Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
மெய்வழிச்சாலை ஆண்டவர் (பகுதி-1)
- பா.சு. ரமணன்|ஜூன் 2024|
Share:
'மெய்வழி ஆண்டவர்', 'ஸ்ரீ சாலை ஆண்டவர்', 'பிரம்மோதய சாலை ஆண்டவர்', 'பிரம்மோதய மார்க்கநாத மெய்வழிச் சாலை ஆண்டவர்' என்றெல்லாம் பலவிதங்களில் போற்றப்படும் மெய்வழிச்சாலை ஆண்டவரின் வாழ்க்கை வரலாறு, ஆன்மத்தேடல் உள்ள ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. தனக்கென்று ஓர் இடம், கொள்கை, வழிபாடு, கொடி, மக்கள் என்று தனி மதத்தை ஸ்தாபித்தவர் மெய்வழிச்சாலை ஆண்டவர். இவரது இயற்பெயர் காதர்பாட்சா.

பிறப்பு
காதர்பாட்சா என்னும் இயற்பெயரை உடைய மெய்வழிச்சாலை ஆண்டவர், 1900த்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டி என்ற சிற்றூரில், ஜமால் உசேன் - பெரியதாயன்னை மகனாகப் பிறந்தார். பெற்றோர் செய்துவந்த வேளாண்மைத் தொழிலோடு வியாபாரத்தையும் தொழிலாகக் கொண்டார்.

ஆன்மீக நாட்டம்
இளவயது முதலே சாதுக்கள், பக்கிரிகள் போன்றோர் மீது அன்பு கொண்டு உதவினார். ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டிருந்த அவர் பிறப்பு, இறப்பு என்பது என்ன, ஏன் பிறக்கிறோம், இறக்கிறோம், இறைவனை அடையும் வழி என்ன, சரியான மார்க்கம் எது என்பது போன்ற சிந்தனைகளைக் கொண்டிருந்தார். அதற்கான விடை தேடி அலைந்தார்.

திருமணம்
அதே காலகட்டத்தில் குடும்ப வழக்கப்படி அவருக்குத் திருமணம் ஆனது. இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையானார். நாளுக்கு நாள் ஆன்மீக நாட்டமும், தேடலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

குருவின் ஆசி
பல குருநாதர்களைச் சந்தித்தார். யாரும் அவரது கேள்விகளுக்கு விடை கூற முன்வரவில்லை. ஒருநாள், காசுக்காரம் பாளையத்தில் தணிகை வள்ளல் மணி என்பவரைச் சந்தித்தார். அவர் இவரது கேள்விகளுக்கு விரிவான விடை அளித்ததுடன், "உன் பிறப்பின் நோக்கம் என்ன என்பதையும் ஆராய்ந்து பார்" என்று கூறி ஆசிர்வதித்தார். அதுமுதல் தனித்திருப்பதும், தன்னுள் தான் ஆழ்வதும், மெய்யைத் தேடி அலைவதும் காதர்பாட்சாவின் வழக்கமானது. நாளடைவில் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர் தன் குருநாதரான தணிகை வள்ளல் மணியுடன் சேர்ந்து பல இடங்களுக்குப் பயணப்பட்டார். குரு மெய்வழி ஆண்டவருக்கு தீட்சை அளித்து 'மார்க்கநாதர்' என்று பெயரிட்டார்.



மெய்ஞ்ஞானம்
குருவும் சீடரும் இணைந்து பல இடங்களுக்குச் சென்றனர். மார்க்கநாதர், குருவின் கட்டளைப்படி விருதுநகர் அருகில் உள்ள ரெட்டியபட்டியில் கவராநாயக்கர் என்பவரது வீட்டில் தங்கி ஓர் ஆண்டு ஆடு மேய்த்தார். ஓராண்டு முடிந்ததும் குருவின் கட்டளைப்படி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ஒரு குகையில் தங்கித் தவம் செய்தார். தவத்தின் முடிவில் இறைவன் அருளால் அவருக்கு மெய்யறிவு கிட்டியது. தவத்தின் பயனாக உடுக்கை, சங்கு, சூலம், அங்குசம், வேல், தண்டாயுதம், கிள்நாமம் (தலைகீழ் பிறைவடிவில் உள்ள இலச்சினை) ஆகியவை கிடைக்கப்பெற்றார். ஞானபூரணம் அடைந்தபின் மார்க்கநாதர், தான் அடைந்த ஞானத்தை உலகமக்கள் பெற்று உய்யவேண்டிக் குருவால் தனித்து விடப்பட்டார்.

ஆசிரமம்
மார்க்கநாதர், மானாமதுரைக்கு அருகில் உள்ள ராஜகம்பீரம் என்ற இடத்தில் முதன்முதலில் ஆசிரமம் அமைத்தார். தான் உணர்ந்த உண்மைகளை மக்களுக்குப் போதித்தார். ஆனால், அங்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் காரைக்கால் சென்றார். சில வருடங்களுக்குப் பின் மீண்டும் மதுரை வந்தார். மதுரையில் அருப்புக்கோட்டை சாலையில் ஆசிரமம் ஒன்றைத் தோற்றுவித்தார். ஆசிரமத்தில் மண் சுவராலும் தென்னங் கீற்றாலும் அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது, அது 'சபை' என்று அழைக்கப்பட்டது. சபையில் மாணவர்கள் பலர் சேர்ந்தனர்.

அது இரண்டாம் உலகப் போர் காலக்கட்டம். ஆங்கிலேயர்களுக்கு இடநெருக்கடி ஏற்பட்டதால் அந்த ஆசிரம இடத்தைப் பெற விரும்பினர். வேவல்பிரபு மெய்வழி ஆண்டவரிடம் அவ்விடத்தைப் பெற முயன்றார். மார்க்கநாதர் அதற்கு ஒப்புக்கொண்டு ஆங்கிலேயரிடம் ரூ.1,35.000 பெற்றுக்கொண்டு ஆசிரமத்தைக் காலிசெய்தார். அத்தொகையை மதுரையில் தங்கமாக மாற்றி, கள்ளிப்பெட்டியில் அடைத்துக்கொண்டு தனது மாணவரது ஊரான புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்குச் சென்று தங்கினார்.

மெய்வழிச்சாலை
மார்க்கநாதர் புதிய ஆசிரமத்தை நிர்மாணிக்கப் பல இடங்களைத் தேடினார். இறுதியில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்துப்பட்டி கிராமம் பாப்பநாச்சிவயல் என்ற ஊரில் 100 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். 1942ல் அங்கு ஓர் ஆசிரமத்தை நிர்மாணித்தார். தென்னங் கீற்றாலும் மண்சுவராலும் அங்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. ஆசிரமவாசிகள், மாணவர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டப்பட்டன. அந்த நகருக்கு 'மறலி கைதீண்டாச் சாலை என்னும் மெய்வழிச்சாலை' என்று பெயரிடப்பட்டது.

மெய்வழி ஆண்டவர்
மார்க்கநாதர் அது முதல் மெய்வழி ஆண்டவர் என்றும், மெய்வழிச் சாலை ஆண்டவர் என்றும், ஸ்ரீ சாலை ஆண்டவர் என்றும் அழைக்கப்பட்டார். தனது அமைப்புக்கென தனிக் கொள்கை, நியதி, வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தினார். 'மறலி கைதீண்டாச் சாலை ஆண்டவர்கள் மெய்மதம்' என்ற மத அமைப்பாக அதனை உருவாக்கினார். 'மறலி கைதீண்டாச் சாலை ஆண்டவர்கள் மெய்மதம்' என்பதற்கு, 'மறலி என்றால் எமன். எமனால் அணுகப்பெறாத மெய்வழிச் சாலையைச் சேர்ந்த ஆண்டவர்கள் தோற்றுவித்த மெய்மதம்' என்று பொருள் கூறப்பட்டது. இம்மதத்தில் இந்து, கிறித்தவர், இசுலாமியர் என்ற மத வேறுபாடின்றி 69 சாதிகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் சேர்ந்தனர். அவர்கள் மெய்வழிச் சாலை ஆண்டவரைத் தங்கள் கடவுளாக வழிபடுகின்றனர்.



மெய்வழிச்சாலையின் சிறப்புகள்
மெய்வழிச்சாலையில் மின்சாரம் பயன்படுத்துவதில்லை. அரிக்கேன் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. கால மாற்றத்திற்கேற்ப தற்போது சூரிய ஒளி விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இயற்கையோடு ஒன்றி எளிமையாக வாழ வேண்டும் என இம்மதம் வலியுறுத்துவதால் இங்குள்ள வீடுகள் அனைத்துமே தென்னங்கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளன. மெய்வழிச்சாலையில் வீடுகளுக்குக் கதவுகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பூட்டப்படுவதில்லை. வீட்டின் சுவர்கள் ஐந்து அடி உயரம் மட்டுமே இருக்கும். வீடுகள் மாடி வைத்துக்கட்டப்படுவதில்லை. வீடுகளுக்கு வெள்ளை நிறச் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருக்கும். வீடுகளில் கழிவறை இருக்காது. அவை, ஊருக்கு ஓதுக்குபுறமாக இருக்கும். ஊருக்குள் யாரும் நாய் வளர்ப்பதில்லை. எந்த ஆடம்பரத்துக்கும் இங்கு இடமில்லை. மது, சிகரெட், சினிமா, டிவி ஆகியவைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனப் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் மெய்வழி மதத்தில் இணைந்துள்ளனர். ஆனால் இங்கு தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. இயற்கையைப் போற்றும் விதமாக பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெய்வழிச் சாலை அன்பர்கள் அந்த நாளில் அங்குவந்து கூடி விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மெய்வழிச்சாலை கிராமத்தில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. மதப்பிரிவுகள் இல்லை. ஜாதிப் பிரிவுகள் கிடையாது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. கூலித் தொழிலாளிகளும், செல்வந்தர்களும், எந்தவித ஏற்றத்தாழ்வுமின்றி, எந்தப் பாகுபாடுமின்றி, அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கின்றனர். இரு நபர்கள் சந்தித்துக் கொள்ளும்போது இரு கைகளையும் காதுவரையில் உயர்த்தி நமஸ்காரம் என்று மரியாதை செலுத்துகின்றனர். இம்மதத்தின் விதிமுறைகளின்படி ஆண்கள் மதத்தின் வேதங்களைப் பயில வேண்டும். காவி வேட்டியை தார்ப்பாய்ச்சிக் கட்ட வேண்டும். தலைப்பாகை அணிய வேண்டும்; அதில் பிறை குத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் வழிபாடு நேரத்தில் மட்டும் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரையிலும் அனைத்துத் தரப்பினரும் தலையில் எந்த நேரமும் வெள்ளை டர்பன் அணிந்திருக்கின்றனர். இந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தகிகள் என்றும் புதிதாக இம்மதத்தைத் தழுவியவர்கள் நன்மனத்தவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக இம்மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

இங்கு வசிப்பவர்கள் இறந்தால் முகம் மஞ்சள் நிறத்தில் மாறும். கை, கால்கள் உறைந்து போகாது, கோயிலிருந்து கொடுக்கப்படும் தீர்த்தம் இறந்தவரின் வாயில் ஊற்றும்போது அது வெளியே வராமல் உள்ளே சென்றுவிடும் - என்பது போன்ற அனுபவ நம்பிக்கைகள் இங்கு உள்ளன. கணவனை இழந்த பெண்கள் தாலியைக் கழட்டுவதில்லை. பூ, பொட்டு வைத்துக்கொள்கின்றனர். கணவன் இறந்த பிறகும் இந்த ஊர்ப் பெண்கள் சுமங்கலிகளாகவே வாழ்கின்றனர். ஒருவர் இறப்பிற்காக யாரும் அழுவதோ, அஞ்சுவதோ, பிரிவிற்காக ஏங்குவதோ இல்லை. மெய்வழியின் படி அவர்கள் வீடடைந்ததாகவே கருதப்படுகின்றனர்.

(தொடரும்)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline