Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை!
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2018|
Share:
மறுசூதிலே தோற்ற பாண்டவர்கள் மான்தோலை உடுத்து, வனவாசம் புகத் தயாரானார்கள். பாஞ்சாலியைச் சூதில் வென்றபோது பாரதி,

மன்று குழப்பமுற்றே - அவர்யாவரும்
வகை,தொகை யொன்றுமின்றி
அன்று புரிந்ததெல்லாம் - என்றன்பாட்டிலே
ஆக்கல் எளிதாகுமோ.?


என்று பாடினான். பாண்டவர்கள் மறுசூதில் தோற்றபோது மீண்டும் அதுவேதான் நடந்தது. வெற்றிக் களிப்பில் போதை தலைக்கேற கௌரவர்கள் நடந்துகொண்டதையெல்லாம் விவரிக்க நமக்கு இடம் போதாது என்றாலும் முக்கியமான சில குறிப்புகளைப் பார்ப்போம். "இப்போதுதான் உலகம் சமநிலையை அடைந்திருக்கிறது. தேவர்கள் சமமான வழியிலே நடக்கிறார்கள்" என்றெல்லாம் பேசத் தொடங்கினான் துச்சாதனன். இவர்கள் சூதிலே வென்று, பாண்டவர்கள் தோல்வியடைந்ததால் தேவர்களுக்கே பாதை சீராக அமைந்துவிட்டது என்று பேசத் தொடங்கியவன் அத்தோடு நிறுத்தவில்லை. "இந்தத் திரெளபதி பாவம். துருபதன் இவளைப் பாண்டவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததனால் இத்தனை துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறாள்" என்று தொடங்கி, திரெளபதியை நோக்கிச் சொன்னான்: "திரெளபதியே! அற்பமான உடைகளை உடுத்து மேலே தோல் போர்த்துச் செல்வமில்லாமலும் ராஜ்யமில்லாமலும் காட்டிலிருக்கும் கணவர்களைக் கண்டு நீ என்ன சந்தோஷத்தை அடையப்போகிறாய்? எங்களுக்குள் யாரை நீ விரும்புகிறாயோ அந்த மற்றொரு கணவனை வரித்துக்கொள். பொறுமையும் இந்திரிய நிக்ரகம் உள்ளவர்களும் சிறந்த ஐசுவரியமுள்ளவர்களுமாகிய இந்தக் கௌரவர்கள் அனைவரும் கூடியிருக்கின்றனர். இவர்களில் ஒருவனைக் கணவனாக வரித்துக்கொள். இந்தக் காலவித்தியாசம் உனக்கு வராது" (ஸபா பர்வம், அனுத்யூத பர்வம், அத். 99, பக். 324)

"நெற்பதரையும் எள்ளுப் பிண்ணாக்கையும் போன்ற பாண்டவர்களை விட்டுவிட்டு, எங்களில் ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டால், உனக்கு வனவாசம் செல்லவேண்டிய துன்பம் உண்டாகாது" என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்த துச்சாதனனுடைய வார்த்தைகளைக் கேட்ட பீமனுக்குக் கோபம் தலைக்கேறியது. "துச்சாதனா! பாவிகள் பேசுகின்ற பயனற்ற சொற்களைப் பேசுகிறாய். இப்போது எப்படிச் சொல்லம்புகளால் எங்களைக் குத்துகிறாயோ, அப்படியே போரில் வில்லம்புகளால் உங்களைக் குத்துவோம். யுத்தத்தில் உன் இருதயத்தைப் பிளந்து, உனக்கு இதை நினைவூட்டுவேன். உன்னைக் காப்பாற்றுவதற்காக யார் துணைக்கு வந்தாலும் அவர்களையும் யமலோகத்துக்கு அனுப்புவேன்" என்று கர்ஜித்தான். "தர்ம மார்க்கத்தில் கட்டுப்பட்டுத் தோலாடை உடுத்த பீமஸேனன் இவ்வாறு பேசும்போது துச்சாஸனன் வெட்கமின்றி, ‘மாடே! மாடே!’ என்று அவனை அழைத்துக் கௌரவர்கள் நடுவில் கூத்தாடினான்." (மேற்படி இடம்) இதனுடைய ஆங்கில வடிவத்தையும் பாருங்கள்: Vaisampayana continued—Unto Bhima dressed in deer-skins and uttering these words of wrath without doing any thing, for he could not deviate from the path of virtue, Dussasana abandoning all sense of shame, dancing around the Kurus, loudly said, "O cow! O cow!" இதைக் கேட்டுக் கோபமுற்ற பீமன், "யுத்தத்தில் உன் மார்பைப் பிளந்து உதிரத்தைக் குடிக்காமல் நிற்கமாட்டேன்" என்று தன் சபதத்தை மீண்டும் நினைவூட்டினான்.

பீமன் என்னதான் பலசாலியென்றாலும், துரியோதனனுக்கு இவனிடத்திலும் அர்ச்சுனனிடத்திலும்தான் பெரிய அச்சமும் கவலையும் இருக்கிறதென்றாலும், இப்போது அவன் தருமத்தால் கட்டுண்டு கிடக்கிறான், தன்னை எதுவும் செய்யமாட்டான் என்ற துணிவில் துரியோதனன், சபையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பீமனுடைய முதுகுக்குப் பின்னால் அவனுடைய சிம்மநடையைப் பரிகசித்து அவனைப்போலவே நடந்து காட்டினான்.

அவன் செய்வதைத் திரும்பிப் பார்த்த பீமன், "மூடா! இவ்வளவோடு முடிவானது ஒன்றுமில்லை. வெகு சீக்கிரத்தில் உன் சுற்றத்தாருடன் நீ கொல்லப்படும்போது இதனை உனக்கு ஞாபகப்படுத்தி மறுமொழி கூறுவேன்" என்று சொன்னான்". (மேற்படி இடம், பக். 326) இந்த இடத்தில் பீமன் தான் முன்னர் இருமுறை செய்த சபதங்களை மூன்றாவது முறையாகவும் செய்கிறான். "இந்தப் பாவியான துரியோதனனை யுத்தத்தில் கதையினால் கொல்லப்போகிறேன். உடனே, தரையில் விழுந்திருக்கும் இவன் தலையைக் காலால் மிதிப்பேன். பேச்சில் சூரனும் கொடியவனும் துராத்மாவுமாகிய இந்தத் துச்சாஸனனுடைய ரத்தத்தைச் சிங்கம்போலக் குடிப்பேன்" என்று சபதமிட்டான். "தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பதும்" விழுந்தவனுடைய தலையைக் காலால் உதைக்கப் போவதும் பீமன் செய்திருக்கும் சபதங்களில் அடங்கும். போரில் இப்படித் தொடையைப் பிளந்ததும், பலராமர் ஏர்க்கலப்பையைத் தூக்கிக்கொண்டு "கதைப் போரில் இடுப்புக்குக் கீழே எப்படி அடிக்கலாம்" என்று பீமனின்மேலே பாய்ந்தாரென்றாலும், இந்தச் சபதத்தை பீமனுக்கு நினைவூட்டி, தொடையைத் தட்டி சமிக்ஞை காட்டியவனே கண்ணன்தான். பலராமருடைய கோபத்துக்கான காரணங்களைப் பிறகு பார்க்கலாம்.
பீமனைத் தொடர்ந்து அர்ச்சுனனும் நகுல சகதேவர்களும் தங்களுடைய சபதங்களை மீண்டுமொருமுறை செய்கிறார்கள். இந்த மறுசூது சிலநாட்கள் கழித்து நடப்பதனால், தாங்கள் செய்த சபதங்களில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறோம் என்பதனை நினைவூட்டும் விதமாகப் பாண்டவர்கள் மீண்டும் சபதமேற்கிறார்கள். ஒன்று கவனிக்கவேண்டும். பாண்டவர்களில் நால்வர் மட்டுந்தான் மீண்டும் மீண்டும் சபதம் செய்கிறார்களே ஒழிய, தருமபுத்திரன் எந்தச் சபதத்தையும் செய்யவில்லை. சபதம் செய்யும் தம்பியரைத் தடுக்கவுமில்லை. போரில் கீழே விழுந்த துரியோதனுடைய தலையை பீமன் காலால் மிதித்து இடறும்போது மட்டும் பதறிப்போய், "வேண்டாம், வேண்டாம்" என்று தடுக்கமுற்பட்டான் என்பதை கவனத்தில் இருத்தவேண்டும். அவனுடைய உள்ளப்பாங்கு அத்தகையது.

வனவாசம் முடிந்தபிறகு, உத்தியோக பர்வத்தில் கண்ணனைத் தூதனுப்பும்போது தர்மபுத்திரன் மட்டுமல்லாமல் பீமனும் அர்ச்சுனனுமேகூட, "போர் அவசியமா" என்று தயங்கப்போவதைப் பார்க்கலாம். தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களைப் பொறுக்க முடியாதவளான பாஞ்சாலியால் மட்டுந்தான் இந்தத் தயக்கங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விரிந்திருக்கும் தன் கூந்தலைக் கொத்தாகத் தூக்கிக் கண்ணனுடைய உள்ளங்கையிலே வைத்து, "இதற்கு பதில் சொல்லிவிட்டு நீ தூது போகலாம்" என்று பேசத்தான் போகிறாள். இதனால் போருக்கு முழுமுதற் காரணமே பாஞ்சாலிதான் என்று வாதிடுவோர்கள் உண்டு. இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறதென்றாலும் போரின் முழுக்காரணத்தையும் பாஞ்சாலியின்மீது மட்டுமே சுமத்துவதில் சற்றும் நியாயமே இல்லை. இவற்றையெல்லாம் அந்தந்தக் கட்டங்களில் பார்ப்போம்.

துச்சாதனன் பாஞ்சாலியுடைய கூந்தலைப் பற்றி இழுத்தபடி சபைக்கு வந்தது வஸ்திராபஹரண சம்பவத்தின்போது. அது நடந்து ஓரிரு தினங்கள் கழிந்துவிட்டன. இப்போது தங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த பாண்டவர்களைத் தடுத்து நிறுத்தித்தான் மறுசூதுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். எனவே, இப்போது பாஞ்சாலி, கூந்தலை விரித்துப்போட்ட நிலையிலிருந்தாள் என்று சொல்வதற்கு வியாச பாரதத்தில் சற்றும் இடமில்லை. பாஞ்சாலி தன்னுடைய கூந்தலை விரித்துப் போட்டது, பாரதி சொல்வதைப்போல "இது செய்யுமுன்னம் முடியேன்" என்று முதற் சூதாட்டத்தின் போதோ, அல்லது மறுசூதின்போதோ அன்று. அவர்கள் வனவாசம் புகும்போது மேற்கொண்ட கோலம் அது. இப்போதுதான் பாண்டவர்களும் பாஞ்சாலியும் வனவாசத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூந்தல் எப்போது விரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.

இதற்கிடையில் ஒன்று சொல்லவேண்டியிருக்கிறது. பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். குந்தியும் கூட வந்திருக்கிறாள். நல்லவேளையாக அவளைப் பந்தயத்தில் வைத்தாடும்படி சகுனி கேட்கவில்லை. அவளுக்கு வனவாசமுமில்லை. அப்படியானால், பாண்டவர்களுடைய வனவாசத்தின்போது குந்தி எங்கே இருந்தாள் என்கிற கேள்வியெழுகிறது. இந்தவிஷயத்தில் பல பாரதச் சொற்பொழிவாளர்கள் சற்றும் யோசியாமல், "பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் குந்தி துரியோதனனுடன் இருந்தாள்" என்று ஓங்கியடித்துவிடுகிறார்கள். வில்லி பாரதமோ, மிகமிகச் சுருக்கமாக இருப்பதால் இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றுமே பேசவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமாகக் காட்டப்படுகின்ற தொலைக்காட்சித் தொடர்களில் குந்திக்குப் பணிவிடை செய்யும் துரியோதனனைக் காட்டுவது வரையில் "முன்னேறிவிட்டார்களா" என்பது தெரியவில்லை. (ராமாயணப் போரின்போது தசரதருக்குத் திதி கொடுக்கவேண்டிய நாள் வந்துவிட, அதை நடத்திவைக்க அந்தணர் இல்லாமல் ராமன் சிரமப்பட்டதாகவும், ராவணன் போரை நிறுத்திவிட்டு வந்து, தானே அந்தணனாக இருந்து நடத்திக் கொடுத்ததாகவும் ஒரு தொடரில் காட்டினார்களென்று கேள்விப்பட்டேன். இது அதீதக் கற்பனை. அப்படியே நடந்திருந்தாலும் ராமன், ராவணனுடைய தம்பியான வீடணனைக் கொண்டு நடத்தியிருக்கலாமே என்ற எளிய வாதத்துக்குக்கூடப் பொருந்தாத, சிந்தனைக்குச் சற்றும் இடங்கொடுக்காத சித்திரிப்புகள் இவை. ராமாயண, பாரத தொலைக்காட்சித் தொடர்கள் பெருகிவிட்டதால் இந்த எச்சரிக்கையைச் சொல்லிவைக்க வேண்டியிருக்கிறது.)

பாண்டவ வனவாச காலத்தில் குந்தி துரியோதனனுடைய மாளிகையில் வசிக்கவில்லை. வேறு எங்கே வசித்தாள்?

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline