|
|
டிவியில் துப்பறியும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பீர்களா? உங்களில் நானும் ஒருவன். அமெரிக்கா வந்தபிறகு CSI, Monk, Hercule Poirot, Law and Order போன்ற தொடர்களை கண்ணைக் கொட்டாமல் பார்ப்பேன். அப்போதெல்லாம் நான் சிறுவயதில் மிகவும் ரசித்துப் படித்த துப்பறியும் கதைகளின் நினைவு வரும்.
'கல்கண்டு' இதழில் தமிழ்வாணனின் 'சங்கர்லால் துப்பறிகிறார்' கதைகள், ஆனந்தவிகடனில் 'துப்பறியும் சாம்பு' போன்றவற்றைச் சுவாரஸ்யமாகப் படிப்பேன். சிலவற்றைக் கிழித்து எடுத்துக் கொடுக்க என் தந்தை அவற்றைப் புத்தகமாக பைண்ட் பண்ணி வைத்தவை இன்றும் என் வீட்டில் உள்ளன.
சில துப்பறியும் தமிழ்க் கதைகளில் இருக்கும் நகைச்சுவையும், கதா பாத்திரங்களின் அருமையான விவரிப்பும், விறுவிறுப்பும் ஆங்கிலக் கதைகளில் கொஞ்சம் குறைவு என்றுதான் தோன்றுகிறது. நான் படித்து மகிழ்ந்த சில சிரஞ்சீவித் தமிழ்க்கதைகளைப் பற்றி உங்களிடம் சொல்லாவிட்டால் எனக்குத் தலைவெடித்துவிடும். அமெரிக்காவில் வாழும் இளைய தமிழ்ச் சமுதாயம் இப்படிப்பட்ட தமிழ்க் கதைகளைப் படித்து ரசிக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனந்த விகடனில் ஆசிரியராகப் பணியாற்றியவர் 'தேவன்'. அவர் எழுதிய சில அற்புதமான துப்பறியும் கதைகள் நினைவுக்கு வருகின்றன. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தேவன் என் தந்தையின் சிறந்த நண்பர் மட்டுமல்ல தூரத்து உறவினரும் கூட. இரண்டாவதாக, அவர் கதைகளின் எளிய நடை, புதுமைக் கருத்துக்கள், விலா வலிக்கவைக்கும் நகைச்சுவை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நகம் கடிக்கவைக்கும் சஸ்பென்ஸ். தேவனைப்பற்றி சில வார்த்தைகள்: முழுப்பெயர் ரா. மஹாதேவன். என் தந்தை வளர்ந்த ஆடுதுறைக்கு அருகிலுள்ள திருவிடைமருதூரில் 1913ல் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் முதலில் எழுதிய கட்டுரை 'மிஸ்டர் ராஜாமணி' ஆனந்த விகடனில் பிரசுரமாயிற்று. அப்போது விகடன் ஆசிரியராக இருந்த 'கல்கி'யை நேரில் சந்தித்த பிறகு, தேவனுக்கு ஆனந்த விகடன் காரியாலயத்தில் வேலை கிடைத்தது. தேவன் கிட்டதட்ட இருபத்து நான்கு ஆண்டுகள் அதில் பணியாற்றினார்.
சரி அவருடைய எழுத்தைப் பார்ப்போம் இப்போது. 'துப்பறியும் சாம்பு' கதையின் நாயகன் சாம்புவைத் தேவன் எப்படி அறிமுகம் செய்கிறார் தெரியுமா?
விளாம்பழம்' பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக்குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்... கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளைச் சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்.
'நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்' என்று யாரோ - முட்டாள்தனமாக அல்ல - சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் 'முட்டாள்' என்றார்கள்.
கதையின் பெயர்தான் 'துப்பறியும் சாம்பு'. சாம்புவுக்கு துப்பறிவதுபற்றி ஒன்றுமே தெரியாது. மகா அசடு. ஆங்கிலத்தில் Pink Panther டிவி தொடரில் இன்ஸ்பெக்டர் க்ளூஸோ (clouseau) என்கிற டிடெக்டிவின் மடத்தனமான செய்கைகள் மாதிரி, சாம்புவின் அசட்டுக் காரியங்கள் நம்மைச் சிரிக்கவைக்கும். அசட்டுத்தனமாக இருந்தாலும், சாம்புவுக்குச் சந்தர்ப்பங்கள் துணை புரிகின்றன. சாம்பு திருடர்களைக் கண்டு நடுங்குவான். பயந்து நடுங்கும்போதே, அதையறியாது அவர்கள் தாங்களாகவே அவனிடம் சிக்கிக்கொள்வார்கள். அவன் கேஸ்களெல்லாம் வெற்றியே காண்கின்றன.
ஒரு உதாரணம் சொல்லவா? துப்பறியச் சென்ற இடத்தில் சாம்பு தன் பொடிடப்பியை மறந்து விடுகிறார். அதைத் திரும்ப எடுக்கப் போக அங்கு குற்றவாளி தற்செயலாக தானே வந்து மாட்டுகிறான். சாம்புவின் முயற்சி ஒன்றுமே இல்லாமல் ஏதோ காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த மாதிரி குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு சாம்புவுக்குப் பெரியபெயர் கிடைக்கிறது.
'காணாமல் போன கம்மல்கள்', 'பங்களா மர்மம்', 'மடையன் செய்கிற காரியம்' என்ற வெவ்வேறு தலைப்புகளில் கிட்டத்தட்ட ஐம்பது சாம்பு சிறுகதைகள் வந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்து. |
|
இரண்டாவதாக எனக்குப் பிடித்த நாவல் 'சிஐடி சந்துரு'. ஆரம்பம் முதல் கடைசிவரை கொஞ்சம்கூடக் குறையாத விறுவிறுப்புடன் செல்லும் - இல்லை, ஓடும் - துப்பறியும் நாவல் இது. சிஐடி சந்துரு சாம்புவிற்கு நேர் எதிரிடையான கேரக்டர். முட்டாள் சாம்பு வெற்றிபெறுவது அதிர்ஷ்டத்தால். ஆனால் சந்துரு அப்படியல்ல. அவன் மிகப் புத்திசாலி. அவனை இப்படி விவரிக்கலாம்: துருவும் கூர்விழிகள், துப்பறியும் வேலையில் ஒரு தனிரகப் பேர்வழி, அளவிலாத தைரியம். மூளையைத் தீவிரமாக உபயோகித்து சுற்றி இருப்போரை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் திறன் சந்துருவுக்கு உண்டு.
தேவன் சந்துருவை இப்படி அறிமுகம் செய்கிறார்: சிஐடி சந்துரு ஒரு தனிரகம். ஏன், அவன் தன்னந்தனி ரகம் என்றுகூடச் சொல்லலாம். அவன் எந்த இடத்திலும் சந்தர்ப்பத்திலும் சுய விளம்பரத்திற்காக நின்றதில்லை. எல்லோரும் எதையாவது பார்க்க ஓடிக்கொண்டிருக்கும் போது, உட்கார்ந்துகொண்டிருப்பான்; எல்லாரும் நின்று யோசிக்கும்போது, நிற்க நேரமில்லை என்று 'டாக்ஸி'யில் விரைந்து செல்வான். ஆனால் எந்தக் காரியம் என்றாலும் சாதனையாவது என்னவோ சந்துருதான். கதையில் ஒரு விறுவிறுப்பான பகுதி இதோ:
சங்கரன் தொண்டைவரை வந்த பயத்தை விழுங்கினான். அவன் கண்கள் விறைக்கப் பார்த்தன. குள்ளன் பிறகு அடி அடியாக நெருங்கினான். சங்கரனைச் சுற்றி வந்து நின்றான்.அவனுடைய நீட்டிய கரம் ஒன்றில் நாலு அங்குல நீளமான ஒரு கண்ணாடிக் குழாய் இருந்தது.
"இது அக்னித் திராவகம்! ஏதாவது வம்பு செய்தாயோ... பார்த்துக்கொள்! இதில் ஒரு சொட்டுக்கூட கீழே விழாது! ஆமாம், அவ்வளவும் உன் மேலேதான்!" என்றான் குள்ளன்.
சங்கரன் வயிற்றில் 'பகீர்' என்றது.
மனோதர்மத்தில் பல கற்பனைகள் ஓடின. அக்னித் திராவகம் உடம்பில் வாய்க்கால்களாக ஓடி சதையை கொளுத்தித் தின்று அறுத்துச் செல்வதை அவனால் சிந்தனை செய்து பார்க்கவும் முடியவில்லை. பிழைத்தாலும் பலகாலம் ஆஸ்பத்திரியில் கிடக்க வேண்டி வரும் துர்ப்பாக்கியத்தை எண்ணினான். முகம் எல்லாம் விகாரமாகி கண்டோர் அருவருக்க வாழ்க்கையெல்லாம் வெட்கி மறைந்து வாழும் அவலநிலையை நினைத்தான். உடல் ஒரு முறை குலுங்கியது. குள்ளன் அருகில் நெருங்கி விட்டான். "ஏய், இதில் இருக்கிறது அக்னித் திராவகம் என்று சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா? அக்னித் திராவகம் என்றால் சந்தனாதி தைலம் இல்லை 'குளு குளு'வென்று இருப்பதற்கு. உன் உச்சந்தலையில் சொட்டு சொட்டாக இதை விடுகிறேன், ஓரொரு சொட்டும் ஒரு அங்குலம் தின்றுகொண்டு போகும்; மூளையில் இறங்கிப் பரவும். அதை சரியான வழியில் வேலைசெய்ய வைத்து உண்மையை கக்கும்படி செய்யும்.”
அடுத்தபடி என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது நமக்கு. இக்கதையில் நம்மை ஈர்ப்பது தேவனுக்கே உரித்தான நடை, அருமையான வசனங்கள், சந்துருவின் சாமர்த்தியம், சவால் விடும் தைரியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
தேவனைப்போல இன்னுமோர் எழுத்தாளர் இல்லை. இந்த இரண்டு துப்பறியும் கதைகளில் ஒன்றயாவது படித்துத்தான் பாருங்களேன். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கத் தோன்றாது!
சாம்பு துப்பறியும் 'பங்களா மர்மம்' படிக்க சுந்தரேசன் சுப்ரமணியன், சிகாகோ, இல்லினாய் |
|
|
|
|
|
|
|