Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நிதி அறிவோம்
பணப்பேய்கள்
- சிவா மற்றும் பிரியா|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlarge"இந்த நடுநிசிப் பேய்கள் கூட்டத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தொடங்கலாமா?" என்றது மயான மன்றத்தின் தலைவரான கொள்ளிவாய்ப் பிசாசு.

"இந்தக் கூட்டத்துக்கு ஒரு புதுத் தலைப்பை நான் முன்மொழிகிறேன். 'நான் உயிரோடு இருந்தால்...' என்பதே அது" என்றது முந்திக்கொண்டு வேதாளம்.

"முதலீடு செய்வேன்!" என்று உறுதியாகச் சொன்னது காட்டேரி. "சொல்லப் போனால், பங்குகளின் அடிப்படை மற்றும் தொழில் நுட்ப ஆய்வு செய்வது எப்படின்னு நான் நல்லாக் கத்துக்கிட்டேன். பாரேன், கூகிள் ஒரு வருஷத்துக்குள்ளே 400 டாலரைத் தொடப்போகுது."

"வால் ஸ்ட்ரீட்டிலே பேயா அலைஞ்சேன்னு சொல்லு" கிண்டலடித்தது கொள்ளி வாய்ப் பிசாசு.

காட்டேரி சிரித்தது. "ஆமாம். ஒரே ஒரு கூகிள் பங்கு வாங்கக் குறைந்தது 280 டாலர் வேணும். என் கிட்ட ஆயிரம் டாலர் இருக்குதுன்னு வெச்சுக்கிட்டா, மூணு பங்குகள்தான் வாங்கலாம்."

தலையை வேகமாக அசைத்த வேதாளம் சொல்லியது, "கூகிளில் முதலீடு செய்ய எனக்கு வேறொரு வழி தெரியும்--ஆப்ஷன்ஸ் (Options) வாங்கலாம்! அடுத்த நாலு மாசத்தில நானூறு டாலரைத் தொடும்னு நிச்சயமாத் தெரிஞ்சா ஆப்ஷன்ஸ் வாங்கினா, பங்கு வாங்கறதை விட அதிக லாபம்.

"ஹார்மன் இன்டர்நேஷனல் (HAR) பங்கு ஒரு நாள்ல 25 சதவீதம் ஏறிச்சு. புதன் கிழமை (ஆக. 17) 82.10 டாலர், அடுத்த நாள் பாத்தா 102.40 டாலர்.

"ஆப்ஷன்ஸ்ல இதை வாங்கினவங்க கொஞ்சம் பிரிமியம் கொடுத்துட்டு, ஏகப்பட்ட லாபம் பண்ணினாங்க. அதாவது 3000 சதவீதம் லாபம் ஒரே நாளில! பத்தாயிரம் டாலர் முதலீடு அன்னைக்கே முன்னூறாயிரம் டாலராயிடுச்சு."

எல்லாப் பிசாசுகளும் வாயைப் பிளந்தபடிக் கேட்டுக்கொண்டிருக்க, வேதாளம் தொடர்ந்தது. "பங்குமார்க்கெட் கில்லாடிப் பையன் ஒருத்தனைப் பேய் பிடிச்சிருந்ததே, ஞாபகம் இருக்கா? அவனைப் பிடிச்சிருந்தது நான்தான். அந்தச் சமயத்தில நெறயக் கத்துக்கிட்டேன்."

"சரி, 'ஆப்ஷன்ஸ்'னா என்னன்னு சொல்லு" என்றது கொள்ளிவாய்ப் பிசாசு தலைவருக்கேயான மிடுக்கோடு.

"ஆப்ஷன்ஸ் என்பதும் ஒரு 'டெரிவேடிவ்' (Derivative). அது தானாகவே இருக்க முடியாது. அதாவது இன்னொன்றிலிருந்து பெறப்பட்டது. வேறொரு முதலீட்டுப் பொருளான பங்கு போன்றதில் இருந்து அது பெறப்படுகிறது. பங்கு என்பது தானாகவே இருப்பது. ஆனால் அடிப்படையாகப் பங்கு இல்லாமல் டெரிவேடிவ் கிடையாது.

"ஒரு மனிதன் ஆவியோட பேசணும்னா ஒரு மீடியம்--இரண்டுக்கும் நடுவிலே ஊடாடுகிறவர்--வேணும். அவர்தான் மனிதனுக்கும் ஆவிக்கும் தொடர்பு ஏற்படுத்துகிறார். அதேபோல இரண்டு முதலீட்டாளருக்கு நடுவே ஆப்ஷன் என்பது ஒரு தொடர்பு, ஒரு ஒப்பந்தம்.

"கூகிள் ஜனவரியில நானூறு டாலரைத் தொடும்னு நிச்சயமா நம்பறீங்க, ஆனால் கையில அதிகம் காசில்லை; அப்போ, ஜனவரி 2006-க்கான ஆப்ஷன் வாங்கறது ஒரு வழி.

"ஆப்ஷனை ஒருத்தர் விக்கணும், ஒருவர் வாங்குவார். இரண்டுபேருக்கும் நடுவில் இருக்கும் ஒப்பந்தம்தான் ஆப்ஷன். அந்த ஒப்பந்தத்தின்படி அதில் குறிப்பிட்ட பங்கின் விலை எவ்வளவாக இருந்தாலும், குறிப்பிட்ட நாளில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விலைக்கே வாங்கும் உரிமை உனக்குக் கிடைக்கும்.

"ஓர் உதாரணம் பார்க்கலாம். ஆகஸ்டு 19-ம் தேதியன்னைக்கு, கூகிள் பங்குகளை ஜனவரி 2006-ல 350 டாலர் வீதம் வாங்கறதாச் சொல்லி, அதற்கான கட்டணம் 6 டாலரைக் கொடுத்துடலாம். ஜனவரியில பங்கு விலை நானூறு டாலர் ஆயிடுது. ஆனால், நீ ஒப்பந்த விலையான 350 டாலர் கொடுத்தால் போதும்."

"ஐயா, ஒருவேளை நான் முன்னூத் தம்பதைக்குப் பங்கை வாங்க விரும்ப லேன்னா...?" என்று கேட்டது காட்டேரி.

"உன்னோட ஆப்ஷன்ஸைக் குறைந்தது 50 டாலர் வித்தியாசத்தில விற்கலாம். அதுதானே ஒப்பந்த விலைக்கும் சந்தை விலைக்குமான வித்தியாசம்" வேதாளம் பொறுமையாக விளக்கியது. "பங்குகளையே வாங்கி விற்கறதை விட லாபம் ஈட்ட இது சுலபமான வழிதானே. இதைக் 'கால் ஆப்ஷன்' (Call Option) என்று சொல்லு வாங்க. விலையேறும்போது லாபம் வரும் இதிலே."

தலைவர் முனீச்வரனுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. "உன்னுடைய அறிவுத் திறனை மெச்சுகிறேன். நாம்ப ஒரு செய்தித் தாள் தொடங்கலாம்னு எனக்குத் தோணுது" என்றார் தன் கரகரப்பான குரலில்.

"அதற்குப் 'பேய் ஸ்ட்ரீட் ஜர்னல்'னு பேர் வெச்சுடலாம்" என்றது காட்டேரி. "ஏய், ஒரு நிமிஷம். கூகிள் பங்குவிலை முன்னூத்தைம் பதைத் தாண்டலேன்னா, நாம குடுத்த ஆறு டாலர் பிரிமியம் அம்பேல்தானா?"

வேதாளம் "நீ சொல்றது சரிதான்" என்றது.
"எனக்கென்னவோ பங்குகளையே வாங்கறதுதான் பிடிக்குது. விலை சரிஞ்சே போய்ட்டாலும், எவ்வளவு நாள் வேணும்னாலும் வெச்சிருக்கலாமே" என்று சொல்லித் தொடர்ந்தது காட்டேரி. "வயாக்ரா, லிபிடார் எல்லாம் செய்யும் ·பைஸரின் பங்குகளில் 1000-த்தை நான் 26.50 டாலரில் ஆகஸ்டு 9-ம் தேதி வாங்கறேன்னு வெச்சுக்கோ. ஆகஸ்டு 20-ம் தேதி அதன் விலை 25.50 ஆயிடுது. அதாவது ஒரு டாலர் இறங்கிடுது. என்னுடைய நஷ்டம் 1000 டாலர்.

"நஷ்டப்பட இஷ்டமில்லேன்னா நான் அதை வாங்கின விலைக்கு மேலே ஏறுகிற வரைக்கும் பேசாம வச்சுக்கலாம். செப்டம்பர் இரண்டாவது வாரம் 28.50 டாலர் ஆய்டுது. இப்ப வித்தேன்னா சொளையா 2000 டாலர் லாபம் ஆச்சே!"

தொண்டையைக் கனைத்துக்கொண்ட முனீச்வரர், "அப்போ, நம்ம பங்குகள் ஒப்பந்த விலையை எட்டலைன்னா, போட்ட காசெல்லாம் போய்டும் இல்லையா?" என்றார்.
வேதாளம் ஒரு எலும்பைக் கடித்தபடி, "மொத்தத்தில, பங்கு மார்க்கட்ல பணம் பண்ணனும்னா, நீ வாங்கின விலைக்கு மேலே சந்தை விலை போனால்தான் முடியும். ஆனால், ஆப்ஷன்ஸ்ல ஒரே அனுகூலம் என்ன தெரியுமா, கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து அதிகக் காசு பார்க்கலாம்.

இப்போது ஒரு பூதம் எழுந்து கூறிற்று, "மனிதர்களை நான் தாக்கப் போனால், அவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு கனத்த புத்தகத்தைக் கையில பிடிச்சுக்கிட்டுத் தூங்கறதைப் பார்க்கிறேன். ஏதோ முதலீடு பத்தின புத்தகம்னு தோணுது. இப்பேர்ப் பட்ட அப்பாவிகளைத் தாக்கணுமான்னு எனக்கே சங்கடமாயிடுது. சரி, இந்தப் புத்தகத்தில என்னதான் இருக்குதுன்னு ரெண்டு மூணு தடவை திருப்பிப் பாத்தேன்.

"அதுல கத்துக்கிட்டது என்னன்னா, விலை குறையும்போதும் ஆப்ஷன்ஸ் வாங்கி லாபம் பண்ணலாம். கூகிளையே எடுத்துக் குவோம். ஆகஸ்ட் 20 அன்னைக்கு அதன் விலை 280 டாலர். ஆனால் அது கொஞ்சம் அதிக விலை அப்படீன்னு தோணுது. வருஷக் கடைசிக்கு முன்னமே அது 200 டாலருக்கு இறங்கும்னு எதிர்பார்க்கிறே. உடனே ஜனவரி 2006-ல 250 டாலர் விலைக்கு அந்தப் பங்குகளை விற்பதாக ஒப்பந்தம் போடலாம். இந்த ஒப்பந்தத்துக்கு, ஆகஸ்ட் 19-ம் தேதி நீ கொடுக்க வேண்டிய கட்டணம் 9.50 டாலர்தான்.

"நீ நெனச்ச மாதிரியே ஜனவரியில பங்கின் விலை 200 ஆயிடுச்சு. இப்ப சந்தை விலைக்கும், ஒப்பந்த விலைக்கும் இடையே இருக்கும் வித்தியாசமான 50 டாலர் உனக்குக் கிடைக்கும். இதுக்கு நீ செல வழிச்ச தொகை 9.5 டாலர்தானே. இந்த லாபம் 426 சதவீதம்! அதுமட்டுமல்ல, சந்தையில விலை விழுந்தபோதிலும் நீ லாபம் பார்த்தாச்சு.

"இப்படி விலை இறங்கும்போது லாபம் பெறும்படியான ஆப்ஷனுக்கு 'புட் ஆப்ஷன்' (Put Option) என்று பெயர்" பூதம் சொல்லி முடித்தது.
காட்டேரி மீண்டும் எச்சரித்தது: "இதில மிகப் பெரிய அபாயம் என்னன்னா, நீ ஒப்பந்தம் போட்டபடி விலை ஏறவோ இறங்கவோ இல்லைன்னா, உன் முதலீடு முழுவதுக்கும் எள்ளும் தண்ணியும்தான்."

தலைவர் கொள்ளிவாய்ப் பிசாசு தொகுத்துச் சொன்னது, "ஆக, பங்குகளில் அதிக முதலீடு போடாமலே ஏராளமாப் பணம் சம்பாதிக்கணும்னா ஆப்ஷன்ஸ் நல்ல வழிதான்." ஒரு பெருமூச்செறிந்துவிட்டு கொள்ளிவாய்ப் பிசாசு தொடர்ந்தது, "நான் மட்டும் சாலையை கவனமாக் கடந்திருந் தால், இன்னைக்கு நான் உயிரோட இருந்திருப்பேன். கொஞ்சம் ஆப்ஷன்ஸ்ல விளையாடிப் பார்த்திருக்கலாம்!" என்றார்.

"விபத்துக்குப் பிறகு எல்லோருமே புத்திசாலிகள்தாம்!" என்று சொல்லி முடித்தது வேதாளம்.

ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline