|
|
|
 |
தான் பேச எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிய தெளிவான அறிவு; அப்படி அறிந்ததனால் உண்டான அறிவையும் தன் அனுபவத்தையும் மற்றவன் உணரும் படி, அவனுக்குத் தெளிவு ஏற்படும்படியாகச் சொல்லும் நோக்கம்; திறன். இவற்றைத் தவிர, தன்னுடைய பாடு பொருள் எதுவென அதை அகத்தில் ஆழ்ந்து சிந்தித்த காரணத்தால் உண்டாகும் அகவெளித் தேதற்றம்; காட்சி. விழிப்பு நிலையில் உண்டாகும் அகத்தோற்றம், மனச்சித்திரம், தரிசனம் எனப்படும் 'ஆநந்தக் கனவு' என்று அகத்தில் காட்டப்படும் காட்சிகள்; அத்தகைய காட்சிகளில் லயிப்பதால் உண்டாகும் உள் உருக்கம்; கண்ணீர்த் துளி வளர அதை அனுபவிக்கும் ரசானுபவம், ரசபாவம் ஆகியவற்றின் கலவையே ஒரு கவிஞனை இயக்கத் தொடங்குகிறது என்பது பாரதியின் 'தெளிவுறவே அறிந்திடுதல்' என்ற பாடலின் மூலமாக நமக்குப் புலப்படுகிறது என்பதைப் பார்த்தோம். இவை அனைத்தும் நீ அருளும் தொழில்கள். அம்மா, தமிழ்வாணி, இவற்றை எல்லாம் எனக்கு அருள்வாய் என்று பாரதி கேட்டதையும் பார்த்தோம்.
'தான் சொல்லப் போவது இன்னது' என்பதைத் தீர்மானித்து, ஓரளவுக்கு அதை மனத்துக்குள் வடிவம் கொடுத்தபிறகே எந்த நல்ல கவிஞனும் எழுதத் தொடங்குகிறான். கவிஞனும் என்ற இடத்தில், எழுத்துக்காரனும் என்று போட்டுக் கொள்ளலாம். அது எந்தத் துறையானாலும் சரி, எந்தவகை எழுத்தானாலும் சரி. இந்த விதி பொருந்தவே செய்யும். பிறகு எழுதத் தொடங்கும்போது, தான் முன்னர் நினைத்திராத பல சிந்தனை வடிவங்கள் 'மேசையில்' உதிப்பதை எழுதுபவர்கள் அனைவரும் அறிவார்கள். எழுதத் தொடங்கும்போது ஒரு வடிவமும், எழுதிக் கொண்டே வருகையில் அது இன்னமும் தெளிவானதும் துல்லியமானதுமான வடிவமும் பெறுகிறது என்பதை எல்லா எழுத்துக்காரர்களும் அறிவார்கள். உணர்ந்திருப்பார்கள்.
 | | தனக்கு முன்னால் பரந்து விரிந்துகிடக்கும் சொற் குவியலில் இருந்து, தனக்கு வேண்டியதும் மிகப் பொருத்தமானதுமான சொல்லை ஒவ்வொரு எழுத்தனும் பொறுக்கித்தான் எடுக்கிறான். கவனமாகப் பொறுக்கியெடுக்கப்பட்ட சொல்லின் மூலமாக வெளிப்படும் உணர்வே மிகக் கூர்மையான எழுத்தாக வடிவம் பெறுகிறது. |  |
இப்படி எழுதப்படும் சமயத்தில் கவிஞனுடைய அறிவும், ஆன்ம அனுபவமும், உணர்வுகளும் சமஅளவில் கூர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு கருத்தைச் சொல்லும்போது அதை இன்ன இன்ன சொற்களால் சொல்வதுதான் பொருத்தமானது என்று தீர்மானித்தே ஒரு நல்ல கவிஞன் அந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறான். 'கவிதை என்பது அப்படியே வருவது; அது வந்த வண்ணமாக, அதைத் துளியும் மாற்றாமல் அப்படியே தருவதுதான் ஒரு கவிஞனுடைய வேலை' என்பது பெரும் பான்மையானவர்களின் அபிப்பிராயமாக இருந்து வருகிறது. ஏனென்றால், எந்தப் பகுதியை வாசிக்கிறோமோ அந்தப் பகுதி வெகுஇயல்பாக, எந்தச் சிக்கலும் சிடுக்கலும் இன்றி விரைந்து செல்லும் நதியைப்போல் நடப்பதைப் பார்க்கும் யாருக்கும் அதன் பின்புலத்தில் அந்த எழுத்தனுடைய மனம் எத்தனை திசைகளை நோக்கிப் பறந்தது; எத்தனைக் காட்சிகளை உள்ளே நிறுத்தி அனுபவித்து, சொல்ல நினைத்து, சொல்லாமல் ஒதுக்கியது; எத்தனைச் சொற்களைக் கைகளில் அள்ளி, வரிசைப்படுத்தி வரிசைப்படுத்திச் சலித்துத் தூக்கியெறிந்து சரிசெய்து சரிசெய்து இதனை உருவாக்கியது என்பதை உணரக்கூடிய வாய்ப்பே இருப்பதில்லை. ஏனெனில் இவை எல்லாமே, எழுதப்படுவதற்கு முன்னர், மனவெளியில் நடந்து முடிந்துவிடுகின்ற மாயங்கள். அவற்றின் தடங்களைக் கண்டு, அறிந்து, இது இன்ன வகையில்தான் ஓடி, இப்போதைய இந்த வடிவத்தை அடைந்திருக்கிறது என்று அடையாளம் காண்பது எல்லோராலும் இயலாத ஒன்று. எழுதிக் காய்த்துப் போன ஒரு கை வேண்டுமானால் இன்னொரு கை எந்தெந்தத் தடங்களில் பயணித்தது என்பதை உணரமுடியும். All that one can feel is the smooth finish; and not the amount of toil that had gone into its making. எவ்வளவு ஒழுங்கற்ற வடிவங்களைத் தேய்த்துத் தேய்த்துச் சிதைத்திருந்தால் இவ்வளவு வழுவழுப்பாக, நதியொழுக்காக நடைபோடும் இந்த ஓட்டத்தை உருவாக்கியிருக்க முடியும் என்பது படைத்தவன் உள்ளத்துக்கு மட்டும்தான் தெரியும்.
இது பொதுவிதி. எல்லா எழுத்துக்கும் உள்ள பொதுவிதி. ஒரு சொல், வாக்கியமாய் உருவெடுத்து, வாக்கியம் பத்தியாய் மாறி, பத்தி அத்தியாயமாக வடிவம் கொண்டு, அத்தியாயம் புத்தகமாகக் கோக்கப்படும் ஒவ்வொரு கணத்திலும் உள்ளே ஒரு பெரிய உருக்கு உலை கனன்றுகொண்டிருக்கிறது. பலகோடி கச்சாப் பொருள்கள் அதனுள் எறியப்படுவதும், எரிக்கப்படுவதும், வார்க்கப்படுவதும் கலைத்துப் போடப்படுவதுமான செயல்பாடு அகவெளியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. தனக்கு முன்னால் பரந்து விரிந்துகிடக்கும் சொற் குவியலில் இருந்து, தனக்கு வேண்டியதும் மிகப் பொருத்தமானதுமான சொல்லை ஒவ்வொரு எழுத்தனும் பொறுக்கித்தான் எடுக்கிறான். கவனமாகப் பொறுக்கியெடுக்கப் பட்ட சொல்லின் மூலமாக வெளிப்படும் உணர்வே மிகக் கூர்மையான எழுத்தாக வடிவம் பெறுகிறது. வாளின் முனையோ, ஈட்டியின் முனையோ வழுவழுப்பாகவும் மிகக் கூர்மையாகவும் இருக்குமாயின், அவை உருக்குலையில் எவ்வளவு நேரம் கொதித்திருக்க வேண்டும் என்பதும், பட்டறையில் எவ்வளவு நேரம் திரும்பத் திரும்பக் காய்ச்சி அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் சொல்லவே தேவையில்லாத செயல்பாடுகள், அல்லவா?
இப்படி வார்த்தை வார்த்தையாகத் தேர்ந்தெடுத்துக் கோப்பதுதான் சொல் ஆட்சி எனப்படுகிறது. எல்லா இடங்களிலும் இதனை அடையாளம் காண முடியாது என்றாலும் ஒருசில இடங்களில் கவிஞன்--கவிஞனாயினும் சரி, மற்ற எந்த வடிவத்தில் தன் உணர்வை வெளிப்படுத்துபவனாயினும் சரி--இந்தக் குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்குவதற்காகத் தன் மனம் எவ்வளவு முன்தயாரிப்புகளைச் செய்தது என்பதற்கான தடங்களை விட்டுவிட்டே செல்கிறான். சொல்வீழ்ச்சி என்பது முற்றிலும் வேறுபட்டது. |
|
|
கம்பனுடைய பாடல்களின் செய்நேர்த்தியை யும் (workmanship) அவற்றில் உறைந்து கிடக்கும் சொல்ஆட்சியையும் அறிவோம். இந்தச் சொல், இந்த இடத்தில் ஆளப்பட வேண்டும் என்று கவிஞனுடைய மனத்தில் இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பின்னரே இது இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது என்ற தடத்தைப் பின்பற்றிச் சென்று அறியவொண்ணாத வகையில் கவிஞர்கள் தாங்கள் நடந்துசென்ற தடங்களை, அடையாளமின்றி விட்டுச்சென்றி ருக்கிறார்கள். எனினும் ஒருசில இடங்களில், சிறிய புன்னகையுடன், 'நீதான் அடையாளம் கண்டுகொள்ளேன். என்மனம் இன்னின்ன வழிகளில், தடங்களில்தான் பயணித்தது' என்று நமக்கு அடையாளம் காட்டுவதுபோலே தான் நடந்த பாதையையும் அவனுடைய பாடலில் இனம்காண நமக்கு அவன் வழியேற்படுத்தியும் கொடுத்திருக்கிறான். 'இது சொல் ஆட்சிதான். இந்தச் சொல்லை இந்த இடத்தில் அமைக்கவேண்டும் என்று கவிஞன் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறான்' என்பதை ஐயத்துக்கு இடமில்லாமல் அடையாளம் காட்டக்கூடிய தடம் எங்காகிலும் தென்படுகிறது என்றால், அத்தகைய இடங்கள் எனக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர் நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம், கசரத துரக மாக் கடல்கொள் காவலன், தசரதன், மதலையாய் வருதும் தாரணி.
இந்தப் பாடலைப் பார்த்த பிறகு, இதையும் பாருங்கள்.
சுராமலைய, தளர் கைக் கரி எய்த்தே, 'அராவணையில் துயில்வோய்!' என, அந்நாள், விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே, 'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.
இவற்றில், 'தசரதன்', 'இராமன்' ஆகிய பெயர்கள் அமைந்துள்ள இடங்களை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் பேசுவோம்.
தொடரும்
ஹரிகிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|
|
|
|