Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
எனக்குப் பிடிச்சது
கூகிளுக்கு வந்த கொக்குகள்
- சற்குணா பாக்கியராஜ்|ஜூலை 2017|
Share:
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த (Little Egret) வெண்பனிக் கொக்கும் (Snowy egret) ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும் கூகிள் வளாகத்தைத் தங்கள் இல்லமாகக் கொள்வது உங்களுக்குத் தெரியுமா? தலைமுறை தலைமுறையாக இவை இங்கு வந்து கூடுகட்டி இனம் பெருக்குகின்றன. கனிவோடு கூகிள் நிர்வாகம், மெளன்டன்வியூ நகர நிர்வாகத்தோடு இணைந்து, இவை தங்கும் சாலையை நான்கு மாதமும் வாகனங்கள் செல்லாதவாறு அடைத்து, இவற்றைப் பாதுகாக்கிறது. கூகிள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நாள்முழுவதும் இவை எழுப்பும் கூச்சலுக்கு அஞ்சாமல் தங்கள் வேலையைப் பார்க்கிறார்கள்.ஆடுபான் சங்கத்தின் (Audubon society) தன்னார்வத் தொண்டர்கள், வாரம் ஒருமுறை, கொக்குகளைப்பற்றிய தகவல்களைப் பொதுமக்களுக்குக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மரக்கிளையிலிருந்து விழுந்துவிடும் குஞ்சுகளைத் தாய்ப்பறவை சேர்த்துக்கொள்வதில்லை என்பதால், இந்தச் சங்கத்தினர் இவற்றை எடுத்துப் பாதுகாக்கின்றனர்.

பெரியகொக்கையும், வெண்பனிக் கொக்கையும் பிரித்தறிவது எளிது. பெயருக்கேற்பப் பெரியகொக்கு உருவத்தில் பெரியதாக, மஞ்சள்நிற அலகுடன், கருநிறக் கால், பாதம் கொண்டதாக இருக்கும். வெண்பனிக் கொக்கு சிறியதாக, கருநிற அலகு, கால்களும், மஞ்சள்நிறப் பாதமும் கொண்டிருக்கும்.

வெண்பனிக் கொக்கும், தமிழகத்தின் சின்னக்கொக்கும் பார்க்கஒன்றுபோல் இருக்கும். ஆனால், இனப்பெருக்க காலத்தில், சின்ன கொக்கின் தலையின் பின்பாகத்திலிருந்து ஈட்டிபோன்ற நீண்ட இரண்டு தூவிகள் தொங்கும், வெண்பனிக் கொக்கின் தலையின் உச்சியில் பூப்பின்னல் (lace) போன்று, குட்டையும் அடர்த்தியுமான தூவிகள் காணப்படும். அவ்வளவுதான்.

சங்கப் புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இவற்றைக் கருங்கால் வெள்ளாங்குருகு, சிறு வெள்ளாங்குருகு என்று பாடல்களில் வர்ணித்துள்ளனர். திரு. பி.எல். சாமி 'சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்' என்ற நூலில், கருங்கால் வெள்ளாங்குருகுதான் பெரியகொக்கென்றும், சின்ன வெள்ளாங்குருகுகைச் சின்னக் கொக்கென்றும் விவரித்துள்ளார்.வட அமெரிக்காவில் கொக்குகள் பாதுகாக்கப்பட்ட பறவையினம். ஏனெனில், இனப்பெருக்கக் காலத்தில் இவற்றின் தலை, கழுத்து, முதுகுப் பகுதிகளில் மெல்லிய நூலிழை போன்ற இறகுகள் (filamentous plumes) தோன்றுகின்றன. ஃபிரெஞ்சு மொழியில் இவ்விறகுகளை எக்ரெட் (aigrette) என்று அழைக்கின்றனர். இதற்கு 'வெண்கொக்கு' அல்லது 'தூரிகை' என்பது பொருள். Egret என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்தே பிறந்தது. இந்த அழகிய நூலிழை இறகுகளே, இப் பறவைகளின் அழிவுக்குக் காரணமாகி விட்டன. 18ம் நூற்றாண்டில், ஐரோப்பியப் பெண்கள் தமது தொப்பிகளில் வைத்து அலங்கரிக்க, அமெரிக்காவிலிருந்து கொக்கின் இறகுகளைத் தருவித்தனர். வெண்பனிக் கொக்கின் இறகுகள் தங்கத்தைவிட அதிகமாக மதிக்கப்பட்டன. இந்த நாகரீகம் அமெரிக்காவிலும் பரவியது. தொப்பித் தொழிற்சாலைகள் நியூ யார்க்கில் தொடங்கப்பட்டன. பறவையிறகுகள் உலகெங்கிலுமிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருடந்தோறும் கொல்லப்பட்டன. வட அமெரிக்காவிலும், ஒவ்வோர் ஆண்டிலும் இனப்பெருக்க காலத்தில் லட்சக்கணக்கில் கொக்குகள் வேட்டையாடப்பட்டன. இந்தப் பறவையினமே அழிந்து போகுமோ என்ற நிலை ஏற்பட்டது.

பாஸ்டன் நகரத்தைச் சேர்ந்த இரண்டு அமெரிக்கப் பெண்கள், இறகு சொருகிய தொப்பிகளைப் புறக்கணிக்கவும், பறவைகளைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆடுபான் சங்கமும் இதே சமயத்தில் உருவானது. தொடர்ந்து பல போராட்டங்களின் முடிவாக அரசாங்கம் 1910ம் ஆண்டு பறவைகளை இறகுகளுக்காக வேட்டையாடுவதையும், ஏற்றுமதி, இறக்குமதி செய்வதையும் தடுத்து Lacey Act சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இன்றும் அமலில் உள்ளது. இதனால் கொக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


இவை Heron இனத்தைச் சார்ந்தவை. இவற்றில் பல வகைகள் உண்டு. சில உதாரணங்கள்: குருட்டுக் கொக்கு (Pond Heron), வக்கா (Black crowned night heron), பிட்டர்ன் (Bittern), பச்சைக் கொக்கு (Green heron) வெண்கொக்கு (Egret). சங்கப்புலவர் வெள்ளிவீதியார், வெண்கொக்கின் இறகுகளை நீர்த்துறையிலே கழுவிய மாசற்ற வெள்ளாடையின் நிறத்திற்கு ஒப்பிடுகிறார்.

சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே
நற்றிணை, 70.


இவை இனப்பெருக்கக் காலத்தில், உயர்ந்த மரக்கிளை அல்லது புதர்களில் கூடுகள் கட்டுகின்றன. ஆணும், பெண்ணும் சேர்ந்து கூடமைத்து, இளநீல நிறத்தில் முட்டையிடுகின்றன. சுமார் 20-25 நாட்களில், குஞ்சுகள் பொரிந்தபின், இரையைக் குஞ்சுகளின் வாயில் ஊட்டி வளர்க்கின்றன. இரைப் பற்றாகுறை ஏற்பட்டால், குஞ்சுகளின் மத்தியில் உடன்பிறப்புப் போட்டி (sibling rivalry) ஏற்படும். மூத்த குஞ்சுகள் உணவை இளைய குஞ்சுகளுடன் பகிர்ந்து கொள்ளாது. இதனால் இளங்குஞ்சுகள் இறந்துபோகும்.

மரங்களைப் பேணிப் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாப்பளிக்கும் கூகிள் அலுவலகத்திற்கும், மெளன்டன்வியூ நகரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உயிரினத்தை இயற்கைச் சூழலில் வாழவிட்டு, அதுகுறித்து நம் இளைய தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு தருவது நமது கடமை. சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வாழ்பவர்கள் வெண்கொக்குகளை வீட்டிலிருந்தபடி கூகிளில் தேடாமல், கூகிள் வளாகத்துக்குச் சென்று இவற்றின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

எழுத்து, புகைப்படம்: சற்குணா பாக்கியராஜ்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா
Share: 


© Copyright 2020 Tamilonline