|
|
ஆங்கிலமூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ் வடிவம்: மதுரபாரதி
நிமேன் ஹாவ்' என்று வரவேற்றார் அந்தச் சீன ஜோசியர். ஹோப்பேயின் தெருக்களில் சுற்றிக் களைத்துப் போயிருந்த ஹசனும் கௌதமியும் அவர் முன்னே 'அப்பாடா' என்று அமர்ந்தனர். 'உங்கள் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும். சாப்ட்வேர் கம்பெனி ஓஹோ என்று நடக்கும். ஆங்... சீக்கிரமே மடியில் ஒரு குட்டிப் பாப்பா தவழும்' என்றார் சீன ஜோசியர்.
'எங்கள் கம்பெனி மற்றும் குழந்தை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்!' என்று ஆச்சரியப் பட்டான் ஹசன்.
'உன் மனைவி மிகக் குறைவாகச் செலவு செய்வாள்' என்று ஜோசியர் அடுத்துச் சொன்னதும் ஹசனுக்கு அவர் மீதிருந்த நம்பிக்கையே பறந்து போய்விட்டது.
வீட்டுக்குப் போகிற வழியில் கௌதமி 'அவர் சொன்னது சரிதான். யுவானின் காரணமாக என் செலவு குறையப் போகிறது' என்றாள். ஹசன் விழித்தான்.
'உலகச் சந்தையில் சீனா இத்தனை வலுவான தாக்கத்தை எப்படி ஏற்படுத்தியது என்று தெரியுமா?' என்று கேட்டாள் கௌதமி.
'குறைந்த கூலி, கச்சாப் பொருள் ஏராளம், நிலையான அரசியல் அமைப்பு' என்றான் குருட்டாம் போக்கில் ஹசன்.
'அது மட்டுமல்ல யுவானின் நிலையான நாணய மாற்று விகிதமும் காரணம். இறக்குமதியோ ஏற்றுமதியோ பயப்படாமல் விலையை நிர்ணயிக்கலாம். யுவான் அப்படியேதான் இருக்கும். எல்லா விலைகளுமே டாலரில்தான் இருக்கும். இது அமெரிக்கா வுக்குச் சீனப் பொருள்களை ஏராளமாக இறக்குமதி செய்ய உதவியது' என்று சொன்ன தோடு நிற்கவில்லை கௌதமி. 'அந்நியச் செலாவணி விகிதம் மிதக்கும் அல்லது நிலையான முறையில் நிர்ணயிக்கப் படுகிறது. டாலர் விகிதத்தை எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று சொல் பார்ப்போம்?' என்றாள்.
'சந்தைதான் நிர்ணயிக்கிறதென்று நினைக்கிறேன். தினமும் அது ஏறுகிறது அல்லது இறங்குகிறதே' என்றான் ஹசன்.
'சரியாக சொன்னாய். இது நூறு சதவிகிதம் மிதக்கும் முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சென்ற பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு டாலருக்கு 8.28 யுவானாகவே இருக்கிறது.
'முதலில் அது நன்றாகத்தான் இருந்தது. காலக்கிரமத்தில் அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. சீனத்து யுவான் நிலையாகவே இருந்ததால் பல அமெரிக்க உற்பத்தி நிறுவனங்கள் சீனாவுக்கே சென்றுவிட்டன. அமெரிக்கா சீனாவிலிருந்து நிறைய இறக்குமதி செய்தது. ஆனால் மிகக் குறைவாகவே சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது. 1995-ல் 30 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை 2004-ல் 100 பில்லியன் டாலர் ஆனது.
'இரண்டு நாடுகளிலுமே இது பெரிய பொருளாதார நெருக்கடியை உண்டாக்கி இருக்கும். ஆனால் சீன அரசு தனது பொருளாதார அமைப்பைச் சரிசெய்ய விரும்பியது. அதற்கு ஒரே வழி சீனப் பொருள்களின் மீது அமெரிக்கர்கள் கோடிக் கணக்கான டாலர்களைச் செலவழிக்கச் செய்வது.'
ஹசனுக்குப் புரிந்தது. 'ஆஹா, யுவானை அப்படியே வைத்தது செம ஐடியாதான். சீனாவின் ஏற்றுமதியும் தொடர்ந்து நடக்கணும். ஆனால் சீனாவுக்கோ அமெரிக்காவுக்கோ அதனால பொருளாதார அபாயம் எதுவும் ஏற்படக்கூடாது. அப்படித் தானே!' என்றான்.
'ஆமாம். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க அமெரிக்க அரசு வரியை அதிகப் படுத்த வேண்டும், நீண்டகால வட்டி விகிதத்தை ஏற்ற வேண்டும். அதுதான் வழி. இப்படிச் செய்தால் அரசுக்கு அதிக வருமானம் வரும், அமெரிக்கர்கள் செல வழிக்கும் பணமும் குறையும், அப்போது பற்றாக்குறை மட்டுப்படும். சீனாவின் ஏற்றுமதி குறையும்.
'சீனா என்ன பண்ணியது தெரியுமா? அமெரிக்கக் கடன் பத்திரங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்தது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை இது சமன் செய்தது. ஆனால் இதனால் இரண்டு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப் படவில்லை' என்று முடித்தாள் கௌதமி.
'யப்பா, என்ன மூளைடாப்பா இது' ஹசன் உற்சாகத்தில் டேபிளை ஓங்கி அடித்தான். 'அமெரிக்கர்கள் செலவழிப்பதில் சூரப் புலிகள் என்பது சீனாவுக்குத் தெரியும். அதே நேரத்தில் தனது உற்பத்தித் திறனையும் சீனா அதிகரித்துக் கொண்டது. தானே பணத்தை யும் கொடுத்து அமெரிக்கர்களைத் தனது பொருள்களை வாங்க வைத்துவிட்டது. இப்படியே எவ்வளவு நாள்தான் நடக்க முடியும்!'
'சீனாவின் ஜவுளி உற்பத்தி அதிகரித்ததுமே அது இந்தியா, இத்தாலி இரண்டையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மிக அதிகமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. எவ்வளவு ஏற்றுமதி பெருகினாலுமே யுவான் மட்டும் டாலருக்கு எதிராக 8.28 ஆகவே இருக்கும். சீனப் பணம் குறைத்து மதிப்பிடப் படுவது உலகத்துக்கே தெரியும், ஆனால் ஒன்றும் செய்ய முடியாது
'இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமானால் நாணய மதிப்பு ஏறிவிடும். மதிப்பு கூடினால் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிக்கும். ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்றால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது மலிவு. ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி அதிகம் ஆகாது. அதுவே 42 ரூபாய் ஆனால் இந்தியப் பொருள்களின் விலை அதிகமாகத் தெரியும். ஆனால் அதே முதலீட்டில் இந்தியாவுக்கு அதிகப் பொருள் களை இறக்குமதி செய்யலாம். |
|
'எனவேதான் யுவானை அரசு கட்டுப் படுத்தாத நாணயமாக மாற்றவேண்டும் என்று உலகம் விரும்புகிறது. அதன் நியாயமான மதிப்பைச் சந்தை நிர்ணயிக்கட்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது' என்றாள் கௌதமி.
'திடீரென்று யுவானை மிதக்கும் நாணய மாக்கினால் சந்தை தலைகீழாகிவிடாதா?' ஹசன் கேட்டான்.
'ஆகும்தான். அதனால்தான் சீன அரசாங்கம் முதல் கட்டமாக யுவானை 2 சதவிகிதம் மதிப்புக் குறைத்திருக்கிறது. ஒரு டாலருக்கு இப்போது 8.1 யுவான். இதுவும் 0.3 சதவிகிதம் வரையில் முன்னேபின்னே போக அனுமதித்திருக்கிறது. இதனால் அமெரிக்க அரசுக்கும் கொஞ்சம் நிம்மதி. சீனாவுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது.
'ஒரு சீன பைக்கின் விலை 830 யுவான் என்றால் அதற்கு வால் மார்ட்டில் நான் 100 டாலர் கொடுப்பேன். இப்போது மாற்று விகிதம் 8.1 யுவான் ஆகிவிட்டதால் அதே பைக் 102.46 டாலர் ஆகிவிடும்' என்றான் ஹசன்.
'மனக்கணக்கு மன்னன் தான் போ. ஒரே ஒரு ஆள் வாங்கினால் ஏற்படும் வித்தியாசம் குறைவுதான். ஆனால் பில்லியன் கணக்கான டாலர் வணிகத்தில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும்.
'யுவானுக்கு அதிக டாலர் கொடுத்து அமெரிக்கக் கம்பெனிகள் வாங்கும். அந்த விலை ஏற்றத்தை இங்கே நுகர்வோரிடம் தள்ளிவிடுவார்கள். அதனால் பணவீக்கம் ஏற்படும். விலையேற்றம் காரணமாக நுகர் வோர் தாம் செலவழிப்பதைக் குறைத்து விடுவார்கள். சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரித்து அதனால் டாலர் வருமானம் அமெரிக்காவுக்கு அதிகரிக்கும். அமெரிக்கப் பொருட்கள் சீனாவில் விலை மலிவாகக் கிடைக்கும். சீனப் பொருட்களோ அமெரிக்காவில் விலை ஏறிவிடும்.
'இப்படி நடக்க வேண்டும் என்றுதான் ஆலன் கிரீன்ஸ்பான் போன்ற பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்தார்கள். இது திடீரென்று நடந்தால் பொருளாதாரத்தை முடக்கிவிடும். ஆனால் யுவான் மெல்ல மெல்ல ஏறினால் வர்த்தக இடைவெளி குறையும், இரண்டு நாட்டுப் பொருளாதாரத்துக்குமே நல்லது' என்று சொல்லி முடித்துவிட்டு கௌதமி மூச்சு விட்டாள்.
'யுவானின் மறு மதிப்பீட்டுக்கும், செலவைக் குறைப்பதற்கான உன்னுடைய எதிர்பாராத ஆனால் வரவேற்கத்தக்க முடிவுக்குமான காரணம் இப்போது எனக்குப் புரிந்தது' என்றான் ஹசன்.
'சீன அரசாங்கம் யுவானின் மதிப்பைக் குறைத்து விட்டது. இன்னும் 5-10 சதவிகிதம் குறையலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. எப்போது நடக்கும் என்பதுதான் தெரியாது. அது கிடக்கட்டும். யுவான் வலுக் குறைந்ததில் GMமும், ·போக்ஸ்வேகனும் சந்தோஷமாகி விட்டது ஏனென்று தெரியுமா?' என்று ஒரு திடீர்க் கேள்வி கேட்டாள் கௌதமி.
ஹசன் பதில் சொல்வதற்குள் அவளே 'யோசிக்க வேண்டிய விஷயம், இல்லையா?' என்று சொல்லி முடித்தாள்.
ஆங்கிலமூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ் வடிவம்: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|