|
|
தமிழ்ச் சூழலில் பலர் இரட்டையர்களாக இயங்குபவர்கள் இவர்களுள் நவீன தமிழிலக்கியச் சூழலில் இரட்டையர்கள் என்று அறிமுகமானவர்களில் சிட்டி சோ.சிவபாத சுந்தரம் ஆகியோர் முக்கியமானவர்கள். சிட்டி என்கிற பெ.கோ.சுந்தரராஜன் தனது 97 வயதில் சமீபத்தில் காலமானார். இவர் மணிக்கொடிப் பரம்பரையில் வந்தவர்.
சிட்டி ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தான் எழுதிக்கொண்டிருந்தார். நகைச்சுவை நிரம்பிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தார். வரா அவர்கள் தான் சிட்டியை தமிழில் எழுதத் தூண்டினார். நகைச்சுவை உணர்வு எழுத்தில் மட்டுமல்ல அவரது நேரடிப் பேச்சிலும் வெளிப்படும் என்கிறார்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நல்ல வேளை ஆங்கிலம் தப்பியது என்றார் சிட்டி. தன்னைப்பற்றிக் கிண்டலடித்துக் கொள்ளக்கூடிய எழுத்தாளர்.
சிட்டி எழுதிய சிறு கதைகள் 50க்கும் குறைவாகவே இருக்கும். அந்திமந்தாரை, தாளை பூத்தது முதலியவை குறிப்பிடத்தக்க தொகுப்புகள். சிட்டியின் கதையாடல் மரபு ஏதோ ஒன்றின் எதிரொலிகளாக இருக்கின்றன. சிட்டியின் புதிய கதை கு.ப.ராவின் புரியும் கதைக்கு எதிர்மறை. தி.ஜானகிராமனின் மறதி கதைக்கு மறுப்பு வழியிலே வந்தவள். புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தின் தாக்கம் மாசறு கற்பினாள். இவை சிட்டியின் கதைகளைப் புரிந்து கொள்ள உதவும் குறிப்புகள். அதேநேரம் சிட்டியின் படைப்பியல் தன்மைகளின் கூறுகளை திசைப்படுத்தியவை எவையென்பதை தெளிவாக இனங் காட்டுகின்றன. எதிர்வினை, அருட்டுணர்வு போன்ற வெளிப்பாட்டுத் துலங்கல் தன்மைகள் படைப்பாக்கத்தின் செல்நெறிகளை ஆற்றுப் படுத்தும் என்பதற்கு சிட்டியின் படைப்புலகம் தெளிவாக உள்ளது.
சிட்டிக்கு ஆங்கில இலக்கியம் மீது ஆழமான பரிச்சயம் உண்டு. அவற்றின் புரிதல் தெளிவு தமிழ் இலக்கியத்தின் தளமும் வளமும் பற்றிய தர்க்கபூர்வமான தேடலை ஆய்வுகளை வேண்டியுள்ளது. சிட்டி, சோ.சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதிய சிறுகதை வரலாறும், நாவல் வரலாறும் இத்துறைசார் வளர்ச்சியில் ஆய்வு நோக்கில் முக்கிய மானவை. நவீன தமிழ் இலக்கியத்தின் செல்நெறிப் போக்குகளை ஆழமாக நோக்கு வதற்கான ஆய்வு முறையியல் இவ்விரு நூல்கள் மூலம் அமைவு பெறுகின்றன. ஆய்வு சார்ந்த நுட்பம், தேடல் படைப்பாளிகளுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை தெளிவாக உணர்த்துகின்றன.
1930இல் கிளர்ந்த 'பாரதி மகாகவியா?' என்ற சர்ச்சையின் விவாதத்தின் ஒரு பரிமாணத்தின் பதிவாக சிட்டி எழுதிய 'கண்ணன் என் கவி' என்ற நூலைக் கருதலாம். இந்நூல் கு.ப.ராவுடன் இணைந்து எழுதியது ஆகும். இது போல், 'நடந்தாய் வாழி காவேரி' எனும் நூல் தி.ஜானகிராமனுடன் சிட்டி இணைந்து எழுதியதாகும். கடைசியாக ஆய்வாளர் பெ.சு. மணியுடன் சிட்டி இணைந்து அதிசயப் பிறவி வ.ரா எனும் வரலாற்று நூலை எழுதினார். சிட்டி இணைதயாரிப்பு முயற்சியில் நம்பிக்கையும் தெளிவும் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய நூல்கள் ஆய்வு, வரலாற்று நோக்கில் கணிப்பு மிக்கவை. சிட்டியின் புலமை ஆய்வு தேடல் எத்தகையது என்பதை இன்னும் தெளிவாக உணர்த்துபவை. |
|
வ.ரா.வைக் குருவாகக் கொண்டாடிய சிட்டி அவரைப் போலச் சீர்திருத்தக்காரர் அல்ல. இவர் எழுதிய நூல்கள் அவற்றினூடு இழையோடிய கருத்தியல், உளவியல் சிட்டி யார் என்பதைத் தெளிவாக உணர்த்தும். அதைவிட சிட்டியின் சிறுகதை உலகம் ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களது உலகுடன் ஒப்பிடும்பொழுது தனித்து வித்தியாசமான உலகம் நோக்கி வாசகரை அழைத்துச் செல்லும் பண்புகள் கொண்டவை அல்ல. இதனால் தான் சிட்டி 50க்கு மேற்பட்ட கதைகள் எழுதியிருப்பினும் சரளமான சிறுகதை மரபின் செழுமைக்கு வளம் சேர்த்த ஒருவரென அறுதியிட்டுக் கூற முடியாமல் உள்ளது. ஆனால் நவீனத்துவம் சார்ந்த பார்வை இவருக்குள் வெளிப்பட்டிருந்தாலும் அவை தட்டையான மெதுவான இயங்கு தன்மை கொண்டவை. சிறுகதை வரலாறு பற்றிய ஆய்வில் இதற்கான தடயங்கள் நிறையவே உள்ளன. இன்னொருவிதத்தில் புதுமைப்பித்தன் மீதான சிட்டியின் விமர்சனங்கள் நேரடிதிறன் கொண்டவை அல்ல. சிட்டியின் இத்தகைய விமர்சனங்களுக்கு புதுமைப்பித்தன் பற்றிய தெளிவுக்கு பலர் விரிவாகவே பதில் கொடுத்துள்ளார்கள்.
சிட்டியின் நகைச்சுவை உணர்வு குறிப்பிட்ட சூழலின் இறுக்கத்தை உடைத்து வெகு இயல்பாக தடையின்றி பயணம் தொடர வழியமைக்க வேண்டும். ஆனால் அத்தகைய உணர்வுப் பிரவாகவெடிப்புக்கு சிட்டியின் நகைச்சுவை உணர்வு பயன்பட்டுள்ளதா என்பது சந்தேகம். இது மறைமுகமாக அவரது படைப்பு வெளியில் ஆங்காங்கு தலை காட்டும் அல்லது உறைந்திருக்கும் மௌனமாகவே இறுகியுள்ளது. இது சிட்டிக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் உண்டு.
சிட்டியின் எழுத்துலகம் அவை காட்டும் பரப்பு மீளவும் ஆழ்ந்து சிந்திக்கவும் மறு எழுதலுக்கான நியாயத்தையும் அவை கொண்டுள்ளன. அந்த வகையில் சிட்டி முக்கியமானவர். அவரது சிறு கதைகள் உணர்த்தும் களம் மற்றும் காலமும் கருத்தும் படைப்பாக்கத்திறன் சிட்டியின் பலமாகவும் உள்ளன. அதேநேரம் அந்தப் பலத்தில் நின்று கொண்டு பார்க்கும் பொழுது அவை பலவீனமாகவும் உள்ளன. இப்பார்வை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சாத்தியம்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|