Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
மலர்வதி
ராணி ராமஸ்வாமி (பகுதி - 2)
- ஸ்னிக்தா வெங்கட்ரமணி, கிருத்திகா ராஜகோபாலன், மீனாட்சி கணபதி|ஜூன் 2013||(1 Comment)
Share:
நாட்டியமணியும் நடன குருவுமான ராணி ராமஸ்வாமி மின்னியாபொலீஸில் ராகமாலா டான்ஸ் கம்பெனியை (www.ragamala.net) 1992ல் தொடங்கி, பிறநாட்டு நடன, இசை வகைகளோடு இணைந்து செய்த புதுமைப் படைப்புகளில் அமெரிக்க ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2012ல் அதிபர் ஒபாமா இவரை தேசிய கலைகள் கவுன்சிலில் உறுப்பினராக நியமித்தார். சென்ற இதழில் தாம் எப்படி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமது திறனை மீள்கண்டுபிடித்து மேடையேறினார் என்பதையும், குரு அலர்மேல் வள்ளி அவர்கள் தந்த ஊக்கம் மற்றும் பயிற்சி குறித்தும் பல விவரங்களைச் சுவைபடக் கூறியிருந்தார். எண்ணற்ற விருதுகளும் நிதிநல்கைகளும் பெற்றுள்ள இவருடன் இந்தியக் கவின்கலைகளில் தமக்கென்று இடம்பிடித்த கிருத்திகா ராஜகோபாலனும், ஸ்னிக்தா வெங்கடரமணியும் தென்றலுக்காக உரையாடினார்கள். அதன் இறுதிப் பகுதி இதோ....

*****


ஸ்னிக்தா: அலர்மேல் வள்ளி மாதிரி ஒரு குரு கிடைச்சது உங்க பாக்கியம்தான், இல்லையா?
ராணி: வள்ளி மாதிரி ஒரு குரு கிடைச்சது பெரிய விஷயம். யாராவது என்கிட்ட வந்து 'நான்கூட ஆடியிருக்கலாம்' அப்படின்னு சொன்னா, நான் 'உங்களால முடியும். நீங்க எப்ப வேணா தொடங்கலாம்'ன்னு சொல்வேன். நான் ரொம்ப தாமதமா, 26வது வயசிலதான் ஆரம்பிச்சேன். சின்னவயசில கத்துக்கிட்டிருந்தாலும், பலபேர் வயசானப்பறம் வர சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவாங்களான்னு தெரியல. எனக்கு பூர்வ ஜன்ம புண்ணியத்துல நம்பிக்கை இருக்கு.

ஸ்னிக்தா: அமெரிக்காவில இப்ப நிறைய நடன ஆசிரியர்கள் இருக்காங்க. இதில பல பேருக்கு மேல என்ன பண்ணறதுன்னு தெரியல. ஸ்கூல் தொடங்கலாமா, நிகழ்ச்சிகள் கொடுக்கலாமா, தன்னார்வப் பணிகள்ள ஈடுபடலாமான்னு குழப்பத்தில இருக்காங்க. அவங்க இரண்டாவது தலைமுறை இந்திய அமெரிக்கர்களா இருக்கலாம் அல்லது, இந்தியாவிலேந்து சமீபத்துல வந்தவங்களா இருக்கலாம். அவங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?
ராணி: இந்தியாவில இப்ப நிறைய மாற்றங்கள். முன்னால சுஜாதா ஸ்ரீனிவாசன் மாதிரி, இந்தியாவில ஆடிப் புகழ் அடைஞ்சவங்க, இங்க வந்து நிறைய ஆடினாங்க. அவங்க இந்தியாவில முழு நேர டான்சர்ஸ். இங்கேயும் அதையே முழுநேரமா செஞ்சாங்க. ஆனா அங்கே இன்றைய இளைய தலைமுறையினர், கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளா, பேராசிரியர்களா இருக்காங்க. அதேசமயம் ஆடறதையும் நிறுத்த விரும்பலை. ரெண்டையும் செய்யறதுல தப்பில்லை. ஆனா இரண்டையும் நேர்த்தியா செய்யமுடியுமா? ஒரு அலுவலகத்தில 8 மணி நேரம் வேலை செஞ்சிட்டு வந்து, மாலை நேரத்தில நாட்டியம் கத்துக் கொடுக்கமுடியுமா? நான் அவங்க வேற எதுவும் பண்ணாம முழு நேரமும் நடனம் ஆடணும்னு சொல்லவரலை. அதேசமயம், செய்யறதைப் பொறுப்போட, தனக்குத் தெரிஞ்சதை, அடுத்த தலைமுறைக்கு முழுமையா சொல்லிக் குடுக்கணும்னு சொல்றேன். சிறந்த, புகழ் பெற்ற ஆசிரியர்கள் எங்களுக்கு அப்படித்தான் சொல்லிக்குடுத்தாங்க.

ராணி: இங்கயும் நிறையப் பேர் பகுதி நேரமாத்தான் செய்யறாங்க. அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு. யாரும் வேணும்னு செய்யறாங்கன்னு சொல்லவரலை. ஆனா உங்களுக்கு நேரமோ, அர்ப்பணிப்போ இல்லைன்னா அதைப் பண்ணாதீங்கன்னுதான் சொல்லவரேன். ஆனா ஒருத்தருக்கு சொல்லிக் கொடுத்தாக்கூட உங்களால இயன்ற அளவு நல்லபடியா சொல்லிக் கொடுங்க. இதுதான் நான் சொல்லவரது.
கிருத்திகா: நடனக் கலைஞர்களும், அமைப்புகளும் இதைக் கேட்கணும். நிறையபேர், மக்களுக்கு நாட்டியத்தைப் பத்தி ரொம்பத் தெரியாதுன்னு நினைக்கிறாங்க.

ராணி: நான் என்ன சொல்ல வந்தேன்னா, நிறையப் பெற்றோர்களுக்கு டான்ஸ் கம்பெனி தொடங்கறது, டான்ஸ் கத்துக் குடுக்கறது அல்லது இதையே முழுநேரத் தொழிலா செய்யறதைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. இதுக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் கூடப் பத்தாது. ஏதோ நிகழ்ச்சிக்கு முன்னால ஒரு மணிநேரம் பயிற்சி செய்ஞ்சுட்டு ஆடிடமுடியாது. நாங்க எல்லாரும், வாரத்துல 7 நாளும் காலைல தொடங்கி ராத்திரி 8 அல்லது 9 மணி வரைக்கும் ஆடிப் பழகணும். அதுமட்டுமில்லாம, புதுசா ஒரு ஐடியா வந்தா, அதுக்கு எப்படிச் செயல் வடிவம் கொடுக்கலாம்ங்கற சிந்தனை ஓடிக்கிட்டே இருக்கும். இது 24 மணிநேர வேலை.

ஆனா மக்கள் கலையை மேம்போக்கா எடுத்துக்கறாங்க. வெறும் நடனம்தானே. இதுக்கு என்ன இம்பார்டன்ஸ்னு நினைக்கிறாங்க. சில பெற்றோர்கள் ஒரு நிகழ்ச்சியை வடிவமைக்க எதுக்குப் பணம் தேவைன்னு கூடக் கேட்டிருக்காங்க. ஒரு புது நிகழ்ச்சிய வெற்றிகரமாப் பண்ண ஒவ்வொருத்தரும் எவ்வளவு வேலை செய்யறாங்கன்னு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதனால பெற்றோர்களாகட்டும், இங்க இருக்கற இந்தியர்களாகட்டும் டான்ஸ் கம்பெனிகளுக்கு ஆதரவு தேவைங்கறதைப் புரிஞ்சுக்கணும்.

இந்தியர்கள் இங்க வந்து குடியேறி, அதிக நாட்கள் இன்னும் ஆகலை. இரண்டாவது தலைமுறை இந்தியர்கள் இப்பத்தான் வரத்தொடங்கி இருக்காங்க. நல்ல வேலைகள்ல காலூன்ற முயற்சி செய்துட்டிருக்காங்க. அவங்க இந்தியா திரும்ப வேண்டிக்கூட இருக்கலாம். ஆரம்ப நிலைக் கம்பெனிகள், தொழில்முனைவோர் இவங்கள்ளாம் இங்க இந்தியக் கலைகளை, சின்னச் சின்ன நன்கொடைகள் கொடுத்து ஆதரிச்சா நல்லா இருக்கும். நம்ம கலைகளின் வளர்ச்சிக்கு அது உதவும். எல்லார் பார்வைக்கும் அதை எடுத்துட்டுப் போக முடியும். பாலே, மாடர்ன் ஜாஸ் இதையெல்லாம் விட இந்தக் கலை எந்த விதத்திலயும் தாழ்ந்ததில்ல. இந்தமாதிரி அற்புதமான கலை இங்க அழிஞ்சு போகாம இருக்க எல்லாரும் அதை ஆதரிக்கணும்.கிருத்திகா: உண்மைதான்.
ராணி: இதுல ஈடுபட்டிருக்கற நாங்க இதை ஒரு விளையாட்டா பண்ணலை அப்படீன்னு பெற்றோர்களுக்குச் சொல்லணும். இங்க ஏதோ 5 நிமிஷம் பயிற்சி பண்ணிட்டு வீட்டுக்குப் போய் விருந்து சாப்பிடறதில்ல. இது எங்களோட வாழ்க்கை. இங்க ஆடற எல்லாருமே ரொம்பவும் புத்திசாலிகள். நினைச்சிருந்தா வக்கீலா, இஞ்சினியரா வந்திருக்கலாம். அவங்க வித்தியாசமா இதைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. வேற மாதிரியான கலை, வாழ்க்கை முறை இவற்றைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அதனால பார்வையாளராவோ, கொடையாளியாவோ அல்லது விருப்ப ஊழியராவோ இணைந்து பலவிதத்துல உதவி செய்யலாம். இப்படி நிறைய சாய்ஸ் இருக்கு.

கிருத்திகா: இது தென்றல் வாசகர்களுக்கு நீங்க சொல்ற முக்கியமான கருத்துன்னு நினைக்கிறேன். இங்குள்ள இந்தியர்கள், பள்ளி, கல்லூரிகள்ள நல்ல மார்க் வாங்கலாம். அடுத்த மில்லியனர் ஆகலாம். ஆனா அந்தப் பணத்தை எதற்குப் பயன்படுத்தறாங்க அப்படீங்கறது முக்கியம்.

ஸ்னிக்தா: நேஷனல் கவுன்ஸில் ஃபார் ஆர்ட்ஸ்ல உங்களுக்கு எந்த மாதிரியான பொறுப்பு இருக்கும்னு சொல்ல முடியுமா?
ராணி: என்னோட பெயரை இப்பத்தான் தெரிவு செய்திருக்காங்க. செனட் சபையோட ஒப்புதலுக்குக் காத்துட்டிருக்கேன். அதுவரைக்கும் நான் எதுவும் சொல்ல விரும்பலை. நான் செனட் ஒப்புதல் எந்த அளவில் இருக்குன்னு கேட்டு எழுதியிருந்தேன். அதுக்கு இதுக்கெல்லாம் நேரம் எடுக்கும், காத்திருக்கணும்னு பதில் வந்தது. அதனால நான் காத்துக்கிட்டிருக்கேன்.

ஸ்னிக்தா: உங்களுக்குச் சாதகமான பதில் வரணும்னு பிரார்த்தனை செய்யறேன். இன்னொரு கேள்வி. இந்தியாவிலேந்து வந்து நிகழ்ச்சி பண்ணற பரதக் கலைஞர்களையும், இங்கயே இருக்கிற பரதக் கலைஞர்களையும் ஒப்பிட்டுப் பேசற மனோபாவம் மக்கள்கிட்ட இருக்கு. இந்தியாவிலேந்து வரவங்களை மக்கள் ஹீரோ வொர்ஷிப் பண்ணறாங்க. இங்கயே உங்கள மாதிரி நிறையப் பேர் இந்தத் துறையில நிறைய செய்திருக்காங்க. கலைஞர்கள் எங்கேருந்து வராங்க அப்படிங்கறது முக்கியமில்ல, என்ன சாதனை செய்திருக்காங்க அப்படிங்கறதுதான் முக்கியம். இதை எப்படி மக்களுக்குப் புரியவைக்கிறது.
ராணி: இது இந்தியாவுக்கே உரித்தான கலாசாரம். ஒருத்தர் புகழ் பெற்றவரா இருந்தா அவங்களை ஒரேயடியா உயரத்துல வைக்கறது அங்க இருக்கற பழக்கம். ஆனா இங்க அமெரிக்காவில அப்படி இல்ல. நானே கூட இங்க இருக்கற புகழ்பெற்ற பாலே நடனக்கலைஞர், நவீன நடனக்கலைஞர் அல்லது இசைக்கலைஞர், யார் வேணா இருக்கட்டும், 'வாவ்! இவ்வளவு பெரிய கலைஞர் என்கிட்ட பேசறார்' அப்படின்னு நினைச்சது கிடையாது. இது நம்ப மனோபாவம். இந்தியாவில கலைஞர்களை அப்படி மரியாதையோட நடத்தறதைப் பார்க்கும்போது ரொம்பவும் ஆச்சரியமா இருக்கு. அது இங்க இல்லைதான். இங்க எல்லாருமே சாதாரண மனிதர்கள்தான். இங்க நாம நிகழ்ச்சிகள் பண்ணறது நம்ம வேலைகள்ள ஒண்ணு அவ்வளவுதான். அதனால இந்தியாவில நடக்கற மாதிரி இங்க எப்பவும் நடக்காது. சரிதானே?

ஸ்னிக்தா: நீங்க சொல்லறதை நான் முழுசா ஒத்துக்கறேன்.
ராணி: இங்க நாம எல்லாரையும் போல இருக்கோம். நாமும் எல்லாரும் போற அதே கடைகளுக்குப் போறோம். ஆனா இந்தியாவில அப்படி இல்ல. ஒருத்தர் மேடையில ஏறி நிகழ்ச்சிகள் குடுக்கறாங்கன்னா, அவங்களுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்குது. மக்கள் அவங்களை ஆச்சரியமா பார்க்கிறாங்க. நான் அங்க போகும்போது யாரைப் பார்த்தாலும் ஆச்சரியப்படுவேன். இங்க அது இல்ல. அப்படி ஒரு காலம் இங்கே வருமான்னு தெரியல.
ஸ்னிக்தா: ஆமாம். சரியாச் சொன்னீங்க.
ராணி: கிருத்திகா, நான் சொல்லறதை ஒத்துக்கிறீங்களா?

கிருத்திகா: ஆமாம். ஒத்துக்கறேன். நாம இப்பத்தான் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கோம். சிகாகோவில நடந்த முதல் மாநாடு ஒண்ணுல நான் முடிவுரை சொல்ல எழுந்த போது உங்ககிட்ட 'நாம அமெரிக்காவில இருக்கோம். ஆனா இந்தியா போனா, கடவுளே! மீரா வெங்கட்ராமன் என்ன சொல்லுவாங்க, சுப்புடு மாமா என்ன சொல்லப் போறார், அவர் வரப்போறாரா, இவர் வரப்போறாரா, யாரையாவது அழைக்காம விட்டுறக்கூடாதே' அப்படீன்னு சொன்னது நினைவிருக்கு.
ராணி. ஆமாம்.

கிருத்திகா: நீங்க அதைச் சரியா சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன். அமெரிக்காவில இந்திய நடனக் கலைஞர்கள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைஞ்சுகிட்டிருக்கோம். தொடர்ந்து நம்மை வெளிப்படுத்தறத்துக்கான முயற்சிகள் செஞ்சிட்டிருக்கோம். இதுல இந்தியாவுக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லை. ஆனா, நீங்க இங்க பண்ற மாதிரியான கூட்டுமுயற்சிகள் பண்ண, இந்தியாவில இருக்கிற ஒருத்தருக்கு வாய்ப்புக்கள் இல்ல. நாம வளரும் நிலையிலேயே அந்த வாய்ப்புகள் நமக்குக் கிடைக்குது. சவால்களும் பிடிக்க வேண்டிய சிகரங்களும் ஒண்ணுதான். நம்ம நடனத்துல நமக்கு நல்ல அடித்தளம் இருந்தா, மத்த வகை நடனக்கலைஞர்களோட சேர்ந்து நிகழ்ச்சிகள் பண்ணும்போது நம்முடைய கலையை உயர்நிலைக்கு எடுத்துச் செல்வது ஒரு சுவாரஸ்யமான சவாலா இருக்கும். ஜீ.வி சந்திரசேகர், "என்னோட அடுத்த புதிய படைப்புக்கு நான் எப்பவும் கத்துக்கிட்டே இருக்கணும். அது எனக்கு இன்னிக்கு மட்டுமில்ல, நாளைக்கும் ஒரு சவாலாத்தான் இருக்கும்" அப்படீன்னு சொன்னார். இந்த மனோபாவம்தான், வள்ளி, மாளவிகா சருக்கை, கலாநிதி இவங்களைச் சிறந்த கலைஞர்களா உருவாக்கியிருக்கு. இதுதான் நம்முடைய ஆசிரியர்கள் நமக்குக் கொடுத்திருக்கிற சிறந்த கொடைன்னு நினைக்கிறேன்.
ராணி: ஆமாம்.

கிருத்திகா: நீங்களும் அதைத்தான் செய்யறீங்க. நீங்க சொன்ன மாதிரி இங்க வந்து ஒருத்தர் ஆடலாம், நாட்டியம் சொல்லிக் கொடுக்கலாம். ஆனா தன் கலையை அவங்க எப்படி கையாளப் போறாங்க அப்படீங்கறது பெரிய கேள்வி. நீங்க உங்களோட 1001 புத்தர்கள்பத்திச் சொன்னீங்க. அதில நிறைய கலைஞர்களை ஒன்று சேர்த்து 28 இந்து தெய்வங்களா நடனமாட வைச்சதா சொன்னீங்க. ஆனா அதுல இசைக்கலைஞர்கள், நடன அசைவுகள் உங்களோட உத்திகள் எல்லாமும் இருந்தது. அபர்ணாவும், நீங்களும் எப்படி இந்த நிகழ்ச்சியை வடிவமைச்சீங்க அப்படீன்னு எல்லாம் சொன்னீங்க.
ராணி: ஆமாம். '1001 Bhuddas: The journey of the Gods'

கிருத்திகா: அது உங்களோட மார்க்கத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்கிட்டதாலதான் சாத்தியம் ஆச்சு. இந்தியாவிலேந்து வரவரோ அல்லது இந்த மண்ணில பிறந்து வளர்ந்தவரோ யாரானாலும் அவங்களோட அடித்தளம் பலமானதா இருக்கணும். இந்தப் பயணத்துல முன்னேறத் தன் பாதையிலிருத்து மாறாத திடம் இருக்கணும். இதெல்லாம் இல்லாம ஒண்ணுமே பண்ண முடியாது. "நாளைக்கு நீ ஒரு அடவு பிடிக்கணும்னா, நீ அதை முழுசாச் சரியாப் பண்ணணும்" அப்படீன்னு தெளிவாச் சொன்னீங்க.
ராணி: ஆமாம்.

கிருத்திகா: என்கிட்ட நிறைய மாணவர்கள் ' நான் வர்ணம் கத்துக்கிட்டிருக்கேன். எனக்குப் பதம் தெரியும், தில்லானா தெரியும்' அப்படீன்னு சொல்லுவாங்க. நான் நாட்டடவு பண்ணுங்கன்னு சொன்னா அவங்களுக்குப் பண்ணத் தெரியாது. 'Oh! We don't do basic stuff' அப்படீன்னு சொல்லுவாங்க.
ராணி: ஆமாம். (சிரிக்கிறார்)

கிருத்திகா: இது தவிர, நம்ம கலையை இங்க உள்ளவங்களுக்குப் புரியும்படியா செய்யணும் அப்படீங்கற கவலை எனக்கு உண்டு. நாம எல்லாரும் அரசாங்கத்தோட நிதி உதவி பெற முயற்சி செய்யறோம். நீங்க N.E.A. கவுன்சிலுக்கு உறுப்பினர். இந்தக் கலைக்கு நிதி உதவி வாங்கித் தரது உங்க குறிக்கோளா இருக்கும். அதுக்கு இங்க இருக்கிற டான்சர்ஸ் உங்களுக்கு எந்த விதத்தில உதவி பண்ணமுடியும்னு நினைக்கிறீங்க? நம்மோட பாரம்பரிய நடனம், இசை, ஓவியம் இவற்றோட சிறப்பை அவங்களுக்குப் புரிய வைக்க என்ன செய்யப் போறீங்க?
ராணி: N.E.A குழு உறுப்பினர் அப்படீங்கற முறையில மட்டும்தான் இதுக்கு நான் பதில் சொல்ல முடியும். நான் முன்னாலயே சொன்ன மாதிரி அங்க எனக்கு என்ன பொறுப்புன்னு தெரியாது. ஒரு உறுப்பினரா நான் பார்த்தது என்னன்னா, நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியக் கலைஞர்கள் ரொம்பக் குறைவு. தவிர, நிதியுதவி சிறப்பான வேலை செய்திருந்தா மட்டுமே கிடைக்கும். ரொம்பக் குறைவான பேரே அந்த நிலையை எட்டியிருக்காங்க. நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கும் போதே, என்ன செய்திருக்கோம், என்ன செய்ய விரும்பறோம், குறிக்கோள் என்ன இதையெல்லாம் தெளிவா எழுதணும். சில சமயம் அவங்க எழுத்து சிறப்பா இருந்தாலும், அவங்களோட வேலை சிறப்பா இருக்கறதில்லை. ஒவ்வொரு இந்திய குழுவுக்கும், watching, looking, learning இது மூணும் முக்கியமான விஷயமா இருக்கணும் அப்படீன்னு நினைக்கிறேன்.

உங்க அம்மா எனக்கு முன்னாலேயே இங்க வந்துட்டாங்க. அவங்களும், விஜி ப்ரகாஷும் ஏற்கனவே இந்தியாவில ஆடிப் புகழடைஞ்சவங்க. நான் அவங்களை மட்டுமே பார்க்காம மற்றவகை நடனக் கலைஞர்களையும் பாத்தேன். ஜாஸ், பாலே, நவீன நடனம் இப்படி எல்லாவகை நடனக் கலைஞர்களையும் பாருங்க. அவங்களோட குறிக்கோள் என்னன்னு படியுங்க. எல்லாமே வலையில பதிவாயிருக்கு. அவங்க என்ன சாதிச்சிருக்காங்கன்னு பாருங்க. அவங்க எழுதியிருக்கறதைப் படியுங்க. அவங்க எப்படிக் கம்பெனி நடத்தறாங்கன்னு பாருங்க. இதுதான் நான் இந்திய நடனக் கலைஞர்களுக்குச் சொல்லறது.

பிரச்சனை என்னன்னா, அவங்களோட வட்டத்துக்கு வெளிய அவங்க பார்க்கறதில்ல. ஏன் நானேகூட வந்த புதுசுல உலகத்துலயே பரதநாட்டியம்தான் உயர்வான கலைன்னு நினைச்சதுண்டு. அது கிணத்துக்குள்ள இருக்கறதுக்கு சமமானது. இந்த உலகத்துல எத்தனையோ உன்னதமான கலைகள் இருக்கு, உன்னதமான கலைஞர்கள் இருக்காங்க. அவங்க எல்லாரையும் பார்த்து நிறையக் கத்துக்கமுடியும். அது முற்றிலும் புதிய உலகத்தை ஒருத்தருக்கு அடையாளம் காட்டும். இதையெல்லாம் பார்க்கலேன்னா, நிதியுதவி இருக்குன்னு கூட தெரியப் போறதில்ல. ஒப்பிட்டுப் பாருங்க.

சில விண்ணப்பங்கள்ள, அவங்க தர தகவல் சரியா இருக்கறதில்லை. ஆய்வுக்குழு உறுப்பினர்ங்கற முறையில நான் இதைச் சுட்டிக்காட்டுவேன். அதனால, இலக்கு பெரியதா இருக்கணும், செய்யறதை நல்லாச் செய்யுங்க அதுக்குமேல எதுவும் செய்யத் தேவையில்லை. இந்தக் குழு உறுப்பினரா இருக்கிறதால, இந்தியக் கலைஞர்கள் செய்யற வேலைகளைப் பத்தித் தெரிஞ்சுக்கற வாய்ப்பு கிடைக்குது. எனக்கு இது ரொம்ப சந்தோஷம் தர விஷயம். ஆனா, முன்னூறு விண்ணப்பம் வந்தா அதுல ரெண்டு அல்லது மூணுதான் இந்தியர்கள்கிட்ட இருந்து வருது. இந்த வாய்ப்புக்களைப் பெறத் தகுதியான நல்ல இந்தியக் கலைஞர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.

கிருத்திகா: நம்ம கலையைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர் வெள்ளை மாளிகைக்குச் சரியான தகவல்கள் கொடுப்பாங்க அப்படீங்கற எண்ணமே எனக்கு மகிழ்ச்சியைத் தருது.
ராணி: எனக்கு இது ரொம்பவும் கௌரவமான விஷயம். இந்தப் பதவி 2012 லேந்து 2018 வரைக்கும் இருக்கும்னு சொன்னாங்க. காலதாமதம் ஆனதால 2014லே இருந்து 2018 வரைக்கும் இருக்கும். நாம தனியா இருந்துகிட்டு நாங்க எல்லாரும் ஒரு கலாசாரத்தைச் சேர்ந்தவங்கன்னு சொல்லிக்க முடியாது. எல்லாரோடும் சேர்ந்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாடுபட்டு, நம்ம கலாசாரம் இந்த நாட்டுக்கு, இந்த சமுதாயத்துக்கு என்ன குடுக்க முடியும்னு காட்டணும்.

ஸ்னிக்தா: உங்களோட பேசினது எனக்கு நிறைய சாதிக்கற எண்ணத்தைக் கொடுக்குது. நான் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் ரெண்டுலயும் நிகழ்ச்சிகள் பண்ணறது சந்தோஷமா இருக்கு. எப்படி மேலும் சிறப்பா செய்து, இந்த சமூகத்துக்கு உதவலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். உங்களோடு பேசமுடிந்ததில் எங்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.

உரையாடல்: ஸ்னிக்தா வெங்கட்ரமணி, கிருத்திகா ராஜகோபாலன்
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


கிருத்திகா ராஜகோபாலன்: நாட்யா டான்ஸ் தியேட்டரின் இணை கலை இயக்குனரும், முக்கிய நடனமணியும் ஆவார். இவர் நடன வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதோடு 200க்கு மேல் தனி நடன நிகழ்ச்சிகளும் வழங்கியுள்ளார். நாட்யா நிறுவனர் குரு ஹேமா ராஜகோபாலன் அவர்களின் மகளும், மாணவியும்கூட. இவரைப்பற்றி அறிய

ஸ்னிக்தா வெங்கடரமணி: தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர், கர்நாடக இசைப் பாடகர், நடிகர் எனப் பல பெருமைகள் கொண்டவர். பத்மஸ்ரீ டாக்டர். சரோஜா வைத்யநாதன் அவர்களிடம் மிகச் சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றார். இந்தியன் கவுன்சில் ஆஃப் கல்சுரல் ரிலேஷன்ஸின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர் என்ற வகையில் பல நாடுகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். இவரைப்பற்றி அறிய
More

மலர்வதி
Share: 
© Copyright 2020 Tamilonline