Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
ஹரிமொழி
ஐயோ எனும் வீழ்ச்சி
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeசென்றமுறை சொல்ஆட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது கம்பனுடைய இரண்டு பாடல்களைப் பார்த்தோம்.

மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கசரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி.

என்ற இந்தப் பாடல், ‘நாம் தசரதனுடைய மகனாக வந்து அவதரிப்போம்' என்று திருமால் சொல்லும் வாக்காக பால காண்டத்தில் வருகிறது. தசரதன் என்னும் பெயரை இறைவன் உச்சரிக்கும் முதல் இடம் இது. இதன் பொருளைப் பார்ப்பது இப்போதைய நோக்கமன்று. பாடலின் அமைப்பை--structure--நுணுகிப் பார்ப்பதும், இதனுள் பயிலும் சொற்கட்டையும், அமைப்பையும் கவனமாகப் பார்த்து, இவற்றை இயற்றிக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் கவிஞனுடைய மனஓட்டம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பனவற்றை அனுமானிப்பதும், அனுமானித்ததன் அடிப்படையில் இது சொல் ஆட்சியா அல்லது வீழ்ச்சியா என்று முடிவுக்கு வருவதும்தான் தற்போது நாம் எடுத்துக்கொண்டுள்ள விவாதப் பொருள்.

பாடலை மறுபடியும் பாருங்கள். தசரதன் என்ற பெயரை எங்கே வைத்திருக்கிறான் கவிஞன்? நான்காவது அடியின் முதற் சீராக. கவிதையை வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் அருகிவரும் இந்த நாளில், இப்படி நான்காம் அடியின் முதற்சீராக இந்தப் பெயரை அமைக்கும் ஒலிநய உத்தியை இந்தத் தலைமுறையினரால் உணரமுடியுமா என்பது ஐயத்துக்கு உரியது. பாடலை வாய்விட்டுப் படிக்கும்போது இத்தகைய உத்தி ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். கேட்பவருக்கு, ‘மசரதம்' என்று தொடங்கும் போதே, ‘தசரதன்' என்ற பெயர் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அந்த முதல்சீரே ஏற்படுத்தும். அடுத்து ஒவ்வொரு எதுகையாக நிசரத, கசரத என்று விழும்போது அந்த எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இறுதியில் எதிர்பார்த்த வண்ணமாக ‘தசரதன்' என்ற பெயர் வந்துவிழும்போது ஓசை இன்பமும், இதை ஏற்படுத்துவதற்காகக் கவிஞன் செய்திருக்கும் முன்தயாரிப்பும், அதில் ஒளிரும் நகாசு வேலையும் பிரமிப்பை ஊட்டும்.

நம்மில் பெரும்பாலானோர் உணர்ச்சிகளால் மட்டும்தானே பெரும்பங்கு நேரங்களில் ஆட்பட்டு நிற்கிறோம்! கோபதாபம், மகிழ்ச்சி, துன்பம் என்று ஒவ்வொரு கணத்தில் ஒவ்வொரு விதமான உணர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது. ஆனால், கவிதை இயற்றப்படும் கணத்தில் இந்த மூன்று கருவிகளும் கவிஞனுடைய முழுவசத்தில் நிற்கின்றன.
அதாவது, இந்தப் பாடலைப் பார்க்கும்போது பளிச்சென்று என்ன தெரிகிறது என்றால், ‘தசரதன்' என்ற பெயரை நான்காம் அடியின் முதற்சீராக அமைக்கவேண்டும் என்று கவிஞன் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டான். அடிக்கு நான்கு சீர்கள் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டோமானால், ‘தசரதன்' என்ற பெயரைப் பதின்மூன்றாவது சீராக அமைக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கு முன்னதாக வரும் மற்ற பன்னிரண்டு சீர்களை--உரிய இடங்களில் எதுகைகளையும் அமைத்து--வாக்கியமாகத் தொகுத்துத் தன் கருத்தை இந்தக் கவிதையின் வடிவத்துக்குள் ஏற்றியிருக்கிறான் என்பதை உணரமுடிகிறது, அல்லவா?

சொல் ஆட்சிக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. எடுத்துக்காட்டு என்று சொல்கின்ற காரணத்தாலேயே, ‘சொல் ஆட்சி' என்பதற்கான பொருள் வரையறையாக, ‘இதுமட்டும் தான் சொல் ஆட்சி' என்ற முடிபாக இது சொல்லப்படவில்லை என்பதையும் உணரலாம். ஒவ்வொரு பாடலும், கவிதையும் இப்படித்தான் ஒவ்வொரு விதத்தில், சொல்லப் போகிற கருத்தையும், சொல்லத் தேர்வு செய்யும் விதத்தையும் முன்னதாகத் தீர்மானம் செய்துகொண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வடிவம்பெற்று, ஒரு விருத்தம்--அல்லது அந்தந்த யாப்போ, வடிவிலாக் கவிதையோ எதுவோ அது--முழுமை அடைகிறது.

மேற்படிப் பாடலுக்கு எல்லா விதத்திலும் பொருந்திப் போவதுதான் பால காண்டத்தில் இராமனுக்கு வசிஷ்டன் பெயர் சூட்டியதைச் சொல்லும் இந்தப் பாடலும்.

சுராமலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அராவணையில் துயில்வோய்!' என, அந்நாள், விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

‘முதலையுடன் செய்த போரில் தளர்ந்து போன யானை, ‘ஆதிமூலமே' என்று குரலெடுத்துக் கதறவும் கஜேந்திரனைக் காப்பதற்காக எந்த மெய்ப்பொருள் அன்று விரைந்துவந்ததோ, எந்த மெய்ப்பொருளுக்குப் பெயர் ஏதும் இல்லையோ, அந்த மெய்ப்பொருளுக்கு வசிஷ்டன் ‘இராமன்' என்று பெயர் சூட்டினான்' என்று சொல்லும் இந்த இடத்திலும் ‘இராமன்' என்ற அந்தப் பெயர் அதே நான்காம் அடியின் முதற்சீராக வந்து உட்காருவதைப் பார்க்கலாம். இது இராமனுக்கு மட்டுமல்ல, இராவணனுக்கும் பொருந்தும் ஒன்றுதான்.
சுந்தர காண்டத்தில் சீதையிடம் ‘அம்மா, நீ சொன்னதைப் போலவே, நீ விதித்துள்ள கால எல்லைக்குள்ளேயே ராமன் இங்கே வருவான். உன்னை மீட்டுக்கொண்டு போவான். நான் சொல்வதை நம்பு' என்று அனுமன் உறுதியளிக்கிறான் அல்லவா, அப்போது இந்த உத்தியை மீண்டும் பயன்படுத்துகிறான் கவிஞன். (இடையில் எத்தனையோ இடங்களில் இந்த உத்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறான் என்றாலும், நம் எடுத்துக்காட்டுக்கு இந்தப் பாடலைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.)

'குராவரும் குழலி! நீகுறித்த நாளினே,
விராவரு நெடுஞ்சிறை மீட்கிலான்எனின்,
பராவரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்; இவன் இராமன்' என்றனன்

குராமலர்களைச் சூடிய கூந்தலை உடையவளே! நீ குறித்திருக்கும் கால எல்லைக்குள் இங்கே இராமன் வந்துவிடுவான். உன்னைச் சிறைமீட்பான். அப்படி மீட்கவில்லை என்றால் அளவில்லாத பழியும் பாவமும் அல்லவா அவனைச் சேரும்! (அப்படி ஏதும் நடக்காது. அவன் வருவான். அப்படி) வராமல் போவானேயானால் அவன் பெயரை மாற்றி ‘இராவணன்' என்று அழைக்கத் தகும். அதுமட்டுமில்லை. இங்கே இருக்கிறானே, இவனை ‘இராமன்' என்று அழைப்பது பொருத்தமாகிப் போகும்' என்று அனுமன் வாக்காக வரும் இந்த விருத்தமும் அடிக்கு நான்கு சீர்களைக் கொண்டதுதான். பதின்மூன்றாவது சீரில் இராவணன் என்று அமைக்க எண்ணி, அதற்குத் தகுந்த எதுகையாக ‘குராவரும்' என்ற சீருடன் தொடங்கியிருப்பதைப் பார்க்கும்போது, கவிஞனுடைய எண்ண ஓட்டம், அந்த ஓட்டத்தை வெளிப்படுத்த அவன் தன் கவிதைக்குக் கொடுத்த சொல் வடிவம், ஒலிநயம் கருதி அமைத்த அமைப்பு எல்லாம் பளிச்சென்று தெரிகின்றன.

இத்தகைய அமைப்பு, ‘சொல் ஆளப்பட்டிருக்கிறது'; தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது;கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிசெய்யும் விதமாக, வெளிப்படையாகத் தெரிவதான அமைப்பு. பொதுவாக எல்லாப் பாடல்களிலும் இப்படிப்பட்ட சிந்தனை ஓட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றால், கவிதை இயற்றுவது என்பது நாம் சென்ற முறையே குறிப்பிட்டதைப் போன்று, ‘அறிவு, ஆன்ம அனுபவம், உணர்வு' ஆகிய மூன்றும் சம அளவில் கலந்து இயங்கிக் கொண்டிருக்கும் கணத்தில் நிகழும் ஒன்று. இப்படி எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. சில சமயங்களில் நம்முடைய அறிவு என்னும் கருவி மட்டுமே உச்சமாக இயங்கலாம்; சில சமயங்களில் (தியானம் செய்வது அல்லது அதை ஒத்த மற்றவற்றில் ஈடுபடுவது போன்ற சில தருணங்களில்) ஆன்ம அனுபவம் பிரகாசித்துக் கொண்டிருக்கலாம்; மற்ற சமயங்களில் உணர்ச்சிகள் உச்சம் பெற்றிருக்கலாம். நம்மில் பெரும்பாலானோர் உணர்ச்சிகளால் மட்டும்தானே பெரும்பங்கு நேரங்களில் ஆட்பட்டு நிற்கிறோம்! கோபதாபம், மகிழ்ச்சி, துன்பம் என்று ஒவ்வொரு கணத்தில் ஒவ்வொரு விதமான உணர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது. ஆனால், கவிதை இயற்றப்படும் கணத்தில் இந்த மூன்று கருவிகளும் கவிஞனுடைய முழுவசத்தில் நிற்கின்றன. சம அளவில் --in absolute balance-- அவை இயங்குகின்றன. இப்படிப்பட்ட தருணங்களில் கவிஞன் தன் படைப்பைத் தன் வசத்தில் நின்றபடி வழிநடத்துகிறான்; உருவாக்குகிறான்; வடிவம் கொடுக்கிறான்.

ஆனால், இது எப்போதுமே இப்படி மட்டுமே தொடர்ந்து நிகழும் ஒன்றன்று. சில அரிய சந்தர்ப்பங்களில் இவை மூன்றுமே தன்வசம் இழந்து, பரவசம் அடைந்து, எதிர்பாராத தருணத்தில், எதிர்பாராத விதத்தில்--முன்னதாகத் தீர்மானித்து அமைக்கப்படாமல்-- தற்செயலாக வந்துவிழும் சொல்லால் கவிஞன் சொல்லவரும் கருத்து, பொலிவும் பூரணமும் அடையும் நேரங்களும் உண்டு. அப்படிப்பட்ட இடங்கள் ஒவ்வொன்றுமே தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும். ‘இந்த இடத்தில் சொல் ஆளப்படவில்லை. வந்து விழுந்திருக்கிறது' என்பதைப் பார்த்த மாத்திரத்தில் உணர முடியும். அப்படிப்பட்ட இடத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்தப் பாடலைச் சொல்லலாம்:

வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறையப்
பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ,
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.

இராமன், இலக்குவனோடும் சீதையோடும் நாட்டு மக்களைவிட்டு நீங்கி, கானகத்துக்குச் சென்ற கோலத்தை வருணிக்கும் பாடல். கங்கைப் படலத்தின் முதல் பாடல். காவியம் அரங்கேற்றப்பட்ட நாள்முதல், இன்று வரையிலும், இனிமேலும் ரசிகர்கள் மனத்தைக் கொள்ளைகொண்ட, கொள்ளப் போகின்ற பாடல் இது. இதைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். சொல்கிறேன். அடுத்த முறை. ஆனால் அதற்கு முன்னதாக ஒன்றே ஒன்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தப் பாடலில் அனைவரும் கொண்டாடி, சொல்லிச் சொல்லி மகிழ்வது அந்த ‘ஐயோ இவன்' என்ற இடத்தைத்தான். வழக்கம்போல இதுவும் நான்காம் அடி முதற்சீராக அமைந்திருக்கிறது. ஆனால் ஒன்று சொல்லுங்கள். தசரதன், இராமன், இராவணன் என்ற பெயர்கள் பதின்மூன்றாவது சீராக வரவேண்டும் என்று நினைத்துதான் அமைத்திருக்கிறான் என்று முடிவுக்கு வருவதைப் போல, பதின்மூன்றாவது சீரில் (நான்காம் அடி, முதற்சீர்) ‘ஐயோ' என்று வரவேண்டும் என்று கருதித்தான் கவிஞன் இந்தப் பாடலை இயற்றத் தொடங்கியிருப் பானா? அந்த ‘ஐயோ' என்ற ஆட்சிக்காகத் தான் முதல்சீரை ‘வெய்யோன்' என்று எதுகையாக அமைத்தானா? சிந்திப்போம்.

ஹரிகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline