Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
கோமேதகக் கண்கள்
வாழையிலை
கரையும் கோலங்கள்
சுத்தப் பட்டிக்காடு!
ரொட்டி அய்யா
- நித்யா பாலாஜி|ஜூலை 2011||(2 Comments)
Share:
பள்ளியில் இருந்து பேரனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழையும் போதே, காற்றில் மிதந்து வந்தது ரொட்டி வாசம். "ஹை! ஜாலி அம்மா குக்கீஸ் பேக் பண்ணறாங்க" அபினவின் சந்தோஷக் குரல் கேட்டு வெளியே வந்த வந்தனா, "உனக்குப் பிடிக்கும்னுதான் பண்ணறேண்டா. ரெண்டு பேரும் போய் கை, கால் அலம்பிட்டு வாங்க" என்றபடியே சமையலறைக்குப் போனாள். குக்கீஸுடன் என்னுடைய காப்பியையும், அபினவின் பாலையும் உணவு மேஜையில் வைத்துவிட்டு "மாமா, அத்தை இன்னைக்குக் கோவிலுக்கு சீக்கிரம் போய்ட்டாங்க. நீங்க வந்தா சொல்லச் சொன்னாங்க" என்ற வந்தனாவிடம், "சரிம்மா, என்ன விசேஷம் கோவிலில்? இப்பவே போய்ட்டாங்க இன்னைக்கு?" காப்பியை ஆற்றியபடியே கேட்டேன். "எதிர்வீட்டு மாமி ஏதோ அபிஷேகத்திற்குக் கொடுத்து இருக்காங்க போல, அதான் ரெண்டு பேரும் அபிஷேக சாமான் வாங்கிட்டுப் போகணும்னு கொஞ்சம் முன்னாடியே கிளம்பிட்டாங்க" பதமாய் ஆற்றிய பாலை அபிநவிடம் கொடுத்தவாறே சொன்னாள்.

பாலை ஒரு வாய் அருந்திவிட்டு, ரொட்டியை ஒரு கடி கடித்தவன், "அம்மா, குக்கீஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. நாளைக்கு நான் ஸ்கூலுக்குப் போகும்போது என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து கொடுங்க. அஜய்க்கும், வினய்க்கும் குக்கீஸ்னா ரொம்ப, ரொம்ப பிடிக்கும்" இந்தச் சிறிய வயதில், தனக்குக் கிடைக்கும் சின்ன சந்தோஷத்தைக் கூட நண்பர்களுடன் பங்கு போடும் என் பேரனின் உயர்ந்த குணத்தை வியந்தபடியே, அவனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டேன். "தாத்தா, உங்க அம்மாவும் உங்களுக்கு குக்கீஸ் பண்ணிக் கொடுத்து இருக்காங்களா?" அவன் கேள்வி எனக்கு ரொட்டி அய்யாவின் நினைவைத் தூண்டியது. என்னிடம் இருந்து பதில் வராததால், என் முகத்தை நிமிர்ந்து பார்த்து, என் தாடையைப் பிடித்தபடியே "சொல்லுங்க தாத்தா" என்றான் அபினவ். அவன் குரலில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டேன்.

"எனக்கு குக்கீஸ் எல்லாம் என் அம்மா பண்ணித் தர மாட்டாங்கடா கண்ணா! ரொட்டி அய்யான்னு ஒருத்தர் இதுமாதிரி ரொட்டி எல்லாம் கொண்டு வந்து விற்பார், அவர்கிட்ட வாங்கிப்போம்" அந்த அற்புதமான மனிதரின் நினைவில் மனம் நெகிழ்ந்தது.

"ஓ! அப்போ அந்தத் தாத்தா எத்தனை வகை குக்கீஸ் வச்சிருப்பார்?" அவன் கேள்வி என் காதில் விழவே இல்லை. தஞ்சாவூர் தெருக்களில், தன்னுடைய, சைக்கிளின் பின்னே ரொட்டிகள் அடங்கிய கண்ணாடிப் பெட்டியுடன், ரொட்டி அய்யா ராகம் போட்டு "ரொட்டி, ரொட்டி பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி.. ரொட்டீ.." என்று பாடியபடியே செல்லும் காட்சி, இன்று நடப்பதுபோல கண்முன்னே தோன்றியது. "தாத்தா, தாத்தா" என்னைப் பிடித்து உலுக்கிய சின்னக் கரங்களின் ஸ்பரிசத்தில் நினைவுலகத்துக்கு வந்தேன். "என்ன பாட்டு தாத்தா அது?" அவன் கேட்டபோது தான் உணர்ந்தேன், நான் என்னையும் அறியாமல் பாடி இருக்கின்றேன் என்று!

"அது ஒண்ணும் இல்லைடா கண்ணா...ரொட்டி அய்யா இந்தப் பாட்டு பாடிதான் ரொட்டி விற்பாங்க". அந்தப் பாட்டை மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு அவனும் ஒருமுறை ராகம் போட்டு பாடிப் பார்த்தான். சில நினைவுகள் நம்மைச் சிறுபிள்ளைகள் ஆக்கிவிடும். அபினவ் கதை கேட்க ஆர்வமானான். மணி ஆறாகிவிட்டதை, சுவர்க் கடிகாரத்தில் இருந்த குயில் அறிவிக்க, "மாமா, அவன் ஹோம்வொர்க் முடிச்சு, சாப்பிட்ட பிறகு நீங்க கதை சொல்லுங்க. அவன் அப்படியே தூங்கிடுவான்" என்று சொல்லிக்கொண்டே வந்தனா வர, மனமே இல்லாமல் என் மடியை விட்டு இறங்கினான்.

"சீக்கிரம் ஹோம்வொர்க் முடிச்சிட்டு வரேன். நீங்க ரொட்டி அய்யா கதை சொல்லணும்" என்று அவன் அம்மாவை நோக்கிச் சென்றான். "வந்தனா, நான் அப்படியே வராண்டால உக்கார்ந்து இருக்கேன்மா. அவன் படிச்சு முடிச்ச பிறகு அனுப்பிடு" வெளியே, ஒரு சாய்வு நாற்காலி போட்டு கண்கள் மூடி அமர்ந்த எனக்கு, உடலை இதமாய் வருடிச் சென்ற தென்றல் பழைய நினைவுகளைத் தூண்டியது.

முதல் முதலாக, ரொட்டி அய்யா எனக்கு அறிமுகமான பொழுது என் வயது நான்கு. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நான், ஏதோ ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் வர, அந்தக் கூட்டத்தின் பின்னாலேயே ஏதோவொரு ஆர்வத்தில் சென்றுவிட்டேன். மாப்பிள்ளை வீட்டார், மண்டபத்தில் நுழைந்த பொழுதுதான், நான் என் வீடு இருந்த இடத்தை விட்டு வெகுவாகத் தள்ளி வந்தது புரிந்தது. மண்டப வாயிலில், இருட்டில் நான் அழுதபடி நிற்பதை, ரொட்டி விற்க வந்த அய்யாதான் விசாரித்து, ஏதோ நான் சொன்ன அடையாளத்தை வைத்துச் சில வீடுகளில் விசாரித்து என் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும், வயதில் எங்கள் தந்தையை ஒத்து இருந்ததாலும், மரியாதை நிமித்தமாய் நான் அவரை "ரொட்டி அய்யா" என்றே அழைத்துப் பழகிவிட்டேன்.

என் ஐந்தாவது வயதில், என்னைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நாளன்று, என் தந்தை ஏதோ தவிர்க்க முடியாத வேலையாக வெளியூர் போய்விட, என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மடியில் அமரவைத்து, என் கைப்பிடித்து 'அ' என்று எழுதி என் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தார் ரொட்டி அய்யா. என் வாழ்கையின் மிக முக்கியமான தருணங்களில் ரொட்டி அய்யாவின் உதவி கண்டிப்பாய் இருக்கும். அய்யா பெரிதாகப் படிக்காவிட்டாலும், ஏதோ அவருக்குத் தெரிந்த அளவுக்கு எனக்கு தமிழும், கணிதமும், தினமும் மாலையில் ரொட்டி விற்க வரும்போது, எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தது இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கின்றது. அவர் நேரடியாக சொல்லித் தராத பாடங்கள் பலவற்றை அவரைப் பார்த்தே நான் கற்றுக் கொண்டேன். அய்யா மற்றவரிடம் கடுமையாகப் பேசி நான் பார்த்தது இல்லை. அன்பு செலுத்துவது, உதவுவதுமே என்று எப்பொழுதுமே பிறருக்கு நன்மை மட்டுமே செய்பவர். நல்ல பண்புக்குப் படிப்பு அவசியமில்லை என்பதற்கு அய்யா ஓர் எடுத்துக்காட்டு.
நான் பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரி செல்லும் சமயம் வந்தபொழுது, நான் விரும்பிய பாடப் பிரிவைப் படிக்க வைக்க என் தந்தை தயங்கியபொழுது, "அவன் வாழ்கையில் நல்லா வருவான், அவன் படிக்கறேன் என்று சொல்வதையே படிக்க வை" என்று என் தந்தையிடம் போராடி, என்னை நான் விரும்பிய பல்கலைக்கழகத்திலேயே, விரும்பிய பாடத்தைப் படிக்க உதவினார் அய்யா. வேலை கிடைத்து நான் அவரை சென்று பார்த்தபொழுது அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. "நீ வாழ்க்கைல நல்லா இருப்ப" என்று அவர் என்னை ஆசிர்வதித்து அனுப்பியது பலித்து, என் வாழ்க்கை மிகவும் நல்ல முறையிலேயே அமைந்தது. என் திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே என் பெற்றோர் இருவரும், உடல்நல கோளாறினால், ஒருவர்பின் ஒருவராய் மறைய, நான் தஞ்சை செல்வது அருகி விட்டது.

ஆனாலும் நண்பனுக்குத் திருமணம், நண்பன் மகளுக்குக் காது குத்து என்று வந்துவிட்டால், அந்தக் காரணத்தை பயன்படுத்தித் தஞ்சை சென்று ரொட்டி அய்யாவைப் பார்த்து வரத் தவறியது இல்லை.

அதன்பின் ஒருமுறை, மனைவியின் தம்பி திருமணத்திற்கு திருச்சி செல்ல உறவினர்களுடன் சென்றபொழுது, தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, எனக்கோ அய்யாவைப் பார்க்காமல் தஞ்சை தாண்டிச் செல்கிறோமே என்று மனம் வேதனைப்பட்டது. திடீரென பிளாட்பாரத்தில் இருந்து ஒலித்தது அந்தக் குரல் "ரொட்டி, ரொட்டி பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி..ரொட்டீ..." ஒரு நிமிடம், ஒன்றும் புரியாமல் நான் ஜன்னல் வழியே பிளாட்ஃபாரத்தைப் பார்க்க, அங்கே அய்யா தலையில் அந்தக் கண்ணாடிப் பெட்டியை சுமந்தபடியே மெதுவாக நடந்து வருவது தெரிந்தது. அவர் உடல் தளர்ந்து இருந்தாலும் அந்தக் குரலில் இருந்த பழைய கம்பீரம் சற்றும் குறையவில்லை. ரயில் கிளம்பச் சில நிமிடங்களே இருக்கையில், ரயிலைவிட்டு கீழே இறங்கிய என்னை புரியாமல் பார்த்த என் மனைவியின் பார்வையைத் தவிர்த்து அய்யா வந்த திசை நோக்கி ஓடினேன். "அய்யா, ரொட்டி அய்யா.." குரல் கேட்டுப் பார்த்தவர் "நல்ல இருக்கியா ராசா? எப்போ வந்தே?" நான் திருச்சி செல்லும் விபரம் அறிந்து "பார்த்தியா ராசா, நீ என்னை பார்க்க வரலைனாலும் நான் வந்துட்டேன்" என்று சிரித்தார். "என்ன அய்யா இப்படி ரயில் நிலையத்துல?" என் கேள்விக்கு பதிலாய், ஒரு சிறு தலையசைப்புடன், "வயசு ஆகிப் போச்சு ராசா. இனிமேல் சைக்கிள் எல்லாம் ஓட்டக் கூடாதுன்னு உன் சிநேகிதப்புள்ள டாக்டரா இருக்கார் இல்லை, அவர் சொல்லிட்டார். அதான் இப்படி பிளாட்ஃபாரத்துல வியாபாரம் செய்யறேன். தெருத்தெருவா அலைய முடியலை."

அவர் பதில் என்னை என்னமோ செய்தது. "அய்யா, என்கூட வந்து இருங்க" என்ற என் வேண்டுகோளுக்கு, மறுப்பாய் தலையசைத்தவர், "எனக்குத் தெம்பு இருக்கு ராசா, நான் முடியாதப்போ உன்கிட்ட சொல்லறேன், நீ வந்து கூட்டிகிட்டு போ". சொல்லிக் கொண்டிருந்தபோதே ரயில் கிளம்ப, "நீ போ ராசா. அப்புறம் ஒரு நாள் வா, சாவகாசமாய் பேசலாம்" என்று என்னை ரயிலில் ஏற்றிவிட்டார்.

யாருக்கும், எப்பொழுதும் பாரமாய் இருக்கக்கூடாது என்று நினைக்கும் அய்யாவின் நினைவு என்னை முழுதாய் ஆக்கிரமிக்க, மறுநாள் திருமண நிகழ்ச்சிகளில் மனம் சுத்தமாய் லயிக்கவில்லை. திருமணம் முடிந்த பின்னர், இரவுதான் ஊர் திரும்ப ரயில் என்பதால், நான் தஞ்சை சென்றுவிட்டு, ரயிலில் தஞ்சையிலே ஏறிக்கொள்வதாய் மனைவி வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் அய்யாவைச் சென்று பார்த்தேன். எவ்வளவு சொல்லியும் அய்யா என்னுடன் வந்து இருக்க மறுத்துவிட்டார். உன் உதவி தேவைப்படும் அப்போ சொல்லறேன் என்று என்னை அனுப்பிவிட்டார். அதன்பின், நான் அவரிடம் முடிந்த அளவிற்கு கடிதத் தொடர்பிலேயே இருந்தேன். நேரில் சென்றும் பார்த்து வந்தேன்.

கடந்த சில வருடங்களாய்தான், விருப்ப ஓய்வு பெற்றபின், பிள்ளையின் திருமணம், பேரன் பிறப்பு என்று புதிதாய் வந்த உறவுகள் தந்த சந்தோஷத்தில், அய்யாவின் நினைவு சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது. மதன் திருமணம் முடிந்தபொழுது, மணமக்களை தஞ்சை அழைத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கியதுதான் இத்தனை வருடங்களில் கடைசியாய் அய்யாவை நேரில் பார்த்தது. ஏனோ, அதன்பின் வந்த ஓரிரு கடிதங்களுக்குப் பின், அவரும் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். மூப்பு காரணமாய் எழுத முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எனக்கு, இன்று அபினவ் கேட்காவிட்டால் அவர் நினைவு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்தபொழுது, மனிதர்கள் எவ்வளவு சுயநலமாய், நன்றி மறந்தவர்களாய் மாறிவிடுகின்றோம் என்ற எண்ணமே மேலோங்கியது. அய்யா எனக்கு கற்பித்த திருக்குறள், நினைவில் வந்தது! "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு".

நாளை கண்டிப்பாய், தஞ்சை சென்று அய்யாவைப் பார்த்து வர வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு நாற்காலியை விட்டு நான் எழுந்த பொழுது மதன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன், நேரே என்னிடம் வந்து "அப்பா, நம்ம பழைய வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். அங்க குடியிருக்கறவர் எனக்கு ஃபோன் பண்ணி உங்க பெயருக்கு ஒரு லெட்டர் வந்து ஒரு வாரம் ஆச்சுன்னு சொன்னார். வாங்கிட்டு வந்து இருக்கேன், இந்தாங்க" என்று கொடுத்தான். கையெழுத்தைப் பார்த்தால், தெரிந்தது போல இல்லை. ஆனால் அனுப்பியவர் முகவரி ரொட்டி அய்யாவின் முகவரி. அவசரமாகப் பிரித்தேன். அய்யா மரண படுக்கையில் இருப்பதாய் அவர் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர், கடிதம் எழுதி இருந்தார். செய்வது அறியாமல், பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற என்னிடம் இருந்து கடிதம் வாங்கிப் படித்த மதன், "அப்பா, தொடர்புத் தொலைபேசி எண்ணும் இல்லை, தாமதிக்க நேரம் இல்லை. நம்ம காரிலேயே இப்பவே போயிடலாம். கிளம்புங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கோவிலுக்குச் சென்ற என் மனைவியும் வந்துவிட, நாங்கள் மூன்று பேர் மட்டும் கிளம்பியதைப் பார்த்த வந்தனா, தானும் வருவதாய்ச் சொல்ல, நாங்கள் அனைவரும் தஞ்சையை அடைந்த பொழுது, விடியக்காலை மூன்று ஆகிவிட்டது.

ரொட்டி அய்யாவின் வீட்டை அடைந்து, அவருக்கு துணைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரிடம், இன்னார் என்று விளக்கியபொழுது, அவர் "அய்யா எப்போவும் உங்களைப் பத்திதான் பேசுவார். என் மனைவிதான் கொஞ்ச வருஷமா அவருக்கு முடியாம போனதுல இருந்து சமைச்சுக் கொடுத்துகிட்டு இருக்கா. வீட்டு வாடகையோட, சாப்பாட்டுக்கும் காசு கொடுத்துடுவார். வேணாம்னு சொன்னா கேக்கவே மாட்டார். நீயும் புள்ள, குட்டி வச்சிருக்க, இது உபயோகப்படும்னு அவர் சாப்பாட்டுக்கு ஆனதைவிட அதிகமாக் கொடுப்பாரு. ரொம்ப நல்ல மனுஷன்" அதுதான் ரொட்டி அய்யாவின் குணம். எல்லோருக்கும் எப்பொழுதும் உதவியாய் இருப்பார்.

"அய்யா, எப்படி இருக்காங்க?" என் குரல் சற்றே நெகிழ்ந்துபோய், சிறு நடுக்கத்துடன் வெளிவந்தது. "இப்பத்தான் ஒரு ரெண்டு மாசமா ரொம்ப முடிலைன்னு, நாங்களும் துணைக்கு இருக்கோம் இங்கேயே. உங்களுக்குத் தகவல் சொல்லாம்னு முன்னாடியே சொன்னேன். அய்யாதான் உங்களுக்குத் தொல்லை தர வேணாம்னு சொல்லிட்டாங்க. போன வாரம்தான் உங்களைப் பாக்கணும் போல இருக்குன்னு சொல்லி கடிதம் போடச் சொன்னாங்க. வாங்க, வந்து அய்யாவைப் பாருங்க" என்று உள்ளே அழைத்துப் போனார்.

மிகவும் உடல் நலிந்து, அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து, கண்கள் மூடிக் கிடந்த ரொட்டி அய்யாவைப் பார்த்த பொழுது, என்னால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் கண்ணீர் பட்டு, சற்றே கண்களைத் திறந்துப் பார்த்த அவருக்கு என்னை அடையாளம் காண நேரம் பிடித்தது. சுருக்கம் விழுந்த அவர் கன்னங்களில், ஈரத்தைப் பார்த்த பொழுது, மனதை உலுக்கிவிட்டது. அவர் பேச முயற்சிப்பது புரிந்து, நான் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டேன். மிகவும் மெல்லிய குரலில் அவர் "நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்னு சொன்னேனில்லை. இப்போ கேக்கறேன், நீ செய்வதானே?" என்று கேட்க, அடக்க முடியாமல் வந்த அழுகையுடன் நான் சொன்ன 'செய்வேன் அய்யா' அவருக்குப் புரிந்ததா என்று எனக்கு தெரியவில்லை. "நீதான் எனக்குக் கொள்ளி வைக்கணும். என்னை அனாதையா போகவிட்டுடாத ராசா" என்று சொல்லி முடித்தவர், கண்களை மூடிக்கொண்டார்.

தூங்கிவிட்ட அபினவை தூக்கிக்கொண்டு வந்தனா வெளியே செல்ல, அவளைத் தொடர்ந்து என் மனைவியும், அடுத்த அறைக்குச் செல்ல, அங்கே இருந்த இன்னொரு நாற்காலியை அய்யாவின் காலடியில் போட்டு மதன் அமர்ந்தான். என் வலது கை அய்யாவின் கையில் இருக்க, மற்றொரு கையினால், அய்யாவின் தலையை வருடினேன். என் விசும்பல் சத்தம் கேட்டு, கண்களைத் திறந்தவர், வேணாம் அழாதே என்பதுபோலத் தலையசைத்தார். மீண்டும் மெல்லிய குரலில் சொன்னார் "அழாதே ராசா, நான் எப்போவும் உன்கூடவே இருப்பேன்" தடுமாறிய அவர் குரல் சட்டென்று நின்றே விட்டது. அய்யா செய்த உதவிக்கு எல்லாம் நன்றிக்கடன் செய்வது போல, இறுதிச் சடங்கு செய்யக் கிடைத்த வாய்ப்பே எனக்கு கிடைத்த பாக்கியமாய்த் தோன்றியது.

காரியம் முடிந்து, அய்யாவின் நினைவாய் அவரின் ஒரே சொத்தாய் இருந்த அவர் ரொட்டி வைத்து விற்கும் கண்ணாடிப் பெட்டியுடன் ஊர் செல்ல நான் காரில் ஏறி அமர, "ஐய்! இதான் குக்கீஸ் தாத்தா பெட்டியா?" என்று அபினவ் கேட்டபொழுது, அந்த கண்ணாடிப் பெட்டியில் இருந்து அய்யாவின் "ரொட்டி, ரொட்டி, பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி..ரொட்டீ.." குரல் ஒலிப்பது போல தோன்றியது! என் கண்ணீர் அந்த கண்ணாடிப் பெட்டி மேல் விழுந்து தெறித்தது!

பின்குறிப்பு: இந்தk கதை என் தந்தையின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஆகையால், இதை என் தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன்.

நித்யா பாலாஜி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
More

நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
கோமேதகக் கண்கள்
வாழையிலை
கரையும் கோலங்கள்
சுத்தப் பட்டிக்காடு!
Share: 




© Copyright 2020 Tamilonline