Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நிதி அறிவோம்
அது ஒரு பொன் மாலைப்பொழுது
- சிவா மற்றும் பிரியா|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன்.

"சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான்.

"அவசியம். அதற்குமுன் ஏன் பிடிக்க வில்லை என்று சொல்" என்றார் சுவாமிகள்.

"விவாகரத்துக் கோரியிருக்கிறேன். என் மனைவிக்குப் பொன்னாசைப் பேய் பிடித்திருக்கிறது."

"ஓ! தங்கம்" புன்னகைத்தார் சுவாமி. "துருப்பிடிக்காது, சிதையாது, வேறெதில் இருந்தும் உண்டாக்க முடியாது. காகிதப் பணம் வருவதற்கு முன்னால் தங்கம்தான் செலாவணியாக இருந்தது, தெரியுமோ?" என்றார். "தங்க விலை ஏன் இப்படிப் பற்றி எரிகிறது?" ராமன் வெடித்தான். "சந்தையின் இழுப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. போன சில வருடங்களில் தாமிரம், வெள்ளி, இரும்பு, தங்கம் என்று எல்லா உலோகங்களுமே விலை ஏறித்தான் போய்விட்டது. சோயா, சர்க்கரை, எண் ணெய்க்கும் கூடத்தான். சீனாவிலும் இந்தியாவிலும் தொழில்துறை முன்னேற்றம்; நான்கு வருடங்களாகத் தொடர்ந்து பொரு ளாதார வளர்ச்சி; ஜப்பான் மீண்டும் தலைதூக்குகிறது--எல்லாம் சேர்ந்துதான் பண்டச் சந்தையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"ஆனால் தங்க விலை மட்டும் விஷம்போல ஏறுகிறதே! அதற்கான தேவை ஒன்றும் அப்படிக் கூடிவிடவில்லை. தொழில் துறையில் தங்கம் பயன்படுகிறது. தங்கத்தின் தேவையில் 8 சதவீதம் மின்னணுத் துறையிலிருந்து வருகிறது. 2006-ல் தங்கம் நுகர்வோரிடமிருந்து அதற்கான தேவை கீழேதான் போகுமாம்; ஆனால் விலை மட்டும் மேலே போய்க்கொண்டே இருக்கிறது."

சுவாமிகள் ராமனை கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்றார். "மகனே, தங்கத்தைப் புரிந்துகொள்ள நீ முயற்சி செய்திருக்கிறாய். நல்லதுதான். உன் மனைவிக்குத் தங்கத்தின் மேல் ஏன் இத்தனை ஆர்வம் என்று புரிந்துகொள்ள முயன்றதுண்டா?" என்றார்.

"நகை நகை நகை!" வெடித்தான் ராமன். "வேறென்ன? தங்கத்துக்கு மிகப்பெரிய தேவை, சுமார் 70 சதவீதம், வருவது நகைக்காகத்தான். அதை முதலீடாகவும் கொள்ளலாம், பூட்டி அழகும் பார்க்கலாம். மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவிலும் அதை முதலீடாக நினைக்கிறார்கள். எனவே அதன் விலையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அலங்காரப் பொருளாக வாங்குகிறார்கள். விலை அவர்களுக்கு அத்தனை முக்கியமல்ல."

"நீ உலகின் யோகத் தலைநகரில் இருக்கிறாய். ஏன் கொஞ்சநேரம் தியானம் செய்யக் கூடாது? மூன்று நாட்களுக்குப் பின் சந்திக்கலாமே" என்றார் சுவாமிகள்.

கலி·போர்னியாவில் ஜானகி தன் விசும்பலுக்கிடையில், "அம்மா, நான் ஏன் தங்கத்தை இவ்வளவு விரும்புகிறேன் என்பதை ராமனுக்குச் சொல்லியிருக்க வேண்டும். இத்தனை பணவீக்கமும், பணமதிப்புக் குறைச்சலும் இருக்கும்போது வங்கியில பணத்தைப் போட்டு வச்சு என்ன பிரயோஜனம்?" என்று தொடங்கினாள்.

மேலும் தொடர்ந்தாள், "தங்கம் நல்ல முதலீடு. பணத்தைப் போல வேகமா மதிப்புக் குறையாது. ஏன், தேசங்களின் மத்திய வங்கிகள் கூட தங்கத்தைத்தானே அபாய காலங்களில் கையிருப்பில் வைத்துக் கொள்கின்றன! நிலம், பங்கு, கடன் பத்திரங்கள் மாதிரிக் கிடையாது. சட்டுன்னு தங்கத்தை விற்றுக் காசாக்கலாம். நிலம் நீச்சு கையில இருக்கும் ஆனால் காசாக்கறது கஷ்டம். பங்கு, பத்திரமெல்லாம் காசக்கலாம், ஆனால் வெத்துத் தாள்தானே!"

"நீ சொல்றது சரிதான்" அம்மா சொன் னார். "போனவாரம் 'நியூ யார்க் மெர் கண்டைல் எக்ஸ்சேஞ்'சுல ஜூன் 2006-ல டெலிவரி பண்ணற தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 600 டாலரைத் தொட்டது. கால் நூற்றாண்டு காலத்தில இதுதான் உச்சமாம். ஜானகி, எப்படியாவது நீ ராமனோட பேச முயற்சி செய்."

"மகனே, 'நான்' அல்லது அகங்காரம் என்பதைப் பற்றி இப்போது பேசலாமா?" என்றார் சுவாமி சில நாட்கள் கழித்து. ராமனின் சூடு தணிந்திருப்பது அவருக்குத் தெரிந்தது.

"அகங்காரம் செங்குத்தாக நிற்கும்போது அது பிரிக்கிறது. அதையே கிடத்திப் போட்டால் பாலமாக மாறிவிடும். வா, நாம் லக்ஷ்மண் ஜூலாவைத் தாண்டிப் போகலாம். பாலத்தின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்" என்றார்.

அங்கே ஜானகி இருப்பாள் என்று ராமன் எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியும் கோபமுமாகக் கலந்து கொப்பளித்தது. இருவரும் கங்கைக் கரையில் அமர்ந்தார்கள்.

"ஜானு, இண்டர்நெட்டில போய் தங்கத்தின் விலை ஏன் இவ்வளவு அதிகமா இருக் குன்னு பார்த்தேன். மாலி, டான்ஜானியா, கானா மாதிரி நாடுகளெல்லாம் பொன்னை ஏற்றுமதி செய்கின்றன. அதனால் அவற்றின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டுக் கடன்களிலிருந்து மீளவும் அவற்றுக்கு உதவுகிறது. விலை ஒரு பத்து டாலர் விழுந்தாலே ஏற்றுமதி வருமானத்தில் 75 மில்லியன் டாலர் குறைஞ்சிடுதாம். அந்த நாடுகளுக்கு அது பெரிய தொகை. தங்கத்தின் விலையேற்றம் அந்த நாடுகளுக்கு நல்ல செய்தி."

"ஆன்மீக விழிப்பு வரவேண்டிய இடத்தில உனக்குப் பொருளாதார விழிப்புணர்வு வந்த மாதிரித் தெரியுதே" என்ற ஜானகியின் கண்ணில் ஒரு சிறிய மின்னல்.

ராமன் சிரித்தான், "பணவீக்கத்துக்கு ஈடுகட்டத் தங்கம் நல்ல வழி. அமெரிக்க டிரெஷரிப் பத்திரங்களில் பிற நாடுகள் தமது உபரிப் பணத்தை முதலீடு செய்து வைக்கும் போது, வட்டி விகிதம் ஏறினால் அவை பயப்படுகின்றன. ஏனென்றால் இந்த அதிக வட்டியின் பலன் அவர்களுக்குக் கிடைக் காது. அப்போது, டிரெஷரிப் பத்திரத்துக்குப் பதிலாக அவை தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றன. இன்னொரு காரணம் போர்கள் வெடித்தலும், அரசியல் கலவரமும்.
"இப்போ ஈராக்கில் போர் நடக்கிறது; ஈரானுடன் தகராறு உள்ளது; உலகத்தில் அரசியல் நிலையாமை உள்ளது. அமெரிக்க டாலர், யூரோ போன்றவை இவற்றால் மதிப்புக் குறையலாம். இந்த மாதிரிச் சமயத்தில் தங்கம்தான் பாதுகாப்பான முதலீடு, மதிப்பிழப்பதே கிடையாது."

இருவரும் சேர்ந்து சிறிது தூரம் நடந்தார் கள். "இதுதான் பாரதக் கோவில். ரிஷி கேசத்தின் மிகப் புராதனமான கோவில். ரொம்பப் பழமையான உலோகத்தில் எனக்கு இருக்கும் ஈடுபாட்டைக் கொஞ்சம் சொல்லட்டுமா?" என்று கூறித் தொடர்ந்தாள் ஜானகி. "போன 20 வருஷங்களில் உலகத்தின் எந்த நாட்டின் பங்கு மார்க்கட் வளர்ச்சியுடனும் தங்க விலை வளர்ச்சிக்குத் தொடர்பு இருந்ததில்லை. அமெரிக்க டிரெஷரியுடனும்தான்.

"பங்குகள், பத்திரச் சந்தை இவற்றின் விலையேற்றத்துக்கான காரணம் தங்கச் சந்தையிலிருந்து மாறுபட்டது. எனவேதான் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டுக் கூடையில் தங்கத்தையும் ஒரு அங்கமாக்கிக் கொள்கிறார்கள்.

"முக்கியமாக, பண்டச் சந்தையிலும் தொழில்நுட்பப் பகுப்பாய்வு (Technical analysis) செய்தே முதலீட்டு முடிவை எடுக்கின்றனர். இதில், அதிக விலை என்பது இன்னும் அதிக விலையில் விற்கமுடியும் என்பதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது. இன்னமும் தங்கத்தின் விலை கூரையை முட்டவில்லை என்றே முதலீட் டாளர்கள் எண்ணுகின்றனர். பங்குகளை விடத் தங்கத்தில் விலை இன்னும் மேலே ஏற வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் அதில் கொண்டு போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள்."

"ரிஷிகேசத்தில் தியானம் செய்தால் முக்திக்கு அருகே போகலாம் என்று நம்புகிறார்கள். நானோ ஜானகிக்கு அருகில் வந்துவிட்டேன்" என்று சொல்லிக் கண் சிமிட்டினான் ராமன்.

தான் நெகிழ்ந்ததைக் காட்டிக் கொள்ளா மல் ஜானகி பேசினாள், "சந்தை வணிகம் செய்யும் இரண்டு நிதிகளை (exchange-traded funds) ஏற்படுத்தியதால்தான் தங்கம் திடீரென்று விலை உயர்ந்திருக்கிறது. கடைக்குப் போகாமலே தங்கத்தை வாங்கவும் விற்கவும் இது உதவுகிறது. அவை iShares Comex Gold Trust மற்றும் Streettracks Gold Shares ஆகும். பங்குகளைப் போலவே இவற்றின் மூலம் தங்கத்தை வாங்கி விற்கலாம். அதற்கான தங்கத்தை இவை வாங்கிவைத்துக் கொள்ளும். 2005-ல் மட்டும் இவை 192 டன் தங்கத்தை வாங்கின. 2006-ல் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

"இவைகளைத் திறந்ததால் மில்லியன் கணக்கில் டாலர் தங்கத்தில் முதலிடப் பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் சாத்தியமாகி இருக்காது."

அப்போது மாலைச் சூரியன் தங்கத் தட்டுப் போல மின்னியது.

அமெரிக்காவுக்குத் திரும்புகையில் இராமன் சொன்னான், "எனக்கு இந்த ஞானோதயம் எப்ப வந்தது தெரியுமா? சமீபத்தில் ஆலன் கிரீன்ஸ்பான் பேச் சொன்றில் சொன்னார், 'உங்களுக்கு எந்தப் பணத்தில் வேண்டும்? யென்னா, டாலரா, யூரோவா?' என்று கேட்டார்கள். 'தங்கம்தான் எனக்குப் பிடிக்கும்' என்று நான் சொன்னேன் என்றார்."

ஜானகி சிரித்தாள்.

வழக்கத்துக்கு மாறாக, ரிஷிகேசத்திலிருந்து இருவர் பொன்னான குடும்ப வாழ்க்கைக் குத் திரும்பினார்கள்.

ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline