சுதா சந்திரசேகர்
|
|
|
|
|
பேராசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், நடிகர், நாடக ஆசிரியர் என்று தேவைக்கேற்ப அவதாரம் எடுக்கும் திறமை கொண்டவர் டாக்டர் கு.ஞானசம்பந்தன். தமிழக அரசின் 'கலைமாமணி', அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் 'உவகைப் புலவர்', இளைய கலைவாணர், நகைச்சுவை அரசர், நகைச்சுவைத் தென்றல் உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். பத்துக்கும் மேற்பட்ட முனைவர்களையும், ஐம்பத்தைந்துக்கு மேற்பட்ட எம்.ஃபில். பட்டதாரிகளையும் உருவாக்கியவர். பலரின் ஆய்வுக்கு வழிகாட்டி. 'வாங்க சிரிக்கலாம்', 'பரபரப்பு-சிரிசிரிப்பு', 'பேசும் கலை', 'உலகம் உங்கள் கையில்', 'இன்றைய சிந்தனை', 'வாழ்வியல் நகைச்சுவை', 'சினிமாவுக்குப் போகலாம் வாங்க', 'கல்லூரி அதிசயங்கள்', 'இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்', 'ஜெயிக்கப் போவது நீதான்', 'ஜெயிக்கலாம் வாங்க' எனப் பலநூல்களின் ஆசிரியர். நா. மம்மது, தமிழ்நாடு அறக்கட்டளையின் சி. பால்பாண்டியன் ஆகியோருடன் ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழிசைப் பேரகராதியை உருவாக்கியவர். இன்றைக்கு ஊடகங்களில் 'அசத்தி'யும் 'கலக்கி'யும் கொண்டிருக்கும் பலருக்கு மூல ஊற்று. சாரல் தூறிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் பேரா. கு. ஞானசம்பந்தனை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்தோம். அருவியாய்ப் பொழிந்த அவரது உரையாடலிலிருந்து...
*****
கே: உங்கள் சிறு வயது நினைவுகள் என்ன? ப: சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். புகழ்பெற்ற தமிழ்ப் புலவரான அரசன் சண்முகனார், திரையிசையில் சாதனை படைத்த மேதை எஸ்.வி. வெங்கட்ராமன், தற்கால அரசியல் மேதை சுப்ரமண்யம் சுவாமி போன்றோரின் சொந்த ஊர். அந்த ஊரில்தான் எனது பள்ளிப்பருவம் கழிந்தது. தந்தை குருநாதன் தமிழாசிரியர். மிகவும் கட்டுப்பாடானவர். தமிழிலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். சிறந்த சொற்பொழிவாளர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் படித்தவர். தன் குருநாதரான திரு. நாராயணையங்காரின் போட்டோவை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டவர். திருவள்ளுவர் கழகம், திருமுறைக் கழகம் போன்ற அமைப்புகள் மூலம் தமிழ்ப் பணி, சமயப் பணி செய்தவர்.
கே: சம்பந்தரின் பெயர் கொண்ட நீங்கள் நாவுக்கரசராக விளங்குகிறீர்கள், அல்லவா? ப: அந்தப் பெயர் வந்ததற்கு ஒரு கதை உண்டு. எனக்கு நான்கு சகோதரிகள். அவங்களுக்கு தினந்தோறும் தேவாரப் பாடம் நடக்கும். நான் பக்கத்தில உக்காந்து கேட்டுக்கிட்டிருப்பேன். ஒருமுறை எங்க ஊர்ல நடந்த ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க நாகர்கோவில்ல இருந்து ஒரு மடாதிபதி வந்திருந்தார். அன்றைக்கு ஓதுவார் வராததால் எங்கப்பா நாலு வயதான என்னை கடவுள் வாழ்த்துப் பாட மேடையேத்திட்டாரு. பயமில்லாம, உற்சாகத்தோட நான் ஞானசம்பந்தப் பெருமானின் 'தோடுடைய செவியன்' பாடலைப் பாடினேன். மடாதிபதி என்னைப் பாராட்டிட்டு, அப்பாகிட்ட எனது பெயர் என்னன்னு கேட்டிருக்கிறார். எங்கள் குலதெய்வமான வெம்பக்கோட்டை அங்காளேஸ்வரியின் நினைவாக எனக்கு அங்குச்சாமி என்று பெயரிட்டிருந்தார்கள். அதை மடாதிபதியிடம் சொன்னார். உடனே அவர், "குழந்தைக்கு ஞானசம்பந்தன் என்று பெயர் சூட்டுங்கள். நன்றாக வருவான்" என்று சொல்லி ஆசிர்வதித்தார். ஒரே பாட்டில் "பேர்" வாங்கிய ஆள் நான்தான். எல்லோரும் பேர் வாங்குவதற்குத்தான் பாடுவார்கள். நான் பாடிய உடனேயே எனக்குப் பேர் கிடைத்தது. அதன் பிறகு நான் பாடவே இல்லை.
