Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மகதலேனா மரியாள்
மூணு வெண்ணிலா கேக்!
- ராகவேந்திர பிரசாத்|டிசம்பர் 2019|
Share:
அன்று நான் எழுந்தது எட்டு மணிக்கு. எப்பொழுதும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் எனக்கு, அன்று லேட்டாக எழுந்தது லேசான தலைவலியைக் கொடுத்தது.

மனைவி வழக்கம்போல், காபி கொண்டு வந்தாள். "நேத்து ராத்திரி ரொம்ப லேட்டா படுத்தீங்க. அதான் உங்களைக் காலைல எழுப்பல. எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தீங்க?"

"வர்றதுக்கு மணி ரெண்டு ஆகிடுச்சு. உனக்குதான் தெரியும்ல. வழக்கம்போல என் டீம் எல்லாரும் சொதப்பிட்டாங்க. கிளையன்ட் எஸ்கலேஷன். மாங்கு மாங்குன்னு உக்கார்ந்து வேலை பார்த்து முடிச்சுட்டு வர்றதுக்கு ரெண்டு மணி ஆகிடுச்சு. இன்னைக்கி காலைல நான் பதினோரு மணிக்குதான் வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்."

"அப்ப ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க. உங்க பொண்ணை இன்னைக்கு ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுடுங்க. நானும் ரொம்ப நாள் ஆஃபீசுக்கு லேட்டாவே போயிட்டு இருக்கேன். இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் போறேன்."

கொஞ்சம் யோசித்துவிட்டு சரி என்றேன். என் ஐந்து வயது மகள் ரெடியாகி பைக்கட்டை மாட்டிக்கொண்டு வந்தாள். "அப்பா… நான் ரெடிப்பா. ஸ்கூலுக்கு போகலாம்."

ஹோண்டா ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்தேன். அவள் முன்னே நின்று கொண்டாள். "அப்பா, உங்களுக்கு என் கிளாஸ்ல யாரு பெஸ்ட் ஃபிரெண்ட்னு தெரியுமாப்பா?"

"பவித்ராதானே?"

"அவ பழைய ஸ்கூல் ஃபிரெண்ட். இந்த ஸ்கூல்ல அவ இல்லை."

"அப்பாக்கு தெரியலியேடா குட்டி!"

அவள் அதற்கு எதுவும் பதில் பேசாமல் இருந்தாள். "அப்பா, இன்னைக்கு ஆஃபீஸ் விட்டு வரும்போது கேக் வாங்கிட்டு வர்றீங்களா?" நீண்ட நாள் கழித்து என் மகள் என்னிடம் கேட்டதாகத் தோன்றியது.

"சரிடா குட்டி. வாங்கிட்டு வர்றேன்."

"சரிப்பா." அவள் முகத்தில் லேசான புன்னகை வந்ததை என்னால் உணர முடிந்தது. பள்ளிக்கூடம் வந்தது. நான் அவளை இறக்கி விட்டு "பை டா குட்டி!" என்றேன்.

அவள் அருகே வந்து "அப்பா, நான் ஸ்கூல் கேட்டுக்குள்ள போற வரைக்கும் இங்கயே இருங்கப்பா!"

அங்கேயே ஒன்றிரண்டு நிமிடங்கள் இருந்தேன். அவள் தோழிகளிடம் "இங்க பாரு. எங்க அப்பா இன்னைக்கி பைக்ல கொண்டு வந்து விட்டாரு. மிஸ், இங்க பாருங்க... எங்கப்பா என்னை ஸ்கூல்ல கொண்டுவந்து விட்டாரு." அவள் மனதில் ஓர் இனம்புரியாத சந்தோஷம். எப்போதும் அம்மாதான் பள்ளிக்குக் கொண்டுவந்து விடுவார். இன்று அப்பா வந்திருக்கிறார் என்று தன் நண்பர்களுடனும் சில ஆசிரியர்களிடமும் பகிர்ந்துகொள்வதில் ஒரு சிறு சந்தோஷம்.

ஒரு வழியாக நான் அலுவலகம் போய் சேர மணி பதினொன்று ஆனது.

அன்றைக்கு நாள் சரியில்லை. அமெரிக்காவில் இருந்து கிளையன்ட் காய்ச்சி எடுத்தான். சிறிய தவறுதான். ஆனால், ஒரு பெரிய தவறுக்குப் பின் செய்யும் தவறுகள் எல்லாமே பெரிதாகத் தோன்றுமே. அதுபோல, மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்ததை வைத்து இந்தச் சிறிய தவறை ஒரு பெரிய விஷயமாக்கி விட்டார்கள்.

இந்தத் தவறுகளை எல்லாம் சரிசெய்து கொஞ்சம் நல்ல பெயர் எடுப்பதற்கு இரண்டு மூன்று மாதம் ஆகும். திடீரென்று என் மேலாளர் என்னிடம் வந்து, "அப்ரைசல் மீட்டிங் பேசணும். கொஞ்சம் மீட்டிங் ரூமுக்கு வர்றீங்களா?"

வேறு வழியின்றி அவரைப் பின்தொடர்ந்தேன்.

"இப்படி உக்காரு அரவிந்தன்." அவர் எதிரில் உட்கார்ந்தேன்.

"இதோ பாரு அரவிந்தா! இந்த வருஷம் ஆரம்பத்துல நீ ப்ரோமோஷன் வேணும்னு சொன்னே. நானும் அதுக்கெல்லாம் சரின்னு சொல்லிட்டு உனக்கு நிறைய பொறுப்புகளைக் கொடுத்தேன். நீயும் ராப்பகலா ஹார்டுவர்க் பண்ணினே. இல்லைன்னு சொல்லலை. ஆனா பாரு, போன ரெண்டு மாசத்தில் அஞ்சு எஸ்கலேஷன். கொஞ்சம் யோசிச்சுப் பாரு அரவிந்த். இதனால் நீ செஞ்ச ஹார்டுவர்க் வேஸ்ட் ஆகிடுச்சுன்னு சொல்ல வரலை. ஆனா, அதுக்குமேல எஸ்கலேஷன் வந்து நிற்குதே. நான் என்னப்பா பண்றது."
நான் எதுவும் பேசவில்லை. மேனேஜர் தொடர்ந்தார். "நீ செஞ்ச வேலைகளைப் பத்தியெல்லாம் நிர்வாகத்துகிட்ட சொன்னா, எல்லாருமே இப்போ வந்த எஸ்கேலேஷனைப் பத்திதான் சொல்றாங்க. அதனால, இந்தத் தடவை உனக்கு ரேட்டிங் த்ரீதான். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். இந்த வருஷம் ப்ரோமோஷன் வாங்கிக் கொடுக்க முடியாது. வேணும்னா அடுத்த வருஷம் பார்ப்போம்."

"என்ன சார் இப்படி சொல்லிடீங்க? இதுக்காக நான் எவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். கடைசியில இப்படி சொல்லிட்டீங்க. நான் லீவு போடாம எத்தனை நாள் வேலை செஞ்சிருக்கேன் சார்? உங்களுக்கே தெரியும். வீக்கெண்ட் எல்லாம் வந்து சப்போர்ட் பண்ணிருக்கோமே சார்?"

"அதைத்தான் நான் திரும்பச் சொல்றேன் அரவிந்த். உழைச்சிருக்கே. இல்லைன்னு சொல்லலை. விசிபிலிட்டியும் இருக்கு, ஆனா அதுக்கு மேல உன் கிளையண்ட் கொடுத்த எஸ்கேலேஷன் இருக்கேப்பா? நான் என்ன பண்றது? எல்லாமே என் கைல இல்லையே?"

"நான் டைரக்டர் கிட்ட பேசறேன் சார்."

"தாராளமா பேசிக்கோ. ஆனா இதோட ரிசல்ட் என்னன்னு உனக்கே தெரியும். கண் துடைப்புக்காக உன் பேச்சைக் கேட்பாங்க. ஒருதடவை மேனேஜ்மென்ட் முடிவு எடுத்துட்டா, எவ்வளவு பேசினாலும் மாத்தமாட்டாங்க. அப்புறம் உன் இஷ்டம்."

அறையை விட்டு வெளியே வந்தேன். டைரக்டரிடம் பேசுவதற்கு ஏனோ ஒரு தயக்கம். ஃபுட் கோர்ட் போய் ஒரு காபி வாங்கினேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன், இந்த வருடம் மட்டும் ப்ரோமோஷனுக்காக எவ்வளவு முயற்சி எடுத்திருப்பேன்? விடுமுறைகளெல்லாம் தவிர்த்தேன். குடும்பத்தினரிடம் திட்டு கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களுடன் சுற்றுலா போகவில்லை. நான் வேலை செய்ததுமல்லாமல், எனக்குக் கீழ் இருக்கும் எல்லாரையும் வார இறுதிகளில் அலுவலகம் வரச் சொன்னேன். எல்லாமே வீண். என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும் என்று வள்ளுவர் சொன்னது இசகுபிசகாக நினைவுக்கு வந்தது. மெய், மனம் இரண்டுமே வருத்தியும், இங்கே பலன் இல்லை. ஒரு கட்டத்தில், வேறு வேலை தேடலாம் என்று மனம் சொன்னாலும் இந்த ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்றுமில்லாமல் அன்று நான் வீட்டுக்குச் சீக்கிரம் கிளம்பிவிட்டேன். என் டீமில் எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். வீட்டுக்கு பஸ் பிடித்தேன். வழக்கமாக இறங்கும் நிறுத்தத்தில் இறங்காமல் ஒரு நிறுத்தம் முன்னதாக இறங்கினேன்.

அங்குதான் திவ்யா பேக்கரி இருந்தது. "மூணு வெண்ணிலா கேக் பார்சல்" என்றேன். மதியம் என் மனதில் இருந்த குறைகள் எல்லாமே திடீரென மறைந்துபோயின.

ராகவேந்திர பிரசாத்
More

மகதலேனா மரியாள்
Share: 




© Copyright 2020 Tamilonline