Dr. லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்
|
|
|
|
|
எனக்கு சுகர், பி.பி., அல்சர், தைராய்டு இருக்கு - என்று ஒவ்வொருவரும் தமது நோய்களைப் பெருமையாகப் பட்டியலிட்டு, வண்ண வண்ண மாத்திரைகளை விழுங்கும் இந்தக் காலத்தில், "நமக்கு நோய் வர நாம்தான் காரணம்; எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம். மருத்துவரிடம் போகாமல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம். இது எல்லோருக்கும் சாத்தியமானது" என்று அறைகூவல் விடுக்கிறார் 35 வயது இளைஞரான ஹீலர் பாஸ்கர். Anatomic Therapy எனப்படும் செவிவழி தொடுசிகிச்சை முறை என்பதை அறிமுகப்படுத்தி அதை உலகெங்கும் அறிமுகப்படுத்தி வருகிறார். கடந்த 6 வருடங்களாக உலகப் பயணம் செய்து 1500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அல்சர், சுகர், மூட்டுவலி, கீல்வாதம் போன்ற நோய்களை மட்டுமல்ல; சோரியாசிஸ், புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவையும் Anatomic Therapy முறையைப் பின்பற்றினால் குணமாகும் என்கிறார் உறுதியுடன். இனி அவரே பேசட்டும்....
*****
கே: செவிவழி தொடுசிகிச்சை முறை என்பது என்ன? ப: வாழ்க வையகம். பொதுவாக நமக்கு உடல்நலமில்லை என்றால் மருத்துவரிடம் போவோம். அவர் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், அலோபதி, யுனானி, மேக்னெட் தெரபி என்று தாம் படித்ததற்கேற்பச் சிகிச்சை அளிப்பார். ஆனால் செவிவழி தொடுசிகிச்சை முறையில் எந்த மாத்திரை, மருந்தும் தரப்படுவதில்லை. பிளட் டெஸ்ட் வேண்டாம், ஸ்கேன் வேண்டாம், வாக்கிங் போக வேண்டாம், உணவுப் பத்தியம் வேண்டாம். ஒரு நோயாளி தன் நோயைப்பற்றிச் சொல்லாமலேயே எந்த டெஸ்ட் ரிப்போர்ட்டும் பார்க்காமலேயே அவரது நோயைக் குணப்படுத்த முடியும். அதுதான் Anatomic Therapy எனப்படும் செவிவழி தொடுசிகிச்சை முறையின் சிறப்பம்சம். விளக்கமாகச் சொன்னால், நான் ஒரு ஆறுமணி நேரம் தொடர்ந்து பேசுவேன். அதை நோயாளி கேட்கவேண்டும். இப்படி ஐந்து நாட்கள் தொடர்ந்து பேசுவேன். அதைக் கேட்டு அவர் முழுமையாகப் பின்பற்ற ஆரம்பித்தால் அவர் உடலில் உள்ள நோய்கள் - அது எய்ட்ஸ், கேன்சர், சோரியாஸிஸ், மூட்டுவலி, சர்க்கரை வியாதி என எதுவாக இருந்தாலும் படிப்படியாக குணமாகிவிடும். செவிமூலம் நோய்களுக்கான சிகிச்சை முறை ஆலோசனை அளிக்கப்படுவதால் இது செவிவழி தொடுசிகிச்சை முறை. நமது நோய்க்கு நாம்தான் காரணம். அதை நாமே குணப்படுத்திக் கொள்ளும் சிகிச்சை முறை இது. ஒரு நோயாளி தன்னைத் தானே எப்படி இயற்கை முறையில் எந்தச் செலவும் இல்லாமல் எந்த மருத்துவரையும் சந்திக்காமல் குணப்படுத்திக் கொள்வது என்பது பற்றிய புரிதலை ஏற்படுத்துவதுதான் செவிவழி தொடுசிகிச்சை முறை.
கே: இந்த முறையை எப்படிக் கண்டறிந்தீர்கள்? ப: நான் இந்த சிகிச்சை முறையை தேடிக் கண்டுபிடிக்கவில்லை. இது ஏற்கனவே நம்முடைய பாரம்பரியத்தில் இருந்து வருவதுதான். நான் தேடி அலைந்து அதனைப் புரிந்து கொண்டேன். அவ்வாறு புரிந்து கொண்டதை மற்றவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான். நான் கோயம்புத்தூரில் உள்ள செல்வபுரத்தில் பிறந்தேன். சிறுவயது முதலே நோயாளி. தலைவலி அதிகமாக வரும். தாங்கவே முடியாது தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூடத் தோன்றும். அதற்காக நான் சிறுவயது முதலே மருந்து சாப்பிட்டு வந்தேன். வளர வளர நோய்களும் வளர்ந்ததே தவிர குணம் ஆகவில்லை. பலவித மருத்துவர்களை மாறி மாறிப் பார்த்தும் பலனில்லை.