கே: அதன் பின்....? ப: எங்கப்பா எப்போதும் சொல்வது, பாடத்தை கேள்வி-பதிலாகப் படிக்காதே; புத்தகத்தை முழுமையாகப் படி என்பதுதான். தினமும் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் சொல்லித் தந்து ஒப்பிக்கச்சொல்வார். அந்தப் பயிற்சி இன்னைக்கும் உதவியா இருக்குது. பிறகு, மதுரை திருமங்கலத்தில் உள்ள 'ஷெல்டன்' பள்ளியில மூன்றாண்டுகள் படிச்சேன். பின் பி.யூ.சி.யில் சேர்த்தார்கள். அதுவரை தமிழ்வழியே படித்த எனக்கு ஆங்கிலவழிக் கல்வி ரொம்பக் கடினமான இருந்துச்சு. அப்பத்தான் எம்.ஜி.ஆர். அதிமுக ஆரம்பிச்ச நேரம். அதனால் அடிக்கடி ஸ்ட்ரைக்கால் கல்லூரி சரிவர இயங்கவில்லை. பி.யூ.சி.யில என்னளவுக்கு பெயிலானவர்கள் இந்தியாவிலேயே யாரும் இருக்க மாட்டாங்க. இப்ப மாதிரி ஒரு பேப்பர்ல தோற்றால் அதைமட்டும் எழுத முடியாது. எல்லாத்தையும் திரும்ப எழுத வேண்டும். இப்படி நாலு முறை பெயிலாகி எப்படியோ தட்டுத் தடுமாறி மேல வந்தேன்.
முதலில் ரிசல்ட் பார்த்துட்டு வந்த நண்பர் வழக்கம்போல ஃபெயில்னு சொல்லிட்டுப் போய்ட்டார். நான் ரொம்ப மனம் சோர்ந்துட்டேன். என் தந்தை எம்ப்ளாய்மெண்டிலாவது போய்ப் பேரை பதிஞ்சிட்டு வா என்றார். நான் யதேச்சையாகப் பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் பார்த்தா பாஸாகி இருப்பது தெரிஞ்சது. எனக்கு சந்தேகம். ஒரு பத்து பேரைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டி பாஸா, பெயிலான்னு உறுதி செஞ்சுக்கிட்டேன். அப்புறம்தான் தியாகராயர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தேன். என் க்ளாஸ்மேட் எம்.ஏ. செகண்ட் இயர் படிக்கும்போது நான் பி.ஏ. முதல் வருடம் சேர்ந்தேன். ஆனால், ஆர்வத்தோட படிச்சுப் பட்டம் வாங்கினேன். தொடர்ந்து எம்.ஏ.யும் முடிச்சேன். எங்க ஊரின் புகழ்பெற்ற ஜனகை மாரியம்மன் ஆலயம் பற்றி ஆராய்ச்சி செய்து எம்.பில். வாங்கினேன். பின்னால் நான் எங்கள் ஊரைச் சேர்ந்த அரசன் சண்முகனார் எழுதின இலக்கண நூலைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் வாங்கிட்டேன். எப்படியோ, எங்கப்பா ஆசைப்பட்ட மாதிரி நான் டாக்டர் ஆயிட்டேன்!
கே: நாடகம், நடிப்பு, எழுத்து என்று பலவற்றையும் செய்துள்ளீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்.... ப: எங்கப்பா நல்ல சொற்பொழிவாளர். ஒவ்வொரு மார்கழி மாசமுல், எங்க ஊர் திரௌபதி அம்மன் கோவில் விழாவில திருப்பாவை, திருவெம்பாவை விளக்கம் சொல்வார். சில சமயங்களில் என்னையும் பேசச் சொல்வார். இதனால சின்ன வயசுலயே எனக்கு மேடை அனுபவம் வந்துடுச்சு. பின்னாடி, 'கலையோசை' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். அப்போ சாவி தனது இதழில் சிற்றிதழ்கள் குறித்து எழுதி வந்தார். அதில் கலையோசை பற்றி எழுதினார். அதை மாலன் பார்த்துட்டு, 'திசைகள்' பத்திரிகைக்கு வருமாறு, சென்னைக்கு அழைத்தார். அப்போ என்னால முடியல. பின் நண்பர்களோடு இணைந்து நாடகங்கள் எழுதினேன். நடிக்கவும் செய்தேன். "பாதையோரப் பட்டதாரிகள்", "ஓடாதே நில்" என நகைச்சுவை கலந்த சமூக நாடகங்கள். எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றவர்கள் நாடக உலகில் நுழைந்த காலத்தில் நான் தமிழகத்தின் தென்கோடியில் அதே மாதிரி பல நகைச்சுவை, சமூக நாடகங்களைப் போட்டுக் கொண்டிருந்தேன். பாஞ்சாலி சபதத்தை வசன நடையில் நாடகமாக்கி நடத்தியிருக்கிறேன்.
கே: மேடையில பாடிப் பேர் வாங்கினது பத்திச் சொன்னீங்க. பேசிப் பேர் வாங்கினது எப்போது? எங்கப்பாவுக்கு உடல் நலமில்லாதபோது அவர் சார்பாக நான் பேசப் போவேன். அது பதினான்கு ஆண்டுக் காலம் - அவரது மறைவுக்குப் பின்னாடியும் - தொடர்ந்தது. இது நான் பேச்சாளர் ஆக அடித்தளம். கல்லூரியில் படிக்கும்போது இலக்கிய மன்றங்கள், இளைஞர் மன்றம், கல்லூரி விழாக்கள் இவற்றைப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறேன். எங்க ஊர் மாரியம்மன் திருவிழா 18 நாள் நடக்கும். அதிலதான் நான் பேச்சுப் பயிற்சி எடுத்துக் கொண்டேன் என்று சொல்லலாம். அந்த விழாவில்தான் சாலமன் பாப்பையா போன்றவர்களை அழைத்து வந்து பேச வைத்து, எனது வீட்டில் தங்க வைத்து, அவர்களோடு ஓரணியில் நானும் பேசி எனது திறனை வளர்த்துக் கொண்டேன். பேராசிரியர் பட்டம் வாங்கின பிறகு நடுவர் ஆனேன். என்னோடு படித்தவர்கள், என்னிடம் படித்தவர்கள் என்று இரு குழுவை அமைத்துக் கொண்டு ஆரம்ப காலங்களில் பேசினேன்.
கே: நகைச்சுவைப் பேச்சுக்குத் தூண்டுகோல் எது அல்லது யார்? ப: நான் பேச்சாளராக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் கனவு எல்லாம் நாடகம் மற்றும் சினிமா மேலதான். நான் வானொலி நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் எனப் பல இடங்களில் இலக்கியம், புராணம், சமூகம் என்று பல தலைப்புகளில் சீரியசாகப் பேசிக் கொண்டிருப்பேன். என் முக்கிய வழிகாட்டிகளில் ஒருவரான பேரா. தொ. பரமசிவம் என்னிடம் ஒருமுறை, "நீங்கள் நண்பர்களிடம் நகைச்சுவையாக, இயல்பாகப் பேசுறீங்க. மேடையில் ஏன் சீரியஸாகப் பேசுறீங்க? மேடையிலும் அப்படியே பேசுங்க, நல்லா இருக்கும்" என்றார். எனக்கும் அது சரி என்று தோன்றவே, மேடைகளில் நகைச்சுவையாகப் பேசத் தொடங்கினேன்.
கே: இன்றைய பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டுவதில்லை, வெறும் சிரிப்பரங்குகள் ஆகிவிட்டன என்று ஒரு கருத்து உள்ளது. இதற்கு உங்கள் மறுமொழி என்ன? ப: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இது ஆரோக்கியமானதாக இல்லை. இது கவலைக்குரியதுதான். அந்தக் காலத்தில் மக்களுக்கு பத்திரிகை அல்லது வானொலியை விட்டால் அதிகப் பொழுதுபோக்கு இல்லை. ஆகவே எங்கேயாவது பட்டிமன்றம் நடந்தால் கூட்டமாப் போய் ரசிப்பாங்க. இன்றைக்கோ வீட்டின் ஹாலுக்கே எல்லாம் வந்துடுச்சு. என்னால் புராணங்களில் ஆரம்பித்து இலக்கியம் வரை பல விஷயங்கள் பற்றிப் பேச முடியும். ஆனால் கேக்கத்தான் ஆளில்லை. அன்றைக்கு இராமாயணம், மகாபாரதத்தை எல்லாம் புத்தகத்தில படிப்பாங்க. இல்லன்னா தெருக்கூத்துல பார்ப்பாங்க, சொற்பொழிவுல கேப்பாங்க. இன்னக்கி வீட்டில் டிவியிலே மகாபாரதம், ராமாயணம், கந்தபுராணம், விநாயக புராணம் எல்லாமே சீரியலா வந்துடுது. பல்வேறு சேனல்களிடையே போட்டி வேறு. பேச்சில் கொஞ்சம் போரடித்தாலும் சேனலை மாத்திடுவாங்க. இப்படிப்பட்ட போட்டி நிறைந்த உலகில் சிந்தனையை உயர்த்தும் பேச்சைவிடக் கேளிக்கைப் பேச்சுக்கே அதிக வரவேற்பிருக்கிறது. தீபாவளி, பொங்கல், பண்டிகை விடுமுறை நாட்களில் இதுபோன்ற பட்டிமன்றங்களையும் மக்கள் கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாகவே பார்க்கின்றனர். முன்பைவிட அதிக உழைப்பு, டென்ஷன், பரபரப்பு என்று இருக்கின்றனர். அவர்களுக்கு ரிலாக்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது.
இதனால் என்ன ஆகிவிட்டதென்றால் நல்ல பேச்சாளர்கள் குறைந்து விட்டார்கள். மேலும் ஓரிரு சேனல்களில், ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒருவர் பேசி விட்டால் போதும், அவர், இன்ன டி.வி. புகழ் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால் அவரால் ஒரு வட்டத்திற்குள்தான் செயல்பட முடிகிறதே தவிர தன் ஆற்றலை, திறமையை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. என்னால் சுஜாதா பற்றியும் பேச முடியும். சுந்தர காண்டம் பற்றியும் பேச முடியும். மஹாபாரதம் பற்றியும் பேசுவேன். காரணம், காலம் எனக்குக் கொடுத்த களம் அது. ஆனால் இன்றைக்கு பட்டிமன்றங்கள் போய் 'பாட்டுமன்றங்கள்' வந்து விட்டன. கேலி, கிண்டல், மாறி மாறிப் பாடிக் கொண்டு இருப்பது என்று சிந்தனைக்கு வேலை தராத விஷயங்கள் பெருகி விட்டன. அதிலும் ஆழ்ந்த அனுபவமோ, தமிழில் புலமையோ, தேர்ந்த இலக்கிய அறிவோ இல்லாதவர்கள் பேச்சாளராக மாறிவிட்டனர். யார் வேண்டுமானாலும் பேச வரலாம்தான். ஆனால் அதற்கு ஒரு அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும். ஒரு முப்பதாண்டு கால வேர் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். அப்போதுதான் அவரது பேச்சு சமூகத்துக்குப் பயன்தருவதாய் அமையும். இல்லாவிட்டால் அவை யாருக்கும் பயன்தராத வெற்று உரைகளாய்த்தான் முடியும். இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் என் ஆசை.
கே: நீங்கள் ஆரம்பித்த நகைச்சுவை மன்றங்கள் குறித்து.. ப: உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருவது நகைச்சுவை. எனது பேச்சால் கவரப்பட்ட மதுரை மீனாட்சி மிஷன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் 1991ல் மதுரையில் நகைச்சுவை மன்றம் ஒன்றை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். இன்று கிட்டத்தட்ட பதினேழுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் நடந்து வருகின்றன. நான் 'சிரிப்பு' என்று ஓர் இதழைக் கூடத் தொடங்கி நடத்தினேன். இம்மன்றத்தின் சிறப்பம்சம் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் ஜோக் சொல்லலாம். ஆபாசமாகவோ மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவதாகவோ, அமங்கலமாகவோ நகைச்சுவை இருக்கக்கூடாது என்பதுதான் முக்கிய விதி. இன்றைக்கு கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புத்தான் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களில் பலர் இதிலிருந்து வந்தவர்கள்தான். ஆனால் அதை வெளியில் சொல்ல மாட்டார்கள்.
கே: ஏன்? ப: எப்படிச் சொல்வது? நான் எழுதிய பல புத்தகங்களில் இருந்தும் எனது காசெட்டுகள், குறுந்தகடுகளில் இருந்தும் கவர்ந்து கொண்டதையே - திருடிக் கொண்டு விட்டார்கள் என்று கூடச் சொல்லலாம் - பலர் மாற்றி மாற்றி மேடைகளில் பேசி வருகின்றனர். 1994லேயே நான் காசெட் போட்டு விட்டேன். இதற்கெல்லாம் காபிரைட் வைத்துக் கொள்ள அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு சிலர் நான் மீடியாவுக்கு வருவதற்கு முன்னாலேயே என் நூல்கள், காசெட்டுகளில் உள்ள விஷயங்களைப் பேசிப் பேர் வாங்கி விட்டனர். பின்னாடி நான் மீடியாவுக்குள் நுழைந்த போது சிந்தனைப் பேச்சுகளாகவும், தகவல் செய்திகளாகவும் தான் எனது பங்கு வெளிப்பட்டது. பின்னர்தான் நகைச்சுவைப் பேச்சாளர் ஆனது. சில இடங்களில் நான் பேசப் போகும்போது, இந்த விஷயங்களை ஏற்கனவே வேறொருவர் பேசிக் கேட்டு விட்டோமே என்று ஆடியன்ஸ் ஃபீல் பண்ண ஆரம்பித்தார்கள். அதாவது நான் எழுதியதை நான் பேசினால் அது கேட்பவர்களுக்கு அந்நியமாகப் பட்டது. அப்படி ஒரு சிக்கல்.
எனக்கு அவர்கள் வளர்ச்சியில் பொறாமை இல்லை. ஆனால் அவர்கள் செயலில் வருத்தம் உண்டு. ஒருவரது படைப்பைப் பயன்படுத்தும் போது அதற்கான ரெஃபரன்ஸ் அளிக்க வேண்டும் அல்லவா? அது அளிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதுபற்றி நான் கமல் சாரிடம் ஒருமுறை, "என்ன சார் நான் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பெல்லாம் இப்படி ஆகிவிட்டதே!" என்று வருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், "சார், நீங்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. நான் முதலில் நிறையப் படங்களில் மைக் பிடித்துப் பாடிக் கொண்டிருந்தேன். பின்னர் மோகன் வந்ததும் மைக்கை அவரிடம் கொடுத்து விட்டேன். அதுபோல நிறைய டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தேன். பிரபுதேவா வந்ததும் அவரிடம் அதை விட்டுவிட்டேன். இதெல்லாம் ஒரு காலகட்டம். வளர்ச்சி. நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வந்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்" என்று சொன்னார். இதையெல்லாம் மீறித்தான் மீடியாவில் நிற்க வேண்டியிருக்கிறது. |
|
|
கே: 'சினிமாவுக்குப் போகலாம் வாங்க...' நூலை எழுதத் தோன்றியது எப்படி? ப: கல்கி ஆசிரியர் சீதா ரவி கல்யில் தொடர் ஒன்று எழுதச் சொன்னர். எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்த போது, தரை டிக்கெட்டில் உட்கார்ந்து படம் பார்த்த ஒருவன் திரைக்கு வந்த விஷயங்களை எழுதுவதாகச் சொன்னேன். அப்படி உருவானதுதான் 'சினிமாவுக்குப் போகலாம் வாங்க...' தொடர். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அக்கால சினிமா பற்றிய அரிய செய்திகளைச் சொன்னேன். இரண்டாவதாக, எல்லோரும் படிக்கும் முறையில் மிக எளிய நடையாக எழுதினேன். தொடரை எழுதிக் கொண்டிருக்கும்போதே தமிழ்ச் சங்கத்தினரின் அழைப்பால் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அங்கு பலரும் இந்தத் தொடர்பற்றி, அதன் பாத்திரங்களான சினிமா மணி, முத்துராக்கு பற்றியெல்லாம் விசாரித்தார்கள்.
கே: தொலைக்காட்சிக்கு எப்படி வந்தீர்கள்? ப: கவிஞர் வைரமுத்து என் நெருங்கிய நண்பர். அவரது புத்தக வெளியீட்டு விழாக்களுக்காக நான் சென்னை வருவதுண்டு. அப்படி ஒருமுறை வந்தபோதுதான் ஜெயா டி.வி.யில் 'இன்றைய சிந்தனை' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு வந்தது. அது ஒரு திருப்புமுனை. அதற்காக நான் நிறைய உழைத்தேன். நிறையப் படித்ததால் அதை நிறைவாகச் செய்ய முடிந்தது. அதன் மூலம் எனது பேச்சு பல நகரங்களுக்கும், கிராமங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று சேர்ந்தது. அதன் மூலம் பட்டிமன்ற வாய்ப்புகளும் நிறைய வந்தன. சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தேன். திருவனந்தபுரம் தொடங்கி டெல்லிவரை இந்தியாவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் அனைத்திலும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பத்தாண்டுகள் தொடர்ந்து அந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நடுவில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இப்போது மீண்டும் 'சிந்திக்கச் சில நிமிடங்கள்' என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருக்கிறேன். அதேபோல் வானொலியிலும் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். ஹலோ எஃப்.எம்மில் 'ஆத்திசூடி' என்ற நிகழ்ச்சியில் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.அதைப் போல கோடைப் பண்பலையில், கோவை வானொலியில், சென்னை வானொலியிலும் பேசி வருகிறேன்.
கே: சினிமா நடிகர் ஆனது எப்படி? ப: ஒரு புத்தக வெளியீட்டு விழாச் சந்திப்பில் கமலுடன் நட்பு ஏற்பட்டது. அவர் 2003ல் 'விருமாண்டி' படத்தின் திரைக்கதைக்காக என்னை அழைத்தார். அவருடன் ஒரு ஆறு மாதங்கள் பணியாற்றினேன். திடீரென ஒருநாள் என்னை "நடிக்கிறீர்களா?" என்று கேட்டார். எனக்குக் கொஞ்சம் அச்சமாக இருந்தது. அப்போதுதான் அமெரிக்காவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. அங்கு போய்விட்டு வந்த பிறகு படத்தில் நடித்தேன். அதில் நடித்த பிறகு இன்றுவரை சுமார் 10 படங்களில் நடித்துவிட்டேன். தற்போது 'போராளி' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
கே: கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே எப்படி எல்லாத்தையும் சமாளிக்க முடிகிறது? ப: எங்கள் கல்லூரியில் ஷிஃப்ட் சிஸ்டம். கல்லூரி மதியம் 1.30 வரைதான். அதன் பின்னர் எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதை வாசிக்கவும், மாலை நேரத்தைச் சொற்பொழிவு, பட்டிமன்றத்திற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன். இரவில் மற்ற நாள் நிகழ்ச்சிகளுக்காகக் குறிப்பெடுத்துக் கொள்வேன். வார விடுமுறை நாட்களில் சென்று திரைப்படங்களில் நடித்துவிட்டு வருவேன். அல்லது டிவி நிகழ்ச்சிகளுக்காகப் பேசிவிட்டு வருவேன்.
அதுபோல சொற்பொழிவு, பட்டிமன்றம், புத்தக வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளுக்காகச் சென்னை செல்லும்போது கிடைக்கும் நேரத்தில் வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நிகழ்ச்சிகள் செய்வேன். மேலும் இப்போதெல்லாம் விமானம் போன்றவற்றால் பயண நேரம் மிகக் குறைந்து விட்டது. சென்னையில் காலை 6.40க்கு விமானம் ஏறினால் 8.00 மணிக்கு மதுரை வந்து 8.30க்குள் கல்லூரிக்குச் சென்று விடலாம். கல்லூரி ஓய்வு நேரங்களிலும், நிகழ்ச்சிகள் அல்லாத பிற நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கான வழிகாட்டலை மேற்கொள்கிறேன். ஏப்ரல், நவம்பர் போன்ற கல்லூரி விடுமுறைக் காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறேன். எனது பிற பணிகளால் கல்விப் பணியும் கல்லூரிப் பணியும் ஒருபோதும் தடையுறாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். குடும்ப வேலைகளை எனது மனைவி கவனித்துக் கொள்வதால் நேர நிர்வாகத்தில் பிரச்சனைகள் வருவதில்லை.
கே: திரும்பிப் பார்க்கையில்....? ப: மிக நிறைவாக உணர்கிறேன். எனது தந்தையார் ஒரு காலகட்டம் வரை எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தார். அதைத் தொடர்ந்து எனது பேராசிரியர் டாக்டர் நா. ஜெயராமன். தொ.ப. எனப்படும் தொ.பரமசிவன் அவர்களும் என் வாழ்க்கையில் முக்கியமானவர். அவர் 1986ல் தியாகராஜர் கல்லூரியில் சேர்ந்தார். சீமானுக்கு அவர் ஆசிரியர். அவர் வருகையால் நாங்கள் எல்லாம் பட்டை தீட்டப்பட்டோம். மிகச்சிறந்த பண்பாளர். வரலாற்றாய்வில் தேர்ந்தவர். மிகப் பெரிய சிந்தனையாளர். பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்த் துறைத் தலைவராகச் சென்று விட்டார். கமலின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் அவரும் ஒருவர். தசாவதாரம் படத்தில் ஒரு வசனம் வரும். "கடவுள் இல்லையா?"என்ற கேள்விக்கு "கடவுள் இல்லைன்னு சொல்லலை; இருந்தா நல்லாருக்குமே" என்று. அது நானும் பேராசிரியரும் பேசிக் கொண்டதுதான். நான் அவரிடம் கேட்டு அவர் எனக்குச் சொன்ன பதில் அது.
கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன? ப: நான் பணி ஓய்வுபெற மூன்றாண்டுகள் உள்ளன. அதன் பிறகு எழுத்து, கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபட எண்ணம் உண்டு. ஒரு நேரத்தில் ஐந்து தளங்களில் இயங்க முடியும் என்பது என் நம்பிக்கை. எனது பேராசிரியர்கள் விஜயலட்சுமி மற்றும் நவநீத கிருஷ்ணன் தமிழ் படித்த ஒருவன் தன் வாழ்நாளில் குறைந்தது பத்து லட்சம் பேருக்காவது தனது கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்வார். என்னால் இயன்ற அளவு நான் அதனைச் செய்து கொண்டிருக்கிறேன்.
இயல்பாக, ஒரு நண்பரிடம் பேசுவது போல் பேசுகிறார் கு.ஞானசம்பந்தன். இளமையின் ரகசியத்தைக் கேட்டால் நகைச்சுவையும், இளையோருடன் பழகுவதும்தான் என்கிறார். மனைவி அமுதாவே தனது வெற்றிகளுக்குக் காரணம் என்கிறார் பெருமிதத்துடன். எம்.ஏ., எம்.பில்., பி.எட். தகுதிகள் பெற்றவர் இல்லத்தரசி அமுதா ஞானசம்பந்தன். பொறியியல் பட்டதாரியான மகள் அர்ச்சனா, திருமணமாகி கணவர், குழந்தையுடன் சென்னையில் வசிக்கிறார். மகன் குரு பொறியியல் பட்டம் பெற்றபின் சிங்கப்பூரில் அனிமேஷன் படித்துக் கொண்டிருக்கிறார். தாய், தந்தையரின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கி வருவதுடன், தாயாரின் பாதங்களையும், தமிழன்னையையும் தினமும் பூஜிப்பவர் ஞானசம்பந்தன். பெற்றோரின் ஆசியே தனது இந்த உயர்வுக்குக் காரணம் என்கிறார். 'கிக்கிக்கீ' என்று அதை ஆமோதித்துக் குரல் கொடுக்கின்றன அவர்கள் அன்போடு வளர்த்து வரும் லவ் பேர்ட்ஸ். பேட்டி காணச் சென்று நண்பராக விடை பெற்றோம் நாம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
என் தந்தை என் தந்தை தகப்பனாராக மட்டுமல்லாமல் ஒரு நண்பனாகவும் இருந்தார். எந்த மாணவனின் கல்வியும் பணவிஷயத்தால் தடைப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். ஏழை மாணவர்களின் கல்விக்காக அவர் செல்வந்தர்களைச் சந்தித்து உதவி கோருவார். கல்விக் கட்டணம் செலுத்தச் செய்வார். குறைந்தது ஆயிரம் பேரையாவது அவர் இப்படிப் படிக்க வைத்திருப்பார். இயன்ற அளவுக்கு எனது தந்தை விட்டுச் சென்ற பணியை நான் செய்து வருகிறேன். அவர் இறந்தபோது எங்கள் ஊரில் இருந்த ஒரு செல்வந்தர் வருத்தப்பட்டுச் சொன்னார், "இவர் இறந்ததால் நான் தர்மம் செய்வது குறைந்து போயிற்று" என்று. என் தந்தையாரின் சிதைக்குத் தீவைத்த போது ஒரு நூலகத்திற்குத் தீ வைப்பது போலத் தான் உணர்ந்தேன். அத்தனைக் கல்விமான் அவர்.
*****
சோதனையும் சாதனையும் எனது கல்லூரிப் பருவத்தில் பல்வேறு பிரச்சனைகள். தந்தையார் பணி ஓய்வு பெற்று விட்டிருந்தார். பார்வையையும் திடீரென இழந்து விட்டார். மூன்று சகோதரிகளுக்கு அப்போதுதான் திருமணம் செய்திருந்தோம். வருமானம் போதாத நிலை. அதனால் நான் சிலகாலம் கோத்தாரி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அத்தோடு எங்களுக்குச் சொந்தமான வயலில் விவசாய வேலை செய்வேன். இன்றும் எனக்கு உழுவது, நாற்று நடுவது, உரமிடுவது, களை பறிப்பதிலிருந்து எல்லா வேலையும் தெரியும். அத்தோடு அஞ்சல் வழியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். தொடர் தோல்விகளால் தமிழ் வழிக்கு மாறிப் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு தேர்வுகள் எழுதி விட்டேன். மூன்றாவது தேர்வு எழுதப் போகும் நாள் திடீரென என் தாயாருக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது. மறுநாள் அவர் இறந்து விட்டார். குடும்பத்துக்கு நான் ஒரே பையன். காரியங்கள் எல்லாம் முடிந்தாகி விட்டது. அன்று மதியம் எனக்குத் தேர்வு. "தீ ஆத்தின கால். அதனால் வெளியே போகக் கூடாது" என உறவினர் தடுத்தனர்.
எல்லோரும் தடுத்தபோது என் தந்தை என்னை அழைத்து "நீ பரீட்சைக்குப் போறயா?" என்று கேட்டார். "ஆமாம்" என்றேன். "சரி, உன் தாயார் இருந்தால் நீ படிப்பதைத்தான் விரும்புவார். அதனால் நீ போ" என்று அனுமதியளித்தார். நானும் மதுரைக்குப் போய் தேர்வை எழுதி முடித்தேன். 1983ல் என் தந்தை எனது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். பெண் பார்த்துவிட்டு, தேதியெல்லாம் குறித்துக் கொண்டு வந்துவிட்டார். ஆனால் திருமண நாளுக்கு அவர் இல்லை. திடீரெனக் காலமாகி விட்டார். 84ல் என் திருமணம் நடந்தது.
85ல் நான் படித்த தியாகராஜர் கல்லூரியிலேயே எனக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்தது. 1989ல் நான் பிஎச்.டி. முடித்தேன். தீஸிஸ் சப்மிட் பண்ணும் அந்த மாதத்தில் எனது கைடு டாக்டர் ஜெயராமன் திடீரெனக் காலமாகி விட்டார். அதனால் தீஸிஸில் கையெழுத்துப் போட யாரும் இல்லை. 1991 வரை எனது தீஸிஸ் அப்படியே கிடப்பில் இருந்தது. பின்பு அது ஃபார்வர்ட் ஆகி வைவாவிற்காக கேரளாவிலிருந்து பேராசிரியர் டாக்டர் நாச்சிமுத்து மற்றும் எக்ஸ்டெர்னல்கள் எல்லாம் வந்திருந்தபோது அன்றைக்கென்று பார்த்து ராஜீவ்காந்தி கொலை நடந்துவிட்டது. அதனால் அதுவும் தாமதமாகி விட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து வாய்வழித் தேர்வு நடந்து பிஎச்.டி. பட்டம் வாங்கினேன்.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் நகைச்சுவையாளர்கள் என்றால் சிரித்துக் கொண்டே பிறந்து சிரித்துக் கொண்டே வளர்ந்து வாழ்பவர்களல்ல. அவர்களுக்கும் சோகங்களும் சுமைகளும் இருக்கும், அதைக் கடந்துதான் வந்திருப்பார்கள் என்பதற்குத்தான்.
*****
இம்சை அரசன் - சிம்பு எங்கள் கல்லூரியிலிருந்து வெளியான 'தியாகராஜர் செய்திமடல்' என்ற இதழுக்கு எட்டாண்டுக் காலம் நான் ஆசிரியராக இருந்தேன். அது ஒரு காலாண்டிதழ். அதில் அற்புதமாக ஒரு மாணவர் படம் வரைவார். அவரே அதன் ஆஸ்தான ஓவியர் ஆக்கினேன். பின்னர் அந்த மாணவரை சுஜாதாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அப்போது குமுதம் ஆசிரியராக இருந்தார். சில வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த மாணவர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தார். பின் ஒருநாள் என்னிடம் வேலையை விட்டுவிட்டதாகச் சொன்னார். நான் சத்தம் போட்டேன். பின்னர் அவர் ஷங்கரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் தான் சிம்புதேவன். நான் அமெரிக்காவில் இருந்தபோது ஹூஸ்டனில் அவரது 'இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி' படம் வெளியானது. நான்தான் அதன் முதற்க் காட்சியைத் துவக்கி வைத்தேன். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் என்னுடைய மாணவர் என்பதை மிகவும் பெருமையாகச் சொன்னேன். சிம்புதேவன் முதன் முதலாகச் சொந்தமாகக் கார் வாங்கி எனது வீட்டிற்கு வந்து என்னையும் என் துணைவியாரையும் அதில் அமர்ந்து வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நான் அப்போது என் மகனிடம் சொன்னேன், "இதோ பார், நீ செய்ய வேண்டியதை என் மாணவர் செய்கிறார்" என்று. இன்றைக்கும் எனது புத்தகங்கள் அனைத்திற்கும் ஓவியம், லே-அவுட் செய்வது சிம்புதேவன்தான்.
*****
அமெரிக்காவில் திடீர்ப் பேச்சு முதன்முதலில் 2003ல் நான் அமெரிக்கா போனேன், ஃபெட்னா விழாவிற்காக. மணிவண்ணன், ஸ்நேகா, சாலமன் பாப்பையா, மயில்சாமி எனப் பலர் உடன் வந்தனர். நான் போய் இறங்கியபோது என்னை அங்குள்ளவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. காரணம் அப்போது அங்கே சன் டிவிதான் உண்டு. அதனால் ஸ்நேகா, பாப்பையா, மயில்சாமியை எல்லாம் முதலில் அழைத்துக் கொண்டு போய் விட்டனர். நான் ஒரு பேச்சாளர் என்பதே யாருக்கும் தெரியவில்லை. இரவு மு. ராமசாமியின் புதிய நந்தன் நாடகம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென 'காலர் மைக்' வேலை செய்யவில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அரங்கில் குழுமி இருந்தனர். ஒரே பதட்டம். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த விழா அமைப்பாளர்கள், மேலே தங்கியிருந்த என்னிடம் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டனர். ஸ்க்ரீன் ஒன்றைப் போட்டுவிடுமாறும், மைக் ரெடியானதும் நான் பேச்சை நிறுத்தி விடுகிறேன் என்றும் நண்பரான மு. ராமசாமியிடம் கூறி விட்டுப் பேச ஆரம்பித்தேன். மயில்சாமியும் கலந்து கொண்டு மிமிக்ரி செய்தார். எந்த முன் தயாரிப்பும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஸ்டேண்ட்-அப் காமெடியாக அது நடந்தது.
மறுநாள் முதல் பல தமிழ்ச் சங்கங்கள் என்னைப் பேசக் கூப்பிட்டனர். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களில் - ஃப்ளோரிடா தொடங்கி சான்ஹோசே வரை பேசினேன். அதனால் எனது விசாவைக்கூட நீட்டிக்க வேண்டி வந்தது. தொடர்ந்து இருமுறை அமெரிக்கா செல்ல அந்த நிகழ்ச்சி அடிப்படையாக அமைந்தது.
*****
எச்.ஐ.வி.க்குச் சிரிப்பு மருந்து! சென்னையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசினேன். அந்நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே இருந்தார்கள். அதன் அமைப்பாளர்களில் ஒருவரான அமெரிக்க டாக்டர் என்னிடம், "நீங்கள் நல்லதொரு காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். இவர்களது வாழ்நாளில் 6 மாதத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். வெள்ளை அணுக்கள் குறைபாடுதான் ஹெச்.ஐ.வி.க்கு முக்கிய காரணம். சிரிக்கும்போது வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இது மருத்துவ உண்மை. இன்றைக்கு நீண்ட நேரம் இவர்களைச் சிரிக்க வைத்ததன் மூலம் நீங்கள் அவர்களது வாழ்நாளை அதிகரித்திருக்கிறீர்கள்" என்று சொன்னார். |
மேலும் படங்களுக்கு |
|
More
சுதா சந்திரசேகர்
|
|
|
|
|
|
|
|