத் தேவைகளை உயர்த்துவது... என்ற மாற்றங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வர முயலாத வரை... 2008ல் இன்னும் வேறு மாற்றம் வரக்கூடும்!

அர்த்தநாரி
Share: 




© Copyright 2020 Tamilonline