Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஆன்லைன் முதல்வன்
- எல். ஸ்ரீராம்|செப்டம்பர் 2016||(2 Comments)
Share:
"என்ன, நேத்து தூங்க ரொம்பநேரம் ஆச்சு போலிருக்கே?"

"ஆமாங்க! கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டிருந்தது. அதான் எல்லா வெப்சைட்டையும் போய் நிலவரம் எப்படி இருக்குன்னு பாத்துக்கிட்டு இருந்தேன்."

இதைக் கேட்டதும் சரவணுக்கு பகீரென்று ஆனது. இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன்னால் இணையத் தள்ளுபடியில் சில பல பொருட்கள் வாங்கி வீடு முழுக்க சாமான்களாக இருந்தது நினைவுக்கு வந்து தொலைத்தது.

"மறுபடியும் மொதல்ல இருந்தா?"

"என்ன சொன்னீங்க?" என்ற ரம்யாவிடம், ‘சே! இந்த மைண்ட் வாய்ஸ் அப்பப்ப சத்தமாகி தொலைக்குது’ என்றெண்ணிக் கொண்டே "ஓண்ணுமில்லே, என்ன வாங்கப் போறேன்னு கேட்டேன்" என்றான்.

"வேறென்ன வாங்குவேன்? என்னமோ நகையும் நட்டும் நான் வாங்குறமாதிரி. பசங்களுக்கு சில புத்தகங்கள் மலிவா போட்டிருக்கான். உங்களுக்கு 2 சட்டை. ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். அப்புறம் நண்பர்கள் வீட்டுப் பிறந்தநாள், விசேஷம் போனா கொடுக்க கொஞ்சம் பரிசுப்பொருட்கள். அவ்வளவுதான்."

"பரிசுப் பொருளெல்லாம் எதுக்கு வாங்குற?"

"இப்ப இப்படி சொல்லுங்க. அப்புறம் பிறந்தநாள், கல்யாணம், காதுகுத்துன்னு சொன்னா முதல்நாள் போய் அவசரமா அதிக விலை கொடுத்து வாங்குவீங்க. அதுக்குத்தான் கொஞ்சம் ப்ளான் பண்ணி வெச்சிட்டா செலவு மிச்சம்தானே?"

சரவணனுக்கு இந்த லாஜிக்கெல்லாம் சரியாக இருந்தாலும், இப்படி ஆன்லைன் ஷாப்பிங்கில் எல்லாவற்றையும் வாங்கி வைப்பதில் சம்மதமில்லை. அந்த நேரத்தில்தான் அந்த அணுகுண்டு வார்த்தையை அவனையறியாமல் வெளியே விட்டான்.

"ஆக, எல்லா செலவையும் ஜாலியா வீட்டிலே உக்காந்து செய்யுறேன்னு சொல்லு!"

"என்ன சொன்னீங்க? ஜாலியாவா?"

"பின்ன! கூட்டத்திலே இடிபடாம, வரிசைல நிக்காம வீட்டிலே காலை நீட்டிக்கிட்டு வாங்குறேயே அதைச் சொன்னேன்."

"ஆன்லைன் ஷாப்பிங்னா உங்களுக்கு அவ்வளவு ஈஸின்னு நினைப்பா? எத்தனை வெப்சைட், எத்தனை டீல். ஒரே பொருள் எல்லா தளத்திலேயும் என்ன விலை, அதுக்கு எத்தனை கூப்பன் கோடு, ஷிப்பிங் இலவசமா இல்லையா, இலவச டோர் டெலிவரின்னா எவ்வளவுக்கு பொருள் வாங்கணும் அப்படீன்னு எத்தனையோ இருக்கு. இவ்வளவு பேசுறீங்களே, ஒருநாள் - ஒரே ஒருநாள் - உங்களால நம்ம வீட்டுக்காக ஆன்லைன் ஷாப்பிங் செய்யமுடியுமா?"

சரவணன் இந்த அதிரடி சவாலை எதிர்பார்க்கவில்லை. எப்படி சமாளிக்கப் போறோம் என்று யோசிக்கும்போதே, ரம்யா கேட்டாள் "என்ன சத்தத்தையே காணோம்? பொறுப்பைக் கொடுத்ததும் பின்வாங்கிட்டீங்களே!"

என்னடா இது! சினிமால வேணும்னா அர்ஜுன் ரகுவரன் விட்ட சவாலை எடுத்துக்கலாம். நமக்கெல்லாம் சரிப்பட்டு வருமா என்று யோசித்தான் சரவணன்.

"இனியாவது சும்மா குறை சொல்லாம இருங்க!"

"செய்றேன்"

"இப்பவாவது புரிஞ்சா சரி!"
"இல்ல, நான் ஒருநாள் ஷாப்பிங் சவாலை எடுத்து ஷாப்பிங் செய்றேன்."

இதைச் சொல்லும்போது சரவணன் அர்ஜுனாகவே மாறியிருந்தான். ஆனால் ரம்யாவை ரகுவரன் என நினைக்கும் போதுதான் கால் மெதுவாக நடுங்கியது. ஆனால் முன்வைத்த காலை (ஆமாம்! அதே நடுங்கின காலைத்தான்) பின்வைக்கக் கூடாது என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காகவும் பேஸ்மென்ட் வீக்காகவும் சவாலை ஆரம்பித்தான்.

"அதுதான் உங்க இஷ்டம்னா சரி. நான் ஏற்கெனவே சொன்னமாதிரி புத்தகங்கள், சட்டை, பரிசுப் பொருட்கள் எல்லாத்தையும் வாங்குங்க. ஒரே கண்டிஷன் மொத்தமாகப் பார்க்கும்போது விலை மத்த கடைகளைவிட கம்மியாக இருக்கனும். சரியா?"

"இதென்ன பிரமாதம்?" மனதுக்குள் திட்டம் ஆரம்பமாகியது. எல்லா தளங்களையும் திறந்துகொள்ள வேண்டியது, மொத்தமாக வேண்டிய பொருள்களைப் போட்டால் விலை தெரியப்போகிறது. அதில் குறைந்ததைத் தேர்வு செய்துவிட்டால் போயிற்று.

"மொத்தவிலை என்பது வரி, கூரியர் செலவு உட்பட தெரியுமில்லையா?" ரம்யா கேட்டவுடன் சரவணனுக்கு மெலிதாக உதற ஆரம்பித்தது. ஷோயப் அக்தர் பந்தை எதிர்கொள்ளும் திராவிட் போல தைரியமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே சொன்னான் "தெ... தெரியும்,தெரியும்..."

"என்ன தெரியுமோ? ஒழுங்கா கூப்பன்களைப் பார்த்து சரியாக உபயோகப்படுத்துங்க. இல்லாட்டி அதிக விலை கொடுத்துறப் போறீங்க!"

இப்போது சரவணன் திராவிட் நிலையில் இருந்து வெங்கடேஷ் ப்ரசாத் போல மாறியிருந்தான் (பேட்டிங்ல தான், பௌலர் இப்போதும் அதே ஷோயப் அக்தர்!). ஆனால் முன்வைத்த காலை... அட போங்கப்பா! இந்த கூப்பன் சமாச்சாரங்களை எல்லாம் எவன் கண்டுபிடித்தானோ அவனை கும்மவேண்டும் என நினைத்துக் கொண்டே சரவணன் வேலையை ஆரம்பித்தான்.

முதலில் வேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டான். ஏற்கெனவே திட்டமிட்டபடி ரம்யாவுக்குத் தெரிந்த எல்லா தளங்களையும் திறந்து வைத்துக் கொண்டான். ஒரு வேளை அவள் இவனது திறமையை சரி பார்க்க வேண்டுமென்றால் இதே தளங்களுக்குத்தான் செல்வாள் என்ற தன் அறிவைத் தானே மெச்சிக்கொண்டான். ரம்யா வெளியே சென்று குழந்தையை நண்பர்கள் வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு முன்னால் எல்லா வேலையையும் முடித்துவிட வேண்டும் என்பதுதிட்டம். முதல் தளத்தில் எல்லா பொருள்களையும் தேர்வுசெய்ய 10 நிமிடம் ஆனது. இரண்டாவது தளத்தில் அதே பொருள்களை தேர்வு செய்யும்போது தான் கேது கீபோர்டில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டார். ஆமாம், அந்தத் தளத்தில் ஒரு ஆஃபர் சரவணனைத் தூண்டியது.

"நீங்கள் வாங்கும் பொருட்கள வைத்து நாங்கள் பரிந்துரைக்கும் பொருட்களைப் பார்க்கிறீர்களா?" என்று ஒரு தூண்டில் போட்டார்கள். அதில் சரவணன் பல நாட்கள் தேடிக் கொண்டிருந்த ஷேவிங் செட் பாதி விலைக்கு இருந்தது. எப்படியும் இது உபயோகமாகத்தான் இருக்கும் என்று அதையும் தேர்வுசெய்தான். அதே சமயம் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசமாமே, அதையும் விடுவானேன் என்று வந்த மகாலக்ஷ்மியை வரவேற்று ஏற்றுக்கொண்டான். இரண்டாவது பொருளுக்கு வரியும், கூரியர் செலவும் தனி என்பதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ரம்யா சொன்ன கூப்பன்களைத் தேடியெடுத்து அந்த அந்தத் தளங்களில் கொட்டினான். ஒரு கூப்பன் உபயோகப்படுத்த இன்னும் இருபது டாலருக்கு வாங்கு என்றது. இன்னொன்று அந்தக் கூப்பன் இருந்தால் நான் இருக்கமாட்டேன் என்று சக்களத்தி சண்டை போட்டது. சரி, பிரச்சனையே வேண்டாம் என்று முதல் கூப்பனைத் தூக்கினால், இன்னும் முப்பதுக்கு வாங்கினால்தான் எல்லா தள்ளுபடியும் செல்லும் என்றது.

சரவணனுக்கு லேசாகத் தலை வலிப்பதுபோல் இருந்தது. சரி ஒரு காபி குடித்துவிட்டு வேலையைத் தொடரலாம் என்று எண்ணி சூடாக காபி போட்டுக் குடித்தான். வேலையை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க எண்ணினான். தான் ஒன்று நினைக்க இணையம் ஒன்று நினைத்தது. அவன் தேர்வு செய்துவைத்த பொருட்களில் பாதி இல்லையென்றும் அவை கடந்த பத்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் சொல்ல சரவணனுக்கு மெலிதாக அழுகை வந்தது. "மறுபடியும் முதல்ல இருந்தா?" என்று நினைக்கும் போதே வயிற்றை கலக்கியது. ஆனால் இப்போது பாத்ரூம் போனால் தளத்தில் இருந்த மீதிப் பொருட்களும் போய்விடும் என்பதால் பீதியை மறைத்து தளத்துடன் மோதிப்பார்க்க முடிவெடுத்தான்.

ஒரு வழியாக இங்கே அங்கே தட்டுத் தடுமாறி எல்லா வேண்டிய பொருட்களையும் போட்டுச் சிலபல தேவையில்லாத பொருட்களையும் சேர்த்து (இலவசமாம்!) அனைத்து தளங்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது ஒரே ஒரு தளத்தில்தான் மற்ற தளங்களைவிட கிட்டத்தட்ட 30% வரை குறைவாக இருந்தது. இதைவிடக் குறைவாக வாங்கமுடியாது என்று சில நொடிகள் இறுமாப்பு அடைந்தான். இதுவரை ரம்யா இந்தத் தளத்தில் வாங்கியதில்லை. கண்டிப்பாக வேறொரு தளத்தில் அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருப்பாள். அவள் வந்தவுடன் அதைச் சொல்லி கலாய்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

வேலையை முடித்த சந்தோஷத்தில் மற்ற பொழுதுபோக்கு தளங்களை பார்க்கப் போனான். அடுத்த அரைமணி நேரத்தில் ரம்யா குழந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். வரும்போதே 6 வயது மகள் சொல்லிக் கொண்டே வந்தாள், "அப்பா, உங்களுக்குத் தெரியுமா? அந்த ***.நீஷீனீ வெப்சைட்டில் எல்லாப் பொருட்களும் குறைந்த விலைக்குக் குடுப்பதாகச் சொல்லி வீட்டிற்கு செங்கல் கட்டியை கூரியர் அனுப்பி விடுவார்களாம். என் நண்பனுடைய அம்மா சொல்லிக்கொண்டு இருந்தார்கள். உங்களுக்குத் தெரியுமா?"

சரவணனுக்கு இப்போது பீதிபோய் பேதியே வந்துவிட்டது. "மூன்று மணி நேரம் நான் அந்தத் தளத்தில்தான் எல்லா பொருள்களையும் பார்த்துக் கொண்டிருந்தேனா?" என்னும்போதே ரம்யா கேட்டாள், “என்ன அந்தத் தளத்தில்தான் ஆர்டர் செய்தீர்களா?"

"அது வந்து... அது... நான் என்ன சொல்றேன்னா.."

"ஒண்ணும் சொல்ல வேணாம். எல்லாம் எனக்குத் தெரியும். நம்முடைய கார்டிலிருந்து பணம் எடுத்தவுடன் ஷிவிஷி வந்தது. உடனே வங்கிக்கு ஃபோன் செய்து அதை நிறுத்தச் சொல்லிவிட்டேன். இனிமேலாவது இதுபோல வெட்டிச் சவடால் வேண்டாம். சரியா?"

இதற்கு மேல என்ன பேச முடியும்? சரவணன் தலையை ஆட்டி ஆமோதித்தான்.

எல். ஸ்ரீராம்,
நொவாட்டோ, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline