Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்!
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2019|
Share:
பாகம் – 21
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் சொன்னார். சூர்யா அவரது தலைமை விஞ்ஞானி விக்ரம் அளவுக்கு மீறிய செலவாளி என்று அறிந்தார். நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனி தன் நண்பர்களிடம் பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதால் மிக்க கவலையில் ஆழ்ந்துள்ளதை உணர்ந்தார். அடுத்து ஹான் யூ என்னும் இன்னொரு மரபணு நுட்ப விற்பன்னரைச் சந்தித்த போது நடந்தது என்ன?

★★★★★


தன் குழுவில் மற்றொரு தலைசிறந்த விஞ்ஞானி ஹான் யூ என்று என்ரிக்கே அறிமுகம் செய்ததும் வழக்கம் போல் யூக அதிர்வேட்டால் அசத்திவிட, ஹான் யூ சூர்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க நம் துப்பறியும் மூவரைத் தமது ஆராய்ச்சி மையக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்.

நீள்வட்டக் கட்டடத்தின் மையத்தில் அமைக்கப் பட்டிருந்த ஆராய்ச்சிக் கூடத்தின் நீள்பக்கங்கள் இரண்டிலும் சிறு சிறு அறைகள் இருந்தன. அவற்றில் சில திறந்திருந்தன, சில மூடியிருந்தன. அவ்வப்போது வெள்ளை அங்கியணிந்த விஞ்ஞானிகள் விறுவிறுவென ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குப் போய்வந்து கொண்டிருந்தனர். நடுவில் சில மேஜைகள்மேல் கணினித் திரைகளும் மேஜைகளைச் சுற்றி வசதியான நாற்காலிகளும் இருந்தன. ஆனால் கூடத்தின் குறும்பக்கங்கள் இரண்டும் சிறு ஜன்னல்களுடன் கூடிய பெரிய வெள்ளை உலோகக் கதவுகளால் அடைத்து மூடப் பட்டிருந்தது.

ஹான் பெருமையாக கையைப் பரவலாக வீசி, கூடம் முழுவதும் காட்டி "இங்கதான் எங்க ஆராய்ச்சி சாம்ராஜ்யத்தின் பரிசோதனைகள் எல்லாம் நடக்கின்றன. மீதியெல்லாம் வெறும் கணினி வேலைதான். மரபணு வெட்டல் ஒட்டல் போன்ற க்ரிஸ்பர் வேலைகள் எதாவது செஞ்சு பரிசோதிக்கணும்னா என்ரிக்கே, விக்ரம் தொடங்கிப் புது இளைய விஞ்ஞானிகள்வரை இங்கதான் வந்து வேலை செஞ்சாகணும். இது எல்லாத்துக்கும் நிர்வாகப் பொறுப்பு என்னோடதுதான்!"

சூர்யா பாராட்டினார். "வாவ், ஹான்! ரொம்பப் பளிச்சின்னு பிரமாதமா இருக்கு. ஆனா மேஜை மேலயெல்லாம் வெறும் கணினித் திரைன்னா இருக்கு? மரபணுப் பரிசோதனைக் கருவிகள் எல்லாம் எங்கே?!"

ஷாலினியே முறுவலுடன் குறுக்கிட்டு பதிலளித்தாள். "அதை நானேகூட சொல்லமுடியும் சூர்யா. எல்லாக் கருவிகளும் அந்தச் சிறு அறைகளில் இருக்கும். மேலும், அந்தப் பெரியக் கதவுகளுக்குப் பின்னாடி அதிசுத்த அறைகளில் மிகநுண்ணிய துளிகூட மாசு புகக்கூடாத கருவிகள் இருக்குன்னு நினைக்கறேன். சரியா ஹான்?"

ஹான் கை தட்டிப் பாராட்டினார். "ரொம்ப சரி ஷாலினி. நீங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்னு கச்சிதமாக் காட்டிட்டீங்க. நீங்க சொன்னாப்படிதான். நான் ரொம்ப அதிகப்படி விளக்க வேண்டிய அவசியமில்லை. சிறு அறைகளில் சாதாரணமா எல்லா மரபணு ஆராய்ச்சிக் கூடக் கருவிகள் இருக்கு. அதுல பெரும்பாலும் ஷாலினி ஆராய்ச்சிக் கூடத்துலயும் இருக்கற கருவிகள்தான்னு நினைக்கறேன். ஆனா எங்க மிக முக்கியமான புரதச்சேர்க்கை ஆராய்ச்சிக்கான நுண்கருவிகள் அந்த அதிசுத்த அறைகளில்தான் இருக்கு. ஆராயப் படற உயிரணுத் திசுக்களின் மேல் ஒரு துகள் சுற்றுச்சூழல் மாசு விழுந்தாலும் அந்தப் பரிசோதனை வீணாயிடும், இல்லன்னா தவறான பலனளிக்கக் கூடும்."

சூர்யா யோசனையோடு தலையாட்டினார். "அது சரி. இந்த மாதிரி அதிசுத்த அறைகளை நான் என் முன்னாள் தொழிலான சிலிகான் வில்லைத் துறையிலேயே நிறையப் பயன் படுத்தியிருக்கேன். இப்ப துப்பறியும்போது சமீபத்துல ஒரு சில தொழில்நுட்பப் பிரச்சனைகளைப் பத்தி விசாரிக்கறப்போ இந்த மாதிரி அதிசுத்த அறைகளைப் பாத்திருக்கேன்."

ஹான் யூ "வெரி குட். அப்போ நான் அதைப் பத்தி ரொம்ப விளக்கத் தேவையில்லை. ரெண்டு அறையிலயும் ஒரே மாதிரி கருவிகள்தான் இருக்கு. அதுனால ஒரு அறையைப் பாத்தாப் போதும். வாங்க காட்டறேன்."

அனைவரும் ஓர் அறையருகில் சென்றனர். ஹான் யூ கதவின் ஒரு பக்கத்தில் இருந்த ஒரு பட்டனை அழுத்தியதும் கதவு ஒரு பக்கமாக நகர்ந்து திறந்தது. ஆனால், அங்கு புலப்பட்டதோ ஒரு சிறிய அறையும் அதே மாதிரி இன்னொரு கதவும்! ஹான் யூ அனைவரையும் அச்சிறு அறைக்குள் அழைத்துச் சென்றார். வெளிக்கதவு மூடியது, ஆனால் உள்கதவோ திறக்கவில்லை.

கிரண் பதறினான். "அய்யய்யோ, மாட்டிக் கிட்டோமே! ஹான், என்ரிக்கே, யாரையாவது கூப்பிடுங்க. இல்லன்னா எனக்கு மூச்சு முட்டிடும்!"

ஷாலினி விளக்கினாள். "கிரணுக்கு பாவம் க்ளாஸ்ட்ரோ ஃபோபியா! சீக்கிரம் திறந்து விட்டுடுங்க!" ஹான் முறுவலித்தார். இதோ இன்னும் சில நொடிகளில் திறந்திடும் கிரண். ஆனா அதுக்குள்ள நம்ம மேல் இருக்கற தூசியெல்லாம் உறிஞ்சிடும், கிருமி வகைகளையெல்லாம் கொன்னுடும். ஸ்டெரிலைஸேஷன்!"

கிரண் தன் கால் உடையின் நடுவில் கை வைத்துப் பொத்திக் கொண்டு பொய்யாகப் பதறினான், "மீண்டும் ஒரு அய்யய்யோ! ஸ்டெரிலைஸேஷனா! வேண்டாம்பா! எங்கம்மா பேரன் பேத்தி வேணும்னு புலம்பிக்கிட்டிருக்கா!" ஹானும் என்ரிக்கேயும் வாய்விட்டுச் சிரித்தனர். ஹான் தொடர்ந்தார். "நல்ல ஜோக்தான் இது! ஆனா கவலை வேண்டாம். கிருமிகளை மட்டும் தான் ஒழித்து சுத்தப்படுத்தும். இருங்க" என்று சொல்லிவிட்டு சுவரில் இருந்த ஒரு பட்டனை அழுத்தவும் சிலீர் எனக் காற்றடித்தது. பிறகு 'உஷ்' என்ற சத்தம் கேட்டது. அனைவருக்கும் ஆடைகள் எல்லாம் வெளிப்பக்கமாக ஒரே ஒரு கணம் இழுக்கப்பட்டு விடப்பட்டன.

ஹான் முறுவலுடன் "அவ்வளவுதான். எல்லாரும் படு சுத்தம்!" என்றார்.
ஷாலினி ஆர்வத்துடன், "பிரமாதமா இருக்கே. எங்க ஆராய்ச்சி அறைக்கும் இப்படி ஒண்ணு வேணும்னு நினைக்கறேன்."

ஹான் தலையசைத்தார். இது மிகவும் விலை அதிகம். எங்க ஆராய்ச்சிக்கு துளிகூட பங்கம் வரக்கூடாதுன்னு என்ரிக்கே பணச்செலவு பத்திக் கவலை வேண்டாம்னு அமைச்சிருக்கார். இந்த மாதிரி வேற எங்கயுமே இருக்காது!"

ஷாலினி சோகமாக ஒப்புக்கொண்டாள். "ஓ! அப்படின்னா நாங்க அப்படியே இருக்க வேண்டியதுதான்."

உள்கதவு அப்போது திறந்தது. உள்ளே பளபளவென்று உலோகத்திலும் பளிச்சென அப்பழுக்கில்லாத கண்ணாடியிலும் பெரிய விஞ்ஞானக் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஹான் யூ விளக்கினார். "இந்தக் கருவிகள்தாம் க்ரிஸ்பர் முறையால மரபணு எழுத்து வெட்டல் ஒட்டலுக்கெல்லாம் பயன்படுது. வெளியில் இருக்கற கருவிகள் எல்லாம் அதுக்கு முன்னோடியா தயாராக்கத்தான் பயன் படுது."

சூர்யா யோசனையோடு வினாவினார். அப்போ உங்க பிரச்சனைக்கும் மூலமா இருக்கற கருவிகள் இவைதானா?"

தன் கருவிகளைப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டு கனவுலகிலிருந்த ஹான் திடுக்கிட்டார். என்ரிக்கேயின் முகம் அஷ்ட கோணலாக மாறி சோகத்திலாழ்ந்தது.

ஹான் பதிலுக்கு வினாவினார். "ஏன் அப்படிக் கேட்கறீங்க?"

சூர்யா விளக்கினார். "ரொம்ப சிம்பிள்! வெளியில் இருக்கற கருவிகள் க்ரிஸ்பர் முறையை செயலாக்கறதில்லைன்னு நீங்கதானே சொன்னீங்க? உங்க பிரச்சனை என்னன்னா க்ரிஸ்பர் முறை சரியா வேலை செய்யறதில்லைங்கறது தானே? அதுனால தான் பிரச்சனைக்கும் இந்தக் கருவிகள்தான் காரணமான்னு கேட்டேன்!"

என்ரிக்கேவே சுதாரித்துக் கொண்டு பதிலளித்தார். "ஓ, அவ்வளவுதானா! சரி, சரி அப்படியும் வச்சுக்கலாம். ஆனா நாங்க இந்தக் கருவிகளை ஒட்டு மொத்தமாக சோதிச்சாச்சு. மிக நன்றாகத் தெரிந்த க்ரிஸ்பர் முறைகளை பலமுறை இதுல செஞ்சு சரியா வருதுன்னு நிரூபிச்சாச்சே. ரொம்ப கச்சிதமா இங்கதான் தவறாப் போகுதுன்னு நூத்துக்கு நூறு சொல்லிட முடியாது."

சூர்யா மீண்டும் யோசனையோடு கேட்டார், "அது இருக்கட்டும். நீங்க வெளியில் தயாரிக்கறாங்கன்னு சொன்னீங்களே அது என்ன செய்யறாங்க?" ஹான் விளக்கினார். "ஓ! அதுவா? க்ரிஸ்பர் வேலைக்கான எங்க தனிரக புரதங்கள் எல்லாம் வேணும் இல்லையா, அதைக் கலக்கறாங்க. அதை இங்க கொண்டுவந்து பரிசோதனைக்கான உயிரணுக் கலவைகளோட இந்தக் கருவிகளால மிக நுண்ணிய அளவுகள்ள சேத்து, அதன் பலனா கிடைக்கிற உயிரணுக் கலவையை அந்த இன்னொரு கருவியால அலசி ஆராயறோம்."

சூர்யாவின் கண்கள் மீண்டும் பளிச்சிட்டதைக் கிரணும் ஷாலினியும் மட்டும் கவனித்து அர்த்தமுள்ள பார்வை பரிமாறிக் கொண்டனர்.

சூர்யா கிரணை அருகில் வருமாறு சைகை செய்து எதோ கிசுகிசுத்தார். கிரண் பளிச்சென மலர்ந்த முகத்துடன் தலையாட்டி ஆமோதித்துவிட்டு ஷாலினிக்கு யாருக்கும் தெரியாதபடி கட்டை விரலை உயர்த்தி சைகை செய்தான்.

சூர்யா தொடர்ந்தார்....

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline