இலங்கை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
|
|
|
|
|
"ஓ போடு", "சத்தமில்லாத தனிமை கேட்டேன்", "ஒவ்வொரு பூக்களுமே" என நினைவில் நிற்கும் பல திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளவர் பரத்வாஜ். இரண்டுமுறை சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வென்றவர். 1996ல் தமிழ்த்திரையுலகில் நுழைந்த இவர் 80 படங்களுக்குமேல் இசையமைத்து வெற்றிநடை போடுகிறவர். 2008ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 'ஒரு குரலில் ஒரு குறள்' என்ற கணக்கில் 1330 குறள்களையும் இசையும், உரையுமாக வெளியிடும் மாபெரும் முயற்சிக்காக இவர் சினிமாவுக்கு இசையமைப்பதையே நிறுத்தி வைத்திருந்தார். முதற்கட்டமாக அறத்துப் பாலின் 380 குறள்களையும் ஒலிபதிந்து குறுந்தகடாக தமிழகத்திலும் அண்மையில் அமெரிக்காவின் விரிகுடாப்பகுதியிலும் வெளியிட்டுள்ளார். அதற்காக வந்திருந்த பரத்வாஜோடு உரையாடியதில் சில பகுதிகள்....
*****
தென்றல்: புதுடில்லியில் பிறந்து வளர்ந்த, சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆன உங்களுக்கு இசை, தமிழிலக்கிய ஈடுபாடு எப்படி வந்தது? பரத்வாஜ்: என் தந்தை திரு. ராமஸ்வாமி மத்திய அரசுப் பணியில் இருந்தார். தில்லித் தமிழ்ப் பள்ளி DTEAவில் படித்தேன். ஹன்ஸ்ராஜ் காலேஜில் B.Sc பட்டப்படிப்பு. அப்புறம் C.A. சின்ன வயசிலிருந்தே பாட்டை ரசிக்கறதைவிட, பின்னணி இசையை ஆராய்வதில் ஆர்வம் அதிகம். சங்கீதத்தில அடிப்படை வேணும்கிறதால பட்டப்படிப்பின் போதே காலைல பாடவகுப்பு, மாலை சங்கீத வகுப்பு படித்தேன். ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன் இரண்டும் கற்றுக்கொண்டேன். இசையமைக்கக் கல்பனாசக்தி அவசியம். சங்கீதத்துல ஆழ்ந்த ஞானமில்லாவிட்டாலும் அடிப்படை தெரிந்திருக்கணும். அப்புறம் டில்லி வானொலி நிலையம், தூர்தர்ஷன் இரண்டுக்கும் இசையமைக்கத் தொடங்கினேன். அப்படியே மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தேன். நாலஞ்சு சினிமாப்பாட்டுக்கு நடுவில் என் சொந்தப் பாட்டையும் பாடுவேன். C.A. ரொம்ப கஷ்டமான படிப்பு, அதோட சங்கீதம் படிச்சேன். ஏன்னா என் ஆர்வம் இசையிலதான். டில்லியில் வளர்ந்ததால எனக்கு வட இந்திய மொழிகள் எல்லாம் தெரியும். ஆனாலும் சென்னைக்குத்தான் வரணும்னு தோணிச்சு, சென்னைக்கு வந்தேன்.
