Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2)
- பா.சு. ரமணன்|நவம்பர் 2017|
Share:
நீரில் விளக்கெரிந்த அற்புதம்
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது மிகுந்த பக்தி கொண்டவர். எண்ணெய் தீர்ந்து போய்விட்டால் வள்ளலார் எழுதுவது தடைப்படும் என்பதால், சிறிய எண்ணெய்க் கலயத்தை விளக்கின் அருகிலேயே எப்பொழுதும் வைப்பது அவரது வழக்கம். ஒருநாள் அந்த மண்கலயம் உடைந்து போய்விட்டது. அதனால் புது மண்கலயம் வாங்கிய அவர், அது நன்கு உறுதிப்படுவதற்காகத் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். ஆனால் கோயில் திருவிழாவிற்காக வெளியே சென்றவர், தண்ணீரைக் கொட்டிவிட்டு எண்ணெயை ஊற்றிவைக்க மறந்துவிட்டார்.

இது குறித்து அறியாத வள்ளலார், வழக்கம்போல எழுத ஆரம்பித்தார். சற்று நேரத்தில் எண்ணெய் தீர்ந்து ஒளிமங்கியது. மண்கலயத்தில் இருந்த தண்ணீரை எடுத்து, அதை எண்ணெய் என்று நினைத்து, விளக்கில் ஊற்றினார். விளக்கு தொடர்ந்து சுடர்விட்டு எரிந்தது. இப்படியே இரவு முழுவதும் ஒளி மங்க மங்க, கலயத்திலிருந்த தண்ணீரை எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தார். மறுநாள் முத்தம்மாள் வந்ததும்தான் வள்ளலார் விளக்கெரித்தது எண்ணெய் கொண்டல்ல; வெறும் நீரைக்கொண்டு என்பது தெரிந்தது. தண்ணீரைக் கொண்டு வள்ளலார் விளக்கெரித்த அதிசயம் ஊர் முழுவதும் பரவலாயிற்று. அதுமுதல் வள்ளலார் ஒரு மிகப்பெரிய மகான் என்றும், அற்புதங்கள் செய்யவல்ல சித்தர் என்றும் உணர்ந்து மக்கள் அவரைப் போற்றிப் புகழலாயினர்.

சத்திய தருமச்சாலை
"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"


என்றெல்லாம் ஏழைகள் படும் துயரங்கள் கண்டு பலவாறு மனம் வருந்திய வள்ளலார், அவர்களின் பசிப்பிணி போக்க உழைத்தார். அன்னதானமே எல்லா தானங்களிலும் உயர்ந்தது என்று அறிவித்த அவர், பசித்தவர்க்கும் ஆதரவற்ற வறியவர்க்கும் மூன்றுவேளை அன்னம் வழங்கும் பொருட்டாக, வடலூரில் சத்திய தரும சாலையைத் தம் கையால் தொடங்கி வைத்தார். அன்று அவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்றும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய்த் தம்மை நாடிவரும் அனைவரது பசிப் பிணியையும் போக்க எரிந்து கொண்டிருக்கிறது.

திருவருட்பா
வள்ளலார் பல்வேறு சமயங்களில் பாடிய பாடல்களைச் சில அன்பர்கள் குறித்து வைத்திருந்தனர். அவற்றையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட வேண்டுமென்றும், அதனைப் படிப்போர் பயன்பெறுவர் என்றும் பலர் வள்ளலாரிடம் வலியுறுத்தினர். அவரோ அதில் நாட்டமில்லாதிருந்தார். தன் நூல்களை அச்சிடுவதாலோ, அல்லது தனக்கு அதனால் புகழ் ஏற்படுவதாலோ பயனொன்றுமில்லை என்று அவர் கருதினார். இறுதியில் அன்பர்களின் பெருமுயற்சியால் பாடல்கள் தொகுக்கப்பட்டு 'திருவருட்பா' என்னும் தெய்வீகப் பாமாலையாக வெளியானது.

ஊனுருக, உயிருருகப் பாடல்களைப் புனைந்திருந்தார் வள்ளலார். அவற்றை ஆலயங்களில் திருமுறைகளோடு பாராயணம் செய்யவும் சிலர் தலைப்பட்டனர். ஆனால் அதற்கு வேறு சிலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. வள்ளலார் பாடல்கள் 'அருட்பா' அல்ல 'மருட்பா' என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆறுமுக நாவலர் எதிர்ப்பாளர்களின் தலைவராக இருந்தார். இறுதியில் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு சுவையான கதை.