சிறுவயது முதலே கவனம் முழுவதும் என் உடல் மீதுதான். மற்றவர்களுக்கு படிப்பு, வேலை, தொழில், வாழ்க்கை என்று இருக்கும். உடல் சரியானால்தானே பிற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும்? என் பெற்றோர்களிடம் நோய் பற்றிச் சொல்லுவேன். அவர்கள் ஏதாவது மருந்து கொடுப்பார்கள். என் நோயின் கொடுமையை அவர்களால் உணர முடியவில்லை. அதனால் நானே என் நோய்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேட ஆரம்பித்தேன். மருத்துவர்களைச் சந்தித்தேன், புத்தகங்களைப் படித்தேன். அதில் கிடைத்த வழிமுறைகளைப் பின்பற்றினேன். ஆனால் நோய் குணமாகவில்லை. தப்புத் தப்பான விஷயங்களை ஏன் புத்தகமாகப் போடுகிறார்கள் என்று கோபம்கூட வந்தது. நோய்களுடன் போராடிக்கொண்டே பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் படிப்புகளை முடித்தேன். நிறைய மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், தினமும் ஒரு மாத்திரை, ஊசி போட்டுக் கொண்டால்தான் நடமாட முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. நோய் தீவிரமாகவே மகாராஷ்டிராவில் L&T நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான் அதை விட்டுவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டேன்.
பின் ஒரு வருடம் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தேன். அப்பொழுதுதான் ஒரு முடிவுக்கு வந்தேன். நோயை குணப்படுத்தத்தான் மருத்துவமும், மருத்துவப் படிப்பும் தேவையே தவிர, நோய் குணமாகாது, குணமாக்க முடியாது என்பதைச் சொல்வதற்கல்ல. நோயை குணப்படுத்தத் தெரியாதவர்கள் மருத்துவர்கள் அல்ல என்று முடிவெடுத்தேன். இனிமேல் என் உடலுக்கு நான்தான் மருத்துவர் என்று முடிவு செய்தேன். என் தேடலை தீவிரப்படுத்தினேன். பல புத்தகங்களைப் படித்தேன். பல தியான, யோக, இயற்கை மருத்துவ மையங்களுக்குச் சென்றேன். மெல்ல மெல்ல எனக்கு நம் உடல்பற்றி, அது இயங்கும் விதம் பற்றி எல்லாம் புரியத் துவங்கியது.
ஒருநாள் கோயமுத்தூர் கவுண்டம்பாளையத்தில் ரங்கராஜ் என்பவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் இரண்டு மணி நேரம் ஒரே விஷயத்தைப் பற்றி மொக்கை போட்டார். அதாவது சாப்பிடும்பொழுது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. வாயை நன்றாக மூடி, உமிழ் நீருடன் கலந்து நன்றாக மென்று உணவை உண்ண வேண்டும் என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். ஏற்கனவே பல புத்தகங்களைப் படித்து, பல மருத்துவர்களைச் சந்தித்து மனம் வெறுத்திருந்த நான், அவர் சொன்ன முறையையும் ஜஸ்ட் பின்பற்றிப் பார்த்தேன்.
ஆச்சரியப்படும் விதத்தில் சில வாரங்களிலேயே என் உடலில் நல்ல மாற்றம் தெரிந்தது. படிப்படியாக குணமும் ஏற்பட்டது. ஒரு சின்ன விஷயத்தை, பழக்கத்தை, மாற்றுவதன் மூலமாக நோய்கள் குணமாகும் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல; நாம் செய்யும் தவறுகள்தான் நோய்க்கான காரணம் என்பதையும் அறிந்து கொண்டேன். தொடர்ந்து ரங்கராஜ் அவர்களைச் சந்தித்து அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவரிடமிருந்தும், அவர் கை காட்டிய பல குருமார்களைச் சந்தித்தும், பல புத்தகங்களைப் படித்தும் மனத்தெளிவு பெற்றேன். நம் உடலைப் பற்றி, அது இயங்கும் விதத்தைப் பற்றி, மனம் பற்றி, நம் நோயை நாமே எப்படித் தீர்த்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் அறிந்து கொண்டேன். இப்படி பல புத்தகங்கள் படித்து, பல வைத்தியர்களைச் சந்தித்து, பல குருநாதர்களைச் சந்தித்து, பல ஊர்கள் சென்று பல நாட்கள் பல இடங்களில் தங்கி பல வருடங்கள் என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான், என்னைப் போல் வாழ்க்கையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற எல்லோரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் Anatomic Therapy - செவிவழி தொடுசிகிச்சை என்ற பெயரில் பகிர்ந்து கொள்கிறேன்.
கே: உங்கள் முயற்சிக்கு வரவேற்பு எப்படி இருந்தது? ப: நான் பட்ட துன்பத்தைப் பிறரும் படக்கூடாது. நோயாளிகள் குணமாக வேண்டும் என்ற எண்ணத்தில் எனது அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் யாருமே அதைக் கேட்கவில்லை. சட்டை செய்யவுமில்லை. அவர்களுக்குப் புரியவுமில்லை. அதனால் நானே ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, 10000 நோட்டீஸ் அடித்து வினியோகித்து, மக்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அந்தக் கூட்டத்துக்கு ஒரே ஒருவர் மட்டுமே வந்தார். அந்த ஒருவருக்காக நான் ஆறுமணி நேரம் நிகழ்ச்சி நடத்தினேன். பின்னர் மனம் தளராமல் என் முயற்சிகளைத் தொடர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வரத் துவங்கினர். அவ்வாறு வந்து, நான் சொன்ன முறைகளைப் பின்பற்றி நோய் குணமானவர்கள் அடுத்தவரிடம் சொல்ல, தற்போது ஆறு வருடமாக வாரத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். மக்கள் திரளாக வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர்.
கே: உங்கள் ஐந்து நாள் நிகழ்ச்சி பற்றிச் சொல்லுங்கள்.. ப: நமது உடலில் எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் ஐந்து. அவை ரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்து போதல், ரத்தத்திலுள்ள ஏதாவதொரு பொருள் இல்லாமல் போதல் அல்லது அளவு குறைந்து போதல். ரத்தத்தின் அளவு குறைதல், மனது கெட்டுப் போகுதல், உடலின் அறிவு கெடுதல். இந்த ஐந்து காரணத்தில் முதல் இரண்டு காரணத்தையும், மனதையும் மட்டுமே நாம் சரிப்படுத்த முடியும். இரத்தத்தின் அளவைச் சரி செய்வதையும், உடலறிவைச் சரி செய்வதையும், உடலே பார்த்துக் கொள்ளும். எனவே முதல் இரண்டு காரணத்தைச் சரி செய்வதற்கு நாம் ஐந்து விஷயங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அவை உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் மூச்சுக்காற்று,தூக்கம், உடல் உழைப்பு - இந்த ஐந்து விஷயங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு பின்பற்றினால் சில வாரங்களிலேயே உடலில் மாற்றம் ஏற்படும். நோய்கள் குணமாகத் துவங்கும்.
இதை எப்படிச் செய்வது என்பதை எனது பயிற்சி வகுப்பில் சொல்லித் தருகிறேன். ஐந்து நாள் கேம்ப்களில் முதல் இரண்டு நாள் உடல் பற்றிப் பேசுவேன். மற்ற மூன்று நாட்களிலும் மனம், புத்தி, விழித்த மனம், ஆழ்மனம், உயர்மனம், கர்ம யோகம், க்ரியா யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கடவுள், பிரபஞ்சம் இவை பற்றியெல்லாம் பேசுவேன். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதுதான் எனது நோக்கம். ஒரு மனிதனுடைய நோக்கம் சரியானதாக இருந்தால் எல்லாமே ஒழுங்காகி விடும். பலரது நோக்கமும் பணம் சம்பாதிப்பது, ஜாலியாக வாழ்வது என்றெல்லாம் இருக்கிறதே தவிர, அமைதியாக வாழ்வது, ஆரோக்கியமாக வாழ்வது, இனிமையாக வாழ்வது, மகிழ்ச்சியாக வாழ்வது என்பவை நோக்கமாக இருப்பதில்லை. அப்படி வாழ்வது எப்படி என்பதை இந்த ஐந்துநாள் பயிற்சியில் அறிந்து கொள்ளலாம்.
கே: இன்றைய மனிதனின் இத்தனை நோய்களுக்கு என்ன காரணம்? ப: தவறான பழக்க வழக்கங்கள், தவறான உணவு முறைகள் போன்ற பலவற்றைச் சொல்லலாம். மனிதனுக்கு நோய் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக மனது கெட்டால் நோய் வரும். புத்தி கெட்டாலும் நோய் வரும். நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகள் மூலமாகவும் நோய் வரலாம். உயிர்ச்சக்தி குறைவதால் வரலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களில் மாசு ஏற்படும்பொழுது மனிதர்களுக்கு நோய் வரலாம். நம் உடம்பிற்குள் தண்ணீர் போகிறது. மூச்சுக் காற்று போகிறது. உணவு போகிறது. கை, கால்களை அசைக்கிறோம், செயல்படுகிறோம். இவ்வளவுதான். ஆனால் இவற்றை சரியாகச் செய்யாதபோது, செய்ய முடியாதபோது அது நோயாக மாறுகிறது. இந்தக் காரணிகளில் ஏற்படும் தவறு காரணமாக உடல் பாதிக்கிறது. நோய் தாக்குகிறது. நாம் அவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நோய் குணமாகிறது.
கே: 'உணவே மருந்து' என்பது சரிதானா? ப: இல்லை. உணவு மட்டுமே மருந்தாக முடியாது. உணவோடு மூச்சு, தண்ணீர், தூக்கம், உழைப்பு, மனம் என்ற காரணிகளும் சேர்ந்தால்தான் மருந்தாகும். ஒழுங்காகச் சாப்பிடவேண்டும். ஒழுங்காகத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒழுங்காகத் தூங்க வேண்டும். நன்கு உழைக்க வேண்டும். ஒழுங்காக அதாவது முறையாக மூச்சு விட வேண்டும். இவற்றோடு மிக முக்கியமானது மனதை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது. இதை ஆறையும் எப்படி ஒழுங்காகச் செயல்படுத்துவது என்பதைத்தான் செவிவழி தொடுசிகிச்சை முறையில் சொல்லிக் கொடுத்து வருகிறேன். நீங்கள் ஒழுங்காகச் சாப்பிட்டு மனதளவில் எண்ணங்கள் சரியில்லை என்றால் நோய் வந்துவிடும். அதேபோல நன்கு சாப்பிட்டுவிட்டு காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் படுத்து உறங்கினாலும் நோய் வந்துவிடும். இந்த ஆறையும் ஒரு ஒழுங்கோடு நாம் பின்பற்றினால் நோய் வராது. நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
கே: உங்கள் வீடியோ பேட்டி ஒன்றில் நீரை மட்டுமே குடித்தும், காற்றை மட்டுமே சுவாசித்தும் மனிதன் உயிர் வாழ முடியும் என்று சொல்லியிருக்கிறீர்கள், இது சாத்தியம் தானா? ப: ஆமாம், சாத்தியம்தான். இப்பொழுதும் அப்படி வாழ முடியும்; வாழ்பவர்கள் இருக்கிறார்கள். முதலில் நமது உடலுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிராணன்தான் நமது உடலுக்குத் தேவை. நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, தூக்கம், பயிற்சிகள் எல்லாமே பிராணனாக மாறி அது நிலைத்திருக்க உதவி புரிகின்றன. அந்தப் 'பிராணன்' நேரடியாக நமக்குக் கிடைத்துவிடும் என்றால், அதை எப்படிப் பெறுவது என்ற சூட்சுமம் தெரிந்து விட்டதென்றால், உணவோ, நீரோ நமக்குத் தேவைப்படாது. ஆக பிராணன் என்றால் என்ன, அதை எப்படி நமது உடலுக்குள் சேமிப்பது, எப்படிச் செலவு செய்யாமல் பாதுகாப்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டால் நம்மால் உணவில்லாமல் நீரை மட்டும் குடித்தோ, குடிக்காமலோ, காற்றை மட்டும் சுவாசித்தோ, அல்லது அதுவும் இல்லாமலோ, தூங்காமலோ கூட உயிர் வாழ முடியும். இது முறையான பயிற்சிகளால் சாத்தியமாகக் கூடியதுதான். ஆனால் நடைமுறையில் எல்லா மனிதருக்கும் தேவைப்படாத ஒன்று. முதலில் நம் உடலில் இருக்கும் நோய்களைக் களைந்து ஆரோக்கியமாக வாழ்வதுதான் அடிப்படை. அது எல்கேஜி போன்றது. அந்தத் தகுதி வந்துவிட்டால், பின்னர் சாப்பிடாமலேயே ஆரோக்கியமாக இருக்கும் இந்த பிஹெச்டி படிப்புக்குப் போகலாம்.
கே: அப்படிப்பட்டவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? ப: நிறையப் பேரைச் சந்தித்திருக்கிறேன். தேங்காயை மட்டுமே உண்டு வாழும் ஒரு சித்தரைச் சந்தித்திருக்கிறேன். சமீபத்தில் கூட திருப்பதியில் ஒரு பாட்டியைச் சந்தித்தேன். அவருக்கு 60 வயது ஆகிறது. தினமும் 3 டம்ளர் மோர் மட்டுமே குடிக்கிறார், கடந்த 15 வருடங்களாக. வேறெந்த உணவும், பானமும் எடுத்துக் கொள்வதில்லை. சுறுசுறுப்பாக இருக்கிறார். ஆரோக்கியமாக இருக்கிறார். நம்மைப்போன்றே எல்லா வேலைகளையும் பார்க்கிறார். திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் ஒருவரது தாய் அவர். இது எப்படி சாத்தியம்? பிராண சக்திதான் காரணம். சித்த வித்தை தவாலயம் என்ற ஒன்று இருக்கிறது. உலகெங்கும் அதன் கிளைகள் உள்ளன. ஆனால் வெளிப்படையாக யாருக்கும் அது தெரியாது. விளம்பரமோ, நோட்டீஸோ கிடையாது. அந்த தவ ஆலயத்தில் தேர்ந்தெடுத்த ஒரு சிலருக்கு மட்டும் இந்த யோகப் பயிற்சி கற்றுத் தருகிறார்கள். நான் கடந்த எட்டு வருடங்களாக அந்தப் பயிற்சிக்குப் போய் வருகிறேன். உணவு உண்ணாமல் வாழ முடியும் என்பதை அந்தப் பயிற்சிக்குப் போனால் புரிந்துகொள்ள முடியும்.
கே: உங்கள் சிகிச்சை முறை குறித்து பிற மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? ப: நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை எந்த மருத்துவரும் இந்தப் பயிற்சியை தவறு என்றோ, குற்றம் என்றோ சொன்னதில்லை. அவரவர் வழியில் மருத்துவம் படித்து முடித்து வந்திருந்தாலும், நான் கூறும் முறைகளில் தவறோ, குற்றமோ சொல்ல முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். அவர்கள் தாங்கள் படித்த படிப்பை, அனுபவத்தைக் கொண்டு மருத்துவம் செய்கிறார்கள். அவ்வளவுதான். யாரும், யாரையும் ஏமாற்றவில்லை. நான் உண்மையைச் சொல்கிறேன். இதைத் தவறு யாரும் சொல்ல முடியாது. மற்றபடி உலகளாவிய நிலையில் எனக்கு மருத்துவர்கள் சப்போர்ட் செய்கிறார்கள். ஊக்குவிக்கிறார்கள். இல்லாவிட்டால் இத்தனை ஊர்களுக்குச் சென்று நான் நிகழ்ச்சி நடத்திவிட்டு வர முடியுமா? |
|
|
கே: உங்கள் பயிற்சிகளில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லுங்கள்... ப: ஆரம்ப காலத்தில் ஒரே ஒருவருக்காக ஒருநாள் முழுக்க வகுப்பு நடத்தியிருக்கிறேன். அது என்னால் மறக்கவே முடியாது. அதுபோல பொள்ளாச்சி அருகில் கிருஷ்ணாம்பாளையம் என்ற ஊரில் நிகழ்ச்சிக்கு யாருமே வரவில்லை. பல நிகழ்ச்சிகள் நடத்திய பின்னர்தான் படிப்படியாக கூட்டம் வரத் துவங்கியது. நான் உத்திரமேரூரில் பாலிடெக்னிக் முடித்தேன். செங்கல்பட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதனால் நானே பல ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்து, காசு செலவழித்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தேன். 500, 1000 என்று கூட்டம் வரும். அதைப் பார்த்து அங்கிருக்கும் என் நண்பர்கள் என்னைப் பார்த்து திகைக்க வேண்டும்; எங்கேயோ போயிட்டடா நீ என்று பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ரொம்ப கிராண்டாக அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் ஏழே ஏழு பார்வையாளர்கள்தான் வந்திருந்தனர். காரணம், எனது எண்ணம் தவறு. அதில் சுய லாபம் இருந்தது. மற்ற ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகள் இயல்பாக நடந்தன. ஆனால் இந்த நிகழ்ச்சி என் பெருமையைக் காட்ட நடந்தது. அதனால் அதன் விளைவு இப்படி ஆனது. இதில் இருந்து நான் பாடம் கற்றுக் கொண்டேன். நான், எனது என்ற எண்ணம் இல்லாமல், நாம் அறிந்ததை பிறருக்குத் தர வேண்டும், எந்த எதிர்பார்ப்பும், வணிக நோக்கமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படியே இன்று வரை செய்து வருகிறேன்.
எனக்கு காசு, பணமோ, பிற வசதிகளோ முக்கியம் இல்லை. மக்களுக்கு நான் சொல்லும் செய்தி போய்ச் சேர வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காகவே இன்றும் வாரத்திற்கு ஐந்துநாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். எந்த ஊருக்குப் பேச அழைக்கிறார்களோ அங்கு சென்று பேசுகிறேன். அது கட்டணம் உடையதா, இலவசமா என்பதை அந்தந்த அமைப்பாளர்கள்தான் தீர்மானிக்கின்றனர். எனக்கு மக்களிடம் இவை போய்ச் சேர வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. www.anatomictherapy.org என்ற என்னுடைய இணையதளத்தில் நான் பேசிய வீடியோக்கள், எழுதிய புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம். பல மொழிகளில் அவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. இன்னும் அதிக மக்களிடம் இவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காகவே தீவிரமாக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
கே: உங்கள் குருநாதர்கள் பற்றி... ப: ஹீலர் ரங்கராஜ் அவர்கள்தான் என் முதல் குரு. வேதாத்திரி மகரிஷி அவர்களும் என் குருநாதர்களில் ஒருவர். அவர்தான் கற்றது கை மண் அளவு, நான் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டிராமல், மற்ற ஆசிரமங்களுக்குச் சென்று பிற குருநாதர்களையும் பாருங்கள். என் தோள்மேல் ஏறிக் கொண்டு பாருங்கள். இன்னமும் நிறையத் தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னவர். பல ஆச்ரமங்களில் எங்கள் ஆச்ரம நூலைத் தவிர வேறு எதையும் படிக்கக் கூடாது என்று சொல்வார்கள். மகரிஷி வேதாத்திரி இதில் மாறுபட்டவராக இருந்தார். திருமணமும் செய்து கொண்டு, வேலைக்கும் போய்க்கொண்டு, குடும்பத்தையும் பராமரித்து, ஓய்வு நேரத்தில் தியானம், யோகம் செய்யுங்கள் என்று சொன்னவர் அவர். மகரிஷி சொன்ன 'இயற்கையோடு இயைந்த வாழ்வு' என்பது எனக்கு மிகவும் ஏற்புடையது. அதுபோல கோயங்காஜி, பகவத் ஐயா எனப் பலரும் எனது குருநாதர்கள்தான். அவர்களது கருத்துக்களை நான் பின்பற்றி வருகிறேன், பரப்பி வருகிறேன்.
கே: அமெரிக்காவில் நடத்த இருக்கும் நிகழ்ச்சியில் என்ன எதிர்பார்க்கலாம்? ப: உலகில் எந்த நாடுகளில் மக்கள் வாழ்ந்தாலும் மதம், மொழி, சூழல், கலாசாரம் என்பதுதான் மாறுமே தவிர மற்றவற்றில் மாற்றம் இருக்காது. பிரச்சனைகள், நோய்கள் என எல்லாம் ஒன்றுதான். ஆகவே அமெரிக்காவிலும் நான் பிற இடங்களில் என்ன பேசி வருகிறேனோ அதையேதான் பேச உள்ளேன். நான் முதன்முறையாக வருவதால் மற்ற விஷயங்களை அங்குள்ள சூழலை வைத்துத்தான் முடிவு செய்யவேண்டும்.
கே: எதிர்காலத் திட்டங்கள் குறித்து... ப: இன்னமும் விரிவாக, பல மொழிகள் பேசும் மக்களுக்கு செவிவழி தொடுசிகிச்சை முறையைக் கொண்டு சேர்க்க வேண்டும். அது தவிர நம் உடல் பற்றி தெளிவான, விளக்கமான வீடியோ மற்றும் புத்தகங்கள் எல்லா மொழிகளிலும் கொண்டுவர வேண்டும். அதை இலவசமாக எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அதுபோல மனம் பற்றி, புத்தி பற்றி, வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றியெல்லாம் விளக்கமான வீடியோக்கள் புத்தகங்கள் எல்லா மொழிகளிலும் கொண்டுவர வேண்டும். இவற்றை எல்லாருக்கும் கிடைக்க எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யும் திட்டம் உள்ளது. உலகம் நோயற்ற சமுதாயமாக மாறவேண்டும் என்பது என் விருப்பம். அதுபோல ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பல ஆண்டுகளாக உண்டு. அணு ஆயுத சக்தியால் உலகில் பல்வேறு அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் ஏற்படவும் கூடும். அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலகில் எந்த நாடும் அணுவை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்ற அணு ஆயுதத் தடைச்சட்டம் வலுப்பெற வேண்டும். உலகின் எல்லா அணு ஆயுதமும் என் கையால் அழிக்கப்பட வேண்டும். இந்த உலகத்தில் இனிமையும், அன்பும், அமைதியும், அழகும் நிலவ வேண்டும். இது என் விருப்பம், எண்ணம், எதிர்காலத் திட்டம் என்று சொல்லலாம்.
நம்பிக்கை ஹீலர் பாஸ்கரின் மூலதனம். அதை அவர் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறார். அதைப் பெற மக்கள் அவரைச் சுற்றித் தேனீக்கள் போல மொய்க்கிறார்கள். அவரது உலகு தழுவிய கனவுகள் நனவாகி வெற்றி பெற வாழ்த்துக் கூறி விடை பெற்றோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
"ஏம்பா, டாக்டர் வரலியா?" ஒருமுறை சென்னை திருவான்மியூரில் ஒரு அபார்ட்மெண்டில் பேச அழைத்திருந்தார்கள். சரி என்று போனேன். பட்டப்பகல் வெயிலில், நடு ரோடில் என்னைப் பேச வைத்தனர். வெயிலில் அமர்ந்து பார்வையாளர்கள் கேட்டனர். அதுபோல கிராமத்தில் ஒரு பெண்மணி பேச அழைத்திருந்தார். சரி, பெரிய கூட்டமாக இருக்கும் என்று நினைத்து நானும் போனேன். அவர் ஒரு ஓட்டு வீட்டில் பத்துப் பேரை அமர வைத்து பேசச் சொன்னார். நானும் பேசினேன். அதுபோல கல்யாண வீட்டில், காரிய வீட்டில் என்று பல இடங்களில் சென்று பேசியிருக்கிறேன். ஒருமுறை கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டி எழுந்து என்று, "ஏம்பா நீயே பேசிக்கிட்டு இருக்கியே ரொம்ப நேரமா, மருந்து மாத்திரை கொடுக்க டாக்டர் வரலியா?" என்று கேட்டார். மருந்து, மாத்திரையே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று விளக்கித்தான் பாட்டி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அவருக்குப் புரிய வைத்தேன்.
அதுபோல மலேசியாவில் வெண்ணிலா என்று ஒரு பெண்மணி இருக்கிறார். என்னை ஏர்போர்ட்டில் ரிசீவ் செய்வது, கார் ஓட்டுவது முதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது, புத்தகங்கள், சி.டி., டி.வி.டி. லோட்-அன்லோட் செய்வது, அவற்றை ஸ்டால் போட்டு விற்பனை செய்வது, நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்வது என்று அனைத்தையும் செய்வது அவர் ஒருவர்தான். இதுவரைக்கும் ஒரு 150, 200 நிகழ்ச்சிகளையாவது நடத்தியிருப்போம். அதுவும் ஒரு சமயம் 30 நாள் 30 நிகழ்ச்சிகள். ஒரு தனிப் பெண்ணாக அவர் எல்லாவற்றையும் சமாளித்தார். எல்லாவற்றிற்கும் அவரது ஆர்வமும் உழைப்பும்தான் காரணம். அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
- ஹீலர் பாஸ்கர்
*****
ஏமாறாதீர்கள்! என்னுடைய நோக்கம் உடல் ஆரோக்கியம், மன அமைதி, புத்தித் தெளிவு, ஆன்மீகச் சிந்தனை இதெல்லாம்தான். இவை எனக்குக் கிடைத்து விட்டன. பணம்தான் நமது வாழ்க்கை லட்சியமாக இருந்தால் நாம் போகும் பாதை தவறாகி விடும். நிம்மதி, அமைதி, சந்தோஷம் நமது வாழ்க்கையின் லட்சியமாக இருந்தால் நமது எண்ணங்கள் உருப்படும். நமது நோக்கம் சரியாக அமைந்தால் எண்ணமும் சரியாக அமையும். நோக்கம் தவறானால் எல்லாமே தவறாகி விடும். இதை மக்கள் புரிந்துகொண்டு நடந்தால் எப்போதும் வாழ்க்கை இன்பமானதாக, மகிழ்ச்சியானதாக, அமைதியானதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். மருந்தில்லா சிகிச்சை முறை பற்றிதான் நான் ஊர் ஊராகச் சென்று பேசிக் கொண்டு வருகிறேன். நான் மருந்தோ, பொடியோ, லேகியமோ விற்பனை செய்வதில்லை. அதற்காக யாரையும் நியமிக்கவில்லை. நன்கொடை பெறுவதற்காகவும் யாரையும் நியமிக்கவில்லை. ஆனால் என் பெயரைப் பயன்படுத்தி பல இடங்களில், பலர் பல பொருட்களை விற்பனை செய்வதாக எனக்குத் தகவல் வருகிறது. உலகளாவிய வாசகர்கள் படிக்கும் 'தென்றல்' மூலம் நான் வேண்டுகோள் விடுப்பதெல்லாம் யாரும் ஏமாற வேண்டாம், யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என்பதுதான். என்னை நீங்கள் நேரடியாக Anatomic Therapy இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம். பேசலாம். சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம். யாரிடமும் பணம் கொடுத்தோ, மருந்துப் பொருட்கள் வாங்கியோ ஏமாற வேண்டாம். இது எனது வேண்டுகோள்.
- ஹீலர் பாஸ்கர்
*****
ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் என்பது எப்போதும் நார்மலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அதிகமாகவோ, குறைவாகவோ, இயல்பாகவோ இருக்கலாம். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு ரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்திக் கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர நாம் அதைக் கண்ட்ரோல் செய்யக்கூடாது. நம் உடலுக்கு வேலை கொடுக்கும் பொழுது, அனைத்து செல்களும் வேலை செய்யும்பொழுது அனைத்து செல்களும் சாப்பிடும்பொழுது அல்லது செல்களுக்கு நோய் வரும்பொழுது தன் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கும் இயக்க சக்தி அளிப்பதற்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எப்பொழுது நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவின் தேவையில்லையோ அப்பொழுது அழுத்தம் குறைவாகும்.
ஆபரேஷன் செய்யும்போது BP அதிகரித்தால் ரத்தம் விரயமாகும் என்ற காரணத்தினால் அந்த சமயத்தில் BPயை ஒரு குறிப்பிட்ட அளவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அளவுதான் BP நார்மல். மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யும் பொழுது நோயாளிக்கு மருந்து மாத்திரை கொண்டு BPயை ஒரு குறிப்பிட்ட அளவில் வைத்துவிட்டுச் செய்தால் மட்டுமே ஆபரேஷன் நல்லபடியாக நடக்கும். ஆபரேஷன் செய்யும் பொழுதும், அவசர காலத்தின் பொழுதும் BPயை நார்மலாக வைத்திருந்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியுமென்பது உண்மை. ஆனால், மருத்துவமனைகளிலிருந்து வெளியே வந்த பிறகு நமக்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது. நம் BPயை யாரும் டெஸ்ட் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அது நார்மலாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
- ஹீலர் பாஸ்கர், 'அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை' நூலில்.
*****
www.anatomictherapy.org ஹீலர் பாஸ்கரின் வலைத்தளம் www.anatomictherapy.org. இதில் Anatomic Therapy சிகிச்சை பற்றிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் வீடியோ, புத்தகங்களை இலவசமாகப் பார்க்கலாம், பதிவிறக்கிக் கொள்ளலாம். கேள்வி-பதில்கள், சிகிச்சை முறைகள், சந்தேகங்கள் என எல்லா வீடியோக்களும் காணக் கிடைக்கின்றன. |
|
|
More
Dr. லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்
|
|
|
|
|
|
|
|