Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-1)
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2019|
Share:
".... கப்பலோட்டிய தமிழனுக்கு பிரம்பூர்ச் சிறிய வீடு பிரும்மானந்தம் தரக்கூடிய மாளிகையாக விளங்கியது. இந்தச் சிறு வீட்டில் கப்பலோட்டிய தமிழனைத் தனிப்படச் சந்தித்துப் பேசச் சமயமே அகப்படாது. எப்போதும் எவரேனும் சிலர் வந்து கூடிப் பேசியபடியேயிருப்பார். பிரம்பூர் நம் நண்பருக்கு வாழ்க்கைக்குரிய வசதியளிப்பதாயில்லாமற் போகவே நண்பர் ஒரு வருஷத்துக்கெல்லாம் தூத்துக்குடி சென்றார். அப்பால் நண்பரைக் காண முடியாமற் போயிற்று. அவ்வாறு ஏழு வருஷ காலம் கழிந்தது. அப்பால் ஒரு சமயம் நான் தனுஷ்கோடிக்குப் பிரயாணம் போகையில், மதுரை ஸ்டேஷனில் என்னை அவர் காண நேர்ந்தது. பார்த்தும், "பாரதி, எங்கே இந்தச்சீமைக்கு வந்துவிட்டாய்?" என்று கேட்டுக்கொண்டே என்னைத் தழுவிக்கொள்ள ஆவலுடையவரானார்.

நான், "கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டாற் போலாயிற்று! நல்ல காலம்" என்று சொல்லிக்கொண்டே இறங்கினேன். அப்பால் ஸ்நேக வாஞ்சையுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து பிரிகையில், தங்கள் புத்தகம் விற்பனையான வகையில் இருபது ரூபாய் தருகிறேன். வைத்துக் கொள்ளுங்கள்" என்று ரூபா இருபது தந்தேன். அவர், "பாரதி, இந்த ரூபா இருபதும் இருபது நூறு" என்று கை குவித்தார்; "இந்தா இவைகளைச் சமயம் வந்தபோது உன்னுடைய பால விநோதினியில் பிரசுரம் செய்"' என்று மூன்று விஷயங்களடங்கிய ஒரு காகிதப் பையைக் கொடுத்தார். அதை நான் "பாக்கியம்! இது எனக்கு இருபதாயிரம்" என்று பெற்றுக் கொண்டேன். அதற்கு மேல் தாமதிக்கப் புகைவண்டி இடந்தரவில்லை" - இப்படிக் குறிப்பிட்டிருப்பவர் வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார். (பக்: 29, 30; பாரதமணி, ஜனவரி, 1943)

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, செல்வ வளம் மிக்கவராக வாழ்ந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் இறுதிக் காலத்து வறுமை நிலையை உணர்த்த, இதைத் தவிர வேறு சான்று வேண்டுமா என்ன?

இளமை
"வெள்ளையனே வெளியேறு" என்று இந்தியாவில் முதன்முதலில் குரல் எழுப்பிய தமிழர். சுதந்திரப் போராட்ட வீரர், தமிழறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறமைகளைக் கொண்டிருந்த சிதம்பரம் பிள்ளை, செப்டம்பர் 5, 1872 அன்று, தூத்துக்குடியை அடுத்துள்ள ஒட்டப்பிடாரத்தில் உலகநாதப் பிள்ளை-பரமாயி இணையருக்கு மகனாகத் தோன்றினார். செல்வக் குடும்பம். பிள்ளையின் கல்வி அவ்வூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நடந்தது. பிள்ளைக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கத் தந்தை விரும்பினார். ஆனால், அவ்வூரில் பள்ளி இல்லை. அதனால் தன் சொந்தச் செலவில் பள்ளி ஒன்றைக் கட்டியதுடன் அறம்வளர்த்தநாத பிள்ளை என்பவரை அதன் ஆசிரியராக நியமித்தார். அறம்வளர்த்தநாதர் மூலம் சிதம்பரம் பிள்ளை மட்டுமல்லாமல் ஆர்வமிருந்த பலரும் ஆங்கிலம் கற்றனர். உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடி செயின்ட் ஃபிரான்சிஸ் பள்ளியில் பயின்றார். கால்டுவெல் பள்ளியில் மெட்ரிகுலேஷன் பயின்று தேர்ச்சி பெற்றார். படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்திருந்தார். நெல்லை ஹிந்துக் கல்லூரியில் பட்டம் பயின்று தேர்ந்தார்.

வழக்குரைஞர் சிதம்பரம் பிள்ளை
படிப்பை முடித்ததும் சில மாதங்கள் ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். தந்தை, பாட்டனார் இருவருமே வழக்குரைஞர்கள். ஆகவே அப்பணியின் மீது இயல்பாகவே இருந்த நாட்டத்தால், சட்டம் பயில விரும்பினார். தந்தையின் பரிந்துரையின்படி திருச்சியைச் சேர்ந்த கணபதி ஐயர்-ஹரிஹர ஐயர் என்ற புகழ்மிக்க இரு சட்ட நிபுணர்களிடம் சேர்ந்து சட்ட நுணுக்கம் பயின்றார். 1895ல் தேர்வு எழுதி வழக்குரைஞர் ஆனார். ஒட்டப்பிடாரத்திலேயே வழக்குர் பணியைத் துவங்கினார். பணியில் நேர்மையைக் கடைப்பிடித்தார். பணத்தாசை சிறிதுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று வாதாடினார். அதனால் இவரது பெயரும் புகழும் வளர்ந்தது. ஆனால், உயரதிகாரிகள் பலரது அதிருப்திக்கு ஆளானார். அவர்களால் இவருக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட போதும், அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு வழக்குகளில் வென்றதுமல்லாமல் நேர்மை தவறிய அதிகாரிகளுக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்தார். தகுதி, திறமை, நேர்மை போன்ற காரணங்களால் ஆங்கிலேய நீதிபதிகளால் மிகவும் மதிக்கப்பட்டார் சிதம்பரம் பிள்ளை.

சிதம்பரம் பிள்ளைக்குத் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகளைக் கண்ட தந்தை, பிள்ளையைத் தூத்துக்குடிக்குச் சென்று வக்கீல் தொழிலைத் தொடருமாறு அறிவுறுத்தினார். அது நன்மையையே தரும் என்பதை உணர்ந்த பிள்ளை அவ்வாறே செய்தார். 1900முதல் தூத்துக்குடியில் அவரது வழக்குரைஞர் பணி துவங்கியது.

திருமணம்
வள்ளியம்மை என்பாருடன் திருமணம் நிகழ்ந்தது. இல்லறம் துவங்கியது. ஆனால், அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. மணமான சில வருடங்களிலேயே வள்ளியம்மை காலமானார். அவரது பிரிவு சிதம்பரம் பிள்ளையைப் பெரிதும் வாட்டியது. மனம் கலங்கினார். சில காலத்திற்குப் பின் குடும்பத்தினர் வலியுறுத்தவே, உறவினரான மீனாட்சி அம்மாளை மணம் செய்துகொண்டார். இருவருமே வள்ளியம்மையைத் தெய்வமாகத் தொழுதனர். பிற்காலத்தில் தனது முதல் மனைவியின்மீது கொண்டிருந்த அன்பாலும், மதிப்பாலும் சிதம்பரம் பிள்ளை 'வள்ளியம்மை சரிதம்' என்ற நூலை எழுதி அவர் நினைவைப் போற்றினார்.

விவேகபாநு
சிதம்பரம் பிள்ளைக்கு ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு அதிகம். வள்ளிநாயகம் என்ற துறவி இவருக்குக் குருவாக அமைந்தார். அவர் மூலம் கைவல்லிய நவநீதம், விசார சங்கிரகம் போன்ற ஆன்மஞான நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பிள்ளை கற்ற ஆங்கில இலக்கியங்களும், மேனாட்டு சிந்தனைகளும் அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. தான் கற்ற அனைத்தும் ஆர்வமுள்ள பிறரும் பெற வேண்டும் என விரும்பினார். கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆங்கில இலக்கியங்களை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். தமிழிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர் கட்டுரை, கவிதை எழுத ஆரம்பித்தார். மக்களிடையே ஆன்மிக, இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த விரும்பிய இவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர், அரசஞ்சண்முகனார் போன்றோரைத் தூண்டி "விவேகபாநு" என்ற இதழ் வெளிவருவதற்கு முக்கியக் காரணமானார்.

இதுபற்றிச் சிதம்பரம் பிள்ளை தனது சுயசரிதையில்,
"விவேக பாநு விளங்குற எங்கும்
விவேகபாநுவை வெளிவரச் செய்தேன்
உண்முகம் நோக்கும் உபாயம் தெரிந்தேன்"
என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"விவேகபாநு" இதழில் இவரது கவிதைகள் பல வெளிவந்தன. 'சுதேசி' என்ற புனைபெயரில் அவ்விதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தேசபக்தியை வலியுறுத்தி இவர் எழுதிய 'சுதேசாபிமானம்' என்ற கட்டுரை பலரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. 'சிந்தாமணி சரித்திரம்' என்ற தொடரை விவேகபாநுவில் எழுதினார். சைவத்தின்மீது ஈடுபாடு கொண்டிருந்த பிள்ளை தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் சேர்ந்து, எளிய மொழியில், பாமரருக்கும் புரியும் வண்ணம் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் குறித்துச் சொற்பொழிவாற்றினார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தாருடன் இணைந்தும் பல சொற்பொழிவுகளைச் செய்தார்.

வ.உ.சி.யும் பாரதியும்
உலகநாதப் பிள்ளையும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயர் நெருங்கிய நண்பர்கள். அந்த வகையில் பாரதியாரும் சிதம்பரம் பிள்ளையும் ஒருவரைப் பற்றி மற்றவர் கேள்விபட்டிருந்த போதிலும் அவர்களுக்கிடையே நட்பு பாரதியார் சென்னைக்குச் சென்ற பின்பே ஏற்பட்டது. பாரதியார் அப்போது 'இந்தியா' பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அதன் உரிமையாளரான மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரைப் பார்க்கச் சென்றிருந்தார் சிதம்பரம் பிள்ளை. அவர்மூலம் பாரதியின் அறிமுகம் ஏற்பட்டது. அந்தக் கணம் முதல் இருவருக்கும் விவரிக்க இயலாத பிணைப்பு ஏற்பட்டது. பாரதியைக் கம்பராகவும் தன்னைச் சோழனாகவும் கருதிக் கொள்ளுமளவுக்கு அவர்களது நட்பு வளர்ந்தது. அங்கிருந்த நாட்களில் கடற்கரைக்குச் சென்று உரையாடுவதைத் தங்கள் வழக்கமாகக் கொண்டனர். பாரதத்தின் விடுதலை, மேன்மை, உயர்வு, சுதந்திரப் போராட்டம் பற்றியே அவர்களது பேச்சு இருந்தது.

நாளடைவில் பாரதியை மாமனாராகவும் தன்னை மருமகனாகவும் கருதி அன்பு பூண்டார் சிதம்பரம் பிள்ளை. இது குறித்து அவர், "அவர் (பாரதி) என் வீட்டிற்கு வரவும், என்னோடு உண்ணவும் உறங்கவும், நான் அவர் வீட்டிற்குப் போகவும், அவரோடு உண்ணவும் உறங்கவும் ஆகியிருந்தோம். பிரான்ஸ் தேசத்துச் சரித்திரமும், இத்தாலி தேசத்துச் சரித்திரமும், அவைபோன்ற பிறவும் அவர் சொல்லவும் நான் கேட்கவுமானோம். இத்தாலி தேசாபிமானி மிஸ்டர் மாஜினியின் தேசவூழிய 'யௌவன இத்தாலி' சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்துவந்த பிரமாணச் செய்யுளை ஆங்கில பாஷையில் என் மாமனார் எனக்குப் படித்துக் காட்டினார். அதனைக் கேட்டதும் நான் சொக்கிப் போனேன். அச்செய்யுளைத் தமிழ்ப் பாட்டாக மொழிபெயர்த்துத் தரவேண்டும் மென்றேன். அவர் அதனை அன்றே தமிழ்ப் பாட்டாக மொழிபெயர்த்துத் தந்தார். அதுதான் 'பேரருட் கடவுள் திருவடியாணை...' என்று தொடங்கும் பாட்டு. தேச ஆட்சியைச் சீக்கிரம் கைக் கொள்ளுதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றிப் பேசினோம்; பிரசங்கம் செய்தோம். தேசாபிமானத்தின் ஊற்றென விளங்கும் திருவல்லிக்கேணிக் கோவில் பக்கத்திலுள்ள மண்டையன் கூட்டத்தாராகிய திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாஸச்சாரியார் முதலியவர்களோடு அடிக்கடி பேசலானோம்; ஆலோசிக்கலானோம். அவ்வாலோசனையின் பயனாகத் திருவல்லிக்கேணியில் 'சென்னை ஜன சங்கம்' என்று ஒரு தேசாபிமானச் சங்கத்தை ஸ்தாபித்தோம். பின்னர், நான் தூத் துக்குடிக்குத் திரும்பினேன்; தேச அரசாட்சியை மீட்டும் வேலைகளில் ஈடுபட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். (பக். 26-27, வ.உ.சி.யும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி).

இவ்வாறாகத் தொழில் நிமித்தமாகச் சென்னை செல்லும்போதெல்லாம் பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சிதம்பரம் பிள்ளை. அவர்களது பேச்சு எப்போதும் நாடு, சுதந்திரம், விடுதலை முயற்சிகள் என்பவை பற்றியே இருந்தது. மென்மையான போக்கு விடுதலைக்கு உதவாது என்பது சிதம்பரம் பிள்ளையின் எண்ணம். பாரதியும் அவ்வாறே எண்ணினார். ஏற்கனவே திலகரால் ஈர்க்கப்பட்டிருந்த வ.உ.சி., பாரதியைப் போலத் தானும் திலகரையே தலைவராகக் கொண்டார்.
ராமகிருஷ்ணானந்தரின் உபதேசம்
சென்னைக்கு வந்திருந்த சிதம்பரம் பிள்ளைக்கு, ஒரு சமயம், விவேகானந்தரின் நெருங்கிய நண்பரும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர் சீடர்களுள் ஒருவருமான 'சசி' என்ற ராமகிருஷ்ணானந்தரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவரது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாது. ராமகிருஷ்ணானந்தர்தான் சிதம்பரம் பிள்ளையை சுதேசி இயக்கத்தின் மீது தீவிர ஈடுபாடு கொள்ள வைத்தவர். அதைப் பற்றிச் சுயசரிதையில் சிதம்பரம் பிள்ளை,

"இராமகிருட்டிணா னந்தனைக் கண்டேன்
'தராதலம் பரவிச் சாரும் சுதேசியக்
கைத்தொழில் வளர்க்கவும், கைத்தொழில் கொள்ளவும்
எத்தகை முயற்சி இயற்றினை" என்றான்"
......................
......................
"'சுதேசியம் ஒன்றே சுகம் பல அளிக்கும்
இதேஎன் கடைப்பிடி' என்றனன்
அவனுரை வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்
சித்தம் அதனைச் சிதையாது வைத்தது"


என்று குறிப்பிட்டிருக்கிறார். 'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'க்கு எதிராக 'சுதேசி கப்பல் கம்பெனி' என்பதைச் சிதம்பரம் பிள்ளை தோற்றுவிக்க ராமகிருஷ்ணானந்தர் தந்த ஊக்கம் மிக முக்கியக் காரணமாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை.

சுதேசி இயக்கச் செயல்பாடுகள்
சென்னையிலிருந்து தூத்துக்குடி திரும்பிய சிதம்பரம் பிள்ளை, 'சுதேசி பிரச்சார சபை', 'தர்ம சங்க நெசவுச்சாலை', 'சுதேசிய பண்டக சாலை', 'வேளாண் சங்கம்', 'தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்' போன்றவற்றைத் தோற்றுவித்து தீவிரமாக அவற்றின்மூலம் சமூகப் பணியாற்ற ஆரம்பித்தார். அக்கால கட்டத்தில்தான் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. அது இந்தியா முழுவதுமுள்ள தலைவர்கள் மத்தியிலே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அதுமுதல் தீவிரமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார் பிள்ளை. அந்நிய ஆட்சியை எதிர்ப்பதையே தமது முக்கிய நோக்கமாகக் கொண்டார். 1942ல், காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்குவதற்கு முன்பே தூத்துக்குடியில் சுதேசி ஆதரவுப் போராட்டங்கள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தி அதில் "வெள்ளையனே வெளியேறு" என்று முழங்கினார். மக்களிடையே சுதேசியப் பொருட்களின் தேவை, சுதேசி இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து தீவிரமாகச் சொற்பொழிவாற்றினார். அவற்றால் மக்கள் மனதில் சுதந்திரக் கனலைத் தூண்டினார். இவரது பிரசார உத்திகளும் அதற்காக மக்கள் திரண்டதும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றன. அவர்களும் சிதம்பரம் பிள்ளையை ஒடுக்குவதற்கான தகுந்த சூழ்நிலையை எதிர்பார்த்திருந்தனர்.

சுதேசி கப்பல் கம்பெனி
அக்காலத்தில் 'பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி', இந்தியா - இலங்கை இடையே கப்பல்களை இயக்கியது. ஆனால், அது பிரிட்டிஷாரின் வியாபாரத்திற்க்கே முக்கியத்துவம் கொடுத்தது. தொழில்திறமை இருந்தும், செல்வம் இருந்தும் பல இந்திய வணிகர்கள் அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே இந்தியர்களுக்காகத் தாமே ஒரு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினால் என்ன என்ற எண்ணம் பிள்ளைக்கு ஏற்பட்டது. மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு தனது எண்ணத்துக்குச் செயல்வடிவம் தந்தார். மூலதனம் ரூ.10 லட்சம் என்றும், பங்கு ஒன்று ரூ.25 வீதம் 40,000 பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அதைத் திரட்டலாம் என்றும் அறிவித்தார். துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தார். பலர் பங்குதாரர்களாகச் சேர்ந்தனர். 1906ல் 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' ஆரம்பிக்கப்பட்டது. சேலம் விஜயராகவாச்சாரியார் உள்ளிட்ட பலர் இதன் ஆலோசகர் குழுவில் இருந்தனர். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவர் இதன் தலைவர். சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளர் பொறுப்பேற்றார்.

பம்பாயிலிருந்து கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் பிள்ளை ஈடுபட்டார். ஆனால் அதற்குத் தாமதமாகவே, வாடகைக்கு ஒரு கப்பலை எடுத்து, தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்தைத் துவக்கினார்.

கப்பலோட்டிய தமிழன்
பிரிட்டிஷாரை எதிர்த்துக் கப்பல் விடுவது சாமானியமா என்ன? அதற்குப் பல இடையூறுகளும், பிரச்சனைகளும் ஏற்பட்டவாறே இருந்தன. தனது திறமையாலும், பொறுமையாலும் அவற்றை எதிர்கொண்டார் பிள்ளை. இவருக்குக் கப்பல் அனுப்புவதாகச் சொன்னவர் பிரிட்டிஷாரின் தூண்டுதலால் அனுப்ப மறுத்தார். அதனால் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றார். கடும் முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெற்றார். 'காலியா' என்ற கப்பல் தூத்துக்குடித் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தபோது அதைக் காண தூத்துக்குடி நகரமே திரண்டு வந்தது. சிதம்பரம் பிள்ளையின் திறமையை வியந்து பாராட்டியது. மற்றொரு கப்பல் ஃபிரான்ஸிலிருந்து நேரடியாக வாங்கப்பட்டது. அதன் பெயர் 'லாவோ' கப்பல்களோடு இரண்டு இயந்திரப் படகுகளும் வாங்கப்பட்டன. சொந்தக் கப்பல் போக்குவரத்து துவங்கியது. 'கப்பலோட்டிய தமிழன்' என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை புகழப்பெற்றார்.

பிரிட்டிஷ் அரசு வெகுண்டது. சிதம்பரம் பிள்ளையின் செல்வாக்கைக் கண்டு அஞ்சியது. அவரது கப்பல் நிறுவனத்தை எப்படியாவது ஒன்றுமில்லாமல் செய்துவிட நினைத்தது. தங்கள் கப்பலில் கட்டணம் இல்லாமல் பயணிகள் செல்லலாம் என அறிவித்தது. பலனில்லை. சுதேசிக் கப்பல் போக்குவரது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கோ மாதம் ஒன்றுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டது. இதனால் மிகுந்த சினமுற்றது பிரிட்டிஷ் அரசு. பலவிதமான சூழ்ச்சிகளைக் கையாள ஆரம்பித்தது. பங்குதாரர்கள் மூலமும், வியாபாரிகள் மூலமும் நெருக்கடி கொடுத்தது. சிதம்பரம் பிள்ளை மீது பொறாமை கொண்டிருந்த சிலரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். பல புரளிகளைக் கிளப்ப ஆரம்பித்தனர்.

(தொடரும்)

பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline