|
பெற்றோரை மதித்தால் கடவுள் துணையிருப்பார் |
|
- |செப்டம்பர் 2017| |
|
|
|
|
ஒருமுறை அன்னை பார்வதியும், பரமேஸ்வரனும் வான்வழியே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு மரக்கிளையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். அந்தக் கிளை ஒடிந்துவிழும் நிலையில் இருந்தது. அதைப் பார்த்த பார்வதி அவனைக் காப்பாற்றும்படி ஈஸ்வரனிடம் கேட்டாள். ஈஸ்வரன் விளையாட்டாக, "நான் ஏன் அவனைக் காக்கவேண்டும்? நீதான் அவனை முதலில் பார்த்தாய். அவனைக் காப்பது உன் கடமை" என்று கூறினார்.
"உங்கள் கருணையில்லாமல் என்னால் அவனை எப்படிக் காக்கமுடியும்? நாமிருவரும் இணைந்தே இயங்குகிறவர்கள். தாமதிக்காதீர்கள், கருணைகொண்டு காப்பாற்றுங்கள்" என்றார் அன்னை.
"உதவி கேட்டு என்னை அழைக்க வேண்டியது அவனுடைய கடமையில்லையா? அழைக்காமல் நான் எப்படிப் போய்க் காப்பாற்றுவது? 'அழையாத விருந்துக்குப் போகாதே' என்று பழமொழி இருக்கிறதே" என்றார் ஈஸ்வரன். |
|
ஒரு தாய்க்கே உரிய கருணையோடு பார்வதிதேவி அவனை எப்படியாவது காப்பாற்றிவிடத் துடித்தாள். "அவன் கீழே விழும்போது 'அம்மா' என்று அழைத்தால் நான் காப்பாற்றுகிறேன்; 'அப்பா' என்றால் நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினாள்.
அதற்கு ஈஸ்வரன் ஒப்புக்கொண்டார். அவன் என்ன சொல்லி அழைக்கப் போகிறான் என்று இருவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவனோ கீழே விழும்போது "ஐயோ!" என்று கதறினான்.
வாழ்நாளில் அவன் தனது பெற்றோரை மதிக்கும் பழக்கம் கொண்டிராத காரணத்தால், 'அம்மா', 'அப்பா' என்ற சொற்கள் அவன் வாயில் வரவில்லை. அது அவன் விதி!
தனது பெற்றோரை முற்றிலும் மறந்துவிட்ட ஒருவரைக் கடவுள் எப்படிக் காப்பாற்றுவார்? தாய் தந்தை இருவரும் கடவுளேதான். அத்தகைய உணர்வோடு நாம் பெற்றோருக்கு நன்றி செலுத்தினால் கடவுளால்கூட நம்மைப் புறக்கணிக்க முடியாது.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|