தெ: சென்னையில் சினிமா வாய்ப்பு உடனே கிடைத்ததா? ப: சினிமால பார்த்திருப்பீங்க. அந்தமாதிரி ஒரு பையில் ஹார்மோனியப் பெட்டி. இன்னொரு பையில என்னோட C.A. சர்டிஃபிகேட். படத்துல சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் ஏதாவது வேலை பார்க்கணுமே. அப்போ எனக்கு சென்னை அவ்வளவா பழக்கம் கிடையாது. சொந்தக்காரங்க இருந்தாலும், யார்கிட்டயும் நெருங்கிப் பழகினதில்ல. எல்லாம் புதுசு. இப்படித்தான் 30 வருஷத்துக்கு முன்னால சென்னைவந்து இறங்கினேன். முதல்ல ஒரு வேலை தேடிக்கிட்டேன். காலைலேருந்து சாயங்காலம்வரை ஆஃபீஸ் வேலை. சாயங்காலம் 5 மணிக்கு அப்புறம் ரவுண்ட்ஸ் போற வேலை. அந்தச் சமயத்தில இளையராஜா, M.S. விஸ்வநாதன், சங்கர் கணேஷ் எல்லாரும் புகழின் உச்சத்துல இருந்தாங்க. அதனால முதல் 8 வருஷம், டி.வி. சீரியல், விளம்பரம், பக்திப்பாடல்கள், கார்ப்போரேட் ஃப்லிம்ஸ் இதுக்கெல்லாம் இசையமைச்சேன். 1993ல தமிழ்ப்பட வாய்ப்புக் கிடைச்சது. ஆனா அந்தப்படம் வெளிவரல. 1994ல ஒரு தெலுங்குப்பட வாய்ப்பு, 96ல தமிழ்ப்பட வாய்ப்பு எல்லாம் கிடைத்து. அதிலேருந்து 2010வரைக்கும் 80 படங்களுக்குமேல இசை அமைச்சிருக்கேன்.
தெ: திருக்குறளுக்கு இசையமைக்கும் திட்டம் எப்படித் தோன்றியது? ப: சென்னையில் வருஷம் ஆக, ஆக எனக்குத் தமிழார்வம் அதிகரிச்சது. என்னோட மகள் ஜனனி பாரத்வாஜ் ஒரு பாடகி. 2010ல அவளோட திருமணத்துக்கு அப்புறம் திருக்குறளுக்கு இசையமைக்கற எண்ணம் வந்தது. எனக்கு 2008ல கலைமாமணி விருது கிடைத்தது. நமக்கு விருது கொடுத்திருக்காங்க. நாம ஏதாவது திருப்பிச் செய்யணும்னு எண்ணம் வந்தது. நான் BigFM ரேடியோ ஸ்டேஷனுக்கு ஒரு நேர்காணலுக்கு போனேன். அப்ப எனக்கு அன்பளிப்பா ஒரு திருக்குறள் புத்தகம் குடுத்தாங்க. அப்பத்தான் நான் திருக்குறளை முதல் தடவையா படிச்சேன். இதில இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கே, நாம இதுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அப்படித்தான் அதற்கு இசை அமையக்கிற முயற்சியில் இறங்கினேன்.
ஒரு சீனியர் மியூசிக் டைரக்டர் என்கிற முறையில் எதைச் செய்தாலும் சிறப்பா செய்யணும்னு ஒரு கடமை இருந்தது. 2011ல நானும் என் மனைவியும் உலகச் சுற்றுப்பயணம் போனோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கல்ஃப் தேசங்கள் எல்லாம் போனோம். அங்க சந்திச்ச தமிழர்களிடம் இதைச் செய்யலாமான்னு கலந்துபேசினேன். கடைசியா 2011-12ல தொடங்கி 2014ல செய்து முடிச்சேன். இன்னிக்கு நீங்க பார்க்கிறது 3 அல்லது 3 1/2 வருஷ இடைவிடாத உழைப்பு.
தெ: திருக்குறளை இசையோடு தரமுடியும்னு எப்படி நம்பிக்கை வந்தது? ப: நான் உலகம் முழுவதும் இசைக்கச்சேரி செஞ்சபோது மெல்லிசையோட வீச்சு என்னன்னு தெரியவந்தது. என்னோட இசைக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியப்படுத்தியது. திருக்குறளை மெல்லிசையில தந்தா நல்லா இருக்குமேன்னு எண்ணம் வந்தது. திருக்குறளை இசையொடு தருகிற முதலாள் நானில்லை. அப்போ நான் வித்தியாசமா செய்யணும். என்னோட தத்துவப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால, இதற்கு இசையமைக்கத் தகுதி இருக்குன்னு நம்பிக்கை வந்தது. இசையமைக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பாடகரைப் பிடிக்கும். அதனால நான் அறத்துப்பாலின் 380 குறள்களை 380 பாடகர்களைக் கொண்டு பாடவைத்தேன். சினிமாத் துறை, கர்நாடக இசைக்கலைஞர்கள், ஃபோக் மியூசிஷன்ஸ், மேடைப்பாடகர்கள், பரதநாட்டியத்துக்குப் பாடுபவர்கள், தவிர ஏறக்குறைய 15 நாடுகளிலேருந்து பாடகர்கள் எல்லாரையும் பாடவைச்சேன்.
இன்னொண்ணு. "வானினின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று" என்பதைச் சொல்ல எடுத்துக்கற நேரம்தான் பாடறதுக்கும் எடுத்துக்கணும். வரிகளும், வார்த்தைகளும் சிதையாம அதோட நீளத்தை அப்படியே தரக்கூடிய தாளம்தான் 5 மாத்திரை கொண்ட கண்டசாப்புத் தாளம். இதை நான் கண்டுபிடிச்சேன். அப்புறம் வேற வேற ராகத்துல, வேற வேற பாணியில இசையமைச்சேன். உலகம் முழுவதிலிருந்தும் பல தமிழர்களை அழைத்து பொருள் சொல்லவெச்சேன். இதில தொழில்நுட்பம் பெரிய உதவியா இருந்தது. நாங்க எங்க ஸ்டுடியோவிலேந்து டிராக் அனுப்புவோம். அவங்கவங்க ஊர்ல இருந்தபடியே பாடிப் பதிவுபண்ணி அனுப்புவாங்க. நாங்க அதை மிக்ஸ் பண்ணுவோம்.
ஒரு சிறந்த தமிழறிஞர், திருக்குறளை நன்கு அறிந்தவர் ஒருத்தர் தேவைன்னு நினைச்சோம். தேனியில இருக்கிற சுவாமி ஓங்காரானந்தா நல்ல தமிழறிஞர். திருக்குறளை நன்கறிந்தவர். ஆன்மீகவாதி. அவர் ஒவ்வொரு அதிகாரத்துக்கு முன்னாலயும் ஒரு நிமிஷம் பேசுவார். அப்புறம் குறள் பாடலும், பொருளும் ரெகார்ட் பண்ணினோம். பின்னணி இசை சேர்த்தோம். இது சினிமாப்பாட்டு மாதிரியோ, பக்திப்பாட்டு மாதிரியோ இருக்கக்கூடாது. புதுப்பாணியா இருக்கணும். நவீனமா, மக்களுக்குப் புரியற மாதிரியும் இருக்கணும். இதையெல்லாம் மனசில வைச்சுக்கிட்டு செய்தோம். சுவாமிஜி முதலில் 'இல்லந்தோறும் வள்ளுவம்' அப்படின்னு பேர் கொடுத்தார். இது எல்லார் மனத்துலயும் போய்ப் பதியணும்னு 'உள்ளந்தோறும் வள்ளுவம்' அப்படின்னு பேரைக் கொஞ்சம் மாத்தினார். 'ஒரு குரலில் ஒரு குறள்', 'உலகப் பொதுமறை உலகத் தமிழர்களின் படைப்பில்' என்றெல்லாம் இதை விவரிப்பது மிகவும் பொருத்தம்.
தெ: இந்தப் பயணத்தில ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள். ப: தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தமிழ் பேசறவிதம் வித்தியாசமா இருக்கும். இலங்கைத் தமிழ் வித்தியாசமா இருக்கும். அவங்க அவங்க எப்படிப் பேசுவாங்களோ அப்படியே பதிவுசெஞ்சோம். அது ஒரு புதுமை, வெரைட்டியும்கூட. சென்னையில இருக்கிற சர்ச் பார்க், கேந்திரிய வித்யாலாயா மாதிரி ஐந்தாறு பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கடவுள் வாழ்த்துப் பாடவைத்தோம். கடவுள் வாழ்த்து மதச்சார்பற்றதா இருக்கிறதால, அதன் அர்த்தத்தை, இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, ஜைன மதத் தலைவர்கள், மற்றும் சின்மயா மிஷன் துறவிகள், மதிஒளி அம்மா ஆகியோரைக் கொண்டு சொல்லவைத்தோம். அதிலும் புதுமை, வெரைட்டி!
இதுனால எனக்குப் பெரிய மனத்திருப்தி கிடைச்சது. ஏன்னா, இசையோட நோக்கமே, அதன்மூலமா நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துப் போகணும் என்பதுதான். அதனால திருக்குறள் எனக்கு சந்தோஷத்தையும், நிறைவையும் கொடுத்தது. எனக்கு சங்கராச்சாரியார், தயானந்த ஸரஸ்வதி, அப்துல் கலாம் போன்ற பெரியவர்களையெல்லாம் தனிப்பட்ட முறையில தெரியாது. ஆனா நாங்க மெயில் அனுப்பிச்ச உடனேயே அவங்க முன்வந்து பேச ஒத்துக்கிட்டாங்க. அதேமாதிரிதான் பாடகர்களும். எல்லாரும் தானாகவே முன்வந்து ஒத்துழைப்புக் கொடுத்தது எனக்கு நிறைய உற்சாகத்தைத் தந்தது.
தெ: இந்த முயற்சிக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைச்சது? ப: சொந்தப் பணம்தான். ஸ்டூடியோ வாடகை, பாடகர் சம்பளம், நிறைய வெளியூர்ப் பயணங்கள் எல்லாமே என்னோட செலவுதான். இந்த ப்ராஜெக்ட்டுக்காக சினிமாவுக்கு இசையமைக்கிறதை நிறுத்த வேண்டியிருந்தது. ஒருபக்கம் வருமானம் இல்லை. இன்னொரு பக்கம் செலவு. இதைச் செய்யணும்னு ஒரு உந்துதல் இருந்ததால நானே மொத்தச் செலவும் செஞ்சேன். இதை நல்லபடியா செஞ்சா எல்லோரட ஆதரவும் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை உண்டு.
இது என்னோட இசைப்பயணத்துல ஒரு திருப்புமுனை. நிறைய வாய்ப்புக்களை இழக்க வேண்டியிருந்தது. அந்த பலம் எங்கேயிருந்து வந்ததுன்னே தெரியல. இறைவன் கொடுத்த அழைப்பாக எடுத்துக்கிட்டேன். யாரையும் அதிகம் கேட்கவில்லை. தோணிச்சு, பண்ணினேன். அவ்வளவுதான். |
|
|
தெ: உங்க தொண்டு நிறுவனத்தைப் பத்திச் சொல்லுங்க. அதனோட நோக்கங்கள் என்ன? ப: எனக்கு எப்பவுமே தர்மசிந்தனை உண்டு. நாமே அதைச் செய்தா நல்லதுன்னு நினைச்சு 'பரத்வாஜ் ஃபவுண்டேஷன்' தொடங்கினேன். இது பதிவுசெய்யப்பட்ட பொதுத்தொண்டு நிறுவனம். வருமான வரிவிலக்கு உள்ளது.
திருக்குறள் இசையை முதல்வர் ஜெயலலிதா அவர்களைக் கொண்டு வெளியிட விரும்பினோம். நிலைமை மாறிட்டதால, தமிழக ஆளுனர் இந்த ஆல்பத்தை ஏப்ரல் 25, 2015 அன்னிக்கு வெளியிட்டார். நீதியரசர் ராமசுப்பிரமணியம், சுப்பு ஆறுமுகம், பத்மா சுப்ரமணியம், ஜைனத்துறவி ஒருவர், ஃபாதர் தேவசகாயம், திருமதி. ஒய்.ஜி. பார்த்தசாரதி, மதிஒளி அம்மா ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டேன். ஒரு ஃபிலிம்ஃபேர் அவார்ட் அளவுக்குப் பெரிய விழா. சொந்தச் செலவில்தான். After all I am a showman. சினிமாக்காரனுக்கு எது தெரியுதோ இல்லையோ ஜிகினா வேலை நல்லாத் தெரியும்னு விளையாட்டாச் சொல்லுவாங்க. சிலசமயம் ஜிகினா வேலை தேவை, அப்போதுதான் பரவலாகப் போய் எட்டும்.
என் அறக்கட்டளை வழியா தமிழுக்கு நிறையச் செய்ய எண்ணம் இருக்கு. தமிழ்நாட்டில சுகாதார முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யணும். திருநெல்வேலி மாவட்டத்தில ஏற்கனவே நிறைய சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தியிருக்கோம். இந்த திருக்குறள் ப்ராஜெக்ட்ல வர்ற பணத்தை இந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவோம்.
தெ: வருங்காலத் திட்டங்கள் பத்திச் சொல்லுங்க. ப: இந்த திருக்குறள் ப்ராஜெக்டுக்கு ஒரு App பண்ணணும். ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதையை அனிமேஷனுடன் சுவையாகச் சொல்லணும்னு ஆசை இருக்கு. அதுக்கான வேலை தொடங்கியாச்சு. அப்புறம் ஒரு தொலைக்காட்சி வழியாக 'தினம் ஒரு குறள்' நிகழ்ச்சி வழங்க இருக்கோம். இப்ப 'அறத்துப்பால்' மட்டும் இசையமைச்சிருக்கேன். இன்னும் 'பொருட்பால்', 'காமத்துப்பால்' இரண்டும் இசையில தரணும். இசைகூடத் தயாரா இருக்கு. அந்த வேலையைத் தொடங்கணும்.
தெ: கேக்க சந்தோஷமா இருக்கு. அடுத்த் கட்டம் எப்ப? ப: இதுக்கு ஓரளவு வெற்றி கிடைச்சிருக்கு. பலரையும் இதில ஈடுபடுத்தமுடியும்னு தோணுது. ஆனால் மேற்கொண்டு செய்ய நிதி ஆதாரம், ஆதரவு வேணும். மத்தவங்களும் தோள் கொடுத்தாதான் தொடரமுடியும். அதுக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். நடக்கணும்னு இருந்தா கண்டிப்பா நடக்கும். அது என்னோட நம்பிக்கை.
தெ: இந்த சி.டி. பரவலாகச் செல்லும்போது மக்களிடையே அறவுணர்வு அதிகரிக்கும். உங்கள் கருத்து என்ன? ப: கண்டிப்பா. ஒரு விஷயத்தைச் செவிவழியே கேட்கும்போது, அதிக முயற்சியில்லாமல் கேட்க முடியும். உதாரணமா, எங்க கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகம். நாகூர் ஹனிபா பாடின 'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லையென்று சொல்லுவதில்லை" என்ற பாட்டு எப்பவும் ஒலிக்கும். நான் முஸ்லீம் இல்லைன்னாலும் அந்தப் பாட்டைக் கேட்டுக்கேட்டு இப்பவும் எனக்கு நினைவிருக்கு. அதனால கவனமில்லாமல் ஒன்று காதில் விழுந்தாலும் உங்களுடைய மனசுல நிக்கும். ஒரு விஷயத்தைப் பாட்டாகத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது, அது ஆழ்மனசுல பதிஞ்சு போகும். அப்ப அதை வாழ்க்கையில கடைப்பிடிக்கறதுக்கான வாய்ப்புக்கள் இருக்கு.
தெ: 'அறம்நாள்' கொண்டாணும்னு சொல்லியிருந்தீங்க.... ப: என்னென்னவோ தினங்கள் இருக்கு. அந்தமாதிரி 'அறம்நாள்' அப்படின்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அன்னிக்கு எல்லாரும் நேர்மையான, நல்ல காரியங்கள் மட்டுமே செய்யணும். ஒரு தப்புக் காரியமும் செய்யக்கூடாது. அப்படி இருந்தா வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். அதைச் சென்னையில் ஆடியோ ரிலீஸ் பண்ணின ஏப்ரல் 25ம் தேதி சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ரொம்ப டிரமாடிக்கா இருக்கும்னு விட்டுட்டேன். நாம ஆன்மீகப் பெரியவர்கள் சொல்லறதைக் கேட்கறோம். அதுமாதிரி உலகத் தமிழர்கள் எல்லாரும் சேர்ந்து நாமே ஒருநாளைத் தேர்ந்தெடுத்து 'அறம்நாள்' கொண்டாடினா நல்லா இருக்கும்.
தெ: திருக்குறள் இசைக்கு எப்படி வரவேற்பு இருக்கு? ப: நல்லபடியா இருக்குன்னுதான் சொல்லணும். பாரிஸ், மும்பை, பெங்களூரு எல்லா இடத்திலயும் வெளியிட்டோம். இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, இதுக்கு எப்பவும் மார்க்கெட் இருக்கும். Shelf life is eternal. சினிமாப் பாட்டை ரிலீஸாகி மூணுமாசம்தான் கேட்கமுடியும். தமிழ் இருக்கிற வரைக்கும் திருக்குறளுக்கு வரவேற்பு இருக்கும். நான் அதனால உடனடி ரிசல்டைப்பத்திக் கவலைப்படல. மெதுவா எல்லாரையும் சென்றடையும். உலகம் முழுவதும் 50 இடங்களைத் தேர்ந்தெடுத்து நானே அங்கபோய் அதை விளம்பரப்படுத்தறதா இருக்கேன். உலகத் தமிழர்களின் ஆதரவு வேண்டும்.
தெ: திருக்குறளோட அடுத்த இரண்டு பகுதிகளையும் எப்ப வெளியிட இருக்கீங்க? ப: பொருட்பால், காமத்துப்பால் இவற்றோட வேலைகள் நடந்துட்டிருக்கு. சீக்கிரமே வெளியிட விரும்பறேன். இரண்டு மாதத்தில வெளியிட ஆசை. ஜெயலலிதா அம்மா திரும்பவும் முதல்வராயிட்டாங்க. 3 சி.டிக்களையும் அவங்க கையால வெளியிடணும்னு ஆசை.
தெ: உங்களோட குடும்பம், அவங்களோட ஆதரவு பத்திச் சொல்லுங்க. ப: அம்மா, அப்பா, இரண்டு சகோதரிகள், என்னோட மனைவி ஜெயஸ்ரீ, என் பெண் ஜனனி இதுதான் என்னோட குடும்பம். ஜனனி பரத்வாஜ் ஒரு பாடகி. சினிமாவில பாடியிருக்காங்க. கல்யாணமாகி, கணவர் கார்த்திக்கோட போர்ட்லாண்ட்ல இருக்காங்க. எப்பவுமே என் குடும்பத்தின் ஆதரவு எனக்கு இருந்து வந்திருக்கிறது.
தெ: இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது.... ப: எனக்குச் சின்ன வயசிலிருந்தே இசையார்வம் இருந்தது. 30 வருஷம் கடினமா உழைச்சு வெற்றிபெற்றேன். அதுபோல உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். அதுல முழுமுனைப்போட ஈடுபட்டா கண்டிப்பா வெற்றிகிடைக்கும். அமெரிக்கத் தமிழ் இளைஞர்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. எதைச் செய்தாலும் 100% உழைப்பை குடுங்க. நீங்க சரியான பாதையில போனா எல்லாரோட ஒத்துழைப்பும் கிடைக்கும்.
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன் தமிழில்: மீனாட்சி கணபதி
*****
குறள் என்னை மாற்றியது! I am a reformed person today. குறிப்பா 'நீத்தார் பெருமை' அதிகாரம். அதுல, பெரியோர்களை மதிச்சு, அவங்க செய்த நல்லவற்றைப் பாராட்டி, அவங்க சொன்ன நல்ல விஷயங்களை நாம கடைபிடிக்கணும்னு சொல்லியிருக்கார். அதைக் கேட்டதுலேந்து என்கிட்ட பெரிய மாற்றம். உடலுக்கும், உயிருக்கும் இருக்கிற உறவு, முட்டைக்கும் குஞ்சுக்கும் இருக்கிற உறவுக்கு ஒப்பானதுன்னு சொல்லியிருக்கார். எப்படிக் குஞ்சு வெளியே வந்ததும் ஓட்டுக்கு வேலையில்லையோ, அதுபோல உயிர் பிரிஞ்சப்பறம் உடம்புக்குப் பயன் இல்லைன்னு சொல்றார். எவ்வளோ பெரிய விஷயம், எத்தனை எளிமை!
2014 பிப்ரவரில ஹூஸ்டன் போயிருந்தேன். அங்கே கண்ணாடிப் பெட்டில சரியான வெப்பத்தில 40 முட்டைகள் வெச்சிருந்தாங்க. வெவ்வேறு நிலையில் முட்டை பொரியும் தருணங்கள். முட்டையில ஒரு விரிசல், அதுலேர்ந்து குஞ்சு வர்றது என்று வெவ்வேறு நிலைகள். விரிசல் விழுந்து 20 நிமிஷம் கழிச்சு வெளியே குஞ்சு வருது. அதுக்கப்பறம் அந்த ஓட்டுக்கு மதிப்பில்லை. அதைப் பார்க்கும்போது எனக்கு இந்தக் குறள் நினைவுக்கு வந்தது. ஆச்சரியமா இருந்தது. ஒவ்வொரு குறளையும் வாழ்க்கையோட இணைச்சுப் பார்க்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சரியான பணியைச் செய்தோம்னு பெருமையா இருக்கு. திருக்குறள் வாழ்க்கைக்கான செய்திகள் தருகிற ஒரு நூல்.
- பரத்வாஜ்
*****
வள்ளுவரைக் கொண்டாடவில்லை! ஒரு தடவை ஃப்ரான்சின் தென்பகுதிக்குப் போயிருந்தேன் அந்த ஊருக்கு டச்சு ஓவியர் வான் கோ (Van Gogh) 18ம் நூற்றாண்டுல வந்திருக்கார். அங்க இருந்த ஒரு பாலத்தை ஓவியம் வரஞ்சிருக்கார். அந்தப் பாலத்தையே ஒரு நினைவிடமா (monument) மாத்திட்டாங்க. அதையே இவ்வளவு பெரிசு பண்ணும்போது, திருவள்ளுவர் இவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கார், நாம அதை இன்னும் வெளியவே கொண்டுவரலன்னுதான் சொல்லணும். நாம ஒரு நடிகரைக் கொண்டாடற அளவுக்கு வள்ளுவரைக் கொண்டாடவில்லை. கன்னியாகுமரில பெரிய சிலை வச்சிருக்கோம், பாடமா வச்சிருக்கோம், பஸ்ஸுல எல்லாம் எழுதியிருக்கோம். ஆனா அதை நடைமுறைப் படுத்துறதுக்கோ, எளிதாகக் கற்பிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கல. |
|
|
More
இலங்கை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
|
|
|
|
|
|
|
|