Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
நினைவலைகள்
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

பாகிஸ்தானில் பெண்கள்
இந்தியாவைப் போலவே பாகிஸ்தானில் பெண்கள் முன்னேற்றம் பல்வேறு அளவு நிலைகளில் உள்ளது. சில பெண்கள் உயர்ந்த பதவிகளில் பணிபுரிகிறார்கள். எனது உள்ளூர் உபசரிப்பாளரான சேட்டின் இரண்டு சகோதரிகளில் ஒருவர் பன்னாட்டு நிறுவன நிதி அதிகாரியாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார். மற்றொருவர் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனரின் செயலராக மாதம் நாலாயிரத்து ஐநூறு ஊதியம் பெறுகிறார். இந்தியாவில் இதே கால கட்டத்தில் இருந்த ஊதியத்தைவிட இது அதிகம்தான். எல்லாப் பெண் ஊழியர்களும் கம்பெனிக் காரில் அழைத்துச் சென்று, வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவந்து விடப்படுகிறார்கள். ஒவ்வொரு கம்பெனியும் ஒரு சில பெண்களையாவது வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் இருவரும் பெண்கள் முகத்திரை அணிய வேண்டுமென்று குரானில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என முதலிலிருந்து கடைசிவரைப் புரட்டிப் பார்த்தோம். எங்களால் அப்படி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை
பெண்கள் பாதுகாப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பதை அங்கு பார்க்க முடியாது. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், வேலை செய்யும் இடங்களுக்கும் பெண்கள் எப்போதும் கூட்டமாகத்தான் செல்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் சல்வார் கம்மீஸ் அணிகின்றனர். பீகார், வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களிலிருந்து சென்ற பெண்கள், முக்கியமாக பங்ளாதேஷிப் பெண்கள், புடவை உடுத்துகின்றனர். வங்காளப் பெண்கள் பெரும்பாலும் வீட்டுப் பணியும், இதர அற்ப வேலைகளும் செய்து வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் முக்காடிட்டுக் கொள்கின்றனர். சிலர் தங்கள் முகத்தையும் மூடிக் கொள்கிறார்கள்.

எங்கள் மகாநாட்டில் இஸ்லாமாபாத்திலிருந்து வந்த அஜ்ரா என்ற பெண் பங்கு கொண்டார். ஆனால் எப்போதும் முகத்தை மறைத்து முழுத்திரை அணிந்தபடி இருந்தாள். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவில் உப்பு ஏரி நகரமான யுடாவில் படித்து சமூகவியல் முதுநிலைப் பட்டம் பெற்றவள். கவர்ச்சியானவர். கூர்த்த மதி படைத்தவர். திருமணமாகாதவர். ஆனால் திருமணத் தகுதி உள்ளவர்கள் இவரது முகத்தைப் பார்க்க முடியாமல் முகத்திரையிட்டுக் கொண்டிருந்தார். நானும் ஸ்ரீலங்காவின் ஆலோசகர் திருமதி. அதநாயகேவும் அவர் தனது முகத்திரையிலிருந்து வெளிவர வேண்டுமென்பதைப் புரிய வைக்கப் பெரிதும் முயற்சி செய்தோம்.

அஜ்ரா ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர். அடிக்கடி புனித குரானிலுள்ள வரிகளை அழகிய அராபி மொழியில் ஒப்பித்துவிட்டுப் பிறகு எனக்காக இவற்றை ஆங்கிலத்தில் சொல்வார். நாங்கள் இருவரும் பெண்கள் முகத்திரை அணிய வேண்டுமென்று குரானில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என முதலிலிருந்து கடைசிவரைப் புரட்டிப் பார்த்தோம். எங்களால் அப்படி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மிகுந்த ஆர்வத்துடன் நான் சென்ற இடமெங்கும் எனக்குத்துணையாக வந்தார். கடற்கரையில் ஒட்டகத்தில் ஏறிச் சவாரி செய்யவும் அவர் தயங்கவில்லை. கிளிஃப்டனில் உள்ள சிவன் கோவிலுக்கும் என்னுடன் வந்தார்.

இந்தச் சிவன் கோவில் மிகவும் புராதனமானது. ஒரு குகை போன்ற அமைப்பில் கோவிலின் பெரும்பகுதி பூமிக்குக் கீழாக உள்ளது. அங்கு புராதனச் செதுக்குச் சிற்பங்கள் இல்லை. ஆனால் சலவைக் கல்லால் ஆன சிவன், நந்தி மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளும் ஆண், பெண் தெய்வப் படங்களும் உள்ளன. இந்த ஆலயத்தின் அர்ச்சகராக ஸ்ரீமாலிஜி சேவை செய்கிறார். மற்ற பாகிஸ்தானியர்களைப் போலவே இவரும் சல்வார் உடை அணிந்திருக்கிறார். அவர் கோவிலில் தனியாக இருக்கிறார். அவரது குடும்பம் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறது. திங்கள் கிழமைகளில் சாதமும், பருப்பும் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஓரங்கி என்ற பெயரில் கராச்சியில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதிக்குச் சென்றேன். பம்பாயிலுள்ள தாராவியைப்போல ஓரங்கியும் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியாகக் கருதப்படுகிறது. அந்த அளவு அதிக மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இங்குள்ளவர்களில் முக்கியமானவர்கள், இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் கனவை நனவாக்க வந்த இந்தியர்கள். இங்குள்ள ஜனத்தொகையில் பெரும்பகுதி பனாரஸிலிருந்து வந்த நெசவாளர்கள்தான். பெருமளவு பெண்கள் இங்கு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். பெரும்பாலும் எழுத்தறிவு இல்லாதவர்கள். ஆரோக்கியமற்ற சூழலில் வாழும் ஏழைகள். சுகாதார மையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துவிட்ட அவர், அப்போது பதின்மூன்றாவது குழந்தையை கர்ப்பமாக இருந்தார். இந்தியாவில் வாரணாசியில் முஸ்லீம் பெண்கள் ஆறு, ஏழு குழந்தைகளுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பன்னிரண்டு இருந்ததில்லை.

உலகில் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அங்கே ஆயிரத்து இருநூறு குடும்பக் கட்டுப்பாடு ஆலோசனை நிலையங்களும் அதே எண்ணிக்கையில் பெண் சுகாதார ஊழியர்களும் உள்ளனர். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் மையமாக இருக்கும் பெண் ஊழியர்கள் அதற்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாட்டு உதவியுடன் இந்தச் சுகாதார மையங்கள் நிறுவப்பட்டிருந்தும் கூட, மேலே கண்ட அலட்சியப் போக்கினால் ஏராளமான கிராமப்புற பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆலோசனை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு ஆராய்ச்சி மையங்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண் மருத்துவர்கள் ஆரோக்கிய மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகின் வளர்ச்சி அடைந்த பகுதியில் உள்ளவர்களைப்போல நான் இங்கு சந்தித்த பெண்கள் நவீனர்களாகவும் சுதந்திரர்களாகவும், உலகியல் தெரிந்த பண்பாளர்களாகவும் இருந்தனர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களுடனும் இவர்கள் இணைந்து நவீன மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Click Here Enlargeகராச்சியில்
அங்கு சென்ற முதல்நாளே சேட் இல்லத்தில் கராச்சியின் சமையல் பக்குவத்தைச் சுவைத்தேன். அவரது சகோதரிகள் வீட்டு விருந்தில் நான் மறக்க முடியாத நேர்த்தியான கராச்சி உணவு பரிமாறினார்கள். இந்த உணவில் எனக்கும் மிகவும் பிடித்தமான ஃபிர்னியும் இருந்தது. காஷ்மீரி உணவுகளில் இது பிரிக்கமுடியாத அம