|
|
"மிஸ்டர் பாண்ட், On Her Majesty's Secret Service-க்கு இனிமேல் உங்கள் சேவை தேவையில்லை" என்றார் M.
"இவ்வளவு கடுமை வேண்டாமே" என்று மன்றாடினார் ஜேம்ஸ் பாண்ட்.
"சரி. இதைக் கேளுங்கள். மாதத்தின் ஒவ்வொரு முதல் வெள்ளிக் கிழமை காலையிலும் 8:28 மணிக்கு, சிகாகோவிலும் நியூ யார்க்கிலும் இருக்கும் ஆயிரக்கணக் கான பங்கு வர்த்தகர்கள் NBC சேனலைக் கண்கொட்டாமல் பார்க்கிறார்களாம். ஏன் என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும்" என்றார் அவர்.
இந்த வேலைக்குத் தங்கத் துப்பாக்கியைத் தூக்கிப் பயனில்லை என்று புரிந்து கொண்டார் 007; இருந்தாலும் ஒப்புக் கொண்டார்.
மன்ஹாட்டன் நகர்ப்பகுதியில் ஒரு சிற்றுண்டிக் கடை. மழையில் சொட்டச் சொட்ட நனைந்த ஒரு பேரழகி 007-ஐ நோக்கி ஓடி வந்தாள். அவளைக் காப்பி சாப்பிட அழைத்தார் ஜேம்ஸ் பாண்ட்.
"கோடி டாலர் குவிக்கச் சரியான வாய்ப்பு இதுதான். ஓரிரு நிமிடங்களில் வெளியாகப் போகும் அந்த அறிக்கையை அவர்கள் அலசப் போகிறார்கள்" என்றார் சங்கீத மாய்ச் சொன்னாள் ஷீலா.
"எந்த அறிக்கை?"
"வேலைவாய்ப்புத் துறை வெளியிடப் போகும் புள்ளிவிவரம். பொருளாதார நிலையைக் காட்டும் முக்கிய அளவுகோல் களில் அது ஒன்று. பங்கு, பத்திரம் மற்றும் செலாவணிச் சந்தைகளை அது பாதிக்கும். அதைப் பார்த்தால் நாட்டின் நிதிநிலை ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியும். வளர்ச்சியா, தேய்வா என்பதைப் புட்டுப்புட்டு வைக்கும்.
"பணியிடம் அதிகரிப்பது பங்குச் சந்தைக்கு நல்லது, பாண்ட் சந்தைக்குக் கெட்டது என்பது உனக்குத் தெரியுமா?"
கடையின் மூலையில் ஒரு சந்தேகத்துக் குரிய பேர்வழியைப் பார்த்ததும் குட்பை சொல்லி மறைந்தாள் ஷீலா. அபாயத்தைப் புரிந்துகொண்ட ஜேம்ஸ் பாண்ட் வெளியே வந்தார்.
அவர் கையில் புகைந்து கொண்டிருந்தது காப்பிதான், துப்பாக்கி அல்ல.
தன் ஓட்டல் அறைக்குள் நுழையும்போது கேட்ட குரல் அவரை அதிரச் செய்தது. "ஓ! ஷீலா. உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை" என்றார்.
"Never Say Never Again, மிஸ்டர் பாண்ட். நான் உங்களைத் தொடர்ந்தேன்.
வேலைவாய்ப்பு அதிகரித்தால் நாட்டுக்கு நல்லது, ஆனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பது தெரியுமல்லவா?" விட்ட இடத்திலிருந்து ஷீலா தொடர்ந்தாள். "வளரும் பணவீக்கம் சாதாரணப் பொருள்களின் விலையை மேலே ஏற்றிவிடும். அதைக் கட்டுப்படுத்த, ·பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும். அதன் விளைவாக அரசுப் பத்திரங்களின் மூலம் நாம் பெறும் வருமானம் ஏறும். உடனே பங்குகளை விற்றுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். அதனால்தான் சொன்னேன், வேலைவாய்ப்பு அதிகரிப்பது பங்குச் சந்தைக்குக் கெட்டது, பத்திரச் சந்தைக்கு நல்லது என்று" சொல்லி முடித்தாள் ஷீலா.
கையோடு ஒரு கேள்வியும் கேட்டாள், "வேலை இழப்பு பொருளாதாரத் தேக்கத் தினால் மட்டுமல்ல, ஒரு கம்பெனி தன் வேலையை வெளிநாட்டில் செய்துபெறத் தீர்மானிப்பதாலும் ஏற்படலாம் என்பது தெரியுமல்லவா?"
"ம்ம்.. என் வேலையை எப்போது பெங்களூர்க்காரர் ஒருவருக்குக் கொடுத்து விடப் போகிறார்களோ என்று நானும் பயந்துகொண்டுதான் இருக்கிறேன்" என்று கிண்டலடித்த ஜேம்ஸ் பாண்ட் மேலும் கூறினார், "Dell நிறுவனம் 20,000 வேலைகளை அங்கே கொண்டுபோய் விட்டது. அதாவது வருவாயை அதிகரிப் பதற்கு பதிலாக, அமெரிக்காவில் இருக்கும் பணியிடங்களைக் குறைப்பதன் மூலம் லாபம் பெறப் பார்க்கின்றன கம்பெனிகள். லாபம் அதிகமானால் பங்குவிலை ஏறுகிறது."
"ரொம்பச் சரி. இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? மாதாந்திர விவசாயம் சாராத சம்பளப் பட்டியலில் ஏற்படும் மாற்றம் மற்றத் துறைகளில் பணியிட வளர்ச்சியைக் காட்டும்.
அதில அரசுப் பணிகளும் அடங்கும். சென்ற மாதத்தில் 20,000 வேலைகள் போச்சுன்னா, உடனே பொருளாதார வீழ்ச்சின்னு பொருளல்ல; அரசாங்கம் 80,000 பேரை வேலையிலிருந்து நீக்கி, தனியார் துறையில் 60,000 பணியிடங்கள் உருவானதாலும் இருக்கலாம்."
சிற்றுண்டி விடுதியில் பார்த்த அதே நபரைப் போன்று தோற்றமளித்த ஒரு வெயிட்டர் மீண்டும் அங்கே வந்தார். அதைப் பார்த்ததும் ஷீலா திடும் என்று அங்கிருந்து எழுந்து மறைந்தாள். "என் செய்திகளைக் கூர்மையாகக் கவனித்து வா" என்று சொல்லிவிட்டுத்தான் போனாள்.
தனது ஹோட்டல் அறையில் ஜேம்ஸ் பாண்ட் நோட்டம் விட்டபோது 'For your eyes only' என்று எழுதியிருந்த இரண்டு உறைகள் கிடைத்தன. அதிலிருந்தவற்றைப் படித்து முடித்தபோது திடீரென்று இருட்டினாற்போல இருந்தது. இரண்டு குண்டர்கள் அவரெதிரே! |
|
"என்ன, மோப்பம் புடிச்சது போதாதா? அந்த 'குடும்பக் கணிப்பாய்வு', 'நிறுவனக் கணிப்பாய்வு' ரெண்டுலயும் என்ன போட்டி ருந்துச்சு? 'Die another day' அப்படீன்னு நெனக்காதே. இப்பவே பால் ஊத்திடுவோம்" என்று அவர்கள் மிரட்டினார்கள்.
"அவசரப்படதீங்க நண்பர்களே" ஆசுவாசப் படுத்தினார் ஜேம்ஸ் பாண்ட். "வேலை வாய்ப்புப் புள்ளிவிவரத்தைப் பெறக் குடும்பக் கணிப்பாய்வு (Household survey) பயன்படுது. ஒவ்வொரு மாதமும் தொழி லாளர் துறையின் தொழிலாளர் புள்ளிவிவர அலுவலகம் (Bureau of Labor Statistics, Department of Labor) அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் உத்தியோக நிலைமை பற்றி ஒரு கேள்வி நிரல் அனுப்புகிறது. சுமார் 95 சதவிகிதம் குடும்பங்கள் அவற்றை நிரப்பி அனுப்பு கின்றன. இதைத் தொகுத்து, நாட்டுக்கான வேலையில்லாதோர் புள்ளிவிவரத்தைக் கணிக்கிறார்கள்.
"இது பொருளாதாரத்தின் ஆரோக்கியத் தைக் காட்டுது சரி. ஆனால் இதுவே வர்த்தகங்களின் முழுமையான நிலைமை யைப் படம்பிடிக்குமான்னு கேட்டா இல்லை. அதுக்காக, தொழிலாளர் புள்ளிவிவர அலுவலகம் 400,000 வணிகநிறுவனங் களுடனும் தொடர்பு கொள்கிறது. இதைத் தான் 'நிறுவனக் கணிப்பாய்வு' (Establishment Survey) என்று சொல்வது. இதிலே வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, சம்பள விகிதம் போன்ற தகவல்களைச் சேகரிக்கிறார்கள்.
"குடும்பக் கணிப்பாய்வில் வேளாண்துறை மற்றும் பிற துறைகளில் பணிசெய்யும் தொழிலாளர்களைப் பற்றித் தகவல் சேகரிக்கிறார்கள். சுயவேலை செய்வோர், வீட்டுப்பணி செய்வோர் ஆகியோரும் இதில் அடங்குவர். இது தனிநபர் தரும் தகவல்.
"ஆனால், நிறுவனக் கணிப்பாய்வில் வேளாண்மை தவிர்த்த தொழிலாளரைப் பற்றிய தகவல் மட்டுமே சேர்க்கப்படுகிறது. இங்கே நிறுவனங்கள் தகவலைத் தரு கின்றன. எனவே, பொருளாதார நிலை மையை இது மிகச் சரியாகக் காண்பிப் பதாகக் கொள்ளலாம்."
"ரஷ்யர்கள் உன்னை மூளைச் சலவை செய்துவிட்டார்கள் போலிருக்கிறது" என்றான் வந்திருந்த முரடர்களில் ஒருவன்.
அதைக் கவனிக்காதது போல் ஜேம்ஸ் பாண்ட் தொடர்ந்தார், "இந்தக் கணிப்பாய்வுகளில் முக்கியமாகக் காணப்படும் ஒரு தகவல் என்ன தெரியுமா? சென்ற மாதத்தை விட இந்த மாதம் புதிதாக எத்தனை பணியிடங்கள் அதிகம் உருவாகியுள்ளன என்பதுதான். ஒரு மணிநேர உழைப்புக்குத் தரப்படும் சம்பளத்தில் காணப்படும் மாற்றமும் கவனிக்கப்பட வேண்டியது. உயர்ந்த சம்பளம் தரும் பணியிடங்கள் அதிகரித்தால் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சுட்டுகிறது.
"அதிகப் பேருக்கு வேலை கிடைத் திருந்தால், மக்களின் வருமானம் உயரும். பண்ட விற்பனை அதிகரிக்கும். நிறுவனங்களின் வருமானமும் வளர்ச்சி பெறும். இது பங்குவிலைகளைக் கூட்டும். பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபத்தை அது தரும். அப்போது அதிகப்படியான மக்கள் பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்."
முரடர்களில் ஒருவனுக்கு இதை நம்பவே முடியவில்லை, "யாரை முட்டாளாக்கப் பார்க்கிறாய்? இந்த மிகுவேகக்கணினி (Super Computer) என்ன சொல்லுதுதெரியுமா?
நிறுவனக் கணிப்பாய்வு சொல்ற தகவல் குடும்பக் கணிப்பாய்வு சொல்றதுக்கு நேர்மாறா இருக்குதுன்னு சொல்லுது."
"அது ஒண்ணும் ஆச்சரியமில்லை" என்றார் பாண்ட். "வீட்டுக் கணிப்பு அதிகப் பேருக்கு வேலை கிடைச்சதாச் சொல்லலாம். ஏன்னா அதில வீட்டுவேலை மற்றும் வேளாண்மை செய்யறவங்க எண்ணிக்கை யும் சேர்ந்திருக்கு. ஆனால் நிறுவனக் கணிப்பில் இவங்கள்ளாம் இல்லை. அதில பல பேரை வீட்டுக்கு அனுப்பியதாகவும் சில பேருக்கே வேலை கொடுத்ததாகவும் இருக்கலாம். வேளாண்துறையில் அதிகப் பணியிடம் இருக்கலாம், வர்த்தகத்தில் குறைவான தேவை இருக்கலாம்.
"இந்தப் புள்ளிவிவரத்தை ஆதாரமாக வைத்து ஒருத்தர் பங்கு வர்த்தகம் செய்ய ணும்னா ரொம்ப சாமர்த்தியம் வேணும். ஒரு செய்தியின் தாக்கம் சில சமயம் 15 நிமிஷம்தான் இருக்கும். சில சமயம் 15 நாளுக்கும் இருக்கலாம். விவரம் தெரிஞ்ச ஆளுக்குத்தான் எந்தச் செய்தியை எப்படி எடுத்துக்கணும்னு சொல்லமுடியும்."
அவர்களிடம் இருந்து தப்பித்து ஜேம்ஸ் பாண்ட் விமான நிலையத்துக்குப் போனால் அங்கே M. காத்துக்கொண்டிருந்தார்.
M. கேட்டார், "குறைந்த வேலைவாய்ப்பு விகிதம் எப்படி செலாவணிச் சந்தையைப் பாதிக்கும் என்று கண்டுபிடிக்கும் வேலையை அடுத்தபடியாகத் தரட்டுமா?"
"அதைவிட என் தலையில் ஒரு Thunderball-ஐத் தூக்கிப் போட்டிருக்கலாமே என்று சொன்ன பாண்ட் தன் Goldfinger-ஐ வேண்டாம் என்பது போல அசைத்தார்.
சிவா மற்றும் பிரியா 'Dollarwise Penny foolish' என்ற நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய: www.wisepen.com
ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ் வடிவம்: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|