|
|
|
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ்.
வளைகுடாவின் இளந்தென்றல் நம் உடலை இதமாக வருடுவது போல, புலம்பெயர்ந்த தமிழர்களின் மனம் வருடுவது ‘தென்றல்’. 32 வருடங்களுக்கு முன் நான் அமெரிக்கா வந்த காலத்தில், இங்கில்லாதிருந்த பல விஷயங்களில் ஒன்று தமிழில் ஒரு பத்திரிகை. அந்தக் குறையைத் தீர்த்தது தென்றல்.
தென்றல் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டதை ‘வாசகர் கடிதம்’ பகுதிக்கு வரும் ஏராளமான கடிதங்களிலிருந்தே அறியலாம்.
புதிய மாதம் தொடங்க ஒரு வாரம் இருக்கும்போதே கடைகளில் ‘தென்றல்’ வந்து விட்டதா எனப் பார்க்கச் சொல்லி என் கணவரை நச்சரிப்பேன். முதல் இரண்டு தேதிகளில் அவர் தென்றலைக் கையில் கொண்டு வரும்போது, மிட்டாயைக் கண்ட குழந்தையைப் போல குதூகலிப்பேன்.
தென்றலை எப்படிப் படிப்பதென்றே எனக்கொரு வழிமுறையை உண்டாக்கிக் கொண்டுள்ளேன். இதழ் கையில் கிடைத்தவுடன் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் வரை மேலோட்டமாக, விரைந்து பார்த்து விடுவேன். பின் வீட்டு வேலைகளையெல்லாம் மிக வேகமாக முடித்துவிட்டு, தென்றலைப் படிக்கத் தொடங்குவேன்.
தென்றலில் ‘அன்புள்ள சிநேகிதியே’ எனக்கு மிகவும் பிடித்த பகுதி. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் கனிவான ஆனால் மிக ஆழமான அறிவுரைகள் மனத்தைத் தொடுவன. மிகவும் சிந்திக்க வைப்பன. ஒவ்வொரு விஷயத்தையும் அவர் மிக வித்தியாசமாக அணுகுவார். ‘அட, இப்படியும் ஒரு கோணமா?’ என யோசிக்க வைப்பார். மே மாதத் தென்றலில் அவர் எழுதியிருந்த ‘நட்பு’ குறித்த எண்ணங்கள் என்னை மிகவும் பாதித்தன. |
|
| தென்றலில் ‘அன்புள்ள சிநேகிதியே’ எனக்கு மிகவும் பிடித்த பகுதி. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் கனிவான ஆனால் மிக ஆழமான அறிவுரைகள் மனத்தைத் தொடுவன. மிகவும் சிந்திக்க வைப்பன. | |
தென்றல் பேசுகிறது, வாசகர் கடிதம், நேர்காணல், சமையல் குறிப்புகள், நிகழ்வுகள், யாத்திரைத் தொடர்கள் யாவுமே சுவையானவை. எதையும் விடாது படிப்பேன். மாதந்தோறும் தென்றல் அறிமுகம் செய்யும் எழுத்தாளர்களும், அவர்களது கதைகளும் மிகவும் புதுமையானவை. ஒவ்வொரு நேர்காணலும் ஒரு சுகமான மன வருடல். நேர்காணல் மூலமாக நான் அறிந்து கொண்ட தொண்டர்களும், அவர்களின் தொண்டுகளும் பலப்பல.
இதைத் தவிர புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், எழுதுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் திறமையைத் தோற்கடிக்கக் கூடியவை. எனக்குப் பிடித்த எழுத்தாளர் திரு. எல்லே சுவாமிநாதன் அவரது கதைகளைப் படித்து வாய்விட்டுச் சிரித்த நாட்கள் பல.
தென்றலின் தமிழ்வளம், இதழ் முழுவதிலும் இழையோடும் நகைச்சுவை, சினிமாச் செய்திகள், புகைப்படங்கள், புதிர்கள், 80-90 பக்கங்களில் இவ்வளவா?
தென்றல் - அமெரிக்கத் தமிழரின் பொக்கிஷம்; புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய தாகத்தைத் தணிக்க வந்த இளநீர்; இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தென்றல் தமிழர்களை வருட வேண்டி தமிழ்த்தாயை யாசிக்கிறேன்.
மாலா பத்மநாபன், சன்னிவேல், கலிபோர்னியா |
|
|
|
|
|
|
|