Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
குதிரை வண்டித் தாத்தா
அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும்
- ஜே. ரகுநாதன்|நவம்பர் 2019|
Share:
தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்….

"எதுனா துண்ணுட்டுப்போடா! இத்தோட ராவுக்குதானே வருவ?"

"இல்ல ஆத்தா. மதியச்சாப்பாட்டுக்கு வந்துட மாட்டன்? அங்கன கூட்டம் கூட்டமாய் சிப்பாயிங்க நிக்கறானுங்க. நேத்தே பார்த்தன். எல்லார் கையிலயும் குண்டு சுடற துப்பாக்கி. செகப்பா அங்கியெல்லாம் போட்டு… எனுக்குக்கூட சிப்பாயா ஆகணுமாத்தா. அதான் அங்கன போய் நின்னா சேத்துக்குவாய்ங்களோன்னு ஆசை!"

"போடா போடா போக்கத்த பயலே! உசுருக்கு உத்தரவாதமில்லடா! அந்தக் கனாவெல்லாம் வாணாம். உங்கப்பனப் போல கும்பினி கூலி வேலக்கிப்போடா. தெனிக்கும் சோறு போட்டு வாரவாரம் துட்டு குடுக்கறாங்க இல்ல?"

"அடப்போ ஆத்தா! சிப்பாயின்னா கூர போட்ட வீடெல்லாம் தருவாங்க. துரைமாருங்கள கிட்டத்துல பாக்கலாம். கும்பினி பாஷயக்கூட கத்துக்கலாம். பணக்காரனா ஆய்டலாம், தெரியுமில்ல?"

"அடேய்! உசுரு இருந்தாத்தாண்டா பணமெல்லாம்!"

"ரொம்பத் தொலைவெல்லாம் போகலாத்தா. நம்ம கிப்பிள் தீவாண்ட பாலத்துக்கிட்ட போய் வேடிக்கை பாப்பேன், அவ்ளோதான்!"

"சரி சாக்கிரதையாப் போய்வா!"

வரப்போகும் அதிருஷ்டம் தெரியாமல் கோவிந்தன் புறப்பட்ட ஒரு சோம்பேறித்தனமான காலை.

★★★★★


இன்றைய 2019

"காண்ட்ராக்ட் வந்துதா? நேத்தே மெயில் அனுப்பினானே ரிச்சார்ட்?"

"இன்னும் இல்ல பாஸ்! ஆனா இன்னிக்கு வந்துரும்னுதான் தோணுது!"

"பின்ன வராம? எண்பது ஆண்டிராய்டு டெவலப்பர்கள் ஒரே குரூப்பா... இன்னிக்கு யாரு அனுப்ப முடியும், நம்மளத்தவிர?"

"அன்னிக்கி ரிச்சார்டு தொறந்த வாய மூடவே இல்ல பாஸ்! ஒரே டிரிப்புல எண்பது பேரை அனுப்ப முடியுமான்னு கேட்டுக் கேட்டு பிரமிச்சுண்டிருந்தான்."

"கரெக்ட், போன வருஷமே நா இந்த ட்ரெண்டை எதிர்பார்த்தேன் ராகவா! அதான் மானாவாரியா ஆண்டிராய்டு பசங்கள ரெக்ரூட் பண்ணச் சொன்னேன்."

"எனக்கே கொஞ்சம் கிலிதான் பாஸ். இத்தன பேருக்கு நம்மகிட்ட வரப்ப ஆர்டரே கிடையாது. இவனுங்கள எடுத்து, சம்பளம் குடுத்து, எங்க போய் ஆர்டர் வாங்கப்போறோமுன்னு பயந்தேன்."

"ஓவர்ஹெட்ஸ் கொல்லுது கொல்லுதுன்னு நீ என்னைப் போட்டு பாடாப்படுத்தினியே?"

"பின்ன என்ன பாஸ்! போன வருஷம் ஞாபகம் இருக்கா? அந்த ஐ.ஓ.எஸ். ஆர்டர் பாதில கான்சல் ஆனபோது கையில் பதினஞ்சு பேரு. வேலை இல்லாம, சம்பளம் மட்டும் மாசம் ஒண்ணாந் தேதியானா… அந்த குவார்ட்டர் ப்ராஃபிட் மரண அடி வாங்கித்தே!" CNBC 18ல அந்த லதா வெங்கடேஷ் உங்கள குடாஞ்சங்களா இல்லியா?"

"அது சரிதான் ராகவா! ஆனா அதானே பிஸினஸ்!"

"அப்புறம் எப்படி பாஸ் மறுபடி இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்தீங்க!"

"ரத்தத்துல இருக்கு போலருக்கு ராகவா?"

"உங்க அப்பா தாத்தாவெல்லாம் பிஸினஸ்தானா பாஸ்?"

"ஆமா ராகவா! கடந்த எட்டு தலைமுறையா அப்படித்தான். ஓகே! ஈமெயில் வந்தவுடனே ரூமுக்கு வா. டிராவல் பிளான் பண்ணிடலாம்!"

சொல்லிவிட்டு அடுத்த கான்ஃபெரென்ஸ் காலுக்குத்தயாரானான் ஆச்சார் இன்ஃபொடெக்கின் மானேஜிங் டைரக்டர் நாராயணாச்சார்.

★★★★★


1746
கோவிந்தன் புறப்பட்டு அடையாறு பாலத்தைஅடைந்தபோது காலை மணி எட்டாகிவிட்டது. கிழக்கே மஞ்சள் சூரியன் மெல்ல மெல்ல வெளுத்தாலும் இன்னும் காலையின் ஈரப்பதம் குறையவில்லை. நேற்றைய இரவின் உற்சாகத்தில் வங்கக்கடல் சற்று முன்னேறி அடையார் க்ரீக்கின் துவாரம் வழியாக தன் நீலநிறத் தண்ணோரைப் பாய்ச்சியிருக்க, பாலத்துக்கடியில் அலை மோதியது. ஒன்றிரண்டு சோம்பேறி வெண்நாரைகள் லேட்டாக எழுந்ததால் மிச்சம் மீதி மீன்களைக்கொத்தித் தின்ன முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. ஆற்றைத் தாண்டி வெளிநாடு செல்லும் சில காகங்கள் இன்றைய தீனிக்கான போராட்டத்தைத்தொடங்கியிருந்தன. பாலத்தில் ஒற்றை மாட்டுவண்டி வைக்கோல் போருடன் மெல்லத் தவழ்ந்துகொண்டிருக்க அதன்மேல் முண்டாசு அணிந்த ஆசாமி தூங்கிக் கொண்டிருந்தான். அன்று நடக்கப்போகும் விபரீதத்தை அறியாத மெட்ராஸ் இன்னும் தூங்கி வழிந்துகொண்டிருந்த காலை.

கோவிந்தன் மெதுவாக நடந்து பாலத்தைக் கடந்து பின்னாளைய கிரீன்வேஸ் ரோடில் மெல்ல நடக்க ஆரம்பித்தான். தெருவெல்லாம் இல்லை. இரு புறமும் வேலிக்காத்தான் மரங்களும், காய்த்துத்தொங்கும் புளிய மரங்களும், தூங்குமூஞ்சி மரங்களும் பெரிய ஆலமரங்களும் அவற்றின் தூண்போன்ற விழுதுகளும் பரவியிருந்த அந்தப் பாதை வளைந்து மீனவர் பட்டினம் வழியாகக்கடற்கரைக்குப் போனது.

கோவிந்தனுக்கு இது தினப்படி நிகழ்ச்சி.

ஆத்தா தரும் நீராகாரத்தை ஒரே மிடக்கில் குடித்துவிட்டுக் கிளம்பி விடுவான். முதலில் பாலம் வரைதான் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் மெதுவாக முன்னேறி முன்னேறி வளைந்த கப்பிப்பாதையில் நடந்து கடற்கரை வரை போவான். வழியில் ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி, புளியங்காய் அடித்துத் தின்று நடந்து அந்த மீனவர் குடிசைகளையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் மீன்பிடி வலையின் சிக்கு நாத்தத்தையும் ரசிக்க ஆரம்பித்துத் தினமும் போக ஆரம்பித்தான்.

ஒரு மாதமாகவே சிப்பாய் நடமாட்டம் அதிகமாகியிருந்ததைக் கவனித்தான். இரண்டு மூணு நாளைக்கு முன்பு கடற்கரையில் ஏகத்துக்கும் சிப்பாய்கள் வந்திருந்தார்கள். அதோடு தூரத்தில் சில கப்பல்களும் இருந்ததை கோவிந்தன் கவனித்தான், சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க அவனுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. சிப்பாய்க்கனவு கண்டுகொண்டிருந்த கோவிந்தனுக்குச் சிப்பாய்கள் மேல் இருந்த பிரேமை அதிகமாகியது. இந்த சிப்பாய்கள் கும்பினி சிப்பாய்கள்போல இல்லாமல் வேறுமாதிரி உடை அணிந்திருந்தனர். பொழுது போவது தெரியாமல் சிப்பாய்களையும் அவர்களின் புரியாத பாஷையின் சப்தத்தையும் அவர்களிடமிருந்து வீசும் வாசத்தையும் அவர்களின் கைகளில் இருந்த வினோத ஆயுதங்களையும் வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதிலேயே சில மணி நேரங்களைக் கழித்துவிட்டு மெதுவாக நடந்து, புளியங்காய் அடித்துத் தின்றுகொண்டே அடையாறு பாலத்தைக் கடந்து வீட்டுக்குச் சாப்பாட்டுக்குச் சரியாக வந்துவிடுவான்.

மாலைகளில் மறுபடி பாலத்தடிதான்.

★★★★★


2019
"பாஸ்! ரிச்சர்டோட ஈமெயில் வந்தாச்சு. எடின்பர்கில் வேலை. எண்பது பேரும் ஒரு மாசத்துக்குள்ள அங்க போய்டணுமாம். மூணு பாட்ச்சா அனுப்பசொல்லியிருக்கான்."

"ரேட் என்ன போட்டிருக்கான்?"

"முன்னாடியே பேசினதுதான் பாஸ்!" எல்லாச்செலவும் போக நமக்கு பில்லிங் ஒரு மணி நேரத்துக்கு 18 பவுண்டு!"

"ராகவ்! அடுத்த மாசத்திலேர்ந்து டர்ன் ஓவர் ஜம்ப் பாத்தியா?"

"எஸ் பாஸ்! ரெண்டரை லட்சம் பவுண்டு! கிட்டத்தட்ட ரெண்டு கோடி ரூவா, அதுவும் மாசத்துக்கு!"

"கிரேட்! ஷேர் வெல தூக்கிக்கும்!"

"ஆனா ரிச்சர்டு நமக்குத் தர விலைக்குமேல இருவது பர்சண்ட் கிளையண்ட் கிட்ட சார்ஜ் பண்றான், தெரியுமா? உக்கார்ந்த இடத்துல அவனுக்குக் கொழிக்குது பாஸ்! ஆனா எல்லா வேலயும் நாமதான் பண்றோம்!

"அதுனாலதானே அவன நம்ம பார்ட்னரா வெச்சிருக்கோம். நம்மளால இவ்வளவு பெரிய ஆர்டர டைரக்டா வாங்கவே முடியாது. வெள்ளைக்காரன் இன்னொரு வெள்ளைக்காரனுக்குதான் பிஸினஸ் தருவான்!"

"ஒவ்வொரு மூணாம் தேதியும் ரிச்சர்டு கிளையண்டை பில் பண்ணிடுவான். நாம் ரிச்சர்டுமேல ஆறாம் தேதி பில் பண்ணனும், சரிதானே!"

"கரெக்ட். நம்ம சாரிகிட்ட சொல்லிடு. பில்லிங் லேட் ஆகக்கூடாதுன்னு. ஒருநாள் லேட்டானாலும் இன்ட்ரெஸ்டே எகிறிக்கும்."

"அதெல்லாம் சாரி மாமாகிட்ட நா சொல்லிவெச்சிருக்கேன் பாஸ்!"

"ப்ரெஸ் ரிலீஸ் ஏற்பாடு பண்ணனும் பாஸ்!"

"இரு இரு ரெண்டு மாச பில்லிங் நடக்கட்டும். ரிச்சர்டை இந்தியாவுக்கு இன்வைட் பண்ணுவோம். அவனையும் வெச்சுண்டே பிரெஸ் மீட் பண்ணலாம்."

"எண்பது பேர் டிராவல், லாஜிஸ்டிக்ஸெல்லாம் என்ன பண்ணப்போற ராகவ்?"

"ஹரிணி டிராவெல்ஸ்ல சொல்லியாச்சு பாஸ். நாளைக்கு வர்ரார் கௌதம். எல்லாம் நான் பேசி ஒரு காண்ட்ராக்ட் போட்டுர்ரேன்."

"பாஸ்! உங்க ஃபாமிலில இதுதான் பெரிய பிஸினஸ் இல்ல? உங்க அப்பா தாத்தாவெல்லாம் இந்த ஸ்கேலுல வியாபாரம் பண்ணியிருக்காங்களா?"

"இல்ல கிடையாது ராகவ். எங்க குடும்பம் பல தலைமுறையா தங்கம் வெள்ளி வியாபாரம்தான். பணம் புரளுமே தவிர இந்த அளவு பெரிசெல்லாம் இல்லை. பப்ளிக் கம்பெனி, ஷேர் மார்க்கெட் இதெல்லாம் நான் பண்ணினதுதான். ஆனா என்னை லண்டன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டுல படிக்க வெச்ச எங்க அப்பா, வெறும் கிராஜுவேட் தானே!"

"ஆனா அவரோட கோல்ட் அண்ட் சில்வர் டிரேடிங்லதான் மிக அதிக லாபம்னு நீங்களே சொல்லியிருக்கீங்க பாஸ்!"

"ஆமா. ஜுவெல்ரிதான் எங்க பரம்பரைத் தொழில்! எட்டு தலைமுறைக்கு முன்னமே ஆரமிச்சாச்சு!"

★★★★★
1746
போன வாரம் கூட கோமுட்டி கவலையாய் இருந்தான்.

கோவிந்தா! உங்க அப்பாருட்ட சொல்லி என்னையும் கூலி வேலைக்கி அழச்சிக்கச் சொல்லுடா!"

"ஏன் என்னாச்சு ஒன் நகைக்கடை வேலை?"

"நேத்துதான் முதலாளி சொல்லிக்கினு இருந்தாரு! ரொம்ப நஷ்டமாம்! சண்டை வருதாமே! கையிருப்பெல்லாம் காலாவதி ஆய்டுச்சாம். அதான் கடயை வந்த வெலைக்கி வித்துட்டு குண்டூர் பக்கம் போய்டப் போறாராம்!"

"இன்னிக்கி ராவப்போ நைனாட்ட சொல்லி வெக்கிறேன்! ஆனா என்ன, என்னைச் சத்தாய்ப்பாரு. பாரு அவனெல்லாம் வேலைக்கி வர்ரான், நீதான் சோம்பேறியா சுத்திக்கினு இருக்கன்னு!"

"ஆமா டேய் கோவிந்தா! நீ என்னதாண்டா பண்ணப்போறே?"

"சிப்பாய் ஆய்டப் போறேன் நானு! செவப்பு அங்கியெல்லாம் போட்டு, கையில துப்பாய்க்கி வெச்சிக்கினு பெரிய முண்டாசுத்தொப்பி அதுல குஞ்சம் வெச்சி… பாரேன் உனுக்கு என்ன அடையாளமே தெரியாத போய்டும்!"

"ஏண்டா கோவிந்தா அந்த ஆசையெல்லாம்? உசுருக்கே ஆபத்து! பேசாம உங்கப்பனோட கூலிக்கிப் போயி சம்பாரிப்பியா..?"

"போடா போடா! எனுக்கு பணக்காரனாவணும். நெறய தங்கம் வெள்ளியெல்லாம் சேர்த்து வூடு கட்டி, தெனிக்கும் பட்டு வேஷ்டி கும்பினி மேலங்கி போட்டு ஜட்காவுல போணும். சொந்தமா ரெண்டு குதிர வெச்சுக்கணும். கூலி வேலக்கிப்போனா இதேதான் வாழ்நாள் முழுசுமா. நான் பணக்காரன் ஆவப்போறேன்! போன வருஷம் இங்க பாலத்த தொறக்க தொர வரும்போது வந்தாரே துபாஷி தாமர்லா, அவர மாதிரி!"

உலக வரலாற்றில் என்னென்னவோ நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம்.

ஆஸ்திரிய வம்சாவளிச் சண்டையில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் எதிர்ப்பக்கம் போய்விட, பிரிட்டிஷ் அரசு கோவம் கொண்டு இங்கே இந்தியக் காலனியில் அவர்களைச் சீண்ட ஆரம்பித்தது. ராயல் நேவியைத் தலைமை தாங்கிய கர்டிஸ் பார்நெட்டை வைத்து ஃப்ரெஞ்சுக் கப்பல்களைக் கடலில் தாக்கி அவர்களின் வியாபாரத்தை இடறிவிழச் செய்யும் முயற்சியில் இறங்கியது பிரிட்டிஷின் நரித்தனமான அரசு. பதிலுக்கு லா போர்த்தனே என்னும் கமாண்டர் தலைமையில் பாண்டிச்சேரியிலிருந்து பிரிட்டிஷைத் தாக்கப் படையை அனுப்பியது ஃப்ரெஞ்சு அரசு. மொரீஷியனான இந்த போர்த்தனே செப்டம்பர் பத்தாம் நாள் தாக்குதலை ஆரம்பித்து மெட்ராஸில் பிரிட்டிஷ் புகலிடமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடித்துவிட்டான். பிரிட்டிஷ் வேறு வழியின்றி ஆர்க்காட்டு நவாபிடம் உதவி கேட்க,அவன் தன் மகன் மஹ்ஃபுஸ் கான் தலைமையில் 10,000 பேர் கொண்ட, ஆனால் சரியான போர்ப்பயிற்சி இல்லாத பெரும்படையை அனுப்பினான். இருநூறே பேர் இருந்த ஃப்ரெஞ்சுப்படை கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது. ஆனாலும் கேப்டன் பாரடிஸ் என்ற சுவிட்ஸர்லாந்து தளபதியின் தலைமையில் நவாபின் படையை அடையாறு கரையில் சந்தித்து தோற்கடித்தனர். சின்னப் போர்தான் – காலையில் தொடங்கிய போர் மாலைக்குள் முடிந்துவிட்டது.

★★★★★
2019
"என்ன ராகவ்! ஸ்டேட்டஸ் என்ன? ஒண்ணரை மாசமாச்சே?"

"நம்ம பசங்க எண்பது பேரும் எடின்பர்க் போயாச்சு. டிரெயினிங் முடிஞ்சு வேலையும் ஆரமிச்சாச்சு. வாராவாரம் கிருஷ்ணனோட பேசிடறேன். ரெகுலரா அப்டேட் கொடுதுர்ரான்."

"என்ன பண்றாங்க?"

"எட்டு டீமா பிரிச்சு ஆண்டிராய்ட் டெவல்ப்மெண்ட் வேலையாம். அவங்களோட டெலிகாம் அத்தாரிடிக்குத் தேவையான ஏதோ அப்ளிகேஷனாம். டிசைனெல்லாம் பக்காவா பண்ணியிருக்கானுங்க. அக்ஸென்ச்சர்தான் அமெரிக்காவுல டிசைன் பண்ணிருக்காங்க!"

"அவங்க ரேட் எவ்வளவு தெரியுமா?"

"கிருஷ்ணன் அதையே நோண்டிட்டானா?"

"ஆமாம் பாஸ்! ஒரு மணி நேரத்துக்கு 150 பவுண்டாம்!"

"பாவிகளா? நமக்கு 18 பவுண்டா! என்ன அநியாம்டா இது!"

"அதான் அவுட் சோர்சிங் பாஸ்!"

"நாம எப்ப பில்லிங் ஆரமிக்கணூம்?"

"அடுத்த மாசம் பாஸ். ரெண்டு மாச பில்லிங்! ஒரே இன்வாய்ஸ்ல நாலு கோடி ரூபாய். ஹுர்ரே!"

★★★★★


1746
கோவிந்தனுக்கு பயமாக இருந்தது. தெருவெங்கும் புழுதி! ஆங்காங்கே ஒன்றிரண்டு குதிரைகள் செத்துக் கிடந்தன. வீதியோரங்களில் சில பிணங்கள். மரத்தடியில் முக்கி முனகிக்கொண்டு சிப்பாய்கள். அவர்கள் உடலில் காயம், ரத்தம், ஓலக்குரல் அவ்வப்போது. அடிபட்ட சிப்பாய்களின் வலி மிஞ்சின அலறல். கோவிந்தன் திரும்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்று லேசாக பயந்தாலும் பம்மியபடி முன்னே நடந்தான். நேத்து வீட்டுப் பக்கம் பேச்சு இருந்தது,

"மீனவர் இருப்புச் சாலையில் சண்டை. கும்பினிக்காரங்க அடிச்சுக்கறாங்க. யாரும் போய்டாதீங்க!"

"கோவிந்தா! இன்னிக்கு வெளில எங்கியும் போவாத! அங்கெல்லாம் சண்டையாம்.கும்பினிக்காரவுங்க பார்த்தா அடிச்சுப்போடுவாங்க!"

"போவ மாட்டனாத்தா. நா இப்பிடி திருவாமூர் பக்கம் போய் கோமுட்டியப் பார்த்துட்டு வாரன்!"

"சாக்கிரதைப்பா! சுருக்க வந்துடு!"

கோவிந்தனை ஏதோ ஒரு சக்தி கடற்கரை பக்கமே செலுத்தியது. சண்டையின் கோரங்களைப் பார்த்துக்கொண்டே கடற்கரை வரை வந்துவிட்டான்.

"இந்தாப்பா! அங்கன போவாத! பொணமாக் கிடக்கு!"

மீனவப்பையன் ஒருவன் சொன்னதைக் கேட்காமல் கோவிந்தன் முன்னேறினான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை செத்துக் கிடக்க, அருகில் ஒரு ஆங்கிலேயச் சிப்பாய் விழுந்துகிடந்தான். ஏதோ அசைவு தெரிந்தா மாதிரி இருக்கவே கோவிந்தன் பயந்து பயந்து அவனை நெருங்கினான். சுத்து வட்டாரத்தில் யாரும் தென்படவில்லை. தூரத்தில் சில குடிசைகள். ஆள் நடமாட்டம் இல்லை.

கோவிந்தன் நெருங்கிப் பார்த்தான்.

சிப்பாயின் முகம் கோரமாகச்சிதைது கிடந்தது. சிவப்பு அங்கி ரத்தகோடுகளால் இன்னும் சிவப்பாகியிருந்தது. மேல்மூச்சு வாங்கியதை கோவிந்தன் கவனித்தான். அருகில் போய் முகத்தைக் கிட்டத்தில் பார்த்தான். ஒரு சலனத்தில் கோவிந்தனைக்கண்ட சிப்பாயின் கண் திறந்தது. ஏதோ முனகினான். கோவிந்தனுக்கு புரியவில்லை.

"என்னா?"

சிப்பாய் சைகையால் தண்ணீர் கேட்டான். அவனுடைய ஒரு கால் வெட்டப்பட்டு ரத்தம் உறைந்து அதில் ஈக்கள் மொய்த்தன. கோவிந்தன் சுற்றுமுற்றும் பார்த்தான். குடிசைக்கு ஓடினான். உள்ளே யாரும் இல்லை. கையில் கிடைத்த சாமான்களுடன் ஓடியிருக்கிறார்கள். ஓரத்தில் ஒரு அலுமினியப் பாத்திரம் வைத்து அதன் மேல் குவளை. கோவிந்தன் சட்டென்று தண்ணீர் மொண்டு ஓடி, சிப்பாயை அடைந்தான். சிப்பாய் கையை ஆட்டி ஆட்டி ஊற்று என்று சைகை செய்ய, கோவிந்தன் தன்னிச்சையாய் ஊற்றினான். "க்ளக் க்ளக்" என்ற சப்தத்துடன் தண்ணீர் சிப்பாயின் தொண்டைக்குள்ளும் முகத்தின் மேலும் உடம்பிலும் வழிய சிப்பாயின் கண் இப்போது இன்னும் பெரிதாகத் திறந்து மூடியது. கொஞ்சம் சலனமில்லாமல் கிடந்த அந்த சிப்பாய் இப்போது நகர முயன்றான். கோவிந்தனுக்கு பயம். உடலெங்கும் அட்ரினலின் ஊற்று. ஆனாலும் ஆச்சரியத்துடன் சிப்பாயைப்பார்த்தான்.. சிப்பாயின் இடுப்பில் பட்டையாக உலோக பெல்ட். அதில் பாக்கெட் போன்ற சமாச்சாரம் பிதுங்கி வழிந்தது. கோவிந்தனுக்கு பயம் மீறிய ஆர்வம். அசையாது கிடந்த சிப்பாயின் இயலாமை தந்த அசட்டு தைரியம். சட்டென்று அந்தப்பைக்குள் கை விட்டுப்பார்த்தான்.

★★★★★


2019
"ராகவ்! டிசம்பர் முதல் வாரம் ஆச்சே! பில்லிங் பண்ணிட்டியா? சாரி கிட்ட பேசச் சொன்னேனே?"

"இன்னும் டைம் அண்ட் ஒர்க் ப்ளான் சைன் ஆகி வரணுமே பாஸ். ரிச்சர்டு கிட்டேர்ந்து அது வந்தாத்தானே எத்தனை மணி நேரத்துக்கு பில் பண்ணனும்னு தெரியும்."

"ஏன் இன்னும் வரலை? ரிச்சர்டுக்கு மெயில் அனுப்பினியா?"

"நேத்துலேர்ந்து ரெண்டு மெயில் அனுப்பியாச்சு. பதில் இல்லை. இன்னிக்கு கால் பண்ணிப் பார்க்கப்போறேன்!"

"மத்தியானத்துக்கு அப்புறம் பண்ணு. நமக்கு அஞ்சு மணி நேரம் பின்னால் ஆச்சே!"

★★★★★


1746
பைக்குள் கை விட்ட கோவிந்தனின் கையைத் தாக்கின சில்லென்ற காசுகள்.

மஞ்சள் நிறத்தில் காலை வெயிலில் மின்னலடித்த தங்கக்காசுகள். சிப்பாய் அடித்த கொள்ளையா? அல்லது அவனுடைய சொத்தா? ஒரு கணம்தான், பயம், சலனம் என்று அல்லாடிய கோவிந்தன், தன்மேல் துண்டை விரித்து அந்தக்காசுகளை அப்படியே கொத்தாக அள்ளிப் போட்டு முடிந்துகொண்டான். காசுகளின் கனம் தாங்காமல் கோவிந்தனின் நைந்து போயிருந்த மேல்துண்டு கெஞ்சியது. ஏதோ ஒரு தைரியத்தில் சிப்பாயின் மேலங்கியைக் கழற்றி காசுகள் கட்டிய துண்டை அதனுள் வைத்து மறுபடி மூடி இடுப்பில் கட்டிக்கொண்டான் கோவிந்தன். சிப்பாய் இப்போது அசைந்தான், முனகினான். சைகை ஏதோ செய்ய முற்பட்டான். மறுபடி ஒரே கணம்தான், கோவிந்தன் பிடறியில் கால்பட ஓட்டமாக ஓடி, வந்த வழியே கண்ணில் பட்ட அலங்கோலங்களை ஒதுக்கி வீடே குறியாக ஓடி பாலத்துக்குப்பக்கமாக வந்துவிட்டான். ஒதுக்குப்புறமாக நின்று பாலத்துச்சுவற்றின்மேல் சிப்பாயின் அங்கியைப்பிரித்து தன் மேல் துண்டுக்குள் கட்டியிருந்த காசுகளை இன்னும் இறுக்கி துண்டை மூடிக்கட்டினான். அதை இன்னொரு முறுக்காய்ச்சுற்றி இடுப்பில் கட்டிக்கொண்டான். மூச்சு வாங்கியது. பயம் இன்னும் விலகவில்லை.

அதை மீறிப் பேராசை விரிந்து பயத்தை கவ்விக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சிப்பாயின் மேலங்கியைச்சுருட்டி பந்தாக்கும் போது அதில் ஏதோ எழுதியிருந்ததைப்பார்த்தான். மொழி புரியவில்லை. கோவிந்தன் கவலைப்படவும் இல்லை. அங்கியைத்தூக்கித்தண்ணீரில் வீசிவிட்டு வீட்டைப் பார்க்க நடையைக்கட்டினான். பூப்போல தண்ணீர்ல் விழுந்த அந்த அங்கி நீரின் ஓட்டத்தில் படர்ந்தது. அலையில் மோதலில் தள்ளாடி, வளைந்து நெளிந்து உருண்டு நடுவே நீட்டிக்கொண்டிருந்த ஒரு கட்டையின் உபயத்தில் தன்னிச்சையாகப் பிரிக்கப்பட்டபோது அதில் எழுதியிருந்த எழுத்துக்கள் தெரிந்தன

ஆண்ட்ரூ புரூஸ்வெல்!

★★★★★


2019
"ரிச்சர்ட்! ராகவ் ஹியர்!"

"யெஸ் ராகவ்!"

"இன்னும் டைம் ஷீட் அப்ரூவல் வரலியே? அப்பதானே நாங்க பில் பண்ணமுடியும்?"

"ஓ இன்னும் அனுப்பலியா? இன்னிக்கே அனுப்பிடறேன் யூ டோண்ட் ஒர்ரி! டேக் கேர்!"

★★★★★


1746
"கோவிந்தா! திருடினியா? வாணாமடா! தெரிஞ்சா கும்பினிக்காரன் நம்மளை அடிச்சே கொன்னுருவாண்டா! போன வருஷம் அந்த சங்கிலிப்பய எத்தையோ திருடிட்டான்னு தாமர்லா ஆளுங்க என்ன அடி அடிச்சானுவ! இன்னிக்குப்போதும் அவன் நொண்டி நொண்டித்தான் நடக்கறான்ல?"

"சும்மா இரு நைனா! அந்த சிப்பாய் இன்னேரம் செத்திருப்பான்! நமக்கு அதிர்ஷடம்னு வெச்சுக்க!"

"ஏனுங்க எனக்கு பயமா இருக்குங்க!"

"த! சும்மா இர்ரி! இத்த என்னாடா பண்றது?"

"த பாருப்பா! இதுல நாலஞ்சு தங்கக்காசு கொடுத்தாலே கோமுட்டி வேல செய்யிற கடைய வாங்கிடலாம். அவுரு அல்லாத்தையும் வித்துட்டு குண்டூருக்கு போய்டறாராம். போன வாரம் கோமுட்டி சொல்லிக்கினு இருந்தான். கோமுட்டிப் பயல வெச்சே நாம வெள்ளி யாவாரம் பண்ணலாம். அவனுக்குக் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரியும்! யாவாரம் கத்துக்கறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல நைனா!"

"செய்டா செய்டா! மாரியாத்தா! நமக்கு நல்ல காலம் வந்திருச்சு! சரி மீதி காசுங்கள அரிசிப் பானைக்குள்ள போட்டு துணி சுத்தி மண்ணுல பொதச்சி வெய்யி! "

இது நடந்தது மெட்ராஸ் போர் முடிந்த இரவு அக்டோபர் 1746.

★★★★★


2019
"பாஸ்! ரிச்சர்ட் நேத்தே அப்ரூவல் அனுப்பிடறேன்னு சொன்னான். இன்னும் வரல!"

"பேசினயா?"

"பேசிட்டேனே! உடனே அனுப்பிடறேன்னானே!"

"இன்னிக்கு நம்ம கிருஷ்ணனோட பேசு! அங்க என்ன நெலமைன்னு கேளு!"

★★★★★


1746
"இன்னாடா! கடைக்கு கோவிந்த ஆச்சாரின்னு பேரு வெச்சிருக்க! நாமெல்லாம் சேர்வைங்கடா!"

சும்மாரு நைனா! வெள்ளி யாவாரம்னா ஆசாரின்னாதான் மதிப்பானுங்க! கடைக்கே ஆச்சாரி வெள்ளிக் கடைன்னுதான் பேரு வெக்கப்போறேன்!"

"வெய்டா கோவிந்தா! தலைமுறை தலைமுறையா இன்னமே நம்ம குடும்பம் யாவாரம் பண்ணி கொழிக்கணும்னு அந்த மாரியாத்தாகிட்ட வேண்டிக்கினு, படையல் வெச்சு சத்தியம் பண்ணிக்க!"

★★★★★


2019
"பாஸ்! கிருஷ்ணன் குண்டைத் தூக்கிப் போடறான்!"

"என்ன ஆச்சு ராகவ்?"

"ரிச்சர்ட் ஊர்லயே இல்லியாம். யாரக் கேட்டாலும் அவனோட ஆஃபீஸ்ல சரியா பதில் சொல்லைங்கறான். ரிச்சர்ட் கொலம்பியாவுக்கு போகப்போறதா பேச்சு இருக்காம்!"

"கொலம்பியாவா? நம்மால ஒண்ணுமே பண்ணமுடியாதே!"

"எண்பது பேர் பாஸ்! சம்பளம் கொடுக்கலைன்னா வெளிநாட்டுல போய் உட்கார்ந்துண்டு… நமக்கு எல்லா காண்டாக்டும் ரிச்சர்டோட மட்டும்தான். பெரிய சிக்கல் பாஸ்! கிட்டத்தட்ட அஞ்சு கோடி ரூவா நம்ம பில்லிங். அதோட எஸ்கேப் ஆயிருக்கான்!"

"ராகவ்! உடனே நம்ம இந்தியன் எம்பஸியைக் காண்டாக்ட் பண்ணு. ஃபர்ஸ்ட் செக்ரடரி அஷோக் குப்தாவ எனக்குத் தெரியும். ரிச்சர்டோட முழுப் பேர் அட்ரஸ் டீடைலெல்லாம் நம்மகிட்ட இருக்கா?"

"இருக்கு பாஸ்! போனதரம் இந்தியா வர்ரதுக்காக விசா அப்ளை பண்ண வாங்கி வெச்சிருக்கன்.

"அவன் முழுப்பேர் என்ன?"

"ரிச்சார்ட் புரூஸ்வெல்!"

இன்று யமலோகத்தில்…

"ஓய் சித்திரகுப்தரே! மணி எட்டாச்சுய்யா! கணக்கு டாலி ஆச்சா இல்லியா?"

"எம தர்மராஜரே! நானூறு வருஷ கணக்காச்சே! இப்பத்தான் சரியாச்சு!"

முற்றும்

ஜே. ரகுநாதன்,
சென்னை
More

குதிரை வண்டித் தாத்தா
Share: 
© Copyright 2020 Tamilonline