Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
மெய்வழிச்சாலை ஆண்டவர் (பகுதி-2)
- பா.சு. ரமணன்|ஜூலை 2024|
Share:
சோதனைகள்
1974ல் மத்திய அரசு மெய்வழி ஆண்டவரின் மெய்வழிச்சாலையில் மிகுதியாகத் தங்கம் இருப்பதாகக் கேள்வியுற்றது. அதன் பொருட்டு விரிவான சோதனைகளை நடத்தியது. அங்குள்ள மக்கள் ஆண்டவரை 'மெய்வழி ஆண்டவர்' என்று அழைத்ததை அரசு கண்டித்தது. பின்னர் அவரது சிறப்பையும், பெருமையையும் உணர்ந்த அரசாங்க அலுவலர்கள், அவரை 'ஆண்டவர்' என்றே கையெழுத்திடும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி மெய்வழி ஆண்டவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாக 'ஆண்டவர்' என்றே கையெழுத்திட்டார். அது முதல் 'மெய்வழிச்சாலை ஆண்டவர்' என்ற அரசு அங்கீகாரம் பெற்றார்.

சமாதி
மக்கள் மெய்யை உணர்ந்து மேன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் மெய்வழி மதத்தைத் தோற்றுவித்தார். வேதத்தின் உண்மையை உணரும்படி பல்வேறு நூல்களை இயற்றினார். பிப்ரவரி 12, 1976ல் மெய்வழி ஆண்டவர் மகாசமாதி அடைந்தார். அவரது உடல் மெய்வழிச் சாலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைச் சுற்றி மண்ணால் சுவர் எழுப்பப்பட்டு கீற்றுக்கொட்டகை வேயப்பட்டது. தரைப்பகுதி முழுவதும் மண் கொட்டப்பட்டது. ஆண்டவர் சமாதிநிலை அடைந்த அந்த இடம் பொன்னுரங்க ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்திற்குக் கதவுகள் இல்லை. அதனால் பூட்டப்படுவதும் இல்லை.



வழிபாடு
பொன்னுரங்க தேவாலயத்தில் சிலை வணக்கம் இல்லை. மெய்வழிச் சாலை ஆண்டவரின் உருவப்படம் மட்டும் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. தினந்தோறும் ஆறுமுறை வழிபாடு நடக்கிறது.

முதல் வழிபாடு காலை சூரிய உதயத்திற்கு 5 நிமிடத்துக்குமுன் நடைபெறுகிறது.

இரண்டாவது வழிபாடு காலை 7 மணிக்கு மகா சங்கல்ப மந்திரம் என்ற பெயரில் நடைபெறுகிறது.

மூன்றாவது வழிபாடு மதிய வணக்கம், பகல் 11-45 மணிமுதல் 12-15 வரை நடைபெறுகிறது. இவ்வணக்கத்தின்போது ஆலயத்தை வலம் வருகின்றனர்.

நான்காவது வழிபாடு மாலை 6 மணி அளவில் சூரியன் மறைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் நடக்கிறது.

ஐந்தாவது வழிபாடு இரவு வணக்கமாக இரவு 9 மணி அளவில் நடைபெறுகிறது, இவ்வணக்கத்தின் போது எக்காளம், குழல், துந்துபி ஆகிய இசைக் கருவிகள் இசைக்கப்படும்.

ஆறாவது வழிபாடு இரவு 12 மணி, நள்ளிரவு 2 மணி, விடியற்காலை 4 மணி ஆகிய நேரங்களில் குழல் ஊதி நடைபெறுகின்றது.

வணக்கத்தின் போது ஆண்கள் தலைப்பாகையும், தலைப்பாகையின் கீழ் பிறை வடிவிலான கிள்நாமமும் அணிந்திருப்பர். பெண்கள் முக்காடு அணிந்திருப்பர். வணக்கத்திற்கு வாழைப்பழம், எலுமிச்சம்பழம், பேரிச்சம்பழம், வாசனை மலர்கள், கற்கண்டு சர்க்கரை, பத்தி போன்றவை பயன்படுத்தப்படும். தேங்காய் பயன்படுத்துவதில்லை. வழிபாட்டின் போது ஆதிமெய் உதய பூரண வேதாந்தம், ஆண்டவர்கள் மான்மியம் (வரலாறு), எமபடர் அடிபடு கோடாயுதக்கூர், எமன்படர் அடிபடு திரு மெய்ஞான கொரல் ஆகிய மெய்வழி ஆண்டவர் அருளிய நால்வகை வேதங்கள் படிக்கப்படுகின்றன.

இந்துமதக் கோயில்களில் அர்ச்சகர்கள் இருப்பதைப் போல தேவ ஆலயத்தில் மகரந்தர் என்பவர் நியமிக்கப் பெற்றுள்ளனர். ஆலய நிகழ்ச்சிகள் அனைத்தையும் மகரந்தரே நடத்துகின்றனர்.



பிற கொள்கைகள்
இறைவன் மனித தேகத்தில் குடியிருக்கிறான் என்பதும், மெய்யான வழியைக் காட்டி, இறைவனை அடையச் செய்யவேண்டும் என்பதுமே மெய்வழிச் சாலையினரின் நோக்கம். மெய்வழிச்சாலையைச் சேர்ந்தவர்கள் உலகின் பல இடங்களிலும் பரவியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் வழிபாட்டுக்காக மெய்வழிச் சாலைக்கு வரமுடியாது என்பதால், ஆண்டவர்களிடம் தீட்சை பெற்ற அனந்தர்கள் முன்னிலையில் ஆங்காங்கே வீடுகளில் கூடி வழிபடுகின்றனர். இது 'சபை' என அழைக்கப்படுகிறது. சபையில் ஆண்டவர் வழிபாடும், அவர் எழுதிய வேதங்களை ஓதுவதும், ஞான விளக்கங்களும் நடக்கின்றன.

மெய்வழிச்சாலையினர் தங்கள் குடும்பத்தில் யாரும் இறந்து போனால் அழுவதில்லை. இடுகாடு வரையிலும் சென்று இறந்தவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு வந்துவிடுகின்றனர். கணவனை இழந்த பெண்கள் தாலியைக் கழட்டுவதில்லை. பூ, பொட்டு வைத்துக்கொள்கின்றனர். கணவன் இறந்த பிறகும் மெய்வழிச்சாலைப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவே வாழ்கின்றனர்.

ஆண்டவரால் தோற்றுவிக்கப் பெற்ற சபையை அவருடைய புதல்வர் சாலை வர்க்கவான் நிர்வகித்து வருகிறார்.

பா.சு. ரமணன்
நூல்கள்
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள், மெய்வழி மதம் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 'ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்' என்ற நூலை எழுதினார். "மானெடுங் காலங்கொண்ட இப்பூ மண்டலத்திற்கே பாரவான்களின் தீர்க்கதரிசனச் செயல் கைகொண்டேறி வருகின்ற கிரந்தம் - இது ஒன்றுதான் - முதல் நூல் என்று திட்டமாக மக்களினங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நூலில் மற்ற நூல்களில் இல்லாத வகையில், முதற் குறிப்பு அகராதி முதலெழுத்து அகர வரிசைப்படி மோனைத்தொடை அகராதியாக அச்சிடப் பெறாமல், இதில் இரண்டாம் எழுத்து அகரவரிசைப்படுத்தி எதுகைத் தொடை அகராதியாக அச்சிடப்பெற்றுள்ளது. இந்நூல் தவிர்த்து மெய்வழிச்சாலை ஆண்டவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவை,

ஞான அகவல், ஞான முறையீடு, மெய்வழி நூல், மெய்ம்மண ஞானம், மெய்ந்நிலைப் போதம், குரு முறாதி, ஞானச் சங்கு, முரீதுச் சுருக்கம், வாத கற்பம், ஞானக் கொரல், பூரணப் புதையல், சோடச நிலை, பிள்ளைத்தமிழ், பத்தியத் திடம், தௌஹீது காமீல், தௌஹீது மக்காம், ஆனந்தக் களிப்பு, அறிவு அறி பாடம், ஞானநூற் பொருளறிதல், இராஜசந்தியாசி நிலை, காமீல்கள் நோக்கம், குரு ஸ்தோத்திரம், குருமணி மாலை, பூரண வண்ணப்பா, அமுத கலைக்ஞான போதம் (முதற் காண்டம்), அமுத கலைக்ஞான போதம் (இரண்டாம் காண்டம்), தெய்வத் தேடு கூடகம், தெய்வத்திருப் பாடல்களின் திரட்சி, இடப்பாக ஆசாரக் கண்ணி, ஐம்மணிப் பொதிகை, ஐவணத் தளிர், சேவடிச் சேகரம், பூங்கிளிக் கண்ணி, சாலை நடன விழா, திருப்பஞ்சணை எழுச்சி, மெய்ஞ்ஞானப் பகுப்பு, காலந் தாட்டிய காரணப்பா, தரணியில் இல்லாத ஒருதனிச் செயற்பதி, செயலுடைச் சமரசம், பொன்னரங்கக் கொம்மி, பழஞ்சாலைப் பொன்னரங்க ஸ்தாபிதம், மெய்வழிச் சாலை ஸ்தாபிதம், துவார பாலகாள் சந்திப்பு, பானைப்பலிப் பாடல், பிச்சை ஆண்டவர் திருப்பா, தவனெறி மாலை, ஊழித் தீர்ப்புக் கன்னி, இறுதி ஆதி நீதி ஓதுதல், ஊழித் தீர்மான நடைப்பரிட்சை, யுகத்தவசு வேள்வித்துதி, பூரணப்பாடு, பூரண மூலப்பழம், வருங்கால தீர்க்கதரிசனப் பிரவாகம், இறைதிரு இறுதி நீதி நடவு வைப்பு, எமவாதையைத்தடுக்கும் என்திறம், ஆடலங்கன்னி, ஆதி மான்மியம், மெய்ப்பொருள் அடைக்கலப் பா, இருடியர் சந்திப்பு, குரமாது சந்திப்பு, கோகுலர் சந்திப்பு, துவாரபாலர் சந்திப்பு, பஜனையர் சந்திப்பு, முமூச்சுமார் சந்திப்பு, கலைவல்லார் சந்திப்பு, காயாபுரிக் கோட்டையர் சந்திப்பு, சாகாக்கலை கிரந்தம், மெய்க்கல்விக் கலாசாலை, மதிப்பிலடங்கா மாணிக்கப் பரிசு, சாலைத் தமிழ், மெய்வழிக் குபேர லக்ஷிய உச்சம், இராஜகெம்பீரப் பிரசங்கம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், எமபடர் அடிபடு கோடாயிதக்கூர், எமபடர் அடிபடு திரு மெய்ஞ்ஞானக் கொரல், எமனை அணுகவிடாது காக்கும் சத்திய பரிசுத்த வான்மதிக்கொரல், விஸ்வநாதத் திருஒலி வசனம், திருமெய்ஞான அருளமுதம், வானமுதம், தேவாமிர்த்தம், தில்லையமுதம், அமுதமொழி, மற்றும் பல
Share: 




© Copyright 2020 Tamilonline