ஆதித்யா ராஜகோபாலன்
|
|
|
|
கனெக்டிகட்காரர்களுக்கும், மருத்துவ உலகிலும் மிகப் பரிச்சயமான பெயர் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன். ஒவ்வாமை நிபுணர், இசை ரசிகர், கொடையாளி, நட்போடு பழகுபவர், நல்ல மேடைப்பேச்சாளர் - இவர்தான் பிரசாத். வாழ்க்கையை அனுபவிப்பதிலிருந்து எளியோருக்குச் சேவை செய்வதுவரை எதுவானாலும் உற்சாகத்தோடு செய்வார். சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்பதில் இவருக்கு இருக்கும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டு வருவதால் அந்த ஈடுபாடே இவருக்கு எதிர்காலத்துக்கான வழியை வகுத்துத் தருகிறது.
பல விருதுகளைப் பெற்றவர் டாக்டர் பிரசாத். இந்திய அரசு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு வழங்கும் விருதாகிய 'பாரத் சம்மான்' அண்மையில் இவருக்குக் கிடைத்தது. சமூகத்தின் உயர்வுக்குப் பாடுபட்டவர்களுக்குத் தரப்படும் இதனை பாரதக் குடியரசுத் தலைவர் வழங்கினார். ஏஏபிஐ (AAPI - American Association of Physicians of Indian Origin) அமைப்பின் செயலாளராக 2 ஆண்டுகள் இருந்தார் பிரசாத். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல பகுதிகளுக்குப் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "ஏஏபிஐ செயலர் பதவியை நான் மிகவும் ரசித்தேன். மாநில, மத்திய அளவில் மருத்துவத்துறையின் பல உயர்நிலை அதிகாரிகளோடு கருத்துப் பரிமாறக் கிடைத்த வாய்ப்புகளை நான் மகிழ்ச்சியோடு செய்தேன். உடல்நலம் குறித்த நமது கனவுகளையும் லட்சியங்களையும் அவர்களும் எத்தனை உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள் என்பதை என்னால் அறியமுடிந்தது."
"இந்தியாவைச் சார்ந்த சுமார் 50,000 மருத்துவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். எங்கள் அசோசியேஷனின் புரவலர்கள் கிட்டத்தட்ட 7,000 பேர். எங்கள் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் போதுமான மருத்துவத் தொண்டு மையங்களை நிறுவுவது எங்கள் செயல்திட்டத்தில் உள்ளது. இந்தியாவில் தொலைதூர கிராமங்களில் 18 மையங்கள் உள்ளன. அவை அடிப்படை வசதிகள் கொண்ட தொடக்கநிலை மையங்கள்."
| தனது வாழ்க்கையைத் தரமாக நடத்துமளவுக்குச் சம்பாதித்துவிட்ட ஒவ்வொருவரும் தனது செல்வம், அறிவு ஆகியவற்றை மற்றவர்களின் வாழ்வை உயர்த்துவதற்காகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். | |
"குஜராத்தில் உள்ள கரகாடி கிராம மையத்திற்கு நான் சென்றிருந்தேன். அது நல்ல பணி செய்கிறது. அங்கே நாங்கள் ஒரு கணக்கெடுப்புச் செய்தோம். மக்களின் உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை மாற்றியமைத்த பின் அவர்களுக்குச் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை வருவதில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தோம். எங்கள் முடிவுகள் ஆச்சரியகரமான விளைவுகளைக் காட்டின. இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் இதேபோலச் செய்ய ஆர்வமாக இருக்கிறோம்." இத்தோடு, கிராம உடல்நல ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விரும்புகிறார் டாக்டர் பிரசாத். "குடிநீர்த் திட்டத்திலும் நாங்கள் இணைந்து செயல்பட விரும்புகிறோம்" என்கிறார் இவர்.
கனெக்டிகட் இந்திய-அமெரிக்க மருத்துவர் கழகத்துக்கும் (CAPI) இவர் முன்னாள் தலைவர். மருத்துவக் காப்பீடற்றவர்களுக்கும், போதிய மருத்துவ வசதி இல்லாதவர்களுக்கும் சேவை செய்யும் Malta House of Care அமைப்போடு CAPI இணைந்து செயல்பட்டதில் நடமாடும் மருத்துவ சேவை மையங்களை இயக்கும் குழுவினரின் எண்ணிக்கை அதிகரித்தது. "கொடுப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது, கொடுப்பதன் மூலம் நாம் பெறுகிறோம்" என்கிறார் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன். |
|
தமது தொழில்முறைக் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காகக் குடும்ப அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் பிரசாத். "இது எனக்கு மிகுந்த நிறைவைத் தருகிறது" என்கிறார் அவர்.
"தனது வாழ்க்கையைத் தரமாக நடத்துமளவுக்குச் சம்பாதித்துவிட்ட ஒவ்வொருவரும் தனது செல்வம், அறிவு ஆகியவற்றை மற்றவர்களின் வாழ்வை உயர்த்துவதற்காகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். எனது இரண்டு குழந்தைகளும் நான் சமூகத்துக்குக் கொடுப்பதை ஆதரித்து ஊக்குவிக்கிறார்கள்" என்கிற பிரசாத், "மருத்துவத் திட்டப்பணி ஒன்றில் முழுமையாக ஈடுபட விரும்புகிறேன். அது என்ன என்பதற்கான தேடலில் இருக்கிறேன். விரைவில் அதைக் கண்டுகொள்வேன். அதுதான் எனது கனவுத் திட்டம்" என்கிறார்.
இவரது சவால்கள்? "ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் இரண்டு சவால்களை எதிர்கொள்கிறேன். காப்பீட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சிகிச்சை தருவது முதலாவது. அடுத்தது, நாள்பட்ட நோயாளிகளைத் தமது நோயை நேர்மறையான மனநிலையில் அணுகப் பயிற்றுவிப்பது. இவற்றில் நான் கவனத்தைச் செலுத்துகிறேன்."
இனிமையாகப் பாடும் திருமதி கலா இவரது மனைவி. மகன் பிரசாந்த் விழி-நரம்பியலாளர்; மகள் அனுஷா மேலாண்மைத் துறை மாணவர்.
தொழில், குடும்பம், சமுதாயம் ஆகிய எல்லாவற்றிலும் தனது பணியைச் சரிவர நிர்வகிக்கும் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் வாழ்க்கையைத் துளித்துளியாகச் சுவைக்கும் கலையில் தேர்ந்தவர் என்பதில் என்ன ஆச்சரியம்!
ஆங்கிலத்தில்: டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் தமிழ்வடிவம்: மதுரபாரதி |
மேலும் படங்களுக்கு |
|
More
ஆதித்யா ராஜகோபாலன்
|
|
|
|
|
|
|