|
|
|
முன்னணிக் கதாநாயகர்கள் நடித்திருந்தும் பல திரையரங்குகளில் கூட்டம் இல்லை. ஆனால், 'பாம்பே ஞானம்' நடத்தும் நாடகங்களை நின்றுகொண்டே பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். சமூக சிந்தனை கொண்ட நாடகங்களை வழங்கி வந்தவர், சமீப காலமாக ஆன்மீக நாடகங்களை அரங்கேற்றுகிறார். போதேந்திராள், ஆதிசங்கரர், ஜெயதேவர், ஷீரடி பாபா, பகவான் ரமணர் போன்ற அவரது நாடகங்களைப் பார்க்க அரங்கு கொள்ளாத கூட்டம். திரைப்படம் போன்ற காட்சி அமைப்புகளையும், மேடை அமைப்பையும் பார்த்துப் பிரமித்துப் போகிறார்கள். ஆண் வேடங்களையும் பெண்களே ஏற்று நடிப்பது இவரது நாடகங்களின் சிறப்பு. தமிழக அரசின் கலைமாமணி, சபாக்கள் வழங்கிய நாடக சூடாமணி, நாடக பத்மம், நாடக ரத்னம், வாணிகலா சுதாகரா எனப் பல சிறப்புப் பட்டங்களை பெற்ற பாம்பே ஞானத்திற்குச் சிறுவயது முதலே நாடக ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே பல நாடகங்களில் பங்கு கொண்டிருக்கிறார். திருமணமாகி மும்பை சென்ற பின்னரும் அது தொடர்ந்தது. 'மாதுங்கா டிரமாடிக் சொசைட்டி' என்ற நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தானே பெண்களுக்கென்று தனியாக ஒரு நாடக்ககுழுவைத் துவங்கினார். ஏழு முதல் 70 வயதுவரை எல்லா வயதினரும் இவரது குழுவில் இருக்கிறார்கள். சின்னத்திரையிலும் நிறைய நடித்திருக்கிறார். 'பிரேமி', 'சஹானா', 'பல்லாங்குழி', 'சிதம்பர ரகசியம்' போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மிகவும் புகழ்பெற்றவை. 'ஆஹா', 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க', 'ஒருநாள் ஒரு கனவு', 'நள தமயந்தி', 'ஜிகர்தண்டா' போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது 'மகாலட்சுமி நாடகக் குழு'வுக்கு இது முப்பதாம் ஆண்டு. தனது நாடக வாழ்க்கையைப் பற்றி மனம் திறக்கிறார் பாம்பே ஞானம். கேட்போமா?
கே: பாம்பே ஞானம் - பெயர்க்காரணம்? ப: அது தற்செயலாக நடந்த ஒன்றுதான். B. ஞானம் தான். B என் கணவர் பாலசுப்பிரமணியன் பெயருக்கானது. ஒருமுறை டைரக்டர் விசு எனக்குக் கடிதம் எழுதியபோது B-ஐ விரித்து Bombay என்று எழுதியிருந்தார். பாலசந்தரின் சின்னத்திரையில் நடித்தபோது எனது பெயரைக் கேட்டார்கள். நான் பாம்பே என்பதைச் சேர்த்துச் சொன்னேன். அது அப்படியே பாம்பே ஞானம் ஆகிவிட்டது.
கே: முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்ட நாடக்குழுவை ஆரம்பிக்கக் காரணம் என்ன? ப: இருபாலரும் சேர்ந்து நடிக்கும் நாடகக் குழுக்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், பெண்கள் மட்டுமே நடிக்கும் நாடகக்குழுக்கள் அப்போது இல்லை. 1989ல் 'மங்கை' இதழில், ஒரு கட்டுரையில் விசு, டெல்லி கணேஷ், கோமல் சுவாமிநாதன் போன்றவர்கள் எல்லாம் நாடகத்துறையில் பெண்கள் குழுவே இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அது எனக்கு ஒரு சவாலாகத் தோன்றியது. ஏன் பெண்கள் நாடகக்குழு ஒன்றை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. என் நண்பரும் புகழ்பெற்ற நாட்டியமணியும் ஆன கனகா சீனிவாசன், நீங்கள் பெண்களை ஒன்று சேர்த்து நாடகம் நடத்தலாம் என்று ஊக்குவித்தார். மேலும் 25-30 வருடங்களுக்கு முன்பு ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதில் பெண்களுக்கு நிறையத் தயக்கங்கள், கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் பெண்களை மட்டுமே வைத்து நடத்துவதால் அவர்களது குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும்; திறமைகளையும் வெளிக்கொண்டு வரலாம் என்று எண்ணினேன். அப்படி அக்டோபர், 1989ல் பம்பாயில் ஆரம்பித்ததுதான் மகாலட்சுமி பெண்கள் நாடகக்குழு (Mahalakshmki Ladies Drama Group - www.mldgtrust.com) அன்று முதல் இன்றுவரை இல்லத்தரசிகள் பலர் எங்கள் நாடகங்களில் பங்குகொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கே: இதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? குறிப்பாக, ஆண் பாத்திரங்களுக்குக் குரல் கொடுப்பது மிகவும் கடினமாயிற்றே? ப: ஆம். அது சவாலான விஷயம்தான். பெண், ஒரு ஆண் கதாபாத்திரம் மேடையில் நிற்கும்போது பெண் குரல் ஒலித்தால் 'என்னடா இது! வேஷம் ஆணாக இருக்கிறது, குரல் பெண்ணாக இருக்கிறதே!' என்று தோன்றத்தான் செய்யும். ஆனால், நாங்கள் எப்படிச் செய்கிறோம் என்றால் ஒரு கதாபாத்திரத்தை மேடையில் அறிமுகப்படுத்தும்போதே பார்வையாளர்களுக்கு அந்தக் கேரக்டரை உணர்த்தி விடுவோம். நாடகத்தில் அந்தக் கேரக்டர் தான் தெரியுமே தவிர, பெண்ணல்ல. பார்வையாளர்கள், அந்தப் பாத்திரத்துடன் ஒன்றி விடும்போது அது பெரிய குறையாகத் தெரிவதில்லை. ஆனால், இப்போதெல்லாம் - குறிப்பாக மகான்கள் குறித்த நாடகங்களில், அவர்கள் பெண் குரலில் பேசினால் பொருத்தமாக இருக்காது என்பதாலும், வேதம், உபநிஷத், சாஸ்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றைப் பெண் குரலில் சொல்லுவது அவ்வளவு பொருத்தமில்லை என்பதாலும் அதற்கேற்றவாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆண் குரல்களைப் பின்னணியில் பயன்படுத்துகிறோம். அதுவும் ஒரு சவாலான விஷயம்தான்.
கே: பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்தது எப்போது, ஏன்? ப: எனது கணவருக்குச் சென்னைக்கு மாற்றலானது. அதனால் நாங்கள் இங்கே குடி பெயர்ந்தோம். 1996ல் நாங்கள் சென்னைக்கு வந்தோம். அது முதல் இங்கே நாடகங்கள் நடத்த ஆரம்பித்தோம்.
கே: சின்னத்திரையிலும் நிறைய நடித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி... ப: சீரியலில் நடித்தது நல்லதொரு அனுபவம். எனக்கு அது பிடித்தும் இருந்தது. மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவள் எதற்கு சீரியலுக்கு வந்தேன் என்றால், எனக்குப் பரவலான ஒரு அடையாளம் தேவைப் பட்டதாலும், அந்தப் பெயரோடு மேடை நாடகம் பண்ணும்போது நமக்கு என்று ஒரு brand இருக்கும் என்பதாலும்தான். அது எனக்கு வெற்றிகரமாகக் கிடைக்கவும் செய்தது.
கே: 'சஹானா' சீரியலில் எந்தப் பெண்ணும் நடிக்கத் தயங்கக்கூடிய "மது அருந்தும் பெண்" வேடத்தில் நடித்தது பற்றி.. ப: அந்தச் சீரியலில் நடிப்பதற்கு முன்னால் இயக்குநர் கே. பாலசந்தர் என்னை அழைத்து, "இந்த சீரியலில் இப்படி ஒரு பாத்திரம் இருக்கிறது. இதை நீங்கள் பண்ணினால் நன்றாக இருக்கும். உங்கள் இமேஜ், உங்கள் பின்னணி இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், இந்தப் பாத்திரத்தை நீங்கள் செய்தால் தமிழ்நாடே உங்களைத் திரும்பிப் பார்க்கும். இதை ஒரு சேலஞ்ச் ஆக எடுத்துக் கொண்டுதான் நான் இயக்குகிறேன். நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நீங்கள் பண்ண வேண்டும்" என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
கே: தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறீர்கள் அல்லவா? ப: அதை ஒரு பெரிய அனுபவம் என்று சொல்லமாட்டேன். என்மீது அன்பும் மதிப்பும் கொண்ட சில இயக்குநர்கள் நீங்கள் நடிக்கவேண்டும் என்று சொன்னபோது, சில படங்களில் நடித்தேன். அவ்வளவுதான். மேலும் நம்முடைய ஷாட் எப்போது எடுப்பார்கள் என்று தெரியாது. வெகுநேரம் செட்டில் அதற்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். எனக்கு அது மிகவும் போரடித்தது. சினிமாவில் நடிப்பதில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை.
கே: சமூக நாடகங்களை அரங்கேற்றி வந்த உங்களுக்கு ஆன்மீக நாடகங்களின் மீது கவனம் சென்றது ஏன்? ப: அது தற்செயலானதுதான். சமூக நாடகங்களுக்கும் ஆன்மீக நாடகங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சமூக நாடகங்கள் முழுக்க முழுக்க நமது கற்பனையை அடிப்படையாகக் கொண்டவை. எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம்; நம்முடைய கற்பனையில் எப்படிப்பட்ட பாத்திரத்தை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால், ஆன்மீக நாடகம் அப்படி அல்ல. அதற்கு ஒரு வரையறை இருக்கிறது. மகான்களின் சரிதம் எல்லாம் ஏற்கனவே நிகழ்ந்த நிஜம். அந்த நிஜங்களை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், அந்த மகான்களில் சரிதத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை எடுத்து மக்களுக்குத் தெரிவிக்கிறபோது ஓர் அலாதியான ஆனந்தமும் ஆத்மதிருப்தியும் கிடைக்கிறது. இதனை மகான்களுக்குச் செய்யும் தொண்டாகவும் வைத்துக் கொள்ளலாம். மகான்களுக்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை. இருந்தாலும் தெரியாத பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியப்படுத்தும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அலாதியானது.
கே: நாடகங்களில் மழை பெய்யும் காட்சி, பாபாவின் கால்களில் இருந்து கங்கை நதி பெருக்கெடுத்து ஓடும் காட்சி இதெல்லாம் மேடையில் நிகழ்த்துவது ஆச்சரியம் மட்டுமல்ல; சவாலும்கூட. அதைப்பற்றிச் சொல்லுங்கள். ப: அவை எங்கள் நாடகத்திற்கென்று அமைக்கப்பட்ட பிரத்தியேகமான காட்சிகள். ஆனால் மிகவும் சவாலானவை. காட்சியமைப்புக்கே நிறையச் செலவாகும். மட்டுமல்லாமல் அந்தக் காட்சி மேடையில் வரும் வரைக்கும் ரொம்ப டென்ஷனாக இருக்கும். ஏனென்றால் அது பல பேரின் கூட்டுமுயற்சி. எல்லாம் ஒருங்கிணைந்து சரியாக வரவேண்டும். ஒருவர் சொதப்பினாலும் ஃப்ளாப் ஆகிவிடும். ட்யூப் மாட்ட வேண்டும்; சரியான நேரத்தில் காலால் பம்ப் பண்ண வேண்டும்; அப்படிப் பண்ணும்போது கரெக்டான இடத்தில் தண்ணீர் வரவேண்டும். தண்ணீர் வரவில்லையென்றால் அவ்வளவுதான். அதனால் எப்போதும் பாபா நாடகத்தில் அந்தக் காட்சி முடியும்வரை டென்ஷன் இருந்துகொண்டே இருக்கும். அது முடிந்து மக்கள் கரவொலியைக் கேட்டதும்தான் மனம் ரிலாக்ஸாகும்.
கே: ஆன்மீக நாடகங்களுக்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது? ப: நிச்சயமாக நல்ல வரவேற்பு இருக்கிறது. செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் திரளாக வந்து ரசிக்கின்றனர். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கே: கிட்டத்தட்ட 'அவதூதர்' போல் வாழ்ந்த 'ரமணர்' பாத்திரத்தில் ஒரு பெண் நடிப்பது மிகுந்த சவாலான விஷயம் அல்லவா, அதை எப்படிச் சாத்தியமாக்கினீர்கள்? ப: ஆமாம். மிகுந்த சவாலான விஷயம்தான். ஏனென்றால் ரமணரது ஆடையே வெறும் 'கௌபீனம்' மட்டும்தான். மொட்டைத்தலை தான். அதை, ஒரு பெண்ணைக் கதாபாத்திரமாக வைத்து எப்படிக் காட்சிப்படுத்துவது என்பது மிகவும் சவாலாக இருந்தது. மொட்டை அடித்துக்கொண்ட ஒருவர் நடித்தால் இயல்பாக, சிறப்பாக இருக்கும் என்று கருதினோம். ஆனால், எந்தப் பெண்ணும் நாடகம் என்றாலும் கூட மொட்டை அடித்துக்கொள்ள முன்வர மாட்டாரே. அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம் நாங்கள் அந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டோம். அவரும் ஒப்புக்கொண்டார். உடம்போடு ஒட்டிய ஆடை ஒன்றை அணிவித்து, மேலே ஒரு துண்டை, சுற்றாடையாக உடுத்தி, அவரை மேடையேற்றினோம். ஒரு பெண் அம்மாதிரி மேடையில் தோன்றி நடிப்பது என்பது உண்மையில் ஒரு மிகப்பெரிய சவால். அவர் தானாகவே முன்வந்து அந்தச் சவாலை ஏற்று, அந்தப் பாத்திரத்தோடு மனம் ஒன்றி மிகவும் திறம்பட நடித்தார். அவர் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.
கே: உங்களைக் கவர்ந்த நாடகக் கலைஞர்கள் யார், யார் ப: டைரக்டர் விசு, பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், மௌலி என்று ஆரம்பித்து பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
கே: இன்றைய நாடகங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? ப: நாடகம் நலிந்துவிட்டது, நலிந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது நிறையக் கூட்டம் வருகிறது. பார்வையாளர்கள் ரசிக்கின்றார்கள். நாடகங்களை நல்ல நாடகங்களாகத் தயாரிக்க முடியாததற்குக் காரணம் நிதிச் செலவுதான். ஒரு நாடகம் அரங்கேற்றினால் ஹால் வாடகை, டெக்னீசியன்களுக்குக் கொடுக்க வேண்டியது என்று நிறையச் செலவுகள் இருக்கின்றன. இவை திரும்ப நமக்குக் கிடைப்பதில்லை. நல்ல நாடகங்கள் நடத்துவதற்குத் தேவையான நிதி கிடைத்துவிட்டால், நல்ல, சீரும் சிறப்புமான பிரமாதமான நாடகங்கள் நிச்சயம் வெளிவரும் என்பது எனது கருத்து.
கே: நாடகக்குழு ஆரம்பித்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்? ப: விளையாட்டுப் போல் ஆரம்பித்தது 30 வருடம் ஆகிவிட்டதா என்று வியப்பாக இருக்கிறது. ஆனால், இந்த 30 வருடங்களில் எத்தனை பெண்கள் வந்து போயிருக்கின்றனர், எத்தனை எத்தனை நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறோம், எத்தனை நாடகங்கள் பார்வையாளர்களின் மனதைச் சென்று தொட்டிருக்கிறது என்றெல்லாம் பார்த்தால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. சாத்தியமா என்று ஒரு காலத்தில் கேட்டது இன்றைக்குச் சாத்தியமாகி இருக்கிறது. எப்படிச் சாதித்தோம் என்ற கேள்வியும் கூடவே வருகிறது.
கே: உங்கள் குடும்பம் பற்றி.. ப: என்னுடைய கணவர் மத்திய அரசில் மிகப் பெரிய உயர் பதவியில் இருந்தார். எனக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
கே: எதிர்காலத் திட்டங்கள்... ப: நான் எதையுமே திட்டம் போட்டுச் செய்ததில்லை. ஆன்மீக நாடகங்கள் போட வந்ததுகூட தானாகவே அமைந்ததுதான். இப்படி ஒவ்வொரு மகான்களும் அமைந்துகொண்டு வருகிறார்கள். எத்தனை மகான்கள் அமைகிறார்களோ அத்தனை நாளைக்கு நாங்கள் நாடகம் போட வேண்டும். இதைத் திட்டமென்று சொல்ல முடியாது. நடந்தது. நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கும். அதற்கான சாத்தியமிருக்கிறது.
வாழ்க்கையில் உற்சாகத்தோடு செய்ய ஒரு லட்சியம் இருந்தால் அவர்களுக்குத் தளர்ச்சியும் இல்லை, முதிர்ச்சியும் இல்லை என்பார்கள். பாம்பே ஞானத்தைப் பார்த்தால் நமக்கு அது புரிகிறது. இன்னும் பலவற்றைச் சாதிக்க வாழ்த்தி விடை பெறுகிறோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
***** |
|
இயக்குநர் சிகரம் தந்த சலுகை பாலசந்தர் இயக்கத்தில் நடித்தது மிகச் சுவையான அனுபவம். நிறையக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது மனத்திருப்தியோடு வருவோம், நன்றாகச் செய்திருக்கிறோம் என்று. அவர், ஒருவரிடம் உள்ள திறமையை எப்படி வெளிக்கொணருவது, எந்த அளவுக்கு அவரைச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்ற நுணுக்கம் தெரிந்தவர். சுருக்கமாகச் சொன்னால் ரொம்பக் கறாரான ஆனால் மிகநல்ல இயக்குநர். அவர் நாடகங்களில் அவர் தரும் வசனங்களைத் தவிர ஒரு 'க்', 'ச்', 'ஞ்' கூட கூடுதலாகப் பேச யாரையும் விடமாட்டார். ஆனால், ஒரு சமயம் எங்கள் நாடகம் பார்க்க வந்துவிட்டு, அந்த நாடகத்தின் வசனங்களை எல்லாம் கேட்டுவிட்டு, "இனிமேல் நான் உங்களுக்கு டயலாக் எழுத மாட்டேன். உங்களுக்கு டயலாக்கை நீங்கள் சேர்த்துக்கலாம்" என்று சொன்னார். அந்த உரிமையை எனக்குக் கொடுத்தார். அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
- பாம்பே ஞானம்
*****
ரமணர் வருவாரா? சமீபத்தில் நடந்தது இது. ரமணர் நாடகம். அதில் ரமணராக நடிக்க வேண்டியவர் டெல்லி தாண்டி உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அவர் திட்டப்படி நாடகம் நடக்கும் நாளன்று மாலை 3 மணிக்குள் வந்து சேர்ந்துவிட வேண்டும். அவர் திட்டப்படி டெல்லிக்கும் வந்துவிட்டார். ஆனால், டெல்லியில் காலை 12.00 மணி அளவில் கிளம்ப வேண்டிய விமானம் மாலை 4.30 வரை கிளம்பவே இல்லை. அன்று மாலை 6.00 மணிக்கு நாடகம். என்ன செய்வது என்றே எங்களுக்குப் புரியவில்லை. மிகவும் டென்ஷனாக இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் அவர்தான் நடித்து வந்தார். திடீரென்று வேறு யாரையும் நடிக்க வைக்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தோம். 6.00 மணிக்கு நாடகம் நடத்தியே ஆக வேண்டும்.
4.30 மணிக்கு மேல் விமானம் கிளம்பியதாக எங்களுக்குச் செய்தி வந்தது. விமானம் வரவே ஆறு மணி ஆகிவிடும். அந்த நேர டிராஃபிக்கில் ஏர்போர்ட்டில் இருந்து நாடகம் நடக்கும் இடத்துக்கு வந்து சேரவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அந்தப் பெண்ணோ விமானத்தில் அழுது கொண்டிருக்கிறாள். நல்ல வேளையாக எங்களிடம் ரமணருக்கான காஸ்ட்யூம்கள் இருந்தன. எப்படியாவது ஒரு டூப்பைத் தயார் செய்து ட்ராமாவை ஒப்பேத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, ஃப்ளைட் லாண்ட் ஆகிவிட்டது என்று தகவல் வந்தது. உடனே டாக்சியில் வந்தால் டைம் ஆகும் என்பதால், இங்கிருந்து ஒருவரை பைக்கில் ஏர்ப்போட்டிற்கு அனுப்பி, அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தோம். 6.30 மணிக்கு ட்ராமா ஆரம்பித்தோம். முதல் சீனில் டூப் போட்டோம். அடுத்த சீனுக்கு அந்தப் பெண்ணே ரமணராக வந்துவிட்டார்.
அந்த டென்ஷன், பயம், எப்படி நாடகம் நடக்கப் போகிறது என்கிற பதற்றம் என் நாடக வாழ்விலேயே மறக்க முடியாத ஒன்று.
- பாம்பே ஞானம்
*****
பாம்பே ஞானத்தின் சமூக நாடகங்கள்
சமூக நாடகங்களிலும் முத்திரை பதித்தவர் பாம்பே ஞானம். வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை துவங்கி வாடகைத் தாய், லெஸ்பியனிஸம் வரை இவர் நாடகங்களில் பேசாத கருத்துக்கள் இல்லை. மணிரத்னம் 'ஓ.கே. கண்மணி' படத்தின் மூலம் சொன்ன 'லிவிங் டுகெதர்' கலாசாரத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே 'எல்லை இல்லாத இல்லறம்' என்ற தனது நாடகத்தில் காட்சிப்படுத்தியவர். 'சிந்திக்க வைத்த சீதனம்', 'அக்கரைப் பச்சை', 'நரன் நாரீ ஆனால்...', 'மாமியார் மைனஸ் இன் லாஸ்', 'பெண்கள் மிரண்டால்', 'பாசத்தின் பரிணாமம்', 'இல்லத்தின் ஏக்கங்கள்', 'அபிநயா', 'எனக்குத் தாய்; உனக்குத் தாரம்', 'உறவின் உரிமை', 'என்.ஆர்.ஐ. வெட்டிங்' போன்றவை கோமல் சுவாமிநாதன் துவங்கி விசு, கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் எனப் பலரால் பாராட்டப்பட்டவை.
*****
பாம்பே ஞானத்தின் மகான்கள் சரிதம்
போதேந்திராள் காஞ்சிமடத்தின் 59வது பீடாதிபதியாக இருந்தவர் போதேந்திராள். கோவிந்தபுரத்தில் வாழ்ந்து, வாழ்நாள் இறுதிவரை ராமநாமத்தை ஜெபித்து அங்கேயே சமாதி ஆனவர். இன்றைக்குத் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் பஜனை சம்பிரதாயத்தை உருவாக்கியவர். அவரது வாழ்க்கைச் சம்பவங்கள்தான் இந்த நாடகம்.
பஜகோவிந்தம் ஆதிசங்கரரின் சுவையான வாழ்க்கை வரலாற்றை உள்ளத்தை உருக்கும் சம்பவங்களாகக் கோர்த்து நாடகமாக்கியிருக்கிறார். காட்சியமைப்பும், மேடையமைப்பும் பலராலும் பாராட்டப்படும் ஒன்று.
ஜயதேவர் அஷ்டபதி தந்த ஜயதேவரின் சுவையான வாழ்க்கைச் சரிதம். இனிய பாடல்களுடன் சேர்த்து 40 தடவைக்கு மேல் இதனை மேடையேற்றியிருக்கிறார் பாம்பே ஞானம்.
பகவான் ரமணர் பார்த்தவர்கள் பாராட்டும் இந்த நாடகத்திற்கு அரங்கேறும் இடமெல்லாம் பாராட்டு. தமிழ்நாடு முழுவதும் பரவலாக இந்நாடகத்திற்கு மிக நல்ல வரவேற்பு. ரமணரின் வெவ்வேறு வாழ்க்கைத் தோற்றங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.
ஷீரடி சாயிபாபா பாபாவிற்கு அறிமுகம் தேவையில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றின் சுவையான பக்கங்களை அற்புதக் காட்சிகளுடன் அரங்கேற்றி வருகின்றார்.
***** |
|
|
|
|
|
|
|
|