|
|
|
'நெஞ்சமெல்லாம் நீயே', 'உன்னை நான் சந்தித்தேன்', 'உனக்காகவே வாழ்கிறேன்', 'உயிரே உனக்காக', 'மனிதனின் மறுபக்கம்', 'கீதாஞ்சலி', 'உதயகீதம்', 'பாடு நிலாவே', 'நினைவே ஒரு சங்கீதம்' போன்ற வெள்ளிவிழாக் கொண்டாடிய வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் கே. ரங்கராஜ், ஆக்ஷன் படங்கள் அதிகம் வந்துகொண்டிருந்த காலத்தில், பீம்சிங்கைப் போல குடும்பப் பாங்கான, கதையம்சமிக்க, நல்ல படங்களைத் தந்தவர். இவர் தயாரித்து இயக்கிய 'ஒரு இனிய உதயம்' திரைப்படம், மத்திய அரசின் குடும்பநல சுகாதாரத் துறை NDCI (National Development Corporation Of India Ltd) சார்பாகத் தயாரிக்கப்பட்டதுடன், தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருதும் பெற்றது. திரைப்படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும், ஆவணப் படங்களிலும் முத்திரை பதித்தவர். தூர்தர்ஷனில் வம்சம், சன் டி.வி.யில் குடும்பம், பந்தம் போன்ற இவரது சீரியல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. "மீண்டும் படங்களை இயக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று அறிவித்திருக்கும் அவரைச் சந்தித்து உரையாடினோம். அவரது மலரும் நினைவுகளில் இருந்து....
*****
கே: உங்களுடைய முதல் படமே வித்தியாசமான கதையம்சம் கொண்டது. தோழிக்காகத் தன் கணவனையே விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்த பெண்ணின் கதை. அந்தப் படம் பற்றி... பதில்: அந்தக் காலத்தில் 'அபிமான்' என்று ஓர் இந்திப்படம் வந்திருந்தது. அமிதாப்பச்சன், ஜெயாபச்சன் நடித்தது. இந்தியில் பெரிய வெற்றிபெற்ற படம் அது. பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். அதன் கதை உரிமையை வாங்கித் தமிழுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து எடுக்கப்பட்ட படம்தான் 'நெஞ்சமெல்லாம் நீயே'. எனது முதல் படம். அமிதாப்பின் பாத்திரத்தில் மோகன் நடித்திருந்தார். ராதா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருந்தார்கள். கணவன் - மனைவி இருவருக்குமிடையே எழும் ஈகோ பிரச்சனைதான் கதையின் அடிப்படை. சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் எல்லாம் அக்காலத்தில் ஹிட். வாணிஜெயராம் பாடிய "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது" என்பது அந்தப் படத்தின் பாடல். அதை வைரமுத்து எழுதியிருந்தார். எனக்கு நல்ல பெயரைத் தந்த படம் அது.
கே: கிராமத்தில் பிறந்த உங்களுக்கு திரைப்படத்துறை மீது ஆர்வம் வந்தது எப்படி? ப: நான் பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மல்லாங்கிணறு என்ற கிராமம். (எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பிறந்த ஊரும் அதுதான்). திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பி.காம். படித்தேன். சிறுவயதிலேயே நிறையத் திரைப்படங்கள் பார்ப்பேன். அவ்வப்போது எம்.ஜி. வல்லபன் ஆசிரியராக இருந்த 'பிலிமாலயா' இதழுக்குக் கதை, கட்டுரை எழுதி அனுப்புவேன். அவரும் வெளியிட்டு ஊக்குவித்தார். படிப்பு முடிந்ததும் அம்மா, அப்பாவிடம், "நான் சென்னைக்குச் செல்கிறேன். சினிமாவில் சேரப் போகிறேன்" என்று சொன்னேன். அவர்கள் தடையேதும் சொல்லவில்லை. "எப்படியாவது முன்னுக்கு வந்தால் சரிதான்" என்று ஒப்புதல் கொடுத்தார்கள். சென்னைக்கு வந்தேன்.
கே: சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது? ப: 'ரொம்பக் கஷ்டப்பட்டேன்' என்றெல்லாம் சொல்லமாட்டேன். காரணம், எனது சகோதரி சென்னையில் இருந்தார். அவர் வீட்டில் தங்கிக்கொண்டு வாய்ப்புகள் தேடினேன். 'பிலிமாலயா' இதழுக்குக் கதை, கட்டுரை, விமர்சனம் எழுதினேன். எம்.ஜி. வல்லபனை அவ்வப்போது சந்தித்துப் பேசிவிட்டு வருவேன். ஒரு சமயம் '16 வயதினிலே' படம் வந்தபோது அந்தப் படத்தை அலசி ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் படித்த பாரதிராஜா என்னைச் சந்திக்க விரும்பினார். எம்.ஜி. வல்லபன் மூலம் பாரதிராஜாவைச் சந்தித்தேன்.
கே: உடன் உதவியாளராகச் சேர்ந்து விட்டீர்களா? ப: இல்லை. அப்போது அவரிடம் நிறைய உதவியாளர்கள் இருந்தார்கள். அதனால் நான் சேரவில்லை. பிலிமாலயா இதழுக்காகப் பேட்டி, கட்டுரை என்று என் முயற்சிகளைத் தொடர்ந்தேன். பாரதிராஜாவையும் நான் பேட்டி கண்டிருக்கிறேன். பின்னர் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்திற்கு உதவியாளராகச் சேர்ந்தேன். அதுமுதல் பல படங்களில் அவருடன் வேலை செய்திருக்கிறேன். 'காதல் ஓவியம்' வரை அவரிடம் இருந்தேன். 1983ல் 'நெஞ்சமெல்லாம் நீயே' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அதில் தொடங்கி இருபது படங்கள்வரை இயக்கியிருக்கிறேன். கன்னடத்திலும் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன்.
கே: சிவகுமார், மோகன் இருவரும் உங்கள் படத்தில் அதிகம் நடித்திருக்கிறார்கள். அதுபோக கவுண்டமணி உங்கள் முதல் படத்திலிருந்து தொடர்ந்து நடித்தவர், இல்லையா? ப: ஆமாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் வெளிவந்த காலத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன் போன்றவர்கள் குடும்பப் பாங்கான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அதுபோல நான் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி, கமல் ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். குடும்பப் பாங்கான எனது கதைகளுக்குப் பொருத்தமான முகங்களாக சிவகுமாரும், மோகனும் இருந்ததால் அவர்களைத் தொடர்ந்து நடிக்கவைத்தேன். அதுபோல, கவுண்டமணி ஆரம்பம் முதலே பாரதிராஜா படங்களில் நடித்தவர். பாரதிராஜாவிடம் நான் பணியாற்றியதால் கவுண்டமணியுடன் நல்ல பழக்கம் உண்டு. அதனால் அவரை எனது படங்களில் பயன்படுத்திக் கொண்டேன்.
கே: முதல் படம் துவங்கி உங்களது படங்கள் பலவும் இசைக்கு முக்கியத்துவம் மிகவும் கொடுத்த படங்கள். 'உதய கீதம்', 'கீதாஞ்சலி', 'பாடுநிலாவே' போன்ற படங்களின் அனைத்துப் பாடல்களுமே ஹிட் ஆனவை. உங்களது இசைக்காதலுக்கு என்ன காரணம்? ப: எனக்கு இசையில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு என்றாலும் இதெல்லாம் இயல்பாக அமைந்ததுதான். கதை அப்படி அமைந்தது; அதற்குப் பொருத்தமாகப் பாடல்களும் அமைந்தன. ஆனால், படங்களின் வெற்றிக்கு மிகமுக்கியக் காரணம் என்று இளையராஜாவைச் சொல்வேன். என்னுடைய வெற்றிகளில் அவருக்கு மிகப்பெரிய பங்குண்டு.
கே: 'உதயகீதம்' படம் உங்கள் வாழ்விலும், நடிகர் மோகன் வாழ்விலும் திருப்புமுனை ஏற்படுத்திய படமல்லவா? அப்படம் குறித்து, அதன் இசை, நகைச்சுவைக் காட்சிகள் குறித்துச் சொல்லுங்களேன்.. குறிப்பாக, 'தேங்காய்க்குள்ள பாம்' நகைச்சுவை குறித்து... ப: அது நல்ல கதையம்சமுள்ள படம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் மிகமுக்கியக் காரணம். மோகன், 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் பாடகராக நடித்திருப்பார். இந்தப் படத்திலும் கதாநாயகன் பாடகன் என்பதால் அவர் பொருத்தமாக இருப்பார் என்று கருதி அவரை நடிக்கவைத்தோம். நகைச்சுவைக் காட்சி முழுக்க ஏ. வீரப்பன் எழுதியது. கதை, நகைச்சுவை, பாடல்கள் என்று எல்லாமாகச் சேர்ந்து அது வெற்றிப் படமாகி, வெள்ளிவிழாக் கண்டது.
கே: உங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவர் என்று யார், யாரைச் சொல்வீர்கள்? ப: எம்.ஜி. வல்லபன், பாரதிராஜா, இளையராஜா மூவரும்தான். சினிமாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமாவில் வேலை செய்யும் ஆர்வத்தில் சென்னை வந்தேன். சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. எம்.ஜி. வல்லபனைச் சந்தித்தேன். அவரால்தான் பாரதிராஜா அறிமுகம் ஆனார். மற்றும் பல திரையுலகப் பிரமுகர்களின் நட்பும் தொடர்பும் கிடைத்தது. பின்னர் நான் தனியாகத் திரைப்படத்தை இயக்கியபோது எம்.ஜி. வல்லபன் வசனம் எழுதினார், பாடல்கள் எழுதினார். அவர் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். எனது சிக்கலான தருணங்களில்கூட ஆலோசனை கூறி மிகவும் உதவியாக இருந்த நல்ல மனிதர். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது.
கே: மறக்கமுடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்? ப: நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு கதை எழுதியிருந்தேன். அதைக்கூட 'சினிமாவுக்கு சிபாரிசு' என்று தலைப்பிட்டு வல்லபன் பிரசுரம் செய்திருந்தார். அது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. அதுதான் சிவகுமார், சுசித்ரா நடித்த 'முதல் இரவு' திரைப்படம். அந்தக் கதையை எழுதும்போது நான் சினிமாவில் சேரவில்லை. யாரிடமும் உதவியாளராகவும் இல்லை. அந்தக் கதையைப் படித்துவிட்டு என் தந்தை "கதை நன்றாக இருக்கிறது. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறாய்" என்று பாராட்டினார். அந்தப் பாராட்டு எனக்கு மிகவும் மனநிறைவை அளித்தது. நான் முதல் படம் செய்யும்போது அவர் இல்லை.
அதுபோல என் அம்மா குடும்பப் பாங்கான படங்களை நம் பையன் எடுக்கிறான் என்ற மனநிறைவில் இருந்தார். அப்படி இருந்தும் ஒரு படத்தில் (பாடு நிலாவே) நீச்சலுடையில் சில நடிகைகளைக் காட்ட வேண்டிய காட்சி அமைந்துவிட்டது. அதில் அம்மாவுக்கு மிகுந்த மன வருத்தம். என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். பொதுவாகவே நான் படங்களில் காதல் காட்சிகளை வைக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். நம் வீட்டில் உள்ளவர்கள், அம்மா, சகோதரி பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசித்துத்தான் படமாக்குவேன்.
கே: இப்போது வரும் திரைப்படங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? ப: அந்தக் காலத்துத் திரைப்படங்கள் போல் இப்போது வருவதில்லை என்று பலரும் சொல்கின்றனர். சினிமா மட்டுமா இப்போது மாறி இருக்கிறது. வாழ்க்கை நடைமுறையே மாறிவிட்டதே! அந்த மாற்றங்கள்தாம் சினிமாவிலும் வந்திருக்கின்றன. ஆனால் இதில் நல்ல மாற்றங்களும் உண்டு; மோசமான மாற்றங்களும் உண்டு. ஹாலிவுட் கற்பனைகளை அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள். அதில் நமது கலாசாரத்திற்கு ஒத்துவராத பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த மாதிரியான மாற்றங்கள் வரவேற்கத் தக்கவையல்ல. ஆனால், அந்தக் காலத்தில் ஒரே மாதிரித் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. அப்படியல்லாமல் இன்றைக்கு நிறைய புதிது புதிதாகச் சிந்தித்து சினிமாவிற்குக் கொண்டு வருகிறார்கள். மக்கள் அதை ரசிக்கிறார்கள். இதை நல்ல மாற்றமாக நான் கருதுகிறேன். முன்பு 100 படங்கள் வந்தால் பெரும்பாலானவை ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இப்போது அப்படியல்ல. ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியது.
இன்று, சிலவற்றைப் புத்தகங்களில் படித்து வித்தியாசமாகப் படமெடுக்கிறார்கள். சிலவற்றை இரானிய, கொரியன், ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கிறார்கள். மிகமிக வித்தியாசமான கருத்துக் கொண்ட படங்களைக் கொண்டு வருகிறார்கள். சினிமாவுக்குச் சம்பந்தமே படாத பகுதிகளை எல்லாம் - வாழ்க்கையின் பகுதிகளை - இப்போது காண்பிக்கிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது. நாங்கள் இப்படிச் செய்யலாம் என்று யோசித்திருக்கவே மாட்டோம். இன்றைக்கு அப்படி யோசித்து எடுத்தால், அது நல்ல படமாக இருந்தால், சுவாரஸ்யமாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்.
கே: ஆனால் இன்றைக்குப் பல படங்கள் தோல்விப் படங்களாகவே இருக்கின்றன. என்ன காரணம்? ப: படங்களின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் சரியான திட்டமிடல் - ஹோம் வொர்க் - இல்லாததுதான். முன்பெல்லாம் ஒரு சீனியர் டைரக்டரிடம் க்ளாப் உதவியாளராகச் சேர்ந்து அசோசியேட் ஆவதற்கே நிறையக் காலம் ஆகும். நிறைய அனுபவமும் கிடைக்கும். இப்போது அந்த அனுபவமே இல்லாமல் படமெடுக்க வருகின்றனர் சிலர். முன்பு கதாசிரியர் என்று ஒரு பிரிவு இருந்தது. ஹாலிவுட்டில் அப்படித்தான். கதை எழுதுகிறவர் ஒருவர், திரைக்கதை எழுதுகிறவர் வேறொருவர். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. ஒரு கதையை தயாரிப்பாளர்களிடம் சொல்லி அனுமதி வாங்கி விடுகின்றனர். ஆனால், அந்தக் கதையை அவரே படமாக்குவாரா, திரையில் சரியாகக் கொடுப்பாரா என்று தயாரிப்பாளர்கள் யோசிப்பதில்லை. ஒரு நம்பிக்கையில் படம் பண்ணச் சொல்லிவிடுகின்றனர். ஆனால், அந்த இயக்குநர் அனுபவமின்மை காரணமாக ஒளிப்பதிவாளரையும், எடிட்டரையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அனுபவமின்மையால் ஏற்படும் தவறுகள் காரணமாகச் சிலவற்றைத் திரும்பத் திரும்ப எடுக்க வேண்டியிருக்கிறது. பல சந்தேகங்கள் வருவதால் இரண்டு, மூன்று கோணங்களில் ஒரு காட்சியை எடுக்கவேண்டி இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் 40 நாளில் எடுக்க வேண்டிய படம் 80, 100, 120 நாள், ஏன் அதற்கும் மேல் ஆகிறது. அதனால் தயாரிப்புச் செலவு மிக அதிகமாகி விடுகிறது. ஒரு படம் தோல்வியடைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நான் கருதுகிறேன். படம் எடுக்கும் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் ஒரு படத்திற்கு இப்படி அதிக நாள் எடுக்கமாட்டார்கள்.
கே: இப்போதெல்லாம் ஒரே ஆண்டில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. இது வளர்ச்சியா, வீழ்ச்சியா? ப: முன்பு ஆண்டுக்கு 30, 40 படங்கள் வந்தன. இன்றைக்கு 170, 180 படங்கள் வருகின்றன. ஆனால், இதில் பாதிக்குமேல் சினிமாவே தெரியாதவர்கள், சினிமா என்ற மீடியத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள் போன்றோர் ஏதோ ஒரு ஆசையில் நான் தயாரிப்பாளர், நான் டைரக்டர் என்று சினிமாவைப் பற்றிய அடிப்படை ஞானம் இல்லாமல் வருகின்றனர், படமெடுக்கின்றனர். படம் ஓடாவிட்டால், ஒரே படத்தோடு போய்விடுகின்றனர். அடுத்து வேறு ஒரு குழு வருகிறது. அதேமாதிரி அடிப்படைப் புரிதல் இல்லாமல் படம் எடுக்கிறார்கள், படம் ஓடுவதில்லை. இது தொடர்கதையாக இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு படங்கள், இத்தனை தோல்வி. ஆனால், சினிமாவின் மொழி புரிந்தவர்கள் நல்ல கதையசம்சமுள்ள படங்களைத் தந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
கே: இன்றைக்கு நல்ல இயக்குநர் இயக்கியும், நல்ல நடிகர்கள் நடித்தும் கூடச் சில படங்கள் தோல்வி அடைகின்றன. அது ஏன்? ப: தரம் சுமார் என்பதும் ஒரு காரணம் என்றாலும்கூட டி.வி. வந்தது முதல் சினிமா பார்க்கத் தியேட்டருக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது என்பதையும் முக்கியமாகச் சொல்லவேண்டும். குறிப்பாக, பெண்கள் படம் பார்க்க வருவது மிகமிகக் குறைந்துவிட்டது. பெண்களுக்கு ஒரே பொழுதுபோக்கு இன்றைக்கு சீரியல்தான். அதனால் அவர்கள் தியேட்டருக்கு வருவதில்லை. அவர்களை வரவழைக்க வேண்டி இருக்கிறது. அதற்கு அவர்கள் விரும்பக்கூடிய நல்ல படங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் சுமாராக எடுத்தால்கூட ஓடிவிடும். ஆர்ட்டிஸ்ட் வேல்யூ என்பது அன்றைக்கு இருந்தது. அவர்களுக்காக நிச்சயம் படம் ஓடிவிடும். இன்றைக்கு அப்படி இல்லை. எவ்வளவு பெரிய ஸ்டார் நடித்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் அவர்களின் ரசிகர்களைத் தவிர பிறர் பார்க்க வருவதில்லை. விரும்புவதில்லை. ஆகவே தரம் மிகவும் முக்கியம்.
கே: உங்களைக் கவர்ந்த இன்றைய இயக்குநர்கள் யார்? ப: முருகதாஸ் நன்றாக இயக்குகிறார். எடுத்துக்கொண்ட சப்ஜெக்டை மிக அழுத்தமாகச் சொல்வதாக அவர் படங்கள் இருக்கின்றன. கதைக்குத் தேவையில்லாத விஷயங்களை வணிக நோக்கத்துக்காக அவர் புகுத்துவதில்லை. அதுபோல அட்லீயின் படங்களும் நீட் ஆக இருக்கின்றன. அதுபோல மிஷ்கின், ராம், வெற்றிமாறன் இவர்கள் எல்லாம் நல்ல படங்களை எடுக்கிறார்கள். அதே சமயம் சீரியஸான படங்களை இயக்குபவர்கள்தான் சிறந்த இயக்குநர்கள் என்று கொள்ள முடியாது. இப்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்ப இவர்கள் நல்ல படங்களைத் தருகிறார்கள். இவர்களை இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று சொல்லலாம்.
கே: உங்கள் படங்களை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ப: நான் என்னுடைய படங்களை இப்போது பார்ப்பதில்லை. எப்போதாவது படத்தின் ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்க்கும்போது அது என்னுடைய அனுபவமின்மையைக் காட்டுகிறது. எந்தக் காட்சியுமே எனக்குத் திருப்தியாக இல்லை. இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. இப்போது அந்தக் காட்சியை எடுத்தால் வேறு மாதிரியாகத்தான் எடுப்பேன். அவை அந்தக் காலகட்டத்துப் படங்கள். அவற்றை இப்போது உள்ளவர்கள் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்வார்களா என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அந்தக் காலத்து ரசனை, பார்வையெல்லாம் வேறு. அது இப்போது இல்லை. தலைமுறை மாறிவிட்டது.
கே: திரைப்பட இயக்கத்தில் இடைவெளி விட்டது ஏன்? ப: சில படங்களைத் தயாரித்தேன். அதில் ஏற்பட்ட தோல்விகளால் திரைப்படத்துறையிலிருந்து விலகி சீரியல், கேம் ஷோ, டாக்குமெண்ட்ரி போன்றவற்றில் கவனம் செலுத்தினேன். நான்தான் சீரியலில் அந்தக் காலத்தில் அதிக footage கொடுத்தவன். ஒரு எபிசோடுக்கு 22 நிமிஷம். இரண்டு எபிஸோடுக்கு 44 நிமிஷம். ஐந்து எபிசோடுகளைக்கூட ஒரே நாளில் ஷூட் செய்திருக்கிறேன். அதாவது ஒரு நாளிலேயே ஐந்து நாளுக்கான காட்சிகளை வேகமாக எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரே எபிஸோடையே இரண்டு நாளைக்கு எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் 3 யூனிட் போட்டு ஏழு நாளுக்குள் 22 எபிஸோடுகள் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரே டைரக்டர் ஒரே நாளில் அதிக footage கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே அது முடியும். அதே சமயம் வேகமாக எடுப்பது என்பதும் விவேகமல்ல. அது நன்றாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.
சீரியலைத் தொடர்ந்து சில வருடங்கள் ஆவணப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தினேன். 10, 15 கதைகளுக்கான ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருக்கிறேன். அவை கைகூட வேண்டும். தற்போது புதிதாக ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் இந்தக் காலத்துக்கு ஏற்றதாக அந்தப் படம் இருக்கும். சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதாக எண்ணுகிறேன். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறேன்.
வெகுவாக மாறிவிட்ட திரையுலகில் மறுபிரவேசத்துக்குத் தயாராகிவிட்ட இயக்குநர் கே. ரங்கராஜ் அனுபவத்தின் ரேகை இழையோடப் பேசுகிறார். அவரது மனைவி ஸ்ரீதேவி ரங்கராஜ் இல்லத்தரசி. பெண் சௌந்தர்யா அமெரிக்காவில் பணி செய்கிறார். இனிய இசையும் அழுத்தமான கதையுமாக மீண்டும் அவர் வருவார் என்கிற நம்பிக்கையோடு நாம் வாழ்த்தி விடைபெறுகிறோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
***** |
|
இளையராஜாவும் நானும் இளையராஜா என் மனம் கவர்ந்தவர். எனது 20 படங்களில் 15 படங்களுக்கு அவர்தான் இசை. எனது படங்களின் வெற்றிக்கு இசையும் மிக முக்கியக் காரணம். பாரதிராஜாவுக்கு அவர் நெருக்கமாக இருந்தார். அவர்மூலம் எனக்கும் அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவர் பொதுவாக அதிகம் பேசமாட்டார். நெருக்கமானவர்களிடம் மட்டுமே நன்கு பழகுவார். அந்த வட்டத்தில் நான் இருந்தேன். ராஜா இசையமைக்கும்போது என் படத்தில் பாடல்களைப் பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார். எங்கு பாடல் வந்தால் நன்றாக இருக்கும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
ஆனால் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'கோபக்காரர்', 'ஒருமுறை போட்டால் போட்டதுதான்; திரும்ப ட்யூன் போட்டுத் தரமாட்டார்' என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு. அது உண்மையல்ல. இயக்குநர் ட்யூன் பிடிக்கவில்லை என்று சொன்னால் சிரித்துக்கொண்டே வேறு ட்யூன் போட்டுத் தருவார். 'உன்னை நான் சந்தித்தேன்' படம். பாடல் எழுதி ஆகிவிட்டது. மறுநாள் கம்போஸிங். காலையில் ராஜா வந்தார். இசைக்குழுவினர் தயாராக இருந்தனர். பார்த்தால் அந்தப் பாடல் எழுதிய பேப்பரைக் காணவில்லை. தேடோ தேடென்று தேடியும் கிடைக்கவில்லை. ராஜா அந்த நெருக்கடியான நேரத்தில் ஒரு ட்யூன் போட்டுக் கொடுத்தார். வாலி பாடல் எழுதினார். அதுதான் "தாலாட்டு மாறிப் போனதே" பாடல். அந்தப் பாடல் ஹிட் ஆனது. இப்படிப் பல சுவையான சம்பவங்களைச் சொல்லலாம்.
-கே. ரங்கராஜ்
*****
இன்றைய இசை இன்றைக்குப் பாடல்களுக்கும் சரி, இசைக்கும் சரி முன்பிருந்த வடிவம் மாறிப் போய்விட்டது. முன்பு சொற்கட்டு சார்ந்த பாடல்கள் இருந்தன. அதாவது "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி; பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி" என்பது போல. பாடல்களில் ஒரு ஒழுங்கு முறை இருக்கும். எதுகை, மோனை இருக்கும். இப்போதெல்லாம் பாடல்கள் புதுக்கவிதைப் பாணி ஆகிவிட்டது. "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்; அவள் வந்துவிட்டாள்; அவள் வந்துவிட்டாள்" என்பது போல. இதில் மரபுக்குண்டான எதுகை, மோனை எதுவும் இருக்காது. ஆனால் கேட்க நன்றாக இருக்கிறது. காலத்தின் மாற்றத்தில் இதெல்லாம் சகஜம்தான். இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நல்ல பாடல்களை, பழைய பாடல்களைக் கேட்க வேண்டும் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன் போன்றோர் பாடல்களைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், இன்றைய தலைமுறைக்கு எம்.எஸ். விஸ்வநாதனைத் தெரியாது. இன்றைக்கு இளையராஜாவை எல்லாம் கடந்து வேறுவிதமான இசை வந்துவிட்டது. மேற்கத்திய இசைக்கலப்பு மிக மிக அதிகமாகிவிட்டது.
அநிருத், ஜி.வி. பிரகாஷ் போன்றவர்கள் அருமையான பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களே ஏன் இந்த இரைச்சலைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு சில பாட்டுகள் பிரமாதமாக இருக்கின்றன. மக்களுக்குப் பிடித்துப் போடுகிறார்களா, மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிப் போடுகிறார்களா, அல்லது இதுதான் நவீனப் போக்கு என்று போடுகிறார்களா அல்லது டைரக்டர் வலியுறுத்துவதால் போடுகிறார்களா ஒன்றும் தெரியவில்லை.
இன்றைய இசையமைப்பாளர்கள் தபலா, டோலக், வயலின் இசையே கேட்கக்கூடாது என்றிருக்கிறார்கள். அவையெல்லாம் வந்தால் பழைய இசையாம். அந்த அளவுக்கு ஆகிவிட்டது. இதைக் கால மாற்றம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. இது மாற்றம் தான், ஆனால், முன்னேற்றமில்லை.
-கே. ரங்கராஜ்
*****
பாவலர் பிரதர்ஸ் கங்கை அமரன் எனது முதல் படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். மிகவும் அன்பானவர். அவரை மாதிரி இனிமையாகப் பழகக் கூடியவர்கள் சினிமா உலகில் யாருமே கிடையாது. இதுவரை சினிமாவில் அவர் யாருடனும் சண்டை போட்டதில்லை. வருத்தப்பட்டதில்லை. வருத்தங்கள் சில இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவருடைய அண்ணன் பாஸ்கர். அவர்களுடைய பாவலர் க்ரியேஷனுக்காக நான் ஒரு படம் இயக்கினேன். அதுதான் 'கீதாஞ்சலி.' இளையராஜாவின் இசை அந்தப் படத்தில் மிகச்சிறப்பாக இருக்கும். பாஸ்கர் என்னிடம் மிகவும் நட்பாக இருந்தார். பாவலர் பிரதர்ஸில் மிகவும் அமைதியானவர் இளையராஜா தான். அவர் எப்போதும் அப்படித்தான் இருப்பார்.
-கே. ரங்கராஜ்
*****
கே. ரங்கராஜ் - சில குறிப்புகள்... சென்னைத் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜே.ஜே. தொலைக்காட்சி, தூர்தர்ஷன் ஹைதராபாத், Films Division, NFDC போன்றோருக்காகப் பல சீரியல்கள், டாக் ஷோக்கள், கேம் ஷோக்கள், டாகுமெண்ட்ரிகள் என 2000த்திற்கு மேற்பட்ட எபிஸோடுகளைத் தந்திருக்கிறார். Central Institute of Indian Languages (Mysore) நிறுவனத்துக்காக கீழ்கண்ட ஆவணப்படங்களைத் தந்துள்ளார்.
காமராஜர் சங்கீத மும்மூர்த்திகள் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி - வாழ்க்கை எம்.எல்.வசந்தகுமாரி - வாழ்க்கை சோழர்களின் கலையும் கட்டடக்கலையும் செட்டிநாட்டு நகரத்தார் தமிழ்நாட்டில் மகாபாரதத்தின் செல்வாக்கு ஜி.என்.பாலசுப்பிரமணியன் - வாழ்க்கை செம்மங்குடி சீனிவாச ஐயர் - வாழ்க்கை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக (Centre of Excellence for Classical Tamil) அகநானூறு பற்றிய ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
அவற்றைக் காண: குறிஞ்சி
மருதம்
முல்லை
பாலை
சுதந்திரப் போராட்டத்திற்கு நமது நாட்டுப்புறக்கலைகள் எவ்வாறு பயன்பட்டன என்பது குறித்தும், சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பற்றியும் ஆவணப்படங்களைத் தந்துள்ளார். |
|
|
|
|
|
|
|
|