விடைகளை பார்க்க
1.களவினால் அதாவது திருட்டினால்!
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்
(அதிகாரம்: 29 (கள்ளாமை): 3)
[இற = மிஞ்சு; இறந்து = மிஞ்சி, கடந்து]
களவாடிச் சேர்க்கும் சொத்து நினைத்த அளவைவிட மிஞ்சிச் சேர்வதுபோல் காட்டிப் பின்பு அழியும் என்கிறான் வள்ளுவன்.
2.சினம் அதாவது கோபம்!
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
(அதிகாரம் 31 (வெகுளாமை): 4)
[நகை = நகுதல், சிரித்தல்; உவகை = மகிழ்ச்சி; உள = உள்ளன]
சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கொல்லும் கோபத்தினும் பிற பகை உள்ளனவோ என்று வினாவுகிறான் வள்ளுவன்.
3.நேரத்தை நீட்டுதல், மறதி, மடிந்திருத்தல் என்னும் சோம்பல், தூக்கம் என்னும் நாலும் தான் அவை!
நெடுநீர், மறவி, மடி,துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
(அதிகாரம் 61 (மடியின்மை): 5)
[நெடு = நீண்ட; நீர் = தன்மை; மடி = சோம்பல்; துயில் = உறக்கம், தூக்கம்; கெடுநீர் = கெடும் தன்மை; காமம் =
விருப்பம்; கலன் = நகை]
காரியத்தைச் செய்வதில் நேரத்தை நீட்டுதல் (ஒத்திப் போடுதல்), செய்யவேண்டிய காரியத்தில்/கடமையில் மறதி, சோம்பல்,
அளவுக்கு மிஞ்சிய தூக்கம் ஆகிய நான்கும் கெடும்தன்மை உள்ளார் விரும்பி அணியும் நகையாகும் என்கிறான் வள்ளுவன்.
4.மடி அதாவது சோம்பல் உள்ளமை!
மடிமை குடிமைக்கண் தங்கின்,தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்
(அதிகாரம் 61 (மடியின்மை): 8)
[மடிமை = சோம்பல் உள்ளமை, தன்மை; குடிமை = குடியாட்சி, குடும்ப ஆளுமை; கண் = இடம்; ஒன்னார் = பகைவர்]
சோம்பலாகிய தன்மை குடும்பத்தின் ஆளுமையில் தங்கினால் அந்தக் குடும்பத்தின் எதிரிகளுக்கு அடிமையாகப் புகுத்திவிடும்
என்று எச்சரிக்கிறான் வள்ளுவன்.
5.தாம் விரும்புவோரால் விரும்பப்படுவார்!
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே, யாம்
வாழுநம் என்னும் செருக்கு!
(காமத்துப்பால்: அதிகாரம் 120 (தனிப்படர் மிகுதி): 3)
[வீழ் = விழை, விரும்பு, நேசி, காதலி; வீழுநர் = தாம் நேசிப்போர்; வாழுநம் = வாழ்கிறோம்]
தாம் நேசிப்போரால் நேசிக்கப் படுவார்க்கு "யாம் வாழ்க்கை வாழ்கிறோம்" என்னும் பெருமிதம் அமையுமே என்று காமத்துப்
பால் தலைவி தனிமையில் தான் காணும் உண்மையை உரைக்கிறாள். காமத்துப்பாலில் பல பொதுக்கருத்துகள் இருப்பதை
இந்தக் குறள்வழியே நாம் உணர்ந்து காமத்துப்பாலையும் தவிர்க்காமல் பயிலவேண்டும்.
பெரியண்ணன் சந்திரசேகரன்