Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஹீலர் பாஸ்கர்
Dr. லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்
- காந்தி சுந்தர், சி.கே. வெங்கட்ராமன், மீனாட்சி கணபதி|ஜூலை 2013||(1 Comment)
Share:
லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் முதன்மை மருத்துவ ஆய்வாளரும் பிரேத பரிசோதகருமான டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் சென்னை ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியின் பட்டதாரி. 1992ல் இந்தப் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். "ஒரு துறையில் சிறப்புக் கல்வி பெற்றாலே மிகப் பெரிய விஷயம். அப்படியிருக்க சத்யவாகீஸ்வரன் நோய்க்குறித் தடயவியல், உள்மருத்துவம், தொற்றுநோயியல், முதியோர் மருத்துவம் என்ற நான்கு துறைகளில் தகுதிகள் பெற்றிருக்கிறார்" என்கிறார் இவரைப்பற்றி முன்னாள் எல்.ஏ. கவுண்டியின் சீஃப் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீசரான ரிச்சர்ட் பி. டிக்ஸன். இவருடைய தலைமை இவருடைய அலுவலகத்துக்கு மிகுந்த கௌரவத்தைக் கொண்டு வந்ததாக LA Times போன்ற பத்திரிகைகள் எழுதியதுண்டு. பிரபல ஓ.ஜே. சிம்ப்ஸன் கொலை வழக்கில் இவர்தான் மருத்துவ ஆய்வாளராகச் சாட்சியம் கூறினார். பாப் இளவரசன் மைக்கல் ஜாக்ஸனின் பிரேதப் பரிசோதனை செய்த இவர், டீன் கார்ட்டர், ஃபில் ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குகளிலும் சாட்சியாக இருந்துள்ளார். பிறவற்றை அவரே சொல்லக் கேட்போம்....

*****


தென்றல்: உங்கள் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்கள்?
டாக்டர். லஷ்மணன்: அப்பா ராணுவ டாக்டர். பிரிகேடியர் ஜெனரல் ரேங்க். நாங்க இரண்டு குழந்தைகள். அம்மா ஜஸ்டிஸ் A.S.P. ஐயரோட மூத்த மகள். மெட்ராஸ் ஹைகோர்ட் ஜட்ஜா இருந்தவர். 28 புத்தகங்கள் எழுதியிருக்கார். ரொம்பப் பிரபலமான மனிதர். ICS ஆஃபீஸர். Fellow of the Royal Society of Literature of the United Kingdom. Barrister at Law. அப்பாவை அடிக்கடி வெவ்வேற ஊருக்கு மாத்திக்கிட்டே இருப்பாங்க. அதனால 1956லேருந்து நான் சென்னையில என் தாத்தா பாட்டி வீட்டில வளர்ந்தேன். தாத்தா பாட்டிக்கு 7 குழந்தைகள் இருந்தாலும், எல்லாரும் என்னை அவரோட கடைசி குழந்தையாத்தான் நடத்தினாங்க. என் மாமாக்கள், சித்திகள் எல்லார்கிட்டயும் ரொம்ப நெருக்கமா இருந்தேன். நான் சென்னையிலதான் படிச்சேன். அம்மா வந்து அடிக்கடி எங்களோட இருப்பாங்க. ஏன்னா ஃபீல்டு போஸ்டிங்னா அம்மாவைக் கூட்டிட்டுப் போகமுடியாது.

அம்மா அனாமிகா, என்ற பெயரில் இந்தியப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியிருக்காங்க. அவங்க கைரேகை நிபுணரும் கூட. இந்தியா மற்றும் வெளிநாட்டிலேர்ந்து எல்லாம் அவங்ககிட்ட ஜோசியம் கேட்க நிறையப் பேர் வருவாங்க. என்னோட சகோதரி ஜெயலக்ஷ்மி சந்தானமும் ஆஸ்ட்ரோ பாமிஸ்ட்தான். அவர் கணவர் கே. சந்தானம் ஃபிசிஸிஸ்ட். டாக்டர் அப்துல் கலாம், சந்திரசேகர், சந்தானம் மூணுபேரும்தான் அணுப்பிளவுப் பரிசோதனை நடத்தினாங்க. சில வருஷம் முன்னால அவருக்கு பத்மபூஷண் கிடைச்சது.

கேள்வி: ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி நாட்கள் பத்தி சொல்லுங்க.
பதில்: அங்கே எனக்கு சில நல்ல ஆசிரியர்கள் இருந்தாங்க. நான் ரொம்ப மதிக்கிற ஒருத்தர் டாக்டர். K.V. திருவேங்கடம். Internal Medicines துறைத் தலைவரா இருந்தார். கருணைமிக்க மனிதர். அதேபோல டாக்டர். ராமஸ்வாமி, அனாடமி பேராசிரியர். என்னோட தொழில்ல அவரோட தாக்கம் இருக்கு. அவர் பேரால குரல்வளையில (larynx) ராமஸ்வாமி கேங்லியன் (Ramaswami Ganglion) அப்படின்னு ஒரு நரம்புத்திரள். இருக்கு. நான் தடயவியல் (ஃபோரென்ஸிக்) துறைக்கு வர ஒருவகையில காரணமா இருந்தவர் டாக்டர் M.N. கணபதி. அவர்தான் பிரேதப் பரிசோதனையின் முக்கியத்துவம், அதனால மக்களுக்கு எப்படி உதவமுடியும் என்பதையெல்லாம் எனக்கு உணர்த்தினார்.கே: அமெரிக்காவுக்கு ஆரம்ப காலத்திலேயே வந்த மருத்துவர்கள்ள நீங்க ஒருத்தர். இங்க காலூன்றது கஷ்டமா இருந்ததா?
ப: 1972ல வந்தபோது நியூ யார்க்ல ஜூயிஷ் ஹாஸ்பிட்டல்ல இன்டர்ன்ஷிப் கிடைச்சது. அங்க டாக்டர் ஹார்வி சேஸ் சீஃபா இருந்தார். எதையும் நாமா அனுமானிக்கக் கூடாது, கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்டர்ன்ஷிப் முடிஞ்சப்புறம் St. Luke's hospital for Pathologyல டாக்டர் சார்லி பெக் கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். திறந்த மனத்தோட எதையும் பார்க்கணும், நமக்குத் தெரிஞ்சதை மத்தவங்களோட பகிர்ந்துக்கணும் அப்படின்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இல்லன்னா நம்மோடு நம்ம அறிவு போயிடும். நமக்கு ஒரு விஷயம் தெரியலன்னா, தெரியலன்னு சொல்லணுமே தவிர தப்பான தகவல் தரக்கூடாது அப்படிங்கறது அவர்கிட்ட கத்துக்கிட்ட இன்னொரு விஷயம்.

லாஸ் ஏஞ்சலஸுக்கு 77ல வந்தேன். 78ல திருமணம். என் மனைவி விஜயலக்ஷ்மி, குழந்தைநல மருத்துவர், தென்கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில இந்தத் துறையில அசோசியேட் புரொஃபசர். 'சிறந்த ஆசிரியர்' அவார்டு வாங்கியிருக்காங்க.

1977ல இங்கே நான் டாக்டர். தாமஸ் நொகூச்சிகிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அவர் சீஃப் கரோனர். அப்ப டாக்டர். வைஸ்லி மெடிக்கல் சீஃபா இருந்தார். வேலையில தப்புப் பண்ணினா நாம அதை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்கணும்ங்கற விஷயத்தை அவர் கத்துக் கொடுத்தார். அவர்கிட்டயிருந்து சம்பவ இட ஆய்வு (Scene investigation) கத்துக்கிட்டேன். டாக்டர். நொகூச்சி, வேற தேசத்து நோயியலாளர்களை (pathologist) அவங்க நாடு ஸ்பான்ஸர் செய்தா, இங்கே வந்து பயிற்சி எடுக்க வழிசெய்யற ஒரு திட்டத்தைத் தொடங்கினார். அதை நானும் என் பதவி காலத்துல தொடர்ந்து செய்தேன்.

அந்த சமயத்தில டாக்டர். சாய் இங்க இருந்தார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா நான் இந்தியன் அமெரிக்கன், சாய் கொரியன் அமெரிக்கர், எங்க சீஃப் ஜப்பானிய அமெரிக்கர். அதுதான் லாஸ் ஏஞ்சலஸோட சிறப்பு. என் மனைவி குழந்தை மருத்துவத்துல பயிற்சிக்காக நியூ யார்க் போனபோது ப்ரூக்லின், கம்பர்லாண்டில இருந்த டாக்டர் லைஷர் எனக்கு மெடிசின்ல ரெஸிடென்ஸி குடுத்தார். அதுக்கப்புறம் தொற்றுநோய் சிகிச்சைப் பயிற்சி நியூ யார்க்ல பண்ணினேன். அப்படித்தான் கிளினிகல் டிரெய்னிங் முடிச்சேன்.

1983ல திரும்பி லாஸ் ஏஞ்சலஸ் வந்து இந்த ஆஃபீஸ்ல திரும்பச் சேர்ந்தேன். இந்த வேலைக்கு இடையூறு வராம சொந்தமா பிராக்டிஸ் பண்ணலாம்னு சட்டம் இருந்ததால சில வருஷம் தொற்றுநோய் சிகிச்சை பண்ணிவந்தேன். அப்படித்தான் நிறைய டாக்டர்களோட தொடர்பு கிடைச்சது. நான் USC ல டாக்டர். லீடம் கூட பேதாலஜி வகுப்புகள் எடுத்திருக்கேன். அவரும் ஒரு தொற்றுநோய் நிபுணர்.

காந்தி: சரி. உங்க அம்மா உங்களோட எதிர்காலம் பத்தி ஏதாவது சொல்லியிருந்தாங்களா?
ப: அது சுவாரஸ்யமான விஷயம். 1956 வரையில யார் வேணா கரோனர் ஆகமுடியும்னு இருந்தது. அவர் மருத்துவரா இருக்கணும்னு அவசியம் இல்0ல. 1850ல பீட்டர் ஹாட்ஜர்ஸ் முதல் கரோனரா இருந்தார். அவர் ஒரு மருத்துவர், லாஸ் ஏஞ்சலஸ் மேயரும் கூட. 1950ல இந்த கவுண்டி மக்கள், கரோனர் ஒரு மருத்துவரா இருக்கணும்னு வாக்களிச்சாங்க. அதனாலதான் இந்த பதவிக்கு 'chief medical examiner-coroner' அப்படின்னு பெயர் வந்தது. ஆனா 1990ல இந்தத் துறையை இரண்டாப் பிரிச்சு, இயக்குனர், மெடிக்கல் எக்ஸாமினர் அப்படின்னு இரண்டு பதவிகளை உருவாக்கினாங்க. ஆரம்பத்தில, மூணு மாசம் நான் ஆக்டிங் சீஃபா இருந்தேன்.

அம்மா 1990ல எனக்கு 1992ல இந்தப் பதவி கிடைக்கும்னு சொன்னாங்க. அப்படியே கிடைச்சது. ஆனா ஜோசியம் ஒரு வேடிக்கையான விஷயம். ஏன்னா 5 சதவீதம் பேருக்குத்தான் பலிக்குது.

2012ல நான் இயக்குனர் பதவி ஓய்வு பெற்றதும், இரண்டு பதவியையும் இணைச்சாங்க. இப்ப போன ஒன்றரை வருஷமா நான் இரண்டு பதவியும் வகிக்கிறேன். இந்த மார்ச்சுல ஓய்வு பெற்றேன். ஆனா வேற ஒருத்தர் கிடைக்கிறவரை நான் வேலை செய்யணும்னு விரும்பினாங்க. என்னோட உத்தியோக வாழ்க்கையில ரொம்ப நல்ல நாள்னா மார்ச் 26, 2013ன்னு சொல்லணும். எங்க போர்டு ஒரு பாராட்டு விழா நடத்திச்சு. என்னோட மேலதிகாரிகள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. அது என்னைச் சந்தோஷத்துல திணறடிச்சது.. நாம யாரும் கவனிக்கறதில்லைன்னு நினைக்கிறோம். ஆனா கடின உழைப்புக்கு மதிப்பு இருக்கு. அது எனக்கும் என்னோட துறைக்கும், அதுல வேலை செய்யறவங்களுக்கும் கிடைச்ச அங்கீகாரம்னு நினைக்கிறேன்.

கே: நீங்க எப்படி எல்லாரோட நம்பிக்கையையும் சம்பாதிச்சீங்க?
ப: எல்லோரட நம்பிக்கையும் கிடைக்கணும்னா நாம ஒரு தப்புப் பண்ணினா அதை மறைக்காம, ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்கணும். பிறகு அதைச் சரி செய்யணும். ஒரு தவறை மூடி மறைச்சா, மேலும் எதையாவது மறைக்க வேண்டி வரும். தவறுகளே வராம இருக்கணும்னுதான் கடுமையா முயற்சி செய்யறோம். ஆனா, ஒரு வேலையும் செய்யாதவங்கதான் தவறே செய்யமாட்டாங்க. (சிரிக்கிறார்). நாளாவட்டத்தில இது அலுவலகத்தில உங்கள் மேல நம்பிக்கையை உண்டாக்கும்.கே: எந்த அடிப்படையில ஒரு கேஸ்ல மேல்விசாரணை செய்யணும்னு நீங்க சொல்வீங்க? அதுல உங்க உள்ளுணர்வோ அல்லது அனுபவமோ எந்த அளவு பங்கு வகிக்குது?
ப: பிரேதப் பரிசோதனைதான் விசாரணைக்கு அடிப்படை. ஒருத்தர் உங்ககிட்ட நடந்தது என்னன்னு சொல்லலாம். ஆனா பரிசோதனையில நாங்க கண்டுபிடிச்ச விஷயத்தோட ஒத்துப் போகலைன்னா அது வெறும் கதைதான். அவங்க கதையில எங்கயோ தப்பு இருக்குமே தவிர நாங்க கண்டுபிடிச்சதில தவறு கிடையாது. நாங்க அவங்க சொல்றதுக்கு ஏத்த மாதிரி எங்க கண்டுபிடிப்பை ஒத்துப்போக வைக்கிறதில்ல. அவங்க பொய் பேசறாங்கன்னு அர்த்தம். நாங்க அதை விசாரணை செய்யறோம்.

உதாரணமா, ஒரு குழந்தையைப் பத்தி சொல்றேன். நீங்க தொட்டில் குழந்தை மரணம் (sudden infant death syndrome) பத்தி கேள்விப்பட்டிருக்கலாம். மூணுலேயிருந்து ஆறு மாதமே ஆன குழந்தைகள் காரணமில்லாம திடீர்னு இறந்து போகும். பல வருஷம் முன்னால, அப்படி இறந்ததா ஒரு குழந்தையைக் கொண்டு வந்தாங்க. அதன் மார்புல ரத்தக் காயங்கள், கழுத்துக்குப் பின்னால கீறல்கள் இருந்ததை எங்க டாக்டர் பார்த்தாங்க. அவங்க ஒரு பெண் மருத்துவர். ஆனா மரணத்தைப் பத்தி சொன்னகதை ஒத்துப்போகல. எங்க விசாரணையில அந்தக் குழந்தை இருந்த குழந்தைகள் காப்பாகத்துல, கையில கொண்டுபோற தொட்டில் இருந்தது தெரியவந்தது. அதோட பக்கவாட்டுக் கம்பியில கோளாறு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். அது பத்துமாதக் குழந்தை. எழுந்து நிற்கிற வயது. அது அந்தக் கம்பியை அமுக்க, குழந்தையோட தலை அதுல மாட்டி அதனால மரணம் ஏற்பட்டது தெரியவந்தது. இதை நாங்க விசாரணையில கண்டுபிடிச்சோம்.

நான் என்ன சொல்ல வரேன்னா எங்கள் பரிசோதனையில் சரியான காரணம் தெரிய வரும். இறந்தவங்க சார்பா பேசறதுதான் எங்களோட குறிக்கோள். அவங்களைச் சுத்தி இருக்கறவங்க நல்லவங்களா இருக்கலாம். ஆனா மரணத்தில ஏதாவது சந்தேகத்துக்கிடமான விஷயம் இருந்தா அதைக் கண்டிப்பா விசாரணை செய்யணும்.

கே: அப்போ, நீங்க நோயாளிகிட்ட பேசாத ஒரு டாக்டர் இல்லையா?
ப: இல்லை. நாங்க நோயாளிகிட்ட பேசறோம். நாங்க நீதிமன்றங்களுக்குப் போகும்போது அதைத்தான் சொல்லறோம். ஒருத்தர் எவ்வளவு அடி வாங்கியிருக்கார்னு எங்களோட ஆய்வு முடிவு சொல்லும். முழுமையான பிரேதப் பரிசோதனை ரொம்ப முக்கியம். இங்க 25 மருத்துவர்கள், 50 புலனாய்வாளர்கள் இருக்காங்க. புலனாய்வாளர்கள், மருத்துப் பரிசோதகர்களுக்குக் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படறவங்க. அவங்க மரணம் நடந்த இடத்துக்குப் போய் தடயம் சேகரிப்பாங்க. நாங்களும் அவசியம் நேரும்போது போவோம். கரோனரோட பரிசோதனை அறிக்கைன்னு பார்த்தா அது வெறும் அறிக்கை மட்டுமில்ல, ஹிஸ்டரியும் கூட. எங்களோட டீ.வி. நிகழ்ச்சியின் பெயர் 'North Mission Road'. ரெண்டு சேனல்ல வருது. அதோட DVDகளும் விலைக்குக் கிடைக்கும். 50 எபிசோட் பண்ணியிருக்கோம். பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கு. நான் சாட்சி சொன்ன 2 கேஸ்கள் பத்தி 2 எபிசோட் பண்ணியிருக்கேன்.

போலிஸ் நாங்க கண்டுபிடிச்ச தடயங்களை வைத்து விசாரணை செய்வாங்க. அப்பறம் டிஸ்ட்ரிக்ட் அட்டர்னி வழக்குத் தொடர முடிவு செய்வார். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா நிறைய சிக்கலான வழக்குகள் வரதால 30க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆலோசகர்களா எங்க அலுவலகத்துக்கு வருவாங்க.

உதாரணமா ஒரு குழந்தை இறந்ததுன்னு வைச்சுப்போம். குழந்தைக்கு ஊட்டச்சத்து மிகவும் குறைவா இருந்திருக்கும். நியூரலாஜிகல் பிரச்சனைகள் இருந்தது பிரேதப் பரிசோதனையில தெரிய வந்திருக்கலாம். ஒரு குழந்தைநல மருத்துவர் வந்து பார்த்து குழந்தைக்கு நரம்பியல் பிரச்சனை இருந்திருந்தாலும், சரியான உணவு குடுத்திருந்தா, குழந்தை உடம்பு தேறி இருக்கலாம்னு சொல்லலாம். எங்களோட பரிசோதனைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இந்த நிபுணர்கள் உதவுகிறார்கள்.

அதேபோல ஒரு இதயநோய் மருத்துவரும் ஆலோசகர் குழுவில இருக்கார். அவருக்கு இங்கே என்ன வேலைன்னு ஆச்சரியப்படலாம். உதாரணமா, ஒரு இளம்பெண் மரத்துல கார் மோதி இறந்திருந்தாங்க. அவங்களுக்கு பிறவியிலேயே இருந்த இதய நோய்க்காக பேஸ் மேக்கர் பொருத்தியிருந்தாங்க. அது பழையமாடல் பேஸ் மேக்கர். அடிக்கடி போய் அதன் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அவங்க டாக்டரோட அப்பாய்ண்ட்மென்டைத் தவற விட்டிருக்காங்க. பேட்டரி சார்ஜ் ரொம்பக் குறைவா இருந்த காரணத்தால இறந்திருக்காங்கன்னு இதயநோய் நிபுணர் கண்டுபிடிச்சார். அந்தமாதிரி நேரங்கள்ள பிரேதப் பரிசோதனையில மட்டும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு நல்ல ஆலோசகர் கண்டுபிடிக்கமுடியும்.
கே: இப்ப தொழில்நுட்பம் ரொம்ப முன்னெறியிருக்கு. அது உங்க துறையில எப்படி உதவுது?
ப: சொல்றேன். 1989ல ஒரு இளம்பெண்ணும் அவள் பாய் ஃபிரண்டும் கார்ல்ஸ்டன் ஏரியாவுல டிரைவின்ல படம் பார்த்திட்டிருந்தாங்க. மூணுபேர் அவங்க காரைக் கடத்திட்டுப் போய் அந்தப் பையனை அடிச்சுப் போட்டுட்டு, அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போய், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு துப்பாக்கியால சுட்டுட்டாங்க. ஒரு தடயமும் கிடைக்கல. ஆனா எங்களுக்கு 3 குற்றவாளிகள் இருந்தாங்கன்னு தெரிஞ்சிருந்தது. இருபது வருஷம் ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல.

2004ல கலிஃபோர்னியால ஒரு புதுச் சட்டம் வந்தது. அதன்படி ஒவ்வொரு கைதிகிட்ட இருந்தும் தொண்டையிலிருந்து செல்கள் சேகரிப்பாங்க. மரபணுவை 2 வாரங்களுக்குள்ள எடுத்து அதை CODIS (Combined DNA Index System) அப்படீங்கற ஒரு மென்பொருள்ல பதிவு செய்யணும். நாம ஒருத்தரைத் தொடும்போது நம்மளோட டீ.என்.ஏ கொஞ்சம் அவங்கமேல ஒட்டும். அதேபோல அவங்க டீ.என்.ஏ.யும் நம்மகிட்ட ஒட்டிக்கும். அதனால ஒருத்தர் தாக்கப்படும்போது, அவங்கமேல தாக்கின நபரின் மரபணு இருக்கும். அதேபோல தாக்கப்பட்டவங்களோட மரபணுவும் தாக்கினவர்கிட்ட தங்கிடும். இது 'Locard's Exchange Principle'.

1989ல அந்தப் பெண் தாக்கப்பட்ட வழக்கில தடயங்கள் சேகரிச்சிருந்தோம். அதிபர்கள் புஷ், ஒபாமா ஆகியோர் ஆட்சிக் காலத்துல மத்திய நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவே, தீர்க்கப்படாத பழைய குற்றங்களை மறுவிசாரணை செய்ய நிதி கிடைச்சது. நாங்க அந்தப் பெண்ணிடம் சேகரித்திருந்த தடயங்களை 25 வருஷமா பத்திரப்படுத்தியிருந்தோம்.

அந்தப் பெண்ணை தாக்கின 3 பேரோட மரபணுக்களை CODIS பதிவு செய்து, அதோட ஒத்துப்போற மரபணு ஏதாவது இருக்கான்னு தேடினோம். 20 வருஷத்துக்கப்புறம் போலிஸ் அந்த 3 பேரையும் கைது செய்து. அதுல ஒருத்தர் ஏற்கனவே ஆயுள்தண்டனைக் கைதி. அவருக்கு மற்றுமொரு ஆயுள்தண்டனை வழங்கினாங்க. இரண்டாவது நபருக்கு குற்றம் நடந்தப்ப 15 வயதுதான் ஆகியிருந்தது. அதனால அவர்மேல வழக்குத் தொடர முடியல. மூன்றாவது நபர் மேல வழக்குத் தொடரப்பட்டது. நான் அவருக்கு எதிரா சாட்சி சொன்னேன். அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வந்திருந்த அந்தப் பெண்ணின் அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டு நன்றி சொன்னாங்க. அது ரொம்ப சந்தோஷமான, திருப்தியான கணம். தொழில்நுட்பம்தான் இதைச் சாத்தியமாக்கிச்சு.

இந்த மரபணு சேகரிக்கற முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்துல ஒரு குற்றவாளி வழக்குத் தொடர்ந்தார். ஏற்கனவே கைரேகை, ரத்தம் இவற்றை எடுக்கும் போது, இது ஒருத்தரோட அந்தரங்கத்தில ஊடுருவுவது அப்படீன்னு வழக்கு. நாங்க இந்தமாதிரி 5-6 பழைய குற்றங்களை இந்த முறையால சால்வ் பண்ணியிருந்தோம். எங்கே உச்சநீதிமன்றம் இந்த முறைக்கு எதிரா தீர்ப்பு வழங்கிடுமோன்னு கவலை இருந்தது. நல்லவேளையா, போன வாரம் இதுக்கு சாதகமா தீர்ப்பு வந்தது. இந்த முறையில இன்னொரு நல்ல விஷயம் என்னன்னா, தவறாகத் தண்டிக்கப்பட்டவங்களுக்கு விடுதலை கிடைக்கவும் இது வழிவகை செய்யுது. நான் குற்றவாளிகளைப் பிடிச்சதைப் பற்றி மட்டும்தான் உங்களுக்கு சொன்னேன்.

நமக்கு நல்ல பயிற்சி இருக்கணும், மிகக் கூர்ந்து கவனிக்கற திறன் இருக்கணும். அவசரமா முடிவுக்கு வரக்கூடாது. புதுசா வேலைக்கு வரவங்ககிட்ட, 'வாதாடாதீங்க.வழிமுறைகளைப் பின்பற்றுங்க' அப்படீன்னு சொல்வேன். வழிமுறைகள் உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆனா அதை கடைப்பிடிக்கலேன்னா எதுவும் செய்யமுடியாது.கே: நீங்க ஃபோரன்ஸிக் பேதாலஜி, உள் மருத்துவம், தொற்றுநோய் மருத்துவம், முதியோர் மருத்துவம் இப்படிப் பல துறை நிபுணர். இந்தப் பலதுறைப் பயிற்சி உங்களோட கரோனர் வேலைக்கு எப்படி உதவியா இருக்கு?
ப: என்னோட ஸ்பெஷாலிடி என்னன்னா நான் ஹாஸ்பிடல் போற கேஸ்லயும், தொற்றுநோய் கேஸ்லயும் டாக்டர்களுக்கு உதவியா இருக்கேன். நெடுங்காலத்துக்குப் பின்னால் மீண்டும் LA கவுண்டில வந்த ரெபீஸ் நோயைக் கண்டுபிடிச்சேன்.. அந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் கொண்ட கையேட்டை டிபார்ட்மெண்ட்டுக்காகத் தயாரிச்சு, சுகாதரம் மற்றும் பாதுகாப்புக் குழுவோட பகிர்ந்துகிட்டேன். தட்டம்மை நோய் ஒருசமயம் பரவியிருந்தது. சில வருஷம் முன்னால லிஸ்டீரியா தொற்றுநோய் பரவியிருந்தது. அது கெட்டுப்போன பாலாடைக்கட்டி (சீஸ்) மூலமா வர்ற நோய்.

எங்க அலுவலகத்துக்கு தினமும் புள்ளிவிவரங்கள் வரும். நாங்க அதைப் பொதுநலத்துறைக்கு அனுப்பி வைப்போம். அங்க தொற்றுநோயியல் நிபுணர்கள் (epidemiologist) அந்த புள்ளிவிவரங்களைப் பார்த்து ஏதாவது நோய் பரவிகிட்டிருக்கான்னு கண்டுபிடிப்பாங்க. எங்களுக்கு இதுல இரண்டு வேலை உண்டு. தெரியாத காரணங்களால பரவுகிற தொற்று நோயைக் கண்காணிக்கறது ஒண்ணு. ஏற்கனவே தெரிஞ்ச காரணங்களால பரவுகிற தொற்றுநோயைக் கண்காணிக்கறது இன்னொண்ணு. உதாரணமா தீவிரவாதத் தாக்குதலால வர தட்டம்மை, ஆந்த்ராக்ஸ் இதெல்லாம் தெரிஞ்ச காரணத்தால வர தொற்றுநோய். அந்த சமயத்துல பொதுநலத் துறையோட தொடர்பு இருந்தா பெரிய அளவுல நோய் பரவுதான்னு தெரிஞ்சுக்கமுடியும். ஏன்னா நிறையபேர் ஆஸ்பத்திரிக்கு அந்த நோய்களோட வருவாங்க. ஃபார்மஸிக்கு மருந்துச் சீட்டோட வருவாங்க. அதுலேர்ந்து நோய்த்தொற்று இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம். மென்பொருள் உதவியால அதைக் கண்டுபிடிக்கலாம். தொற்றுநோய் சிகிச்சையில எனக்கிருக்கிற அனுபவம் இங்க உதவியா இருக்கு.

எனக்கு மிகவும் ஆர்வம் இருக்கிற புதிய துறை 'clinical forensic medicine'. ஓய்வு பெற்றப்பறம் அதைப் பண்ணலாம்னு இருக்கேன். காயம் அடைந்த நிறையபேர் நல்ல சிகிச்சையினால குணமடையறாங்க. அந்த காயம்னு வந்தவுடனேயே அதை முறையா டாகுமெண்ட் செய்யணும். காயம் ஆறின பின்னால அது எதனால ஏற்பட்டதுன்னு சொல்லமுடியாது. 'clinical forensic medicine' மூலமா நாங்க அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களுக்கு injury pattern பத்திச் சொல்லிக்குடுக்க முடியும். உதாரணமா ஒரு பெண் கன்றிப்போன காயங்களோட வந்து, கீழே விழுந்துட்டேன்னு சொல்லுவாங்க. உண்மையில் கணவன் அடிச்சிருப்பார். கணவன் மனைவி தகராறுகள்ள அடிதடி நடக்கிறதுண்டு. எது விழுந்ததால வந்த காயம், எது அடி வாங்கின காயம்னு கண்டுபிடிக்க முடியணும். அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இதை கவனிக்கலைன்னா, அந்தப் பெண் அடிவாங்குவது தொடரும். இந்தத் துறையில இன்னும் முன்னேற்றம் வரணும். ஒரு சிலரே மட்டும் இதை செய்யறாங்க. கென்டகில இதுக்கான பயிற்சி குடுக்கறாங்கன்னு நினைக்கிறேன். நாங்க இப்பத்தான் USC யில முதல் பயிற்சி வகுப்பைத் தொடங்கி இருக்கோம்.

கே: இங்கே பலதரப்பட்ட பின்னணி கொண்டவர்கள் இருக்காங்க. அவங்ககூட உங்க அனுபவம் என்ன?
ப: இருக்காங்க. வெவ்வேற மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கறவங்க. பலபேர் பிரேதப் பரிசோதனை வேண்டாம்னு சொல்லுவாங்க. நான் கூடுமானவரை அவங்க கோரிக்கையை ஏற்க முயற்சிப்பேன். ஆனா இரண்டு விதமான சூழ்நிலைகள்ள ஒத்துக்கறதில்லை. தொற்று நோய் இருக்கலாம்னு சந்தேகம் இருந்தாலோ, ஏதாவது குற்றம் நடந்திருக்காலாம்னு சந்தேகம் இருந்தாலோ ஒத்துக்கறதில்லை.

எங்களுக்குச் சில நடைமுறைகள் இருக்கு. ஒரு சடலம் வந்தா, முதலாவதா, அவங்களோட அடையாளத்தை ஊர்ஜிதம் செய்யணும். அடுத்து அவங்களோட உறவினர்களுக்கு தெரியப்படுத்தணும். ஒருநாள்ல LA கவுண்டிக்கு 1 மில்லியன் பேர் வெளியிடத்திலேர்ந்து வராங்க. அவங்கள்ள யாராவது இறந்து போனா, அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தணும். அப்பறம் அவங்க உடமைகளைப் பத்திரப்படுத்தணும். அப்புறம் பிரேதப் பரிசோதனை, மரணத்துக்கான காரணம் இதெல்லாம் இருக்கு. எங்களோட அறிக்கை சேமிக்கப்படும். அதை எல்லாரும் பார்க்கலாம். மைக்கேல் ஜாக்ஸன் மரண அறிக்கையை யார் வேண்டுமானாலும் பணம் கட்டிப் பார்க்கலாம். நாங்களாக வெளியிடறதில்லை. கடைசியா சட்டம் சம்பந்தமான அறிக்கைகள் தயார் செய்யணும்.

கே: வாழ்க்கை, கடவுள் இதையெல்லாம் பற்றி உங்கள் எண்ணங்கள்....
ப: எனக்கு நேர்மையா வாழறது ரொம்ப முக்கியம். எது சரியோ அதைச் செய்யணும். நான் என்னோட மாணவர்கள்கிட்ட கடினமா உழைக்கச் சொல்வேன். கடின உழைப்பால யாரும் சாகறதில்லேன்னு சொல்வேன். பெரியவங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை தரணும். நான் தினமும் சிறிய பிரார்த்தனை செய்வேன். என் பெற்றோர்கள், என் ஆசிரியர்கள் இவங்களோட படம் எங்கிட்ட இருக்கு. தினம் காலைல சிறிது நேரம் அவங்களை நினைச்சுப்பேன். அவங்க எனக்கு செய்த உதவியை நினைச்சுப்பேன். ஏன்னா ஒவ்வொருத்தர் வாழ்க்கையில ஒவ்வொரு படியிலயும் யாராவது ஒருத்தர் தூக்கி விட்டிருப்பாங்க. யாராவது உதவி பெறத் தகுதியானவங்கன்னா அவங்களுக்கு உதவி செய்யணும். என் மனைவிதான் உதவுவதில் தாராளமானவர். "ஒருவேளை நான் சொர்க்கத்துக்கு எதிர்ப்பக்கம் போய்ச் சேர நேர்ந்தால் உன்னுடைய புடவை நுனியைப் பிடித்துக்கொண்டு நான் தப்பித்து வருவேன்" என்று நான் சொல்வதுண்டு. (சிரிக்கிறார்).

கே: உங்களோட பொழுது போக்குகள் என்ன?
ப: பயணம் செய்யப் பிடிக்கும். சினிமா பார்க்கப் பிடிக்கும். தபால்தலை, நாணயம் சேகரிப்பேன். எனக்கு ஒரு பெண் மட்டுந்தான். அவங்க ஒரு Neonatologist. டான்ஸரும்கூட. என்னோட மருமகன் இரைப்பைக் குடல்நோய் நிபுணர் (கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்).

கே: நீங்க இரண்டு பெரிய ரயில் விபத்துக்களை விசாரணை பண்ணியிருக்கீங்க? விபத்துத் தடுப்பு வழிமுறைகளில உங்கள் பங்களிப்பு என்ன?
ப: இந்த மாதிரி விபத்துன்னா பல ஏஜன்ஸிகள் விசாரணை செய்வாங்க. தேசீயப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் இதுல விசாரணை நடத்துவாங்க. அவங்க எங்களோட பிரேதப் பரிசோதனை அறிக்கையை எடுத்து, அதிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகளை பரிந்துரை செய்யறாங்க. அதனால நாங்க நுணுகி ஆராய வேண்டிய அவசியம் இருக்கு. ஹோம்லாண்ட் செக்யூரிட்டி கிராண்ட்ஸ்ல எங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கினாங்க. நாங்க 'Special Operations Response Team' ஒண்ணு உருவாக்கினோம். அவங்க எந்த சூழ்நிலையிலயும் போய் தடயம் சேகரிக்கலாம்.

உதாரணமா, 1986ல நடந்த செரிடோஸ் விமான விபத்துல எங்களால 13 சடலங்களை அடையாளம் காண முடியல. அங்கே ஒரு பெரிய விமானம், இன்னொரு சிறிய விமானத்துல மோதி நொறுங்கி விழுந்தது. பெரிய விமானத்துல இருந்த 62 பேரும், சின்ன விமானத்துல 3 பேரும் இறந்து போனாங்க. விழுந்த இடத்தில ஒரு விருந்து நடந்துகிட்டிருந்தது. அதனால தரையில இருந்த 15 பேரும் இறந்து போனாங்க. அடையாளம் காண முடியாத 13 பேரையும் நீதிபதி இறந்துட்டதா அறிவிக்க வேண்டியிருந்தது.
ஆனா இப்ப எலக்ட்ரானிக் கைரேகைகள், மரபணு பரிசோதனை இவற்றால நாங்க எல்லா சடலங்களையும் அடையாளம் காணமுடியும். எங்ககிட்ட 'Mobile finger-print technique' இருக்கு. ஆனா பாதுகாப்புப் பரிந்துரைகளை ஏஜன்ஸிதான் செய்யும். விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, ஓட்டியின் தவறா, கருவிகளின் கோளாறால ஏற்பட்ட விபத்தா அப்படீன்னு பார்த்து பரிந்துரை செய்யறாங்க. விபத்தா, தீவிரவாதி தாக்குதலான்னு கண்டு பிடிக்கறதுல நாங்க உதவி செய்வோம்.

பல விஷயங்கள் பார்த்த உடனே தெரியாது. ஆனா விசாரணை முடிஞ்ச உடனே நாங்க ஒரு குழுவாக, எல்லா விவரங்களையும் பட்டியலிட்டு ஆராய்வோம். தவிர நச்சுப் பொருளுக்கான (toxicology) ஆராய்ச்சியும் செய்வோம். சுற்றுசூழல் காரணங்களும் இருக்கலாம். இவை சுலபமான விஷயம் இல்லை. அதனாலதான் இந்த விசாரணைகளுக்கு அதிக நாட்கள் எடுக்குது. நியூ யார்க் லாங் ஐலண்ட்கிட்ட நடந்த TWA 800 விமான விபத்துல விசாரணை முடிவு வெளியிடப் பல வருஷங்கள் வரை ஆச்சு. ஏன்னா அவங்க முழு விமானத்தையும் மறு கட்டுமானம் செய்யவேண்டியிருந்தது.

கே: எந்த மாதிரியான சினிமா உங்களுக்குப் பிடிக்கும்?
ப: I love Movies. லாஸ் ஏஞ்சலஸ் வந்ததுக்கு ஒரு காரணம் படங்களை ரிலீஸான நாளே பார்க்க முடியும் என்பதுதான். இந்த தந்தையர் தினத்துக்கு, என் மகள் என்னை 'Man of Steel' படத்துக்கு முதல்நாளே கூட்டிட்டுப் போனா.

கே: உங்க தாத்தா எழுதின புத்தகங்கள் உங்ககிட்ட இருக்கா?
ப: ஆமாம். எல்லாம் இங்க எங்கிட்ட இருக்கு. அவர் எழுதினதுல பிரபலமான புத்தகம் '25 years as Civilian', பகவத்கீதை இரண்டு வால்யூம் எழுதினார். அப்புறம் 'தெனாலி ராமன் கதைகள்'. அதைப் படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'Indian in Western Europe' அப்படீன்னு ஒரு மிக நல்ல புத்தகம் எழுதியிருக்கார். நிறைய எழுதியிருக்கார். 'Rambles in Literature' மிக அருமையான புத்தகம். அவர் மஹாத்மா காந்திகிட்ட நெருக்கமா இருந்தார்.

என்னோட இரண்டு அங்கிள்ஸ் பத்தி சொல்லியிருக்கேன். ஒருத்தர் B.R.L. லக்ஷ்மிநாராயணன். ரொம்பநாள் முன்னால இந்திரா காந்தி ஊழல் குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்டபோது அவர்தான் சி.பி.ஐ. இயக்குனரா இருந்தார். இன்னொருத்தர் A.P. வெங்கடேஸ்வரன். ராஜீவ் காந்தி பிரதமரா இருந்தபோது இந்திய வெளியுறவுத்துறைச் செயலரா இருந்தவர். என் மகள் டாக்டர். அஷ்வினி நியோ-நேடாலஜிஸ்ட். மருமகன் டாக்டர். வினய் சுந்தரம் ஜீரணமண்டல இயல் நிபுணர். லிவர் டிரான்ஸ்ப்ளாண்ட் சிறப்பு மருத்துவர்.

கே: உங்க ஊர் பாலக்காடு தானே?
ப: ஆமாம். என்னோட சொந்த ஊர் வாடணம்குரிசி. என்னோட முழுப் பெயர் வாடணம்குரிசி சத்யவாகீஸ்வர லஷ்மணன் பரத்வாஜ். அமெரிக்கா வந்தப்பறம் சத்தியவாகீஸ்வரன் என்னோட கடைசி பெயராயிடுச்சு. சத்யவாகீஸ்வரன் அப்பாவின் பெயர். 'உண்மையே பேசற மனிதன்' அப்படீன்னு அர்த்தம். ரொம்ப நல்ல மனிதர். 62ல சீனாகூட நடந்த சண்டையின் போது சென்னை மாதிரி தரைமட்ட ஊர்கள்ளேயிருந்து, 14000 அடி உயரத்தில இருக்கும் லடாக்குக்கு திடீர்னு போன ஜவான்கள் நிறைய பேர் மலைநோயால் பாதிக்கப்பட்டாங்க. மறுநாளே இறந்து போவாங்க. தானே பலரை ஹெலிகாப்டர்ல ஏத்தி சமதளத்துக்கு அனுப்பி வைப்பார்.

கே: உண்மையில பாத்தா, நீங்க இறந்தவர்களுக்கு ஒரு முக்கியமான சேவை செய்யறீங்க....
ப: ஆமாம். என் ஆஃபீஸுக்கு யார் வேணா வரலாம். திடீர்னு இறந்தவங்களோட, தற்கொலை செய்து கொண்டவங்களோட குடும்பங்கள் எங்க வழிமுறைகளை எதிர்ப்பாங்க. LA கவுண்டில ஒரு வருஷத்துக்கு 800 தற்கொலைகள் நடக்குது. இறந்தவரைச் சேர்ந்தவங்க, அதாவது நண்பர்கள், குடும்பத்தினர், அண்டைவீட்டுக்காரர்கள், சக ஊழியர்கள் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னா, எங்க குழு, அவங்ககிட்ட பேசி இறந்தவரோட மனநிலையை அனுமானிக்க முயற்சிக்கும். எங்க அலுவலகத்துக்கு ஆலோசகர்களா வருகிற 3 மனநலமருத்துவர்களும் அந்தக் குழுவில இருப்பாங்க. நாங்க இதை 'psychological autopsy' அப்படீன்னு சொல்வோம். இதில் மனநலமருத்துவர்கள் மனநிலை சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பாங்க. இரண்டு கண்டுபிடிப்புகளும் ஒத்துப்போகலைன்னா, நாங்க ரகசிய ஆலோசனை செய்வோம்.

தற்கொலை செய்து கொண்டவர்களோட குடும்பங்கள் என்னை சந்திக்க விரும்புவாங்க. நான் சந்திச்சு அவங்களுக்கு ஆறுதல் தர முயற்சிப்பேன். இதுல நிறைய இந்தியர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் இப்படி எல்லாரையும் சந்திக்கிறதுண்டு. சோகசம்பவம் எல்லா இடத்திலும் நடக்குது. அதுக்கு வரையறை கிடையாது. நான் கொஞ்சம் சிக்கனமாவன். ஆனா, நான் எல்லார்கிட்டயும் உங்களால முடிஞ்ச அளவு தர்மம் செய்யுங்க, போகும்போது யாரும் எதையும் எடுத்துட்டுப் போகப் போறதில்லை அப்படீன்னு சொல்லறதுண்டு.

கே: உண்மைதான். இந்த வேலை உங்க தத்துவ நாட்டத்தைக் கூட்டியிருக்கா, குறைச்சிருக்கா?
ப: எனக்குத் தத்துவ ஈடுபாடு உண்டு. ஆனா நான் சிக்கனப் பேர்வழியும் கூட. நான் என் வீட்டில நிறையப் பொருட்களை வைத்திருக்கேன். அதனால என் மனைவி என்னை 'pack rat' அப்படீன்னு சொல்வார். நிறைய ஆவணங்கள் என்கிட்ட இருக்கு. ஒரு ஞாபகத்துக்கு வைத்திருக்கேன். எல்லார்கிட்டயும் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. துரதிருஷ்டவசமா நாம கெட்ட விஷயங்களையே பெரிதுபடுத்திப் பார்க்கிறோம். நல்ல விஷயங்களைப் பார்த்தோமானா அவங்ககிட்ட இருந்து கத்துக்கமுடியும்.

கே: இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை....
ப: 'Do what is right and sleep well at night' (எது சரியோ அதையே செய்யுங்க, ராத்திரி நிம்மதியாத் தூங்குங்க). நேர்மை, கடின உழைப்பு இரண்டும் மிக முக்கியம்.

உரையாடல்: காந்தி சுந்தர், சி.கே. வெங்கட்ராமன்
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


புகைபோக்கியில் எலும்புக்கூடு!
ஒருதடவை சில குழந்தைகள் ஒரு வீட்டுப் பக்கத்தில விளையாடிட்டிருந்தாங்க. அப்ப பந்து அந்த பாழடைந்த வீட்டுல விழுந்துடுச்சு. அவங்க அப்பா அதை எடுக்கச் போனபோது புகைபோக்கில ஒரு எலும்புக்கூடு இருக்கறதைக் கண்டுபிடிச்சார். எங்களால அது யாருடையதுன்னு கண்டுபிடிக்க முடியல. ஒரு மானுடவியல் நிபுணர் அது ஒரு இளைஞரின் எலும்புக்கூடுன்னு சொன்னார். நாங்க facial reconstruction நிபுணரைக் கூப்பிட்டு மண்டை ஓட்டை வைத்து முகத்தை வடிவமைக்கச் சொன்னோம். அவர் முகத்தை கன்ஸ்ட்ரக்ட் செய்து கொடுத்தார். அதை நாங்க பேப்பர்ல பிரசுரிச்சோம். இது நடந்தது 2005ம் வருஷம். அதைப் பார்த்துட்டு ஒரே வாரத்தில ஒருத்தர் கூப்பிட்டு இது 1977ல காணாமப் போன என்னோட உறவினர் மாதிரி இருக்குன்னு சொன்னார். 28 வருஷமா அவர் காணாமப் போயிருந்தார். கிறிஸ்துமஸுக்கு அவரோட அம்மா சைக்கிள் வாங்கித்தர மாட்டேன்னு சொன்னதால வீட்டை விட்டுப் போனவர் அவர். நாங்க அவங்க அம்மா எங்க இருக்காங்கன்னு விசாரிச்சு அவங்களோட தொடர்பு கொண்டோம். அவங்களோட DNA சாம்பிள் எடுத்தோம். எலும்புக் கூட்டிலிருந்தும் சாம்பிள் எடுத்து மரபணு சோதனை நடத்தி அது அவங்க பையன்தான்னு உறுதி செய்தோம். அவங்க அம்மாகிட்ட அந்தப் பையனோட படம் இருந்தது. ஆனா இறுதிச் சடங்குக்கு அந்தப் படத்தை உபயோகிக்காம நாங்க ரீகன்ஸ்ட்ரக்ட் செய்த படத்தைத்தான் உபயோகிச்சாங்க.

- டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்

*****


தடங்களே தடயங்கள்
இன்னும் ஒரு நல்ல தொழில்நுட்பம் Tool Mark. பல வருஷங்கள் முன்னால ஒரு குழந்தை கொடூரமா கொல்லப்பட்டிருந்தது. அந்த குழந்தை இடுக்கி மாதிரியான ஒரு ஆயுதத்தால தாக்கப்பட்ட அடையாளம் உடம்புல இருந்தது. உடம்புக் காயங்களைப் படம் எடுத்து வைக்கறதும் எங்க வேலை. தவிர அந்தக் காயத்தோட சிலிக்கான் பதிவும் எடுத்து வைப்போம். பின்னால அந்த ஆயுதம் கிடைச்சா, அந்த பதிவில் அந்த ஆயுதத்தின் பற்களைப் பொருத்திப் பார்ப்போம். ஒரே மாதிரி ஆயுதம் பல இருக்கலாம். ஆனா ஒரு ஆயுதத்தை உபயோகிக்கும்போது அதன் பற்கள்ல தேய்மானம் ஏற்படும். அந்தத் தேய்மானம் ஒவ்வொரு ஆயுதத்துலயும் வித்தியாசமா இருக்கும். அதை வைச்சு நாங்க குற்றவாளியைப் பிடிச்சோம்.

நாங்க நீதிமன்றத்துல அந்தக்காயம் அந்த குற்றவாளியோட வீட்டிலேருந்து கண்டுபிடிக்கப்பட்ட இடுக்கியால் ஏற்பட்டதுன்னு நிரூபிக்க வேண்டியிருந்தது. எங்க அலுவலகத்தில இருந்த scanning electron microscope உதவியால நாங்க அந்த ஆயுதத்தில சில பற்கள், அந்த குழந்தை உடம்புல இருந்த காயத் தடங்களோட ஒத்துப் போச்சுன்னு நிரூபிச்சோம்.

- டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்
More

ஹீலர் பாஸ்கர்
Share: 
© Copyright 2020 Tamilonline