Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | பொது | வாசகர்கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓவியர் என்.எஸ். சபாபதி
- அரவிந்த்|பிப்ரவரி 2023|
Share:
ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர் என்.எஸ். சபாபதி என்னும் ரத்தினசபாபதி. இவரது தந்தை என். சுந்தரராஜன் ஆச்சாரியார் தங்கத் தொழிலில் சிறந்தவர். பெரியப்பா அம்மையப்பர் மீனாக்ஷி அம்மனுக்கு வைரக்கிரீடம் செய்தவர். பாட்டனார் நடேசன் ஆச்சாரி மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் விக்கிரகங்களை பந்தனம் செய்தவர். அவர்கள் வழியில், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தங்கத் தாமரையை வடிவமைத்திருக்கிறார் சபாபதி. மதுரையில் இருக்கும் 'இன்மையில் நன்மை தருவார் ஆலயம்' உள்ளிட்ட பல ஆலயங்களில் இவர் வரைந்திருக்கும் தெய்வீகச் சுவரோவியங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரையில் வசிக்கும் சபாபதி தமது வாழ்க்கை மற்றும் படைப்புலகம் குறித்து நம்மோடு பேசினார். வாருங்கள், கேட்போம்.

★★★★★


கே: உங்கள் இளமைப் பருவம் குறித்துச் சொல்லுங்கள்...
ப: என் முழுப்பெயர் ரத்தின சபாபதி. மதுரையில் பிறந்தேன். மதுரை தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். ஓவிய ஆர்வத்தால் குருமார்களைத் தேடிச் சென்று பாரம்பரிய குரு சிஷ்ய முறைப்படி உடனிருந்து சேவை செய்து ஓவியம் கற்றேன். கோவில் கட்டடக் கலை, தஞ்சை ஓவியம், சுதைச் சிற்பம் பயின்றேன். தமிழ்மீது ஆர்வம் அதிகம். பல பாடல்கள், வெண்பாக்கள், குறள் போன்ற ஈரடி புதுக் குறள்கள் எழுதியுள்ளேன். பாரம்பரிய மொழிகளான சம்ஸ்கிருதம், கிரந்தம் எழுதவும் படிக்கவும் தெரியும்.

சிற்ப சாஸ்திரம், அஷ்ட வர்க்க ஜோதிடம் போன்றவற்றில் ஞானம் உண்டு. 1990களில் மாதா அமிர்தானந்தமயி அவர்களின் மதுரை கமிட்டி உறுப்பினராக இருந்து சத்சங்கத்தில் பாடகராக இருந்துள்ளேன். சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள வீரமங்கை வேலு நாச்சியார் திருவுருவம் நான் வரைந்ததுதான். இளமைப் பருவம் முழுவதையும் கலைகளை ஆராய்ந்து பயில்வதில் செலவிட்டேன்.

முருகன் ஓவியம் தீட்டுகையில்



கே: ஓவிய ஆர்வம் வந்தது எப்படி?
ப: எனது பெரியப்பா திரு. சரவணன் ஆச்சாரி அவர்கள் எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது சிறு சிறு உருவங்கள் வரைந்து காட்டுவார். அவரே எனது முதல் குரு. அப்போது ஓவிய ஈடுபாடு தொடங்கியது. பள்ளித் தேர்வு விடுமுறை நாட்களில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்று, அங்கு தூண்களில் உள்ள சிற்பங்களை வரைந்து பார்ப்பேன். சிற்பங்கள் மீதான ஆர்வம் அங்கிருந்து தொடங்கியது. பள்ளி ஓவிய ஆசிரியர் அகஸ்டின் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் போன்றோர் தந்த ஊக்கமும், அதனால் பெற்ற பல ஓவியப் போட்டி வெற்றிகளும் எனது ஓவிய வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

எனது தந்தை சுந்தரராஜன் ஆச்சாரியார் நகைத்தொழில் செய்பவர். அவர்கள் வழியில் அறிமுகமான அருணாசலம் ஆச்சாரி மற்றும் புண்ணியகோடி ஆச்சாரி இருவரும் சிறுவனான என்னை அருகமர்த்தி தங்களது வடிவமைப்புத் திறமைகளை, தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தனர்.

சிறுவயது முதலே எனது சிந்தை முழுதும் சிறந்த ஓவியர் ஆவதிலேயே இருந்தது.

வாஸ்து
வாஸ்து நம் இந்தியக் கட்டடக்கலை சார்ந்தது. பூமியில் உள்ள நிலங்களை எல்லை வகுத்து ஒழுங்குபடுத்தும் இலக்கணமே 'வாஸ்து' எனப்படுகிறது. நிலமும் அதில் எழுப்பப்படும் கட்டிடமும் நம் வாழ்க்கையும், இயற்கையுடன் முரண்பாடுகளின்றி இணைந்து போவதற்கான ஒரு சாஸ்திரம். நிலம், கட்டிடம் இவையெல்லாம் நம் உடல் போன்றவை. உறுப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் வாழ்க்கை தடையின்றி இருக்கும். உடலில் ஏற்படும் குறை போன்றதுதான் வாஸ்து தோஷமும். குறையைச் சரிசெய்வது போலக் கட்டிடங்களைச் சரிசெய்யும் போது தோஷங்கள் நீங்கி, வாழ்க்கை சிறக்கிறது.

வாஸ்து ஒரு போலி-அறிவியல் (pseudoscience) என்று அதன் அருமை தெரியாதோர் சித்திரிக்கின்றனர். ஓர் ஓவியத்தில் குறை இருந்தால் அதை வரைந்தவர் குறையே அன்றி ஓவியக் கலையே பொய் ஆகிவிடாது. அதுபோல வாஸ்துவை சரிவரப் பயிலாதவர் சொல்வதைக் கேட்டு, பலன் கிடைக்கவில்லையெனில் வாஸ்து சாத்திரமே தவறு என்ற எண்ணத்திற்கு மக்கள் போய்விடுகின்றனர். சரியான வாஸ்து நிபுணர்களை அறிந்து அவர்கள் வழிகாட்டல்படிச் செல்வதே நன்மை தரும்.

வாஸ்துவை ஒரு புலனுக்கெட்டாத அறிவியல் என்று சொல்லலாம். இன்று மட்டுமல்ல என்றுமே நமக்குத் தேவையான ஒரு அறிவியற் கலை வாஸ்து.

என்.எஸ். சபாபதி


கே: உங்கள் குருநாதர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்...
ப: எனக்குப் பல்வேறு காலகட்டங்களில் பல குருநாதர்கள் அமைந்தார்கள். எனது பள்ளித்தோழர் ஆர். ரமேஷ் அவர்களின் தந்தை மிகச்சிறந்த ஓவியர். ஓவிய மேதை திரு. ராஜா ரவிவர்மா அவர்களின் குருவான திரு. ராமசாமி நாயுடு அவர்களின் வழிவந்தவர். N.S.R. சித்திரகலா என்னும் ஸ்டுடியோவில் அவர் வரைந்த ஓவியங்களை நானும் எனது நண்பனும் வியந்து பார்ப்போம். கோவில்பட்டி சி. கொண்டைய ராஜு, டி.எஸ். சுப்பையா, எம். ராமலிங்கம் ஆகியோரின் கேலண்டர் ஓவியங்களை நான் பிரமிப்புடன் பார்ப்பேன். இவர்களை குருவாகக் கொண்டு இவர்களைப் போல் வரைய ஆசை இருந்தது.

1977-78களில் சார்ட் பேப்பரில் நீர்வண்ணத்தில் சுவாமி படங்களை வரைந்து பார்ப்பேன். அவற்றைச் சேகரித்து வைத்திருந்தேன். மேல்நிலைப் படிப்பில் தோல்வியுற்றதால் 1981ல் எங்களது குடும்ப நண்பர் ஒருவர் எனது திறமையைக் கண்டு கோவில்பட்டி திரு டி.எஸ். சுப்பையா அவர்களிடம் என்னைச் சேர்த்துவிட்டார். தந்தையின் எதிர்ப்பை மீறியே சேர்ந்தேன். கேலண்டருக்கான போஸ்டர் வண்ணங்கள் மூலம் offset Designing கலையை சுமார் ஐந்து வருடங்களில் கடுமையாகப் பயின்றேன். பின்னர் ஓவியர் திரு.வி.கே.ஸ். சிவம் அவர்களிடம் எனாமல் ஓவியம் தீட்டப் பயின்றேன். ஐயா சிவம் அவர்கள் தத்ரூபமான கோவில் சுவர் ஓவியங்கள் வரைவதில் மிக வல்லவர்.

எனது மானசீக குருநாதர்களாக ஓவியக் கடல் ராஜா ரவிவர்மா, S.M. பண்டிட், M.R. அச்சரேக்கர், மாதவன், சில்பி மற்றும் பவுச்சர் பிரான்சிஸ் ஆகியோரைக் கருதுகிறேன்.

ரமண மஹரிஷி



கே: பாரம்பரிய ஓவியங்கள் வரைவதில், தெய்வ உருவங்கள் வரைவதில் உள்ள சவால்கள் என்ன?
ப: பாரம்பரிய ஓவியம் வரைவதே ஒரு சவால்தான். முகபாவனைகளில் நுணுக்கம் எனக் கொண்டால் சாந்தம், ரௌத்ரம், பயானகம், வீரம், ஹாஸ்யம் (சிரிப்பு), உக்ரம் என அனைத்தும் உண்டு.

சாந்தம் - சோமாஸ்கந்த மூர்த்தம்
ரௌத்ரம் - காளிகா மூர்த்தம்
பயம் - கஜசம்ஹார மூர்த்தத்தில் உமை வடிவம்
வீரம் - கஜசம்ஹார மூர்த்தம்
ஹாஸ்யம் - திரிபுராந்தகர் மூர்த்தம், வீரபத்திர மூர்த்தம், பைரவ மூர்த்தம்
உக்ரம் - மஹிஷாசுர மர்த்தினி, நரசிம்ஹ மூர்த்தம்

மேற்கண்ட முகபாவனைகளை அந்தந்த தேவதைகளுக்குத் தகுந்தாற் போல அமைக்க வேண்டும். முக பாவனைகளில் மட்டுமே இத்தனை நுணுக்கங்கள் உண்டு. இவற்றுடன் கற்பனை வளம் சேர்த்துப் பொருத்தமாக அமைக்க வேண்டும். மேலும் தனித்தன்மையுடன், பிற ஓவியங்களின் தாக்கமின்றி இருப்பது என எண்ணற்ற சவால்கள் பாரம்பரிய ஓவியங்களில் அதிகம்.

என்.எஸ். சபாபதி பெற்ற விருதுகள்
1970களில் பல ஓவியப் போட்டிகளில் முதற் பரிசு வென்றுள்ளார்.
1980களில் ஏஷியன் பெயிண்ட்ஸ், மதுரை நடத்திய ஓவியப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து வருடம் நடுவராக இருந்துள்ளார்.
1990ல் மதுரை நன்மை தருவார் கோவில் திருப்பணிக்காக 'சித்ரம் சபாபதி' என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
2002ல் மதுரை மாரியப்ப சுவாமிகள் அறக்கட்டளை வழங்கிய 'கோவிற்கலைப் புலவர்' விருது பெற்றிருக்கிறார்.
'சிறந்த ஓவியருக்கான விருது' (2005) அகில இந்திய யாதவ சங்கத் தலைவர் திரு. நாகேந்திரனால் வழங்கப்பட்டது.


கே: தெய்வ சித்திரங்களை வரையும் போது இதை இப்படித்தான் வரைய வேண்டும் என்ற விதிமுறை, நிர்ணயம் இருக்குமே, அதுபற்றிச் சொல்ல இயலுமா?
ப: எந்த தெய்வத்தின் உருவத்தை வரைய வேண்டுமோ அந்த தெய்வத்தைப் பற்றிய குறிப்புகளைத் திரட்ட வேண்டும். இதற்கு நூலறிவு முக்கியம். பல நூல்களை ஆராய்ந்து தெரிந்து கொள்வது அவசியம். இதற்கு ஆகம, சிற்ப நூல்களில் உள்ள தியான ஸ்லோகங்கள் உதவியாக இருக்கும். இவற்றைக் கொண்டு ஒரு ஒத்திகைக் கோட்டோவியத்தை வரைந்துகொள்ள வேண்டும்.

வரைந்து பார்த்த ஓவியத்தில் ஏதேனும் குறை இருந்தால் சரிசெய்ய வேண்டும் .

இவ்வாறு நிர்ணயம் செய்து, குறிப்பிட்ட ஓவியத்திற்குரிய தெய்வத்தை மனதால் தியானித்து, குருவந்தனம் செய்து, வரைவதேற்கேற்ற ஒரு சுபநாளில், நல்ல நேரத்தில் அங்க சுத்தி, மன சுத்தி செய்து மஞ்சள் தொட்டு ஆரம்பிக்க வேண்டும். இது பாரம்பரியப் பொதுவிதி.

ஓவியர் மாருதியுடன் சபாபதி மற்றும் கலை நண்பர்கள்



கே: பாரம்பரிய ஓவியர்களின் எண்ணிக்கை இன்றைக்குக் குறைந்து விட்டதே, காரணம் என்ன?
ப: இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

1. பாரம்பரிய ஓவியம் பயிலுவதற்கான கால அளவு மிக அதிகம்.
2. பயிலும் மாணவர்களின் பொறுமையின்மை.
3. புறத் தாக்கங்களால் கவனம் சிதறுதல்.
4. வெகு சீக்கிரம் பொருளீட்டும் ஆசை.
5. தகுதியான குருமார்கள் கிடைப்பதில் உள்ள சிரமம்.
6. கடுமையான பயிற்சி செய்ய வேண்டியுள்ளது.
7. கற்பிப்பவருக்குக் கொடுக்க வேண்டிய பொருள்.

எனப் பலகாரணங்களால் புதிய பாரம்பரிய ஓவியர்கள் உருவாகாமல் குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.

தொடர்புக்கு
யூட்யூப் சேனல் | ஃபேஸ்புக் | டெலிகிராம் | வாட்ஸப் | இணையதளம் |
சபாபதியின் ஓவியங்கள் சில
கே: நவீன ஓவியங்கள், கணினித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ஓவியங்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: கணினித் தொழில்நுட்பத்தில் உருவான மிகச்சிறந்த நவீன ஓவியங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். கணினி இல்லாத காலத்திலும் நவீன ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நூறு சதவீதம் கைகளால் வரையப்பட்ட, இன்றளவும் மதிப்புடையவைகளாக அவை இருக்கின்றன.

ஓவியர் ஒருவரின் கையில் உள்ள தூரிகையும், வண்ணக் கலவைகளும் அவனுடைய கற்பனைகேற்றபடி மிக அழகாக ஓவியங்களை உருவாக்குகின்றன. ஆனால், கணினி மூலம் உருவாக்கப்படும் ஓவியங்களில் கற்பனை வளம் மற்றும் உணர்வுகள் குறைவு என்றே சொல்லலாம். ஏனெனில் அவை ஓவியனின் படைப்புத்திறனை முழுமைப்படுத்துவது இல்லை என்பது எனது கருத்து. கணினியின் போக்கின்படி ஓவியன் தன்னை மாற்றிகொள்ள வேண்டியுள்ளது. எது முடிவென வருகிறதோ அதில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் தூரிகையால் வரையும்போது சிறு கோடுகளோ அல்லது சில புள்ளிகளோகூட ஒவியத்திற்கு உயிரூட்டுவதாக இருக்கும். மேலும், இதன் ஆயுளும் மிக அதிகம்.



கே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார் யார்?
ப: பலர் உள்ளனர். S.M.பண்டிட், ராம்குமார், M.R. அச்சரேக்கர், சில்பி, பிரான்சிஸ் பவுச்சர், ராஜா ரவிவர்மா, சுப்பையா நாயுடு, மாதவன், திருவாரூர் நடேசபிள்ளை, தனபால், மற்றும் பலரைச் சொல்லலாம்.

கே: ஒரு சிற்பியாக மிகப் பெரிய உயரங்களில், அதாவது ஐம்பதடி, நூறடி, நூற்றைம்பது அடி என்றெல்லாம் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவது, பிரதிஷ்டை செய்யப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: உயரமாக இருக்க வேண்டியவை கோபுரங்களும் கொடிமரமும் தான். இவற்றை உயரமாக அமைக்க வேண்டியதன் காரணம் அயலூரிலிருந்து நடந்து வருவோர் கோவில் இருக்குமிடத்தை வெகு தூரத்தில் இருந்தே எளிதில் அறிந்து கொள்வதற்காகத் தான். முற்காலத்தில் கருவறை மேலமைந்த விமானம்தான் மிக உயரமாகக் கட்டப்பட்டது. உதாரணமாக, தஞ்சைக் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம். பின்னர் விமானம் சிறிதாக அமைக்கப்பட்டு ராஜ கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டன. தெய்வ உருவங்கள் கருவறைக்குள் சிறிய உயரத்தில்தான் அமைக்கப்பட்டன. தெய்வ உருவங்கள் கல்லினாலும் மரத்தினாலும் சுதையினாலும் உருவாக்கப்பட்டன.

ஒரு கோயிலின் பிரதான தேவதையின் சிலை, கர்ப்பக் கிரஹம், விமானம், கோபுரம், கோவிலின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர் ஆகியவை சிற்ப சாஸ்திரத்தின் ஆயாதிப் பொருத்தப்படியும் சிற்பநூல் விதிப்படியும் வாஸ்து விதிப்படியும் பார்த்து ஊர்ப் பொருத்தம், தேவதா பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கர்த்தாப் பொருத்தம் இவையெல்லாம் தெளிந்து அமைக்கப்படும். அதன்படி மூர்த்தி சிறிதா, பெரிதா என்பதைவிட, விதிக்குள் அடங்கும்படி அமைக்கப்பட்டுள்ளதா என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் கோயில் தூண்களில் பெரிய சிலைகள் அமைக்கப்பட்டன. இவை காட்சிக்கும், பக்தி உணர்வை ஊட்டுவதற்கும் தானே தவிர பூஜைக்காக அல்ல. அவற்றை வணங்குதல் தவறில்லை. ஆனால் அவற்றுக்கு நைவேத்தியம், அபிஷேகம், உபசாரங்கள் இல்லை. கருவறைக்குள்ளும், கோஷ்டத்திலும் அமைந்த விக்ரகங்களுக்கே பூஜைகள் எல்லாம்.

50 அடி, 100 அடி விக்ரகங்களின் அளவில் பிரகிருதி தத்துவம் மிகப் பெரியதாக அமைந்து விடுவதால் அவற்றுக்குத் தகுந்த யந்திரப் பிரதிஷ்டை, பிராணப் பிரதிஷ்டை, நைவேத்தியம், பலிபூஜை, உபசாரம், மந்திர ஜபம் இவை யாவும் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும். தினசரி ஆறுகால பூஜைகளிலும் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இது தற்காலத்தில் மிகமிகச் சிரமம். தற்சமயம் பொருத்தமில்லாத அளவுகளில் சிற்பநூல் விதிகளைப் பின்பற்றாமல் தெய்வ அனுமதி பெறாமல், செய்யப்படும் விக்ரகங்களால் பிரமிப்பை உண்டாக்க இயலுமேயன்றி பக்தி உணர்வை உண்டாக்க இயலாது.

எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நிறுவப்படும் மூல விக்கிரகங்கள் சிறிதாக இருந்தாலும், மிகுந்த ஈர்ப்புடன் இருப்பதை இன்றும் காண்கிறோம். உதாரணமாக பழனி தண்டாயுதபாணி, மதுரை மீனாக்ஷி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். முற்காலம் நாட்டை ஆண்ட மன்னர்களுக்கு மிக உயரச் சிலைகள் நிறுவத் தெரியாமல் இல்லை. ஆனால் அவர்கள் சாஸ்திரங்களின் விதிகளை மீறிச் செய்ய விரும்பவில்லை.

இருளப்பசாமி | சென்னை MGR நினைவாலயத்தில் சபாபதி வடித்த வெண்கலச் சிற்பம்



கே: உங்களுடைய சபாபதி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி மூலம் நீங்கள் செய்துவரும் பணிகள் என்னென்ன?
ப: மதுரையில் ஓவியக்கலையை முறையாகப் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மிகக்குறைவு. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஓவிய ஆர்வம் மிகுந்தவர்களுக்கான முறையான பயிற்சி அளிக்க இதைத் தொடங்கினேன். வருங்காலத்திற்கான சிறந்த ஓவியர்களை உருவாக்குவதே நமது குறிக்கோள்.

ஓவியம் சார்ந்த கலைகளான சிற்பம், உலோக வேலை, சுடுசிற்பம், வார்ப்பு வேலை போன்றவற்றில் சிறந்த கலைஞர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தி அக்கலைகளிலும் இளைஞர்கள், மாணவர்கள், வளர் கலைஞர்கள் ஆகியோரை ஈடுபடச் செய்வதும் எமது பணிகளில் உண்டு. ஆன்லைன் மூலம் ஓவியம் கற்றுத் தருகிறேன். உலகமெங்கும் பாடங்கள் செல்கின்றன.

ஜக்கம்மா தேவி | மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குளத்தில் சபாபதி வடித்த பொற்றாமரை



கே: உங்கள் வாரிசுகளும் உங்கள் துறையில் ஆர்வமாக உள்ளனரா?
ப: ஆம். எனது மகள்களில் மூத்தவர் பிரியா கைதேர்ந்த ஒவியராகவும், இளையவர் உமா ஃபேஷன் டிசைனர் ஆகவும், மகன் சௌமியராஜன் கட்டடக் கலைஞராகவும் உள்ளனர்.

உரையாடல்: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline