Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | அஞ்சலி | கவிதைப் பந்தல் | Events Calendar
Tamil Unicode / English Search
அலமாரி
பாதரட்சை விஷயம்
- சாவி|மார்ச் 2023|
Share:
தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளியில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை. மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு சேர்ந்து கொண்டேன். உலாவும் போது காந்திஜியின் பாதங்களைக் கவனித்தேன். அப்போதுதான் காந்திஜியின் பாதங்களில் புண் என்கிற விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. இருந்தாலும் மகாத்மாஜி அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் காடு மேடுகளிலெல்லாம் காலில் செருப்பு அணியாமலே நடந்து கொண்டிருந்தார். காந்தி மகாத்மா வெறுங்காலுடன் நடந்து போகும் காட்சியைக் கண்ட என் மனம் சொல்லொணாத வேதனைக்குள்ளாயிற்று.

"ஆகா! உலகம் போற்றும் உத்தமரான மகாத்மாஜி, கல்லிலும் முள்ளிலும் பனித்துளிகள் நிறைந்த சில்லென்ற களிமண் தரையிலும் கால் கடுக்க நடந்து செல்லும்போது நாம் மட்டும் செருப்புடன் நடந்து செல்வதா?" என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. தட்சணமே என்னுடைய காலிலிருந்த செருப்புக்களைக் கழற்றிக் கையிலிருந்த கித்தான் பைக்குள் போட்டுக் கொண்டேன். (என்னுடைய செருப்புக்களில் ஒன்று அந்தச் சமயம் அறுந்து போயிருந்ததென்பதையும், அது என்னுடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியிருந்தது என்பதையும் நேயர்களுக்குக் காதோடு சொல்லி வைக்கிறேன்!)

வாபஸ் ஆனார்!
போகும் வழியில் "மகாத்மாஜி ஏன் செருப்பு அணிவதில்லை?" என்று நண்பர் மாணிக்கவாசகம் அவர்களிடம் விசாரித்தேன்.

"மகாத்மாவிடம் பரமபக்தி கொண்ட பஞ்சாபி ஸோல்ஜர் ஒருவர் ஒரு முறை மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காக நவகாளிக்கு வந்திருந்தார். காந்திஜி வெறுங்காலுடன் யாத்திரை செய்கிறார் என்ற செய்தியைப் பத்திரிகைகளிலே படித்த அந்த நண்பர் மகாத்மாவின் உபயோகத்துக்கென்று கையோடு ஒரு ஜதை மிதியடிகளையும் வாங்கி வந்திருந்தார். அந்தப் பாதரட்சைகளை மகாத்மாவிடம் தந்து, 'தாங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். இது தங்களுக்கு நான் இடும் அன்புக் கட்டளை' என்று கூறினார்.

காந்திஜி சிரித்துக்கொண்டே, 'ஏன்?' என்று கேட்டார்.

'தாங்கள் இந்தத் தேசத்தின் நாற்பது கோடி மக்களுக்கும் பொதுச் சொத்து. தங்களுடைய வயோதிக தசையில் இப்படிச் செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து செல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இது விஷயத்தில் தங்களுடைய இஷ்டப்படி விட நாங்கள் தயாராக இல்லை. ஆகையால், தாங்கள் இதை அணிந்து கொண்டுதான் ஆகவேண்டும்' என்று ஒரு போடு போட்டார். ஆனால், காந்திஜியோ, 'இந்தியாவில் நாற்பது கோடி மக்களும், ஒரு ஏழை எளியவர்கூடப் பாக்கி இல்லாமல் செருப்பு அணிந்து கொள்ளும் காலம் ஏற்படும்போது நானும் அணிந்து கொள்வேன்; அதுவரை வெறுங் காலுடனேதான் நடப்பேன்' என்று கண்டிப்பாக மறுதலித்துவிட்டார். எனவே அந்தப் பஞ்சாபி ஸோல்ஜர் அதற்கு மேல் பேச வழியின்றி மகாத்மாஜியிடமிருந்து வெற்றிகரமாக வாபஸாகிவிட்டார்" என்று மாணிக்கவாசகம் கதையை முடித்தார். இதற்குள் பொழுது போய்விட்டதால் நாங்களும் எங்கள் குடிசையை நோக்கி வெற்றிகரமாக வாபஸ் ஆனோம்.



கேள்வியும் பதிலும்
அவதார புருஷரான காந்தி மகான் தமது அஹிம்சா யாத்திரையின் நோக்கம் என்னவென்பதைப் பற்றியும், தம்முடைய நோக்கம் வெற்றி பெறாவிட்டால் அதற்கு யார் பொறுப்பாளி என்பதைப் பற்றியும் நாலைந்து தினங்களுக்கு முன்னால், ஒரு கிராமத்தில் மிகவும் தெளிவாக, விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அது வருமாறு:

"என்னுடைய லட்சியங்களுக்கு, கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்குமுன் இத்தகைய ஒரு பெரிய சோதனையில் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் தேறாவிட்டால் அது நான் கடைப்பிடித்து வரும் அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப்பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். ஆகவே, நான் இப்போது தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் பெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்."

மேலும் மகாத்மா சிலர் மனத்திலுள்ள விகல்பமான சந்தேகம் ஒன்றுக்கும் பதில் கூறியிருக்கிறார்.

அதாவது, மகாத்மாவின் மாசு மறுவற்ற தூய வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒரு துராத்மா கடிதத்தின் மூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி இருந்தான்.

அந்தக் கடிதத்தை மகாத்மா பிரார்த்தனைக் கூட்டத்தில் எல்லோருடைய முன்னிலையிலும் வெளிப்படையாகப் படித்துவிட்டு அதற்குப் பதிலும் கூறினார். அது வருமாறு:

"என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மசரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நான் எப்போதும் ஸ்திரீகளுடன் நெருங்கிப் பழகுகிறேன் என்றும், அதனால் அவருக்குச் சந்தேகமாயிருக்கிறதென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரைப்போலவே இன்னும் சிலரும் என்மீது சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அந்தரங்கம் என்பது எதுவும் கிடையாதாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது என்னுடைய கடமை.

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும்அடக்கி ஆண்டு வருகிறேன். நாவுக்கு ருசியான பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது.உயிர். வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பதுதான் உண்மை யோகியின் லட்சணம்.

காட்டிலேயே உள்ள ஒருவன் 'நான் ஜிலேபியே சாப்பிடுவது கிடையாது' என்றால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஏனெனில், காட்டிலே ஜிலேபி கிடைக்காது. ஆகையால், கிடைக்காத ஒரு பொருளைச் சாப்பிடுவதில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாகாது.

அதைப்போலவே, பெண்களின் மத்தியில் இருந்து கொண்டு பிரம்மசரிய வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றியாகும். இந்தப் பரீட்சையில் நான் பரிபூரண வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சத்தியமாகக் கூறுகிறேன்."

ரொட்டி பேரம்!
தர்மாபூர் கிராமத்து ஜனங்கள் மகாத்மாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் தோப்புக்கு வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காலை மணி எட்டுகூட அடிக்கவில்லை. காந்திஜி தாம் செல்ல வேண்டிய வழியை விட்டுவிட்டு அருகிலிருந்த ஒரு சிறு ரொட்டிக் கடையின் சமீபம் சென்றார். அந்தக் கடைக்காரர் காந்தி மகாத்மாவைக் கண்டு பயபக்தியுடன் எழுந்து நின்றார். அந்தக் கடையிலிருந்த ஒரு முழு ரொட்டியை மகாத்மாஜி கையிலெடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார்.

"ஐயோ, மகாத்மாவுக்கு நல்ல பசி போலிருக்கிறது! அதனாலேதான் ரொட்டியை எடுத்துச் சாப்பிடப் போகிறார்" என்று கூறினார்கள் சுற்றியிருந்தவர்கள்.

காந்தி மகான் அந்த ரொட்டிக் கடைக்காரரைப் பார்த்து, "இந்த ரொட்டி என்ன விலை?" என்று கேட்டார்.

அந்தக் கடைக்காரர் பசியோடு வந்திருக்கும் மகாத்மாவுக்கு அதைப் பரிசாக வழங்க விரும்பினார். அதனால் விலை கூற மறுத்துவிட்டார்.

மகாத்மாஜி, "விலையைச் சொல்லும்" என்று அழுத்தமாகக் கேட்கவே, கடைக்காரர் தயங்கிக் கொண்டே, "ஓர் அணா" என்று பதில் கூறினார்.

"எல்லோருக்கும் ஓர் அணாவுக்குத்தான் விற்கிறீரா அல்லது எனக்கு மட்டும் குறைத்துச் சொல்கிறீரா?" என்று கேட்டார் மகாத்மா.

"எல்லோருக்கும் விற்கும் விலைதான்" என்று பதில் கூறினார் கடைக்காரர்.

மகாத்மா ரொட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். "இது ரொம்பச் சின்ன ரொட்டி; ஆகையால், இதற்கு அரையணாதான் கொடுக்கலாம். தாங்கள் அதிக லாபம் வைத்து விற்கிறீர்கள். கிராமத்து ஜனங்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்குச் சக்தியற்றவர்கள்" என்று கூறி, ரொட்டியைக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

பாவம்! ரொட்டிக் கடைக்காரருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாய்ப் போயிருக்க வேண்டும்.

கிராமத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் வியாபாரம் நடக்கிறதா என்பதைச் சோதிப்பதற்காகவே மகாத்மா மேற்படி ரொட்டியை விலை கேட்டிருக்க வேண்டும் என்பது அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ஊர்ஜிதமாயிற்று. அன்றைய மாலைப் பிரசங்கத்தில் பொதுவாக கிராமவாசிகளுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசினார். கிராமத்தைச் சுகாதார ரீதியாக வைத்துக் கொள்வதெப்படி, தெருக்களைக் கூட்டிச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் விதம், நீர்த்தேக்கங்களைப் பாழாக்காமல் குடிதண்ணீராக உபயோகிக்கும் முறை முதலியவற்றை விரிவாக எடுத்துச் சொன்னார். காலையில் தாம் ஒரு கடையில் ரொட்டி விலை விசாரித்ததைப்பற்றிப் பிரஸ்தாபித்து, வியாபாரிகள் அதிக லாபம் வைக்காமல் உணவுப் பொருளை ஏழை மக்களுக்கு நியாயமான விலைக்குக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பிறகு தம்முடைய சாதன வாழ்க்கையைக் குறித்துச் சிறிது நேரம் பேசினார். "இம்மாதிரி வாழ்க்கை நடத்த ஒரு சிலரால்தான் முடியும். ஆகையால், என்னை யாரும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

('நவகாளி யாத்திரை' நூலிலிருந்து ஒரு பகுதி)
சாவி
Share: 




© Copyright 2020 Tamilonline