|
|
|
காங்கிரஸ் போராட்ட காலங்களில் சிறைச்சாலைகளுக்கு ஏராளமான காங்கிரஸ்காரர்கள் போவது வழக்கம். ஆனால், சென்னை ராஜ்யத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு போராட்டத்திலும் முதலில் ஜெயிலுக்குப் போகிறவரும் கடைசியில் அதைவிட்டு வெளியே வருகிறவரும் ஒரே ஒருவர்தான். அவரைத்தான் மட்டப்பாறை சிங்கம் என்று அக்காலத்தில் மக்கள் அழைத்து வந்தார்கள். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் போல வேறு யாருக்கும் கிடையாது. அப்பகுதிகளில் இருந்த ஜமீன்தார்கள் எல்லாரும் அவருடைய நண்பர்கள். ஜமீன்தார்களாகட்டும், குடிகளாகட்டும் அவர் பேச்சுக்கு மறுபேச்சுக் கிடையாது. கோழிச் சண்டைகள்தான்
அக்காலத்தில் ஜமீன்தார்களுக்குப் பெரிய பொழுதுபோக்கு. நமது சிங்கத்திற்கும் அதிலே ரொம்பக் கிறுக்கு. அந்தக் கோழிச் சண்டையில் அவரை நிபுணர் என்று சொல்லவேண்டும். குஸ்தியிலும் சரி, பெரிய வஸ்தாத். ஆள் ஒல்லியாய், உயரமாய் இருப்பார். ஆனால், உடல் வலிமை மட்டும் சிங்கத்தின் வலிமையைப் போன்றதாய் இருக்கும். தெலுங்குப் பிராமணராகையால் மீசை வைத்திருப்பார். அந்த மீசையும் பிரமாதமாய் இருக்கும். கதர் ஜிப்பா போட்டுக் கொண்டு மீசையையும் முறுக்கிவிட்டு வெளியே கிளம்பிவிட்டாரானால், அசல் சிங்கம் புறப்பட்ட மாதிரியே இருக்கும்.
அவர் பெயர் ஆர். வெங்கட்டராமய்யா. ஆனால், எல்லாரும் வெங்கட்டராமய்யர் என்றுதான் சொல்லுவார்கள். அக்காலத்தில் அப்பகுதிகளில் அவருக்கு இருந்த செல்வாக்கை இக்காலத்தில் யூகிக்க முடியாது. ராமநாதபுரம் ராஜாவை 1937-ஆம் வருஷ சட்டசபைத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் தோற்கடித்தாரென்றால், அதற்கு மூலகாரணம் மட்டப்பாறை சிங்கம்தான். அய்யரின் செல்வாக்கு அவ்வளவு அதிகமாய் இருந்தபடியால் காங்கிரஸ் இயக்கம் தோன்றுகிற சமயங்களில் முதலில் மதுரை ஜில்லா அதிகாரிகள் அய்யரைத்தான் ஜெயிலில் போடுவார்கள். ஒவ்வொரு தடவையிலும் 2 வருஷங்களுக்குக் குறைந்து அவருக்குத் தண்டனை கிடையாது. இம்மாதிரி நீண்டகால தண்டனைகளை அவர் அநுபவிக்க வேண்டி வந்ததால், அவருடைய சொத்துக்களுக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் கொஞ்சமல்ல. என்றாலும், அய்யர் இவற்றைக் கண்டு அஞ்சவில்லை. சிங்கத்தைப் போல அஞ்சாமல் நின்றார்.
நானும் அய்யரும் ஜெயிலில் இருந்த காலங்களில் ஒரு விஷயத்தை நான் கண்டேன். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களிலிருந்து ஜெயிலுக்குள் வந்த சாதா கைதிகள்கூட அய்யரை, "மட்டப்பாறை சாமி" என்று பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடுவார்கள். அவ்வளவு செல்வாக்குள்ள வேறு யாரும் காங்கிரஸ் கைதிகளில் இருந்ததில்லை. மட்டப்பாறை சிங்கத்தைப் பற்றி முன்பே நான் அறிந்திருந்தாலும், நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கடலூர் ஜெயிலில் 1932-ல்தான் கிடைத்தது. என்னைவிட வயதில் பத்து வருஷமாவது அவர் அதிகமாய் இருப்பார். என்றாலும், நானும் அவரும் சந்தித்த உடனேயே எங்கள் இருவர் மனமும் ஒன்று சேர்ந்து, நாங்கள் நண்பர்களானோம்.
திருச்சி ஜெயிலில் 1941-ல் நாங்கள் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. எங்களுடன் இருந்த ஒரு ராஜீயக் கைதி, தாம் நேத்தாஜி கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது உண்மைப் பெயரைச் சொல்லவேண்டாம். அவரைக் கணபதி என்று அழைப்போம். அவர் கடப்பையைச் சேர்ந்தவர். அவரும் தனிப்பட்டவர் சத்தியாக்கிரகம் செய்தே ஜெயிலுக்குள் வந்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் அதற்குமுன் காங்கிரசில் வேலை செய்ததாக யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ்காரர்கள் இருக்கும் ஜெயிலுக்குள் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகக் காங்கிரஸ்காரர் வேஷத்தில் உள்ளவர்களைப் போலீசார் அனுப்புவதுண்டு. அம்மாதிரி வந்தவர்தான் கணபதி என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அந்தச் சந்தேகத்திற்கு ஏற்றாற்போல, அந்தக் கணபதி நமது தலைவர்களைத் தூஷிக்க ஆரம்பித்தார். மகாத்மாவின் சத்தியாக்கிரகத் திட்டப்படி அந்த நபர் ஜெயிலுக்குள் வந்திருப்பாரானால் மகாத்மாவை அவர் தூஷிக்க வேண்டிய அவசியமென்ன? இதுதான் எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது. கணபதியின் தூஷணை கொஞ்சங் கொஞ்சமாக ராஜாஜி மீதும் திரும்பியது. ராஜாஜி குளித்துக் கொண்டிருக்கும்போது அங்கே போய் நின்று கொண்டு திட்டுவதும், சாப்பாட்டுக்கு எல்லாரும் உட்கார்ந்திருக்கும் போது இவர் ராஜாஜி பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு திட்டுவதுமாக ஆரம்பித்தார்.
ஜெயிலில் இருந்த தேசபக்தர்களுக்கெல்லாம் இந்தச் செய்கைகள் மிகுந்த மனவேதனையைக் கொடுத்தன. கணபதியின் நண்பர்களிடம் சொல்லி, இதை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தோம். ஆனால்,கணபதி திருந்துகிறவராய் இல்லை. ஜெயிலைவிட்டு விடுதலையாகி வெளியே போகிறவர்கள் முதல்நாள் ஜெயிலில் நண்பர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம். அம்மாதிரி ஒருநாள் மாலையில் ஒரு தேக்கச்சேரி நடந்தது. அதில் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை பேசியபோது தலைவர்களைத் தூஷித்து ஜெயிலுக்குள் பேசுவதைக் கண்டித்தார். இதை யாரோ போய்க் கணபதியிடம் சொல்லியிருக்கிறார்கள். உடனே கணபதி, அண்ணாமலப் பிள்ளை அறைமுன் வந்து நின்றுகொண்டு, "ஏ அண்ணாமலை, அண்ணாமலை, வெளியே வா. என்னைப் பற்றி என்ன பேசினாய்?" என்று கத்தினார். அச்சமயம் மட்டப்பாறை நூல் நூற்றுக்கொண்டிருந்தார்.
நான்அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். கணபதி தாறுமாறாகப் பேசுவது நிற்கவில்லை. அடுத்த தடவை அவர் பேசும்போது அவருக்குப் பாடம் கற்பிப்பது என்று நானும் மட்டப்பாறையும் தீர்மானம் செய்திருந்தோம். அதற்காக நண்பர்களிடம் சொல்லி வைத்துக் கணபதி கலாட்டா செய்யும்போது, எங்களிடம் வந்து சொல்லும்படி ஏற்பாடு செய்திருந்தோம். அதன்படி ஒரு நண்பர் வந்து, அண்ணாமலைப் பிள்ளையைக் கணபதி திட்டிக்கொண்டிருக்கிறார்' என்று சொன்னார்.
மட்டப்பாறை வெங்கட்டராமையர்
உடனே நாங்கள் இருவரும் போனோம். அங்கே கணபதி நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். நான் அவர் பக்கத்தில் போய்த் தட்டிக் கொடுத்தேன். பக்கத்தில் மட்டப்பாறை நின்றுகொண்டிருந்ததால் கணபதி எதிர்க்கவில்லை. பூர்ண அஹிம்சை கைக்கொண்டார். "இனிமேல் இம்மாதிரி பேசினால், ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டுத் திரும்பினோம். இதற்குள் மாலை 6 மணியாகி விட்டது. சாப்பிடுகிற நேரம். ஜெயிலில் ஒரே பரபரப்பு. சூப்பிரண்டிடம் கணபதி போய்ப் புகார் செய்தார். மறுநாள் காலையில் ராஜாஜியையும், பிரகாசத்தையும் சூப்பிரண்டு தமது காரியாலயத்திற்கு அழைத்து விசாரணை செய்தார். அவர் ஒரு பிரிட்டிஷ்காரர். பின்னால் என்னையும் அழைத்து விசாரித்தார்.
"கணபதி தான் சொல்லுவது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சாட்சியம் விடட்டும்" என்று நான் கேட்டேன். கணபதி சில பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்கள் எல்லாரும் ஆந்திரர்கள். அவர்கள் சொல்லும்போது, கணபதி சொல்லும் சம்பவத்தைத் தாங்கள் பார்க்கவில்லை என்று கூறினார்கள். ஆகவே, கணபதி கொடுத்த புகார் ஆதாரமில்லாத புகாராயிற்று. ஆதாரமில்லாத புகார் கொடுத்ததற்காகக் கணபதிமீது நடவடிக்கை எடுப்பதா அல்லது அவர் புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளுகிறாரா என்ற நிலைமை ஏற்பட்டது. கணபதி தமது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். அன்றே அவரைச் சென்னை ஜெயிலுக்கு மாற்றிவிட்டார்கள். அப்புறம் அவர் நாங்கள் இருந்த தனி ஜெயிலுக்கு வரவே இல்லை.
★★★★★
ராஜாஜி முதல்மந்திரியாக இருந்தபோது அய்யர் சட்டசபையில் அங்கத்தினராய் இருந்தார். மாகாண சுயாட்சி ஏற்பட்டுங்கூட, காங்கிரஸ்காரர்கள் சர்க்காரை நடத்தி வந்துங்கூட மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு அய்யர் மீதுள்ள பழைய கோபம் போகவில்லை. ஒரு வெள்ளைக்காரர் ஜில்லா சூப்பிரண்டாய் இருந்தார். அவருக்கும் அய்யருக்கும் பிடிக்கவே பிடிக்காது. அவர் துணிந்து அய்யர்மீது ஒரு வழக்குப் போட்டார். அந்த வழக்கில் அய்யர்மீது கொலை, கொள்ளை, தீ வைத்தல் இவ்வளவு குற்றங்களையும் சுமத்தினார். வழக்கு, பொய் வழக்கு என்பதை ராஜாஜி அறிவார். என்றாலும், தம்மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென்று அய்யர் கேட்டபோது ராஜாஜி மறுத்துவிட்டார். கோர்ட்டில் விசாரணை நடந்தால் அய்யர் மீதுள்ள வழக்கு வெறும் பொய் என்று நிரூபணமாகி அய்யர் விடுவிக்கப்படுவார் என்றும், அப்படி விடுதலையடைவதுதான் நல்லது என்றும் சொல்லிவிட்டார். வழக்கை வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் ஆட்சிக்குக் கெட்டபெயர் வருமென்பது ராஜாஜியின் கருத்து.
கடைசியில் வழக்கு நடந்து அய்யரும் விடுதலையானார். ஆனால், ஒரு கொலை, கொள்ளை வழக்கை நடத்துவதென்றால், எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் இருக்கின்றன. அவ்வளவையும் அய்யர் அநுபவித்தார். என்றாலும், ராஜாஜிமீது அவருக்கிருந்த மதிப்பும் பிரியமும் மட்டும் குறையவில்லை. அதே மாதிரி ராஜாஜிக்கும் அய்யர் மீதிருந்த அன்பும் நம்பிக்கையும் குறையவில்லை.
ஜெயில் வாழ்க்கையில் ஒரு விநாடிகூட அவரால் சும்மா இருக்க முடியாது. அவர் உடம்பில் உள்ள உணர்ச்சியும் வேகமும் அவரைச் சும்மா இருக்கவிடுவதில்லை. பெரும்பான்மையான நேரங்களில் அவர் நூல் நூற்றுக்கொண்டே இருப்பார். ரொம்ப மெல்லிய நூலாய் நூற்பார். அதைக்கொண்டே தமக்கு வேண்டிய துணிகளைத் தயார் செய்து கொள்ளுவார். ஏதோ சில நாட்களில் சீட்டாடுவார். சீட்டாட்டத்திலும் கெட்டிக்காரர். ரொம்பக் குஷி வந்துவிட்டால் அவருக்குப் பிடித்தமான மீனாட்சி அம்மன்மீது பாடியுள்ள சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அர்த்தஞ் சொல்லுவார். பெரிய கலா ரசிகர். நூற்பதில் அவருக்கு எவ்வளவு பிரியம் உண்டோ, அவ்வளவு பிரியம் சங்கீதத்திலும் உண்டு. காரைக்குடி சாம்பசிவ ஐயர் வீணைக் கச்சேரி என்றால், எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு அதில் லயித்து விடுவார். நவீன நாகரிக நடையுடைகள் அவருக்குப் பிடிப்பதில்லை. அதற்குக் காரணம் அவருடைய பழமையான பண்பாடேதான். மறைந்துவரும் பழைய பண்பாட்டின் உருவகமாய் அய்யர் விளங்குகிறார். சுயராஜ்யப் போராட்டத்தில் அவருக்கு இருந்த அடக்கமுடியாத ஆவலினால் அவர் மதுரை ஜில்லாவில் செய்த காரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சுயராஜ்யத்திற்காக மதுரை ஜில்லாவில் அரும்பெரும் தியாகங்கள் செய்த அய்யர், சுயராஜ்யம் கிடைத்த பின்பு முன்னணி ராஜீய வேலையிலிருந்து விலகிக்கொண்டார். என்றாலும், மதுரை ஜில்லாவின் சுயராஜ்யப் போராட்ட சரித்திரத்தில் அய்யரின் பெயர்தான் முதல் இடத்தை நிச்சயமாய்ப் பெறும். |
|
டி.எஸ். சொக்கலிங்கம் ('எனது முதல் சந்திப்பு' நூலில் இருந்து) |
|
|
|
|
|
|
|