Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-2)
- பா.சு. ரமணன்|நவம்பர் 2019|
Share:
சிக்கலில் சுதேசிக் கப்பல் கம்பெனி
சுதேசிக் கப்பல் போக்குவரத்தைச் சிதம்பரம் பிள்ளை வெற்றிகரமாக நடத்த இயலாதவாறு தொடர்ந்து பல்வேறு தடைகளை ஏற்படுயது பிரிட்டிஷ் அரசு. பிள்ளைமீது பொறாமையும் காழ்ப்பும் கொண்டிருந்த சிலர் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவதூறுகளையும் சுதேசிக் கப்பல் கம்பெனி குறித்துப் பல புரளிகளையும் கிளப்பினர். தங்கள் கப்பல்மீது சுதேசிக் கப்பல் மோத முயன்றதாக பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனி நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பிரிட்டிஷ் கம்பெனிக் கப்பல் புறப்படும் நாட்களில் சுதேசிக் கம்பெனிக் கப்பல் புறப்படக்கூடாது என உத்தரவிட்டனர். முதலில் தங்கள் கப்பலே செல்வதால் மக்கள் அதில்தான் பயணம் செய்ய வேண்டும் என்றும், வியாபாரிகள், தங்கள் பொருட்களை அதில்தான் ஏற்றிச்செல்லவேண்டும் என்றும் மக்களையும், வணிகர்களையும் நிர்ப்பந்தித்தனர் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி அதிகாரிகள். இது மக்களிடையே குழப்பத்தை விளைவித்தது என்றாலும் பிரிட்டிஷாருக்குப் போதிய ஆதரவு கிட்டவில்லை. அதனால் "அங்கு காலரா", "இந்த ஊரில் காலரா" என்றெல்லாம் புரளிகளைக் கிளப்பி மக்கள் மனதில் பீதியை உருவாக்கினர். சுதேசிக் கப்பலில் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுத்தனர்.

வாலர் ஐ.சி.எஸ். என்பவர் இந்திய அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் என யாரும் சுதேசிக் கப்பலில் பயணம் செய்யக்கூடாது என்று ரகசியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்திய வணிகர்களை சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பிரிட்டிஷார் கடுமையாக மிரட்டினர். பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறைக்கு பயந்த சில வணிகர்கள் அதனை ஏற்றனர். சிலர் தங்கள் தொழிலையே வேறு மாவட்டங்களுக்கு மாற்றிக் கொண்டனர். சுதேசிக் கப்பலில் செல்பவர்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவு தொந்தரவைக் கொடுத்தது பிரிட்டிஷ் அரசு. அவ்வளவையும் எதிர்கொண்டு தனது கப்பல் போக்குவரத்தை நடத்தினார் சிதம்பரம் பிள்ளை. ஆனால், அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை.

தீவிர அரசியலில் சிதம்பரம் பிள்ளை
தேசாபிமானம் மிக்க சிதம்பரம் பிள்ளை ஆண்டுதோறும் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். 1907ல், சூரத் மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸார் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இருபிரிவினராகப் பிரிந்தனர். லோகமான்ய திலகர் தீவிரவாதிகள் பிரிவிற்குத் தலைவரானார். அவர் தமிழ்நாட்டில் அவ்வியக்கத்தை முன்னெடுக்கும் பொறுப்பைப் பிள்ளையிடம் ஒப்புவித்தார்.

அதுமுதல் முன்னிலும் தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் இறங்கினார் சிதம்பரம் பிள்ளை. அவரது முயற்சியால் 'தேசாபிமான சங்கம்' என்ற அமைப்பு தூத்துக்குடியில் தோற்றுவிக்கப்பட்டது. அது பொதுக்கூட்டங்கள் நிகழ்த்தியது. அவற்றில் பிள்ளை பங்கேற்று, சுதேசித் துணியை அணிதல், சுதேசிப் பொருட்களை ஆதரித்தல், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல் போன்றவைபற்றிப் பேசினார். சுப்பிரமணிய சிவாவும் பிள்ளையுடன் இணைந்து கொண்டார். இருவரது பேச்சுக்கும் ஆதரவு பெருகியது. மக்கள் மனதில் சுதந்திரக் கனலைத் தூண்டினர் இருவரும்.

இந்நிலையில் ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றிருந்த புரட்சியாளர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். அதனைச் சிறப்பாகக் கொண்டாட தேசாபிமான சங்கத்தார் முடிவுசெய்தனர். அது தங்களுக்கு எதிரான பெரும் கலகத்தில் முடியும் என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு அதற்குத் தடை விதித்தது. சிதம்பரம் பிள்ளைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவரைச் சார்ந்தோரும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டப்பட்டனர். பலரை அதிகாரிகள் நேரடியாக எச்சரித்தனர். இதை அறிந்த சிதம்பரம் பிள்ளை வெகுண்டார், வருந்தினார். விழாவை நடத்தியே தீருவது என்று முடிவு செய்தார்.

ஏஜெண்ட் சிதம்பரம் பிள்ளை
பிள்ளையிடம் நிறைந்திருந்த தேசிய உணர்வு கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களாக இருந்த மற்ற சிலரிடம் இல்லை. அவர்கள் நோக்கம் பொருளீட்டல். அதனால் அவர்கள் பிள்ளைமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூற ஆரம்பித்தனர். பிரிட்டிஷாரை அனுசரித்துப் போக வேண்டுமென்றும், அவர்களை எதிர்ப்பது பலனளிக்காது என்றும் அவர்கள் கருதினர். அவர்களில் சிலர், சிதம்பரம் பிள்ளை தம் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட வேண்டுமென்று வலியுறுத்தினர். சிலர், சிதம்பரம் பிள்ளை வியாபாரத்தை மட்டும் கவனித்தால் போதும் என்றனர். இதனை ஏற்கச் சிதம்பரம் பிள்ளை மறுத்து விட்டார். அதே சமயம், தன்னால் கம்பெனிக்கோ, தொழிலுக்கோ எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்றும், பணம் போட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் கருதினார். சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி, சம்பளம் பெறும் ஏஜெண்டாகப் பணியாற்ற வேண்டுமென்று பங்குதாரர்கள் நிர்ப்பந்தித்தனர். சுதேசிக் கப்பல் கம்பெனியின் நலன் கருதிச் சிதம்பரம் பிள்ளை அதனை ஏற்றுக் கொண்டார்.
வந்தேமாதரம்
பிள்ளை முன்னரே திட்டமிட்டபடி பிரிட்டிஷாரின் தடையை மீறி சுப்ரமணிய சிவம் போன்ற நண்பர்களுடன் இணைந்து விபின்சந்திர பாலரின் விடுதலைத் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் கனல் தெறிக்கச் சிதம்பரம் பிள்ளையும் சிவாவும் பேசினர். எங்கும் சுதந்திர முழக்கம் எழுந்தது. வெள்ளையருக்கு எதிர்ப்பு வலுப்பட்டது. 'வந்தேமாதரம்' எங்கும் ஒலித்தது. பிரிட்டிஷார் பலர் "வந்தேமாதரம்" என்று சொல்லுமாறு கிளர்ச்சியாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டனர். எங்கே இந்த முழக்கம் நாடு முழுவதும் பரவி விடுமோ என்று பிரிட்டிஷ் அரசு அஞ்சியது. இதற்கு மூலகாரணமாக இருந்த பிள்ளையையும், சிவத்தையும் அறவே ஒடுக்க எண்ணியது. கைது செய்யத் திட்டமிட்டது. தூத்துக்குடியிலேயே அவர்களைக் கைது செய்தால் அது மேலும் கிளர்ச்சியை, கலவரத்தை உருவாக்கி விடும்; தங்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழும் என்று அஞ்சியது. என்ன செய்யலாம் என யோசித்துத் திட்டம் ஒன்றைத் தீட்டியது.

கைது, கடுங்காவல், தண்டனை
தம்மை வந்து சந்திக்கும்படி திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் சிதம்பரம் பிள்ளை, சிவம் இருவருக்கும் ஆணை பிறப்பித்தார். இருவரும் சென்று கலெக்டரைச் சந்தித்தனர். இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்திச் சீறி விழுந்த விஞ்ச், அவர்களை உடனடியாகத் திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டுமென்றும், இனிமேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்று எழுதிக் கையொப்பமிடவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார். இதைக் கேட்டுச் சினந்த சிதம்பரம் பிள்ளை விஞ்ச் துரையின் நேர்மையற்ற நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினார். விஞ்ச்சின் கட்டளையை ஏற்க மறுத்தார். கலெக்டரின் சினம் அதிகமானது. இருவரையும் கைது செய்ய உடனடியாக ஆணை பிறப்பித்தார்.

இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்ததுமில்லாமல் சிதம்பரம் பிள்ளையின் வீட்டிலும் ரகசிய போலிசார் சோதனைகளை மேற்கொண்டனர். சில கடிதங்களையும் கைப்பற்றினார். செய்தி தென்னாடெங்கும் பரவியது. எங்கும் கடையடைப்பு நிகழ்ந்தது. கைதைக் கண்டித்து பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் நடந்தன. சில இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு என்று கிளர்ச்சி அதிகரிக்கத் துவங்கியது. டெபுடி கலெக்டர் ஆஷ் சினம் கொண்டு சில கலகக்காரர்களை நோக்கிச் சுட்டார். அதில் நால்வர் மாண்டவர். சிலர் படுகாயமுற்றனர். கலகம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று தோன்றவே பெரும்படையைத் தன் கைவசம் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசு, சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து தன் படைகளை அனுப்பியது. சில நாட்களில் கிளர்ச்சி அடக்கப்பட்டது.

தீர்ப்பு
பிள்ளை மற்றும் சிவம் மீதான வழக்கு திருநெல்வேலியில் நடந்தது. பின்னர் வழக்கு செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. நீதிபதி பின்ஹே முன்னிலையில் சுமார் இரண்டு மாத காலம் விசாரணை நடைபெற்றது. பாரதியார் உள்ளிட்ட பலர் பிள்ளைக்கு ஆதரவாகச் சாட்சி கூறினர். ஆனால் எதிராகச் சாட்சி அளித்தவர்களில் பலரும் பிரிட்டிஷ் அதிகாரிகளும், ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனியைச் சார்ந்தவர்களுமாக இருந்தனர். பாரதி உள்ளிட்ட பலர் பத்திரிகைகளில் இதுபற்றி எழுதினர். இறுதியில் தீர்ப்பு வந்தது. சிதம்பரம் பிள்ளை குற்றவாளியென்றது. அரச நிந்தனைக்காக இருபது வருடம், புரட்சியாளர் சுப்ரமணிய சிவத்திற்கு உதவியாக இருந்து ஆதரித்ததற்காக இருபது வருடம் என்று மொத்தம் நாற்பது வருடங்கள் தீவாந்தர தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் பின்ஹே. சிவத்திற்குப் பத்தாண்டுகள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் அந்தமானில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றது நீதிபதியின் தீர்ப்பு.

"சிதம்பரம் பிள்ளை ஒரு ராஜ துரோகி. பிள்ளையின் எலும்புக்கூடும் ராஜ துரோகமானது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பகைமையை மூட்டி வந்தவர் இவர். மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டியவர். பல்வேறு கலகங்களுக்கும், வேலை நிறுத்தங்கள் போன்றவற்றிற்கும் இவரே காரணம். சிதம்பரம் பிள்ளையின் பேச்சைக் கேட்டால் செத்த பிணமும் உயிர்த்தெழும். சிவா, அவர் கையில் அகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலியில் ஏற்பட்ட அனைத்துக் குழப்பங்களுக்கும் இவர்கள்தான் காரணம்" என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் பின்ஹே.

பல பத்திரிகைகள் இந்தத் தீர்ப்பைக் கண்டித்து எழுதின. சிதம்பரம் பிள்ளையின் சகோதரர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குப் பைத்தியம் பிடித்தது. தொடர்ந்து ஹைகோர்ட்டில் அப்பீல் ஆனது. தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதே தவிர மாற்றம் ஏதும் நிகழவில்லை. பின்னர் வழக்கு பிரைவி கவுன்சிலுக்குப் போனது. அதன்படி சிதம்பரம் பிள்ளை, சிவம் இருவரும் அந்தமானுக்குச் செல்ல வேண்டியதில்லை என்றும் தமிழ்நாட்டிலேயே சிறைவாசத்தைக் கழிக்கலாம் என்றும், ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக அது இருக்கும் என்றும் இறுதித் தீர்ப்பு வந்தது.

(தொடரும்)

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline