|
|
|
கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். உணர்வுநிலையில் தான் கரைந்து, மெல்ல மெல்லத் தன்னைக் கரைத்துக்கொண்டு எழுதுகிறவனுடைய எழுத்துதான், படிக்கிறவனுடைய மனத்தில் படர்ந்து, எழுதியவன் எழுதிய அந்தக் கணத்தில் அவன் மனத்தில் நிலவிய உணர்வுகளைத் தன்னுள் வாங்கி அனுபவிக்கச் செய்கிறது. கவிதையில் அறிவு மட்டுமே தனித்து நின்று சுடர்கின்ற தருணங்கள் உண்டு. முற்ற முழுக்க அறிவால் மட்டுமே அணுகிப் பார்த்து, அலசி, ஆராய்ந்து, ஒவ்வொரு சொல்லாக எடுத்து, இதற்கு என்ன பொருள், இந்த இடத்தில் இந்தச் சொல்லுக்கு மாறாக இன்னொரு சொல்லைப் போட்டால் பொருள் வருமா, இந்தப் பொருள் கிட்டுமா, இதைவிடச் சிறப்பான பொருள்வர இடமிருக்கிறதா' என்றெல்லாம் மூளையைக் கசரத் வாங்கும் நூல்கள் உண்டு. அவற்றிலெல்லாம் கிட்டும் அனுபவம் வேறுமாதிரியானது. அறிவால் அணுகி, அறிவால் அறிந்து, அறிவாகவே தெளிவது அது. திருக்குறள் இப்படிப்பட்ட நூல்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. திருக்குறளிலும், கூர்மையான அறிவுச் சுடருக்குள்ளும் கொழுந்தான உணர்வு கிளர்ந்தெழும் இடங்களும் உண்டு. அவரை அணுகவேண்டுமானால் கோவிலுக்குப் போவதுபோன்ற ஒரு மனோபாவத்தோடு--பக்தி சிரத்தை என்று சொன்னாலும் சரி, கூர்த்த, கவனத்தைச் சிதறவிடாத, கருத்தொருமித்த உளப்பாங்கு என்று சொன்னாலும் சரி--அணுகவேண்டும். ‘கரமலர் மொட்டித்து, இருதயம் மலர' என்று மாணிக்கவாசகர் பாடுவது போல, ‘விரிந்து திறந்திருப்பதாகிய கரங்கள் இரண்டும் மொட்டாகக் கூம்பி, கூம்பிக் கிடக்கும் இருதயம், ஒருபோதும் திறவாத மனவெளி மலர்ந்து திறந்து' அறிவாகிய ஆகாயத்தில் நிலைநின்றால் தான் பேராசான் வள்ளுவன் சொல்வதன் பொருளைக் கொஞ்சமேனும் உணரமுடியும். இப்படிப்பட்ட திருக்குறளுக்குள்ளும் உணர்வு நிலையில் நின்று பொருள்கொள்ளக்கூடிய பாக்கள் இருக்கின்றன என்பதுதான், திருவள்ளுவன் என்ற பேரறிவாளனுக்குள்ளும் உணர்வு ததும்பும் கவிஞன் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அறிவிக்கும் அடையாளங்களாக நிற்கின்றன.
| திருக்குறளுக்குள்ளும் உணர்வு நிலையில் நின்று பொருள்கொள்ளக்கூடிய பாக்கள் இருக்கின்றன என்பதுதான், திருவள்ளுவன் என்ற பேரறிவாளனுக்குள்ளும் உணர்வு ததும்பும் கவிஞன் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அறிவிக்கும் அடையாளங்களாக நிற்கின்றன. | |
ஆனால் பல சமயங்களில் கவிதைக்குள் மூழ்கவேண்டுமானால், அறிவு ஒரு துணைக் கருவிதான். அங்கே பாவம்தான் உயர்ந்து நிற்கவேண்டும். ரசானுபவம் என்பது, பாவத்தையே பெரிதும் சார்ந்தது. அறிவுக்கு அங்கே இரண்டாம் இடம்தான். அவ்விடத்தில் தர்க்க நியாயங்களெல்லாம் சற்று ஒதுங்கி நிற்கவேண்டியதுதான். If baby only wanted to, he could fly up to heaven this moment. It is not for nothing that he does not leave us. He loves to rest his head on mother's bosom and cannot ever bear to lose sight of her என்று தாகூர் பாடுகிறார். (Crescent Moon - Tagore) ‘குழந்தை மட்டும் நினைத்தானானால் இந்தக் கணத்திலேயே அவனால் வானில் பறந்து சென்று சொர்க்கத்தை அடைய முடியும்,' என்று தொடங்கும்போது நமக்குப் புன்னகை அரும்பத்தான் செய்கிறது. ‘ஆனால் அவனுக்குச் சாய்ந்துகொள்ள அம்மாவின் மார்பு வேண்டுமே! அம்மாவைப் பிரிந்திருக்க அவனால் ஆகாதே' அதனால்தான் குழந்தை வானில் பறக்கவில்லை என்று அவர் அடுத்த வரியைச் சேர்க்கும்போது நம்வீட்டில் உள்ள குழந்தையை அந்தக் கணமே வாரி அணைத்து நம்முள் இறுக்கிக் கொள்ளத் தோன்றுகிறதல்லவா, அது கவிதானுபவம்.
இதை அனுபவிக்க வேண்டுமானால் உண்மையில் அறிவின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டால்தான் சாத்தியம். இங்கே தர்க்கத்துக்கோ, அடிப்படைகளுக்கோ, ஆதாரங்களுக்கோ, மூளைக்கோ வேலை இல்லை. முழுக்க முழுக்க உள்ளம்தான் முழுகவேண்டும். உள்ளம் நனைவதனால் அறிவுக்குள் ஏற்படும் ஆனந்தம் இந்த அனுபவம். குழந்தைக் கண்ணனைப் பற்றிய பாடல்களைக் கேட்கக் கேட்க நம்முள் அப்படி ஓர் ஈடுபாடு உண்டாகிறதல்லவா, காட்சி விரிகிறதல்லவா, கவிஞன் பேசும் அந்தச் சித்திரம் நம் உள்ளத்துக்குள் தோன்றி நமக்கு உள்ளேயே நிகழ்கிறதல்லவா!
‘காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடற்பூச் சூடிவருகின்ற தாமோதரா....'
-என்று தாய் யசோதையாகவே மாறிப் பெரியாழ்வார் அழைக்கிறார் என்றால் அங்கே நம் கண்முன்னே, காடுகளில் கன்றுகாலிகளை மேய்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் பன்னிரண்டு-பதின்மூன்று வயதுச் சிறுவன் தென்படுகிறான். ‘கற்றுத் தூளிகாண் உன்னுடம்பு' என்னடா இப்படி உடம்பெல்லாம் புழுதியடித்துக் கிடக்கிறது என்று தாய் பரிவோடு சொல்வது காதில் கேட்கிறது. ‘நீராட்டமைத்து வைத்தேன்' என்று அடுத்த அடியைப் பேசும்போது, ‘போப்பா, போய் குளிச்சுட்டு வா' என்று சொல்வதும், ‘ஆடியமுது செய். அப்பனும் உண்டிலன். உன்னொடு உடனேயுண்பான்' என்று தொடர்கையில், அங்கே பசியைப் பொருட்படுத்தாது தன் பிள்ளை வருவதற்காகக் காத்துக் கிடக்கும் அப்பனும், அந்த வீட்டில் நிலவும் அன்புப் பெருக்கும் நம் கண்முன்னே துளித்துளியாக விரிகின்றன என்றால், இந்த அனுபவம் முழுக்கவும் பெரியாழ்வாரின் மனவெளியில் நிகழ்ந்தது; அவர் மனக் கண்ணில் கண்டதைக் கண்டவண்ணம் எழுதினார் என்பதல்லவா நிதர்சனமாகிறது! லாஜிக் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு, கவிஞன் உருவாக்கும் சித்திரத்துக்குள் மூழ்கி அனுபவிப்பவனுக்குத்தான் இந்த அனுபவம் சித்திக்கும். இல்லையா? |
|
அது ஒருபுறம் என்றால், இந்தச் சித்திரத்தை உருவாக்கினானே, அவனுடைய மனத்துக்குள், இந்தச் சித்திரம் உருவாகிக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நிகழ்ந்த மாயாஜாலம், ‘சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல்' என்ற வரிக்குள் மாணிக்கவாசகர் பாட்டில் சிக்கிய இறைவனைப் போல் அந்த அனுபவம் ‘சிக்கெனப் பிடி'பட்டிருக்கிறதல்லவா! பெரியாழ்வாராயினும் சரி, தாகூராயினும் சரி, நாம் பேசிகொண்டிருக்கிறோமே ‘ஐயோ எனும் வீழ்ச்சி' அந்தக் கணத்தில் நிலைநின்ற கம்பனாயினும் சரி, அந்தக் கவிஞர் பெருமக்களின் உள்ளத்தில் உண்டான ஆனந்தக் கனவின் அனுபவம் இன்னது என்பது அவர்களுடைய வாக்கின் மூலமாகவே வெளிப்படுகிறதல்லவா! படிக்கின்ற கணத்தில், படிக்கின்றவனுடைய உள்ளத்தில் விரியும் காட்சிக்கு ஒரு பத்து மடங்கு பெரிய காட்சியல்லவா அதைத் தீட்டியவனுடைய மனத்தில் விரிந்திருக்க வேண்டும்!
| ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? | |
'வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறைய' - கம்பனுடைய மனத்தில் மூன்றுபேர் நடந்துபோகும் காட்சி தென்படுகிறது. அவனுடைய கவனமோ எனில் ராமன்பேரிலேயே நிலைத்திருக்கிறது. இவனுடைய மேனியின் ஒளியில் எது மறைகிறது என்றால், சூரியனுடைய ஒளி மறைகிறது என்கிறான் கவி. அவன் உள்ளத்தில் அது அப்படித் தென்பட்டிருக்கிறது, அல்லவா!. ஒளி என்றால் நமக்கெல்லாம் என்னவென்று தோன்றும்? ஒளியால் காட்சி கிட்டும். சுற்றிலும் உள்ள, ஒளி உண்டாகும் வரையில் இருளால் மறைக்கப்பட்டுக் கிடந்த பொருளெல்லாம் காட்சிப்படும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஒளியால் ஒளி மறையும் என்பது கவிஞனுக்குப் புலப்பட்டிருக்கிறதல்லவா! இரவெல்லாம் பூத்துக் கிடந்த வானம் பகலானால் ஒற்றைச் சுடராக மட்டுமே காட்சி தருகிறதே, இரவு முழுக்க வானை நிறைத்துக் கிடந்த விண்மீன்கள் போயெங்கே ஒளிந்தன! அவை எங்காவது போய் விட்டனவா! ‘ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?' என்றெல்லாம் கவிதானுபவம் என்ற போதையில் கிறங்கிப்போய்க் கேட்கிறானே பாரதி, அப்படி, இவ்வளவு நேரம் வானத்தை நிறைத்துக் கிடந்த விண்மீன்களையெல்லாம் ஞாயிறு என்ன செய்துவிட்டான்? அவையெல்லாம் எங்கே போயின?
எங்கும் போகவில்லையல்லவா! அவை அங்கேயேதானே இருக்கின்றன? அவற்றை மறைத்திருப்பது சூரியனுடைய ஒளியாகிய கரங்கள் அல்லவா! அது கவிஞனுடைய கண்ணுக்குத் தெரிகிறதல்லவா! அந்தக் காட்சியிலேயே அவனுக்கு இன்னொரு தோற்றமும் கிடைக்கிறது. ‘வெய்யோன் ஒளி, தன் மேனியின் விரிசோதியில் மறைய'. அப்படி ‘விண்மீன்களை எல்லாம் ஒரு கணத்தில் தன் கதிர்க் கற்றைகளால் அளாவி, பரவி, சூறையாடி மறைத்துவிட்டது எந்தச் சூரியனோ, அந்தச் சூரியனை ரகுகுலச் சூரியனாகிய இந்தச் சூரியனுடைய மேனியிலிருந்து எழும் சோதி மறைத்து விட்டதே' என்று அவனுடைய உள்ளத்தில் விரியும் ‘ஆநந்தக் கனவு' சொல்வடிவம் கொண்டு வெளிப்படுகிறது.
கனவு முடிந்துவிட்டதா? மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை என்ற வண்ணமாய், ஒளியால் ஒளி மறையும் என்ற அறிவியலையும் உணர்த்தியபடி அது இப்போதுதானே தொடங்கியிருக்கிறது. தொடர்வோம்.
V.ஹரிகிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|