|
யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) |
|
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2017| |
|
|
|
|
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை பெற்றது. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மசாதனையும், அற்புதமான நூல்களும் பாரதத்தின் மைந்தர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக அமைந்தவை.
பிறப்பும் கல்வியும் கல்கத்தாவில் வாழ்ந்து வந்த கிருஷ்ணதன கோஷ்-சுவர்ணலதா தேவி தம்பதியினருக்கு, ஆகஸ்ட் 15, 1872ம் நாள் மூன்றாவது மகனாகப் பிறந்தார் அரவிந்தர். அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்பது அவரது இயற்பெயர். சிறுவயதிலேயே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்பிக்கப்பட்டன. டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1884ம் ஆண்டில், தனது பன்னிரண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு படிப்பை முடித்ததும் உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் கல்விக்கூடத்தில் மேற்கல்வி தொடர்ந்தது. இந்திய அரசுப் பணிக்கான (I.C.S.) உயர்கல்வியை அங்கு பயின்றார் அது அவரது வாழ்வின் முக்கிய காலகட்டமாக அமைந்தது. லத்தீன், பிரெஞ்சு, .ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், ஷேக்ஸ்பியர் போன்றோரது படைப்புகள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தையும் கற்றறிந்தார்.
அக்காலகட்டத்தில் பத்திரிகைகள் மூலம் பாரதம் வறுமையில் வாடுவதையும், அன்னியரின் பிடியில் சிக்கித் தவிப்பதையும் அவர் அறிய நேர்ந்தது. அது கண்டு மிகவும் மனம் வருந்தினார். அந்நிலை மாறுவதற்கு உழைக்க உறுதி பூண்டார். கேம்பிரிட்ஜிலுள்ள 'இந்தியன் மஜ்லிஸ்' என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். 'சுதந்திரம் பெறுவதற்கு மிதவாதம் உதவாது' என்பது இந்த அமைப்பினரின் கருத்து. இதனை அரவிந்தர் ஏற்றுக்கொண்டார். எப்படியாவது பாரதத்திற்கு விடுதலை வாங்கித்தருவது என உறுதிபூண்டு, அதற்காகப் பல ரகசியச் சங்கங்ளில் சேர்ந்து உழைக்கத் துவங்கினார்.
இந்தியாவில் அரவிந்தர் ஒருசமயம் பரோடா சமஸ்தான மன்னர் கெய்க்வாட் தனது அலுவல் விஷயமாக லண்டன் சென்றிருந்தார். நண்பர் மூலம் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அரவிந்தருக்குக் கிடைத்தது. அரவிந்தரின் முகப் பொலிவையும், அறிவுத் திறமையையும் கவனித்த மன்னர் தனது சமஸ்தானத்திற்கு வந்துவிடுமாறும், உயர்பதவியைத் தருவதாகவும் வலியுறுத்தினார். அரவிந்தரும் அதற்கு இணங்கினார். எஸ்.எஸ். கார்த்தேஜ் என்ற கப்பலில், இந்தியாவிற்குப் புறப்பட்டு வந்தார். ஆனால் அரவிந்தர் வந்த கப்பல் விபத்துக்குளாகி விட்டது என்ற வதந்தியைக் கேட்ட அவரது தந்தை, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றிக் காலமானார்.
தாய்நாடு திரும்பிய அரவிந்தருக்கு, தந்தையின் மறைவு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. காலப்போக்கில் மனதைத் தேற்றிக்கொண்டு மற்ற பணிகளில் ஈடுபட்டார். பின் பரோடா மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கு பணிசெய்யச் சென்றார். மன்னர் அவரை அன்புடன் வரவேற்று அரசு நிர்வாகப் பணியில் நியமித்தார். முதலில் நில அளவைத் துறையில் வேலை பார்த்த அரவிந்தர், அதன்பின் வருவாய்த்துறையிலும், முத்திரைத்தாள் துறையிலும் பணியாற்றினார். பின்னர் தலைமைச் செயலகத்தில் உயர்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் இவ்வாறு பலவித அரசாங்க அலுவல்களைப் பார்த்தபின்னர் பரோடா கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தனது ஓய்வுநேரத்தை தியானத்திலும், எழுத்துப் பணியிலும், புதிய நூல்களைப் படிப்பதிலும், கவிதை எழுதுவதிலும் செலவிட்டார்.
திருமணம் 1901ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் நாள் அரவிந்தருக்கு மிருணாளினி தேவியுடன் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் முடிந்ததும் அவர்மட்டும் பரோடாவிற்கு வந்து பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். அரசியல் ஆர்வம் அவருக்குள் மீண்டும் சுடர்விட்டது. ஆனால் சமஸ்தானப் பணியில் இருந்ததனால் அவரால் நேரடி அரசியலில் ஈடுபட முடியவில்லை. அதனால் மறைமுக அரசியலில் ஈடுபட்டார். தம்பி பரீந்திரனின் உதவியுடன் புரட்சி உள்ளங்கொண்ட வீரர்களைத் தயார்படுத்தினார். போராடித்தான் வெற்றியை அடையவேண்டுமே அல்லாது, ஆங்கிலேயரைக் கெஞ்சி வெற்றி அடைய வேண்டியதில்லை என்பது அவர்களது கருத்தாக இருந்தது. அதே சமயம் வன்முறைக்கு இடமில்லை என்பதும் அவர்களது மிகமுக்கியக் கொள்கை. |
|
|
புரட்சியாளர் அரவிந்தர் இந்நிலையில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. அதைக் கண்டு கொதித்தார் அரவிந்தர். அது இந்து-முஸ்லிம் பிரிவினைக்கே வழிவகுக்கும் என நினைத்த அவர் அதனைத் தீவிரமாக எதிர்த்தார். நாட்டிற்காகப் போராட முடிவுசெய்து, பரோடா சமஸ்தானப் பணியை உதறிவிட்டு, நேரடி அரசியலுக்கு வந்தார். பாரிசால் மாநாட்டில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். வங்கம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். போலீஸ் தடியடி, அரசாங்கத்தின் அச்சுறுத்தல், நீதிமன்ற எதிர்ப்பு எனப் பல தடைகளையும் மீறிக் கூட்டங்கள் நடத்தினார். மக்களை விடுதலைக்குத் தூண்டினார். அதனால் அவரைக் கண்டு ஆங்கிலேய அரசாங்கம் அஞ்சியது. அவரது செயல்பாட்டை எப்படியாவது ஒடுக்க எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. புரட்சிக்காரர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. அத்தகைய கொடுஞ்செயல்களுக்கு கல்கத்தாவின் அப்போதைய நீதிபதிகளில் ஒருவரான கிங்ஸ்ஃபோர்டு காரணமாக இருந்தார். எனவே அவர்மீது புரட்சிக்காரர்கள் வஞ்சம் தீர்க்க எண்ணினர். ஒருமுறை கிங்ஸ்ஃபோர்டு சென்ற குதிரைவண்டி மீது குண்டு வீசினர். ஆனால் அவர்களது குறிதவறி இரு அப்பாவி ஐரோப்பியப் பெண்கள் கொல்லப்பட்டனர். அரவிந்தர்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு.
சிறையில் அதிசய அனுபவம் அரவிந்தரை அலிப்பூர் சிறையில் அடைத்தனர். சிறைவாசம் அரவிந்தருக்கு முதலில் அளவிலாத துன்பத்தைத் தந்தது. ஆனால் நாளடைவில் அது நல்ல மனப்பக்குவத்தை ஏற்படுத்தியது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் தம்மருகே இருப்பதையும், தமக்கு அனைத்தையும் போதிப்பதையும், தம்முள் இருந்து வழி நடத்துவதையும் உணர்ந்தார். காணும் அனைத்தும் அந்தக் கண்ணனின் திருவுருவே என அறிந்தார். சிறைக்காவலர் முதல் சகசிறைக் கைதிகள் வரை அனைவருமே அவர் கண்களுக்குக் கண்ணனாகவே தெரிந்தனர். எங்கும் எதிலும் இறைவனைக் காணும் பரிபக்குவம் வந்தது. விவேகானந்தரின் ஒளியுரு தன் அறைக்குள் வருவதையும், தனக்கு போதனை செய்ய விரும்புவதையும் உணர்ந்தார். அதற்கேற்ப நடந்தார். தன்னை வழிநடத்தச் சித்தமாக இருக்கும் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். அவருக்குள் ஒலித்த இறைவனின் குரல், "நீ செய்யவேண்டிய மற்றொரு காரியம் உள்ளது. அதற்காகவே நான் உன்னை இங்கே வரவழைத்திருக்கிறேன். எனது பணியில் உன்னைப் பயிற்றுவிக்கவே உன்னை நான் இங்கே அழைத்திருக்கிறேன்." என்று கூறி, பல்வேறு உண்மைகளை அவருக்குப் போதித்தது.
சந்திரநாகூரில் அதுவரை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த அரவிந்தர், சிறையில் மெள்ள மெள்ள ஆன்மிகவாதியாக மலர்ந்தார். நாளடைவில் தேசபந்து சி.ஆர். தாஸ் என்னும் சித்தரஞ்சன் தாஸின் சிறப்பான வாதத்தின் மூலம் அரவிந்தர் உட்படப் பலர் சிறையிலிருந்து விடுதலை ஆயினர். வெளியே வந்த பின்னரும் அரவிந்தர் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பொதுக்கூட்டங்களில் பேசி மக்களிடையே சுதந்திரக் கனலைத் தூண்டினார். அதனால் ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்குமுறை தொடர ஆரம்பித்தது. அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த அரவிந்தர் அரசாங்கத்தின் சதியிலிருந்து தப்பி, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சந்திரநாகூரை அடைந்தார். அங்கு அவரின் அரசியல் மற்றும் ஆன்மிக சாதனைகள் ரகசியமாகச் சிலகாலம் தொடர்ந்தன. அங்கு அவருக்குக் கிடைத்த தனிமை தியானத்திலும், யோகப் பயிற்சிகளிலும் ஈடுபட மிகவும் உதவியாக இருந்தது. ஒருநாள் அவருக்குள் ஒலித்த இறைவனின் குரல் அவரைப் புதுச்சேரிக்குச் செல்லுமாறு கட்டளையிட்டது. அதற்குக் கீழ்ப்படிந்து சந்திரநாகூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரியை அடைந்தார்.
(தொடரும்)
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|