அன்னையர் தினம் டின்னர்
|
|
|
|
2003 டிசம்பர் மாதம் 21ம் நாள் நடுச்சாமம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. நான் யன்னலோர ஆசனமொன்றில் அமர்ந்தபடி பயணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். ஏறத்தாழ 18 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்குப் போவதனால் மனதில் பலவிதமான நினைவுகள். 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகுந்த சிக்கலான சூழ்நிலையில் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். இரண்டு வருடங்களின் பின்னர் எனது பெற்றோரும் கனடாவிலுள்ள என் சகோதரி யோடு தங்கிவிட்டார்கள். அடிக்கடி ஊருக்குப் போகவேண்டும் என்ற உந்தல் எனக்கு இருந்தபோதும் படிப்பு, அதன் பின்னர் வேலை, இலங்கையில் இடைவிடாது நடைபெறும் போர் என்பவற்றால் திரும்பிப் போகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதால், எப்படியாவது போய் அந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை காலடி வைக்க வேண்டுமென்று ஓர் ஆசை.
நான் போவது என்று முடிவெடுத்ததும் எனது தாயார் திருமணப் பேச்சில் இறங்கிவிட்டார். எனக்கு முப்பத்தாறு வயசாகியும் திருமணமாகவில்லை என்பதில் அவருக்கு மிகுந்த கவலை. கனடாவில் பல பெண்களை எனக்கு அவர் ஒழுங்கு செய்ய முயன்ற போதும் ஏதேதோ காரணங்களால் அவை சரிப்பட்டு வரவில்லை. ஓவ்வொரு முறை தடைப்பட்டுப் போகும்போதெல்லாம் என் மனத்தில் ஒரு இனம்புரியாத அமைதி எற்படும். இப்போது நான் இலங்கை போவதைச் சொன்னதும், ஊரிலுள்ள சில உறவினர்களிடம் 'அவனுக்கு ஒரு நல்ல படிச்ச பெண்ணாப் பாத்து ஒழுங்கு பண்ணுங்கோ. நாங்கள் வந்து கல்யாணத்தை நடத்திறம்' என்று அம்மா சொல்லி வைத்துள்ளார். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லை. நம்பிக்கையும் இல்லை.
அமெரிக்கா வருவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலியூர் என்ற சிறிய கிராமத்தில் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை அப்படியே துல்லியமாய் மனதில் பதிந்துபோய் இருக்கின்றது. இங்கு வந்து பதினெட்டு வருடங்கள் ஆகிவிட்டன என்று நம்பவே முடியவில்லை. முதல் பதினெட்டு வருடங்களும் உள்ளத்தில் நிரந்தரமாய்ப் பதிவாகிவிட்டது போலவும், அடுத்த பதினெட்டு வருடங்கள் பட்டும் படாமலும் விரைவாக ஓடிவிட்டது போலவும் தோன்றியது. கிராமத்தில் பெற்றோர், சகோதரி, நண்பர்களோடு கழித்த அந்த நாட்கள் மிகுந்த மகிழ்ச்சியையும், இறுதியில் அங்கிருந்து வெளியேறிய காலகட்டத்தில் தாங்கமுடியாத துன்பங்களையும் தந்தவை. அந்தக் கிராமத்தை விட்டு நான் வெளியேறிய அந்த நாள் இன்றும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. கண்கள் கலங்க, குற்ற உணர்வுகளால் கூனிக் குறுகியபடி நண்பர்கள், உறவினர்கள் யாருக்குமே சொல்லாமல் பிரிந்து சென்ற நாள் அது.
எனது பால்ய நண்பர்களின் நினைவுகள் எனது உள்ளத்தின் ஆழத்தில் நிரந்தரமாகவே குடியேறிவிட்டவை. குமார், யாழினி, ஜூலியன், பாலன், வேல், குஞ்சு இப்படி எத்தனை நண்பர்கள். குறிப்பாக குமார், யாழினியின் நினைவுகள். நாங்கள் மூவரும் ஒரே ஊரில் ஒரே காலகட்டத்தில் பிறந்து, ஒன்றாகப் படித்து, ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாகக் குறும்புகள் செய்து வளர்ந்த காலம் அது. யாழினி பெரிய பெண்ணாகும் வரைக்கும் எப்போதும் எங்கள் இருவருட னுமே கூடித் திரிவாள். அவள் தனது நண்பிகளோடு செலவிட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை எங்களுடன் செலவிட்டாள். அதைப்பற்றி மற்ற நண்பர்கள் கேலி செய்வதை நாங்கள் பொருட்படுத்தா திருந்தோம்.
யாழினிக்கு அப்போது 13 வயதிருக்கும். ஒரு சனிக்கிழமை ஊர் பிள்ளையார் கோவில் திருவிழாவுக்கு ஒன்றாகப் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். நானும் குமாரும் மூன்று மணி மட்டும் யாழினிக்காக எனது வீட்டருகில் காத்திருந்தோம். அன்று நேரத்திற்கு வரவில்லை. அவள் வீட்டிற்குப் போய் கதவைத் தட்டினோம். யாழினியின் அம்மா எனக்கு ஒருவகையில் தூரத்து உறவினர்தான். 'சந்திரன், இனிமேல் அவள் உங்களோடையெல்லாம் ஊர் சுற்ற வரமாட்டாள்' என்று ஒரு புன்முறுவலோடு சொன்னார் மாமி. அதன் பின்னர் சில நாட்களாக யாழினியைக் காணவில்லை.
சடங்குகளெல்லாம் முடிந்து ஒரு வாரத்தின் பின்னர் அவளைக் கண்டபோது அப்படியே அசந்து போனேன். என்ன ஒரு மாற்றம். எத்தனை அழகு. நான் அவளருகே வந்ததும் முதன் முறையாக அவள் முகத்தில் நாணம் இழையோடக் கண்டேன். என் உள்ளத்திலும் கூடத்தான் என்றுமில்லாத ஒரு புதிய உணர்வு. அவளைப் பள்ளிக்கூடம், ரியூட்டரி, கோவில் போன்ற இடங்களில் காணும்போது மட்டும் பேசத் தவறுவதில்லை. இப்போ தெல்லாம் அவள் மனத்தில் ஒரு பக்குவம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது. நாங்கள் இருவரும் வயதுக் கோளாறினால் தவறுகள் செய்யும் போதெல்லாம் அவள் உரிமையோடு எங்களைக் கண்டித்தாள். குமார் தனது பக்கத்து வீட்டு மாலதிக்கு காதல் கடிதம் கொடுக்க முயற்சித்து அவளின் பெற்றோரிடம் மாட்டிக்கொண்ட போது, பெற்றோரைவிட அவளிடமே அதிகம் ஏச்சு வாங்கினோம். எனக்கு அவள் மேல் அதிகமான ஈடுபாடு ஏற்படத் தொடங்கியது. அவளைப் பார்ப்பதற்காகவே அவளின் வீட்டடியால் அடிக்கடி சைக்கிளில் சென்றேன். அவள் மேல் முன்பு இருந்த நட்பு வெவ்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வந்தது.
பைலற்றின் புறப்படுவதற்கான அறிவிப்பு எனது சிந்தனையைக் கலைத்தது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும் அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன். டிசம்பர் 23 இரவு சிங்கப்பூரினூடாகக் கொழும்பு சென்றடைந்தேன். அடுத்த நாள் காலையில் விமானத்தில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமானேன். விமானம் பலாலி விமான நிலையத்தை அடைந்தபோது காலை 11 மணி. தமிழ் மண்ணில் நீண்ட காலத்தின் பின் கால்வைத்தபோது உடம்பில் புல்லரித்தது. வெயில் சுள்ளென்று எரித்தது. மெதுவாக சூழலை நோட்டம் விட்டேன். பலாலி இப்போது ஒரு மிகப்பெரிய விமானதளம். விமானப் படையினர் நீலச் சீருடையுடன், AK47 துப்பாக்கிகளுடன் சுற்றி நின்றிருந்தனர். எங்களை அழைத்துச்சென்று பேருந்து ஒன்றில் ஏற்றி யாழ்ப்பாண நகரை நோக்கி அனுப்பிவைத்தனர். யாழ்ப்பாணம் செல்லும் பாதையின் இருபுறமும் தமிழ் மக்களின் வீடுகளும் தோட்டங்களும் பாழடைந்து காணப்பட்டன. பலாலியைச் சுற்றியிருந்த நிலங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப் பட்டிருந்தனர்.
நான் புலோலியூர் போய்ச் சேர்ந்தபோது மணி இரண்டாகிவிட்டது. பேருந்து நிலையத்திலிருந்து எனது சித்தப்பா மகன் ராஜனின் வீட்டிற்கு நடந்தே சென்றேன். எத்தனையோ தடவை நடந்து சென்ற பாதைதான் அது. ஆனாலும் யாரையுமே அடையாளம் தெரியவில்லை. யாருமே என்னை அடையாளம் கண்டுகொள்ளவும் இல்லை. மனதில் ஒரு சோகம் படரத் தொடங்கியது. ராஜன் வீட்டில் அவனும் அவனது மனைவி கமலா, குழந்தைகள் செல்வி, குமரன் அனைவருமே எனது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். என்னைக் கண்டதும் 'வா சந்திரன், என்ன நல்லா மெலிஞ்சு போனாய்' என்று ராஜனும் கமலாவும் அன்பாக வரவேற்றார்கள்.
சிறிய வீடு, சுற்றிலும் பச்சை பசேல் என நிறைய மரங்கள், முற்றத்தில் கிணறு. அப்போது போர் நிறுத்தம் என்பதால் பயமின்றி வாழ்க்கை ஓடியது. இங்கிருந்து கொண்டு சென்றிருந்த சாக்லட், உடைகள், சில விளையாட்டுப் பொருட்கள் என்ப வற்றைக் குழந்தைகளிடம் கொடுத்தேன். அவர்களின் முகங்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன. குளித்து, சாப்பிட்டபின்னர், முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந் தோம். உறவினர்கள், நண்பர்கள், வெளி நாட்டில் இருப்பவர்கள், வெளிநாடு செல்ல வசதியின்றி ஊரில் தங்கி விட்டவர்கள், நாட்டு நிலைமை, தமிழர் படும் இன்னல்கள் பற்றியெல்லாம் பேசினோம். சூரியன் சற்று மேற்கே சாய்ந்து, வெக்கை குறைந்ததும் நான் வளர்ந்த அந்தக் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன்.
பதினெட்டு வருடங்கள் அப்பா, அம்மா, சகோதரியோடு வாழ்ந்த எமது இல்லத்தின் முன் போய் நின்ற போது எற்பட்ட உணர்வுகளை விவரிக்க வார்தைகள் இல்லை. ஒரு கனவு போல இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது நட்டு, தண்ணீர் ஊற்றிப் பராமரித்த மாமரங்கள் பெரிதாக வளர்ந்திருந்தன. அந்த வீட்டில் இப்போது போரினால் அகதிகளாகிவிட்ட குடும்பம் ஒன்று தற்காலிகமாக வாழ்ந்துகொண்டிருந்தது. உள்ளே போய் என்னை அறிமுகப் படுத்தி, வீட்டைச் சுற்றிப் பார்க்க அனுமதி பெற்றேன். வீடு சற்று பாழடைந்த நிலையில் இருந்தாலும் துப்புரவாக இருந்தது. நான் படுத்த அறை, படித்த அந்தச் சின்ன மேசை, முன் விறாந்தையில் சுகமாகச் சாய்ந்தபடி புத்தகம் படிக்கும் அந்த ஈசிசேயர், எல்லாமே பழைய நினைவுகளைத் கிளப்பிவிட்டன. சிறிது நேரம் வீட்டு வாசற்படியில் இருந்துவிட்டு வெளியே போனபோது இனி எப்போது திரும்பி வருவேனோ என்று ஒரு ஏக்கம் ஏற்பட்டது. 1983ஆம் அண்டு ஜூலை மாதம் கடைசிப் பகுதியில் ஒருநாள். நான், குமார், ஜூலியன் இன்னும் சில நண்பர்களும் கிணற்றுக் கட்டில் அமர்ந்தபடி வம்பளந்து கொண்டிருந்தோம். சம்பாஷணை பள்ளிக்கூடம், ரியூட்டரி, சினிமா, எங்களோடு படிக்கும் பெண்கள், அயல் வீடுகளில் இடம்பெறும் சுவாரசியமான சம்பவங்கள் என்று பல திசைகளில் சென்று கொண்டிருந்தது. வேல் சாரத்தை மடித்துக் கட்டியபடி விரைவாக ஓடி வந்தான். 'விஷயம் தெரியுமா, அங்கை கொழும்பிலை இருக்கிற தமிழர்களுக்கெல்லாம் அடி விழுகுதாம். சிங்களக் கும்பல்கள் தமிழரின் வீடுகள், வியாபார நிறுவனங்கள், கார்களுக்கெல்லாம் தீ வைக்கிறாங்களாம். நூறுபேருக்கு மேல் தமிழர் செத்துப் போச்சினமாம்' என்றான். 'உனக்கு யார் சொன்னது' என்று கேட்டேன். 'பக்கத்து வீட்டு அண்ணா கொழும்பிலை இருக்கிற தன்ரை சிங்கள பிரண்டோடை ரெலிபோனிலை கதைச்சவராம். அவன்தான் சொன்னவனாம். தங்களின் வீட்டிலையும் இரண்டு தமிழ் குடும்பங்கள் அகதிகளா வந்து தங்கியிருக்கிறதா அவன் சொன்னானாம்' என்றான் வேல். கலகலப்பாக இருந்த அந்த சூழல் அமைதியாயிற்று. அமைதியைக் கலைத்தபடி ஜூலியன் 'எவ்வளவு காலத்துக் குத்தான் தமிழர் குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க முடியும்' என்றான். 'இது என்ன ஒரு முறையா இரண்டு முறையா? இப்படி எத்தனை முறை நடந்திட்டுது' என்று நான் வருத்தமுற்றேன். அத்தோடு எங்கள் கூட்டம் அரைகுறையாக முடிவுக்கு வந்தது.
நாலைந்து நாட்களில் நிலமையின் உக்கிரம் தெரியவந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து போயிருந்தனர். லட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் இலங்கை அரசும், காவல் துறையினரும் நிலமையைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கொழும்பில் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக இறுதியாக நிலமை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாடசாலை களில் தங்கியிருந்த மக்கள் கப்பல்கள் மூலம் தமிழர் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். இலங்கை அரசு தமிழரின் மொழி, கல்வி, பொருளாதார வளர்ச்சி, தொழில் வாய்ப்பு போன்றவற்றில் காட்டிவந்த பாரபட்சத்தினால் முன்னரே அதிருப்தியோடு இருந்த தமிழ் மக்கள் இப்போது மிகுந்த கவலை கொண்டனர். குறிப்பாக இளைஞர் கள் கவலையும் ஆத்திரமும் அடைந்தனர். அதனால் ஏற்கனவே துளிர் விட்டிருந்த எதிர்ப்பு இயக்கங்கள் துரிதமாக வளரத் தொடங்கின.
அடுத்தடுத்த மாதங்களில் எமது கிராமத்தி லிருந்து பல வாலிபர்களும் சில இளம் பெண்களும் காணாமல் போயினர். அவர்கள் எதிர்ப்பு இயக்கங்களில் சேர்ந்து இராணுவப் பயிற்சிக்காக இந்தியா செல்வதாகச் செய்திகள் வந்தன. பெற்றோர் எவ்வளவுதான் அரசின்மேல் ஆத்திரம் கொண்டிருந்தாலும், தமது பிள்ளைகளின் பிரிவைத் தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர். எமது பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போயிற்று. எனது நண்பர்களில் சிலரும் பெற்றோர்களின் அனுமதியின்றி இயக்கங்களில் சேர்ந்தனர். நானும் குமாரும் இயக்கங்களில் சேரும் எண்ணம் கொண்டிருக்காவிட்டாலும், குற்ற உணர்வு எம்மை உறுத்திக்கொண்டே இருந்தது. யாழினி மட்டும் மிகவும் தெளிவாகவே இருந்தாள். ஆயுதம் எடுப்பதால் இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை என்பது அவளுடைய கருத்து. 'ஆயுதம் எடுக்காமல் வேறு எப்படி இந்தப் பிரச்சினை தீரப்போகிறது? 1956ஆம் ஆண்டிலிருந்து பேச்சுவார்த்தைகள், அஹிம்சைப் போராட்டம் எதுவுமே பயனளிக்கவில்லையே' என்று நாங்கள் அவளோடு விவாதித்துக் கொண்டிருந்தோம்.
என்பது அவளுடைய கருத்து. 'ஆயுதம் எடுக்காமல் வேறு எப்படி இந்தப் பிரச்சினை தீரப்போகிறது? 1956ஆம் ஆண்டிலிருந்து பேச்சுவார்த்தைகள், அஹிம்சைப் போராட்டம் எதுவுமே பயனளிக்கவில்லையே' என்று நாங்கள் அவளோடு விவாதித்துக் கொண்டிருந்தோம்.
ஆயுதப்போரின் விளைவுகள் எமது கிராமத்தின் அமைதியான வாழ்க்கை முறையை முற்றாக மாற்றிவிட்டன. கண்ணி வெடிகளால் இராணுவத்தினர் இறப்பதும், அதன் பின்னர் கண்மூடித்தனமாக பொது மக்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதும் வழக்கமாகிவிட்டது. இரவுகளில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று சோதனையிடத் தொடங்கினர். பல இளைஞர்கள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு தென்பகுதிச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிலரின் உடல்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. நமது கிராமத்தை ஒரு மரண பயம் சூழ்ந்து கொண்டது. நான், குமார், யாழினி, மற்றும் சில நண்பர்களும் எப்படியாவது நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எமது நடுத்தர வர்க்க அபிலாஷைகளை விட முடியாமலும், அதே சமயம் எமது மக்கள் இராணுவ ஒடுக்குமுறையால் படும் இன்னல் களைக் கண்டு மனம் பொறுக்க முடியாமலும் புழுங்கிக் கொண்டிருந்தோம். இந்த நிலையிலும் பள்ளிக்கூடம், ரியூட்டரி, கிணத்தடிச் சந்திப்புகள் என்று எமது நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. யாழினியைப் பற்றி என் மனதில் வளர்ந்த ஆசைகள் குறையவே இல்லை. அவளிடம் நேரில் சொல்லும் துணிச்சலும் என்னிடம் இல்லை. மனதில் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தேன்.
ஒரு சனிக்கிழமை வீட்டில் இருக்கப் பிடிக்காமல் குமாரைச் சந்திக்கலாமெனக் கிளம்பினேன். குமார் எங்கோ வெளியே போய்விட்டதாக குமாரின் அம்மா சொன்னார். முன்னரெல்லாம் எப்போதும் ஒன்றாகவே எங்கும் போவோம். இப்போது எமது நட்பில் ஒரு தேக்கம் எற்பட்டு விட்டதுபோல் தோன்றியது. நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர சூழ்நிலை மற்றும் நெருங்கும் பரீட்சையின் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாமென்று நினைத்துக் கோண்டே யாழினியின் வீடுநோக்கி நடந்தேன். அவளின் வீட்டை விரைவில் அடைவதற்காக பனம் தோப்புக்கு நடுவில் இருந்த ஒரு ஒற்றையடிப் பாதையினூடாகச் சென்று கொண்டிருந்தேன். சற்றுத் தொலைவில் யாரோ பேசுகின்ற சத்தம் கேட்டது. கிட்ட நெருங்கியபோது நன்கு பரிச்சயமான குரல்கள் என்று உணர்ந்தேன். சந்தேகமே இல்லை. அது குமார், யாழினியின் குரல்கள்தாம். ஒருவரை ஒருவர் அணைத்த படி வீழ்ந்து கிடந்ததொரு பனை மரத்தின் மேல் அமர்ந்து சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஏற்பட்ட இந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை. மெதுவே பின்வாங்கினேன்.
மனமுடைந்த நிலையில் வீடு திரும்பிய போது, அம்மா என் முகத்தைப் பார்த்த உடனேயே 'என்ன நடந்தது உனக்கு? ஏன் இப்படி வாடிப்போய் இருக்கிறாய்?' என்று கேட்டார். 'ஒன்றுமில்லையம்மா, சற்றுத் தலை வலிக்கிறது' என்று சொன்னபடியே கட்டிலில் போய் விழுந்தேன். படுக்கையிலிருந்து எழுந்து நடமாட ஒரு வாரமாகி விட்டது. வாழ்க்கையே வெறுத்துப்போய், பள்ளிக்கும் போகாமல், உடல் நலமற்றவன் போல் கட்டிலிலேயே முடங்கிக் கிடந்தேன்.
அடுத்த வாரத்திலிருந்து பள்ளிக்குப் போகத் தொடங்கினாலும், இயலுமானவரை குமாரை யும், யாழினியையும் தவிர்க்கத் தொடங்கி னேன். அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பட்டும் படாமலும் பதில் சொன்னேன். உள்ளத்தில் ஏற்பட்ட அந்தக் காயம் ஆற நீண்ட நாட்கள் ஆனது. அந்த வடு மட்டும் மாறவேயில்லை. படிப்பிலும் அதிகம் கவனம் செலுத்தாமல், தமிழ் மக்கள் மேல் இராணுவம் அவிழ்த்து விட்டிருந்த கொடூரங்களைப் பற்றிக்கூட அக்கறை கொள்ளாமல் ஒரு நடைப்பிணம் போல் நாட்களைப் போக்கினேன். பரீட்சைக்குக் கூட மனம் வைத்துப் படிக்க முடியவில்லை. யாழினியின் வீட்டுப்பக்கம் போவதையே நிறுத்திக் கொண்டேன். அவர்கள் இருவருக்கும் இது நிச்சயமாகக் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கும்.
அன்று சனிக்கிழமை. வழமை போல மதிய உணவு முடிந்ததும் வராந்தாவில் இருந்த ஈசிசேயரில் சாய்ந்தபடி என் தந்தை பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். நான் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து அந்த வாரத்து சஞ்சிகை ஒன்றை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன். தந்தை என்னைப் பார்த்து 'எப்படி, பரீட்சை நல்லாச் செய்தியா?' என்றார். 'பரவாயில்லை' என்றேன். தொடர்ந்து 'அப்பா, இங்கை சரியான பிரச்சினையாய் இருக்கு. நான் மாமாவிடம் அமெரிக்கா போய் அங்கை படிப்பைத் தொடரலாம் எண்டு யோசிக்கிறன்' என்றேன். அதற்கு அவர் 'நானும் அப்பிடித்தான் யோசிச்சனான். மாமாவோடை அமெரிக்கா விலை அல்லது அக்காவோடை கனடாவிலை இருந்து படிக்கலாம். எதுக்கும் நான் அவையோடை கதைச்சுப் பார்க்கிறன்' என்றார். |
|
அன்று இரவு பத்துமணி இருக்கும். நாங்கள் அனைவரும் படுக்கைக்குச் சென்று சிறிது நேரந்தான் ஆகியிருக்கும். வீட்டுக்கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள். எனது தந்தை கதவைத் திறந்தார். ஸ்ரீலங்கா படையினர் துப்பாக்கிகள் சகிதம் வந்திருந் தார்கள். 'இந்த வீட்டிலை யாரும் இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா' என்று அரைகுறைத் தமிழில் கேள்வி எழுப்பினர் படையினர். 'இங்கை அப்படி யாரும் இல்லையே' சிங்களத்தில் பதிலளித்தார் தந்தை. அவர் தென்னிலங்கையில் பல காலம் தொழில் காரணமாக வாழ்ந்திருப்பதால் நன்றாகவே சிங்களம் பேசுவார். சிங்களத்தில் பதில் வந்ததும் சற்று அமைதியடைந்தனர் படையினர். என்னைக் கண்டதும் 'இந்தத் தம்பி யார்?' என்று கேட்டார் படைத்தலைவர். 'இவர் என்னுடைய மகன். ஜீ.சீ.ஈ. பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்' என்றார் தந்தை. 'இங்கு ஒரு இளம்பெண் இருந்தாரே, அவர் இப்போது எங்கே' என்று சந்தேகத்தோடு வந்தது அடுத்த கேள்வி. எல்லா விஷயங்களையும் அவர்கள் எப்படியோ தெரிந்திருந்தார்கள். 'அவள் என்னுடைய மகள், இப்போது திருமணமாகிக் கனடாவில் வசிக்கிறாள்' என்றார் தந்தை. 'அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?' என்று கேட்டனர் படையினர். அக்கா இயக்கத்தில் சேர்ந்துவிட்டாளோ என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம். அம்மா உடனே அறைக்குள் சென்று அண்மையில் அக்காவிடமிருந்து வந்திருந்த கடிதமொன்றை எடுத்துவந்து காட்டினார். அத்தோடு வீடு முழுவதையும் தேடிப் பார்த்துக்கொண்டு அவர்கள் வெளியே சென்றனர்.
குமார், யாழினி ஆகியோரின் வீடுகளுக்கும் போவார்கள். என்ன நடக்குமோ என்று மனத்தில் ஒரு பயம் எழுந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் குமார், யாழினியின் நலம் பற்றி ஒரு அக்கறை ஏற்பட்டது. இரவு முழுவதும் அரைகுறையாகவே தூக்கம் வந்தது. ஏதேதோ கனவுகளும் அர்த்தமற்ற நினைவு களுமாய் கட்டிலில் புரண்டு கொண்டிருந் தேன். அதிகாலையில் அப்படியே தூங்கிப் போனேன். யாரோ குளறி அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தேன். எனது தந்தையும் தாயும் கூடவே வெளியே வந்தார்கள். சற்றுத் தொலைவில் அந்தக் கிணற்றடியிலிருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. நான் கிணற்றை நோக்கி ஒடினேன். அங்கே குமாரின் தாயாரும் உறவினர்களும் தலையில் கைவைத்துக் குழறி அழுது கொண்டிருந் தார்கள். எனது நெஞ்சு பக்பக் என்று அடிக்கத் தொடங்கியது. கிட்டப் போய் கிணற்றினுள்ளே எட்டிப் பார்த்தேன். கிணற்றினுள்ளே குமாரின் உடல் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் உயிரற்றுக் கிடந்தது.
கடந்த சில வாரங்களாக அவனோடு அதிகம் பேசாதது சோகத்தைப் பல மடங்காக்கியது. எத்தனை நாட்கள் இந்தக் கிணற்றடியில் அமர்ந்து பேசிக் கும்மாளமடித்து மகிழ்ந்திருப் போம். கடைசியாக அவனை இப்படியா நான் பார்க்கவேண்டும்? ஸ்ரீலங்காப் படையினர் முதல் நாள் இரவு குமாரின் வீட்டுக்கும் போனார்களாம். அவனை விசாரணைக் கென்று அழைத்துச் சென்று இப்படி ஒரு கொடுமையைச் செய்துள்ளார்கள். அந்தக் கிராமமே அவனது மரணச் சடங்கிற்கு வந்திருந்தது. ஆனால் யாழினி மட்டும் வரவில்லை. உறவினரல்லாத இளம்பெண்கள் மரண வீட்டுக்குப் போவது அங்கு வழக்க மில்லை. அவள் பட்டிருக்கக்கூடிய மன வேதனையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை.
அதன் பின்னர் எனது பெற்றோர் எனது பாதுகாப்புப் பற்றி அதிகம் கவலைப்படத் தொடங்கினார்கள். 'இன்னும் என்னெல்லாம் நடக்கும் எண்டு சொல்லேலாது. இந்தக் கிராமத்திலை காட்டிக் கொடுக்கிறதுக்கும் மக்கள் இருக்கினம் போலை. சந்திரனைக் கெதியா வெளியே அனுப்பவேணும்' என்று எனது தாயார் புலம்பிக் கொண்டிருந்தார். துரித கதியில் யத்தனங்கள் செய்யப்பட்டன. ஒரு நாள் பின்னேரம் யாருக்குமே சொல்லாமல் பேருந்தில் கொழும்புக்குப் புறப்பட்டேன். அடுத்த சில வாரங்களில் கலிபோர்னியாவிலுள்ள எனது தாய் மாமனின் உதவியுடன் அமெரிக்கா சென்றடைந்தேன். சில மாதங்களின் பின்னர் யாழினியும் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டதாகச் செய்தி கிடைத்தது. அவளது மனமாற்றத்தைப் புரிந்துகொள்வது கடின மாயிருக்கவில்லை.
சற்று இருளத் தொடங்கிவிட்டது. எழுந்து நடந்தேன். ராஜனின் வீட்டை அடைந்ததும் 'இப்போது யாழினி எங்கையென்று தெரியுமா' என்று அவனைக் கேட்டேன். 'அவள் கிளிநொச்சியில் ஒரு அநாதை இல்லத்தில் ஆசிரியையாக இருப்பதாகக் கேள்விப் பட்டோம்' என்றான் ராஜன். ஓரு வாரம் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு ஒரு வாடகைக் காரில் கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்டேன்.
2004ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி காலை 6 மணிக்கு பயணத்தைத் தொடங்கி னேன். கிளிநொச்சியை அடைந்தபோது நன்கு வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. கிளிநொச்சி அப்போது ஒரு சுறுசுறுப்பான சிறிய பட்டினமாக மாறி யிருந்தது. எங்கும் சனத்திரள். எனக்குத் தெரிந்த எமது கிராமத்தைச் சேர்ந்த பலரை அங்கு சந்தித்தேன். யாழினி பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. அவள் போரினால் காலில் காயமடைந்ததாகவும் இப்போது ஒரு அநாதைக் குழந்தைகள் இல்லத்தை நிர்வகித்து வருவதாகவும் சொன்னார்கள். அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை என்றும், தாயாரோடு ஒரு சிறிய இல்லத்தில் வாழ்ந்து வருவதாயும் அறிந்து கொண்டேன்.
அடுத்த நாள் காலை அநாதைச் சிறுவர்கள் இல்லத்தில் இருந்த ஓர் பெண்ணிடம் யாழினியைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினேன். சிறிது நேரத்தில் யாழினி சற்று நொண்டிய படியே நடந்து வந்தாள். ஆனாலும் அவள் முகத்திலிருந்த களையும், கவர்ச்சியும் மாறவே இல்லை. என்னைக் கண்டதும் அவள் கண்கள் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பளிச்சிட்டன. 'வா சந்திரன், எவ்வளவு காலமாச்சு உன்னைக் கண்டு. ஏன் மனைவி, குழந்தைகளை கூட்டிக்கொண்டு வரேல்லை' என்று கேட்டாள். 'எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை' என்று சொன்ன போது அவள் முகத்தில் வியப்பின் சாயல் தென்பட்டது. ஏன் அவள் கழுத்தில் தாலியைக் காணவில்லை என்றோ, ஏன் நொண்டுகிறாள் என்றோ நான் கேட்க வில்லை. அவள் என்னை உள்ளே அழைத்துச் சென்று குழந்தைகள் கற்பதையும், விளையாடுவதையும், சங்கீத, நடனப் பயிற்சி பெறுவதையும் காட்டினாள். வெளிநாட்டுத் தமிழர்களின் உதவியால் அந்த இல்லம் சிறப்பாக இயங்குவதாகச் சொன்னாள். அலுவலகம் திரும்பியதும் என்னைப் பற்றி மீண்டும் விசாரித்தாள். என்னைப் பற்றியும், நண்பர்களோடு நாங்கள் பழகி மகிழ்ந்த அந்த நாட்களையும் அடிக்கடி நினைத்துப் பார்த்ததாகச் சொன்னாள். வெளியே வரும்போது 'நாளைக்குச் சனிக்கிழமைதானே. கட்டாயம் வீட்டை வா. அம்மாவும் சந்தோசப் படுவார்' என்றாள்.
அடுத்த நாள் பின்னேரம் மூன்று மணிபோல அவள் வீட்டிற்கு சென்றேன். யாழினியும் அவள் தாயாரும் அன்பாக வரவேற்றார்கள். யாழினியின் அம்மா நிறைய வெள்ளை முடியோடு சற்று இளைத்துப் போய் காணப்பட்டார். எனது அம்மா, அப்பா, சகோதரி பற்றி சுகம் விசாரித்தார். 'நீ ஏன் என்னும் கல்யாணம் செய்யவில்லை' என்ற கேள்வி நான் எதிர்பார்த்தது போலவே எழுந்தது. 'இன்னும் சரியான நேரம் வரவில்லை போலிருக்கிறது, மாமி' என்றேன். 'நீங்கள் இருந்து கதையுங்கோ. நான் ரீ போட்டுக்கொண்டு வாறன்' என்று யாழினி எழுந்து சென்றாள்.
அவள் சமையலறைக்குள் போனதும் 'ஏன் மாமி யாழினி இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை' என்று கேட்டேன். "எத்தனையோ தடவை நானும் கேட்டுப் பாத்திட்டன். அவள் எதேதோ சொல்லி மறுத்துக் கொண்டே இருக்கிறாள்" என்றார் மாமி. "கேட்கிறன் என்று குறை நினைக்க வேண்டாம். அவள் பாவம். எவ்வளவோ கஷ்டப்பட்டுப் போனாள். நானும் அமெரிக்கா விலை தனியாத்தானே இருக்கிறன். அவளை எனக்குக் கட்டி வைச்சீங்கள் எண்டால் நான் அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளு வன். நீங்களும் எங்களோடை வந்து இருக்கலாம்' என்றேன். மாமியின் கண்களில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. 'கொஞ்சம் இரு சந்திரன். நான் அவளைக் கேட்டுப் பார்க்கிறன்' என்று சமையலறைக்குள் நுழைந்தார்.
சிறிது நேரத்தில் யாழினி தேநீரோடு என்னை நோக்கி வந்தாள். அவளின் முக பாவனையை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை. என்னிடம் தேநீர்க் கோப்பை யைத் தந்துவிட்டு எதிரே அமர்ந்தாள். 'அம்மா இப்ப என்னோடை கதைச்சவ. நீ எங்கள் மேலை வைச்சிருக்கிற அன்புக்கு நன்றி. ஆனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யிற நோக்கம் இல்லை. என்ரை வேலை இங்கை இன்னும் முடியேல்லை. வந்த வேலை முடியிறவரைக்கும் இங்குதான் என்ரை வாழ்க்கை' என்றாள். சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்து 'இங்கை நிறைய ஏழைத் தமிழ்ப் பெண்கள் மணம் முடிக்க வழியின்றி இருக்கினம். நீ அமெரிக்கா திரும்ப முந்தி ஒரு நல்ல பெண்ணாப் பார்த்துக் கட்டிக் கொண்டு போ. அதுதான் என்ரை ஆசையும்' என்றாள். நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தின் பின்னர் 'சரி, அப்ப நான் போயிற்று வாறன்' என்றேன். 'உன்னைக் கண்டதிலை மெத்தச் சந்தோசம். இலங்கைக்கு வரும்போது கட்டாயம் வந்து எங்களைப் பார். இங்கை கஷ்டப்படுற மக்களை மட்டும் மறந்திடாதை' என்று முடித்தாள். நான் போக எழுந்தபோது அவள் கண்களில் கண்ணீர் அரும்பியிருந்தது. நான் வெளியே போகும் போது வாசல் கதவுக்கு மேலே சுவரில் குமாரின் படம் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.
இரத்தினம் சூரியகுமாரன் |
|
|
More
அன்னையர் தினம் டின்னர்
|
|
|
|
|
|
|
|