Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 11)
- ராஜேஷ், Anh Tran|செப்டம்பர் 2016|
Share:
ராப்ளேயிடம் நேரடியாகக் கேட்டும் மறுத்துவிட்டார். மேயர் மூலமாகப் போகலாம் என்றால், அதற்கும் ராப்ளே மறுத்துவிட்டார். ஜட்ஜ் குரோவ் மூலமாக ராப்ளேயை சம்மதிக்க வைக்கலாம் என்றால், அதுவும் நடக்கவில்லை. கீதா பக்கரூவை பிழைக்கவைப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் போய்விட்டன என்று நினைத்துக்கொண்டார். அருணின் முகத்தில் முதன்முறையாக கவலைக் கோடுகள் தெரிந்தன.

அருண், இன்னும் சில பெரியவர்களை சந்தித்துப் பேசிப் பார்க்கலாம் என்றான். ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருவர் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் கீதா வண்டி ஓட்டியதுதான் மிச்சம். பலன் எதுவும் கிடைக்கவில்லை.

சிபாரிசு செய்த அனைவரிடமும் "விதையைக் கொடு. அப்புறம் அனுமதி தருகிறேன்" என்று சொல்லிவிட்டார் ராப்ளே.

பக்கரூ அன்று அவர்களோடு வெளியில் அலைந்ததில் இன்னும் பலவீனமாகிப் போனது. முனகல்கூட இல்லாமல் சோர்ந்துபோய் அருணின் மடியில் படுத்துக்கொண்டிருந்தது. எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தபின் இனிமேலும் சிபாரிசுக்கு அலைவதில் பயனில்லை என்று கீதா வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

"அவ்வளவுதானா அம்மா? நாம பக்கரூவக் காப்பாத்த முடியாதா?" அருணின் குரலில் துக்கம் பொங்கி வந்தது. கீதா மௌனமாக இருந்தார். "அம்மா, அப்பிடி என்னதான் அந்த விதைல இருக்கு, உங்க கம்பனி அதிபர் இப்படி இருக்கறதுக்கு? நம்ம பக்கரூ அவ்வளவு துச்சமா?"

"அருண், வா கண்ணா, ராப்ளேயிடம் திரும்பப்போய் பேசலாம். விதையைக் கொடுத்தாவது பக்கரூவைக் காப்பாத்த முடியுமான்னு பார்க்கலாம்" என்றார் கீதா.

பக்கரூவின் உயிர் ஒரு பக்கம். ராப்ளேயின் பிடிவாதம் மறுபக்கம். அந்தச் சின்னப் பையனின் மனது துடித்தது.

அருண் முதலில் வேண்டாம் எனச் சொல்லப் பார்த்தான். ஆனால், வேறு வழியே இல்லாதபொழுது, ராப்ளே இணங்கக்கூடும் என்று சம்மதித்தான்.

"அம்மா, விதையைக் கொடுத்தும் அவர் அனுமதி தரலைன்னா என்னம்மா பண்றது? அப்பவும் நம்ம பக்கரூ பிழைக்க வழியில்லாமல் போயிடுமே?"

மகனின் கேள்வி கீதாவுக்கு நியாயமாகப் பட்டது. ராப்ளே தனக்குச் சாதகமாக எதையும் செய்யக்கூடியவர்; பணத்திற்காக எதையும் செய்பவர்; ஒரு சிறுவனின் துக்கத்தைக்கூட சட்டை செய்யாமல் தனக்கு வரும் லாபத்திலேயே குறியாக இருப்பவர்.

என்ன செய்வது, தாய்ப்பாசம் வென்றது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு, ராப்ளேயின் நம்பருக்கு ஃபோன் செய்தார். டயல் சத்தம் கேட்டது. வாய்ஸ் மெயில் பின்னர் கேட்டது. ராப்ளேயிடம் இருந்து பதில் வரவில்லை. ஏதும் சொல்லாமல் ஃபோனை வைத்தார்.
"அம்மா, ஏன் அம்மா வாய்ஸ் மெயில் விடல? உங்களுக்கு விதையைக் கொடுக்க இஷ்டம் இல்லைன்னா பரவாயில்லம்மா." மகனின் பதில் கீதாவை துக்கத்தில் ஆழ்த்தியது. மீண்டும் ஃபோன் செய்தார். அம்முறையும் அவ்வாறே நடந்தது. அவரால் வாய்ஸ் மெயில் விடமுடியவில்லை.

"அம்மா, வண்டி ஓட்டும்போது ஃபோன் வேண்டாம். வீட்டுக்குப் போய்ப் பேசலாம்," என்று மெதுவாகச் சொன்னான் அருண். "பக்கரூ, என்னை மன்னிச்சுடுடா. என்னை மன்னிச்சுடு" என்று பக்கரூவின் காதருகே கிசுகிசுத்தான்.

வண்டியிலிருந்த நிசப்தத்தை மாற்ற கீதா ரேடியோவை ஆன் செய்தார். அதில் நேயர் விருப்பம் வந்துகொண்டிருந்தது. யாரோ ஒரு நேயரின் விருப்பத்துக்காக, அந்த நிகழ்ச்சியின் DJ ஒரு அருமையான போடு போட்டார்.

"நேயர்களே! நம்பிக்கை என்பது நமது வாழ்க்கையின் மிகச்சிறந்த நண்பன். அதை என்றுமே கைவிடக்கூடாது," என்று சொல்லி Jason Mraz என்னும் இசைக்கலைஞரின் "I won’t give up" என்ற பாடலைப் போட்டார்.

"I won’t give up Buckaroo! I won’t give up," என்று பக்கரூவை கட்டியணைத்துப் பேசினான். அவர்கள் வீட்டிற்கு திரும்பும்பொழுது சற்றே இருட்டிவிட்டது. வீட்டுக்குள் போய் ராப்ளேயிடம் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்து வண்டியை கீதா நிறுத்தினார்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, தடாலென்று பின் கதவைத் திறந்துகொண்டு வீட்டின் வாசலைநோக்கித் தலைதெறிக்க ஓடினான் அருண். பக்கரூவைக்கூட கவனிக்கவில்லை. அதைப் பின் சீட்டில் விட்டுவிட்டு ஓடினான். திடுக்கிட்டுப்போன கீதா, பிரமை பிடித்ததுபோல் நின்றார்.

வீட்டைநோக்கி ஓடிய அருண், வெளிக்கதவின் கீழே பார்த்து எதையோ தேடினான்.

அவன் தேடியது கிடைத்தது. அது ஒரு லெட்டர். அருணின் முகத்தில் ஒருவித எதிர்பார்ப்பு கலந்த உற்சாகம் தெரிந்தது. கைகள் நடுங்க, அந்த லெட்டரின் வெளிப்புறம் பார்த்தான்.

"அன்புள்ள அருணுக்கு,
மிகவும் அவசரம். உடனே பிரித்துப் படிக்கவும்."

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran
Share: 




© Copyright 2020 Tamilonline