சத்தியஞான சபை
'இறைவன் ஒருவனே! அவன் ஒளி வடிவானவன். அவனைப் பலவித உருவங்களில் வழிபடுவதை விட ஒளிரூபமாக வழிபடுவதே சிறந்தது' என்று அறிவித்த வள்ளலார், அத்தகைய இறைவனுக்கு 'அருட்பெருஞ் ஜோதி' என்ற திருப்பெயரைச் சூட்டினார். அத்தகைய இறைவனை அனைவரும் வழிபடுவதற்காக 'சத்தியஞான சபை'யை 1871ல் தோற்றுவித்தார். கிழக்குத் திசையில் பொற்சபையையும், மேற்குத் திசையில் சிற்சபையையும் அமைத்தார். சபையின் நடுப்பகுதியில், அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரை ஜோதிவடிவில் வழிபடுமாறு செய்தார். மேலும் தீயசக்திகள் உள்ளே நெருங்காதவாறு இரும்புச் சங்கிலிகளால் கட்டடத்தைச் சுற்றிலும் வளையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.
ஜோதி வழிபாடு
ஞானசபையில் ஜோதி வழிபாடு செய்வதற்காக, சுமார் ஐந்தடி உயரமுள்ள நிலைக் கண்ணாடியை வரவழைத்த வள்ளலார், அதில் ஞானஒளி ஏற்றி , இறையருள் நிலைபெற 48 நாட்கள் தனித்திருந்து தவம் இயற்றினார். பின்னர் அது ஞானசபைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்முன் அகண்ட தீபமொன்று ஏற்றப்பட்டது. அதன் முன்னே ஏழு வண்ணத் திரைகள் தொங்கவிடப்பட்டன. "ஜோதி வடிவான இறைவனைத் தரிசிக்க மாயையான ஏழு சக்திகளை அகற்ற வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே இங்கு ஏழு திரைகள் தொங்க விடப்பட்டுள்ளன" என்று வள்ளலார் விளக்கினார். வள்ளலாரின் ஜோதி வழிபாட்டில் சமயப் பூசல்களுக்கோ, அபிஷேக ஆராதனை, தூபம், நைவேத்தியம், மேளதாளம் போன்றவற்றிற்கோ இடமில்லை. மந்திரங்கள் கோஷங்கள் போன்றவை ஆரவாரத்தை ஏற்படுத்துமே அன்றி, மன ஒருமையையும் அகக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தாது என்பது வள்ளலாரின் முடிவு. மேலும் அபிஷேகம், ஆராதனை போன்றவற்றிற்கு ஆகும் செலவில் பலபேர்களின் பசிப்பிணியைப் போக்கமுடியும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது.

சித்தி வளாகம்
அறச்சாலைக்கும், வள்ளலாரைக் காண்பதற்கும் வரும் கூட்டம் அதிகரித்தது. அதனால் வள்ளலாரின் அமைதிக்கும் தியானத்திற்கும் பங்கமேற்பட்டது. அதனால் அமைதியை நாடி அடிக்கடி வெளியிடங்களுக்குச் செல்லலானார். வடலூருக்குத் தெற்கே இருந்த மேட்டுக்குப்பம் கிராமத்துக்குச் சென்று தியானத்தைத் தொடர்ந்தார். நாளடைவில் அங்கேயே ஒரு குடில் அமைத்துத் தங்கிவிட்டார். அவர் தங்கியிருந்த இடமே 'சித்திவளாகத் திருமாளிகை' ஆனது. அங்கு தனிமையிலமர்ந்து பல தீவிரமான யோகப்பயிற்சிகளை மேற்கொண்டார். அதன்மூலம் நாளடைவில் அவருக்குத் தனது உருவைப் பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கும் ஆற்றல் உட்படப் பல்வேறு சித்திகள் கைவரப் பெற்றன.

ஒரே சமயத்தில் வெவ்வேறிடங்களில் பலருக்குக் காட்சி அளிப்பது, உடலைத் துண்டு துண்டாகப் பிரித்துப் பின் இணைப்பது, வடலூரில் இருந்தவாறே, பக்தர்களுக்குச் சிதம்பரத்தில் நடக்கும் ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சியை நேரடியாகக் காண்பிப்பது எனப் பல்வேறு அற்புதங்களைச் செய்தார் வள்ளலார். ஒருசமயம் வடலூர் தருமசாலையில் இருப்பார்; பின் திடீரென அங்கிருந்து மறைந்து மேட்டுக்குப்பத்தில் காணப்படுவார். சில நாட்கள் இரண்டு இடங்களிலுமே இருக்கமாட்டார். எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. பின் திடீரெனத் தோன்றி இங்குமங்குமாக இருப்பார். பின் மறைந்து விடுவார். சில வாரங்கள் இடைவெளியில் மீண்டும் தோன்றுவார்.

வள்ளலாரின் கொள்கைகள்
"ஆண்டவன்முன் அனைவரும் சமம். உயர்வு தாழ்விலாது யாவரும் அவனை வணங்கலாம்" என்ற ஆன்மநேய ஒருமைப்பாடே வள்ளலாரின் கொள்கை. "எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும்; அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும்; எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும்" என்பதை "பசித்திரு, தனித்திரு, விழித்திரு!" என்ற தத்துவ விளக்கமாக அவர் மொழிந்தார்.

"ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்காகவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கிறது என்பதை உணர வேண்டும்" போன்றவை அவர் கூறியிருக்கும் முக்கியமான அறிவுரைகளில் சில.

ஸ்ரீமுக ஆண்டு. (1874) தை மாதம் 19ம் நாள் வெள்ளிக்கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பன்னிரண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார். "நான் உள்ளே பத்துப் பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்" என்று அறிவித்தார். பின்

பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!


என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக்கொண்டார். அதன்பின் அன்பர்கள் அனைவரும் வள்ளலாரின் உத்தரவுப்படி அறைக்கதவைப் பூட்டிச் சிலநாட்கள் திறக்காமல் இருந்தனர். பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல்துறைத் தலைவர் ஆகியோர் ஒருநாள் பூட்டியிருந்த கதவைத் திறந்தனர். உள்ளே வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டிருந்தார். "வள்ளலார், தமது உடலை 'ஞானதேகம்' ஆக்கிக் கொண்டு காற்றோடு காற்றாய், இயற்கையோடு இயற்கையாய் இரண்டறக் கலந்துவிட்டார்; தன் உடலை ஒளியுடல் ஆக்கிக் கொண்டு, எல்லாம் வல்ல பேரருள் ஒளியொடு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு, ஒன்றோடு, ஒன்றாகக் கலந்து விட்டார்" என்பதே பக்தர்களின் நம்பிக்கை.

வள்ளலார் மறைந்தாலும் அவரது சமரச சன்மார்க்க, சமத்துவ, சமுதாயக் கொள்கைகள் மறைவதில்லை. அவை இன்றும் இந்த ஜீவகாருண்யத்தை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி

பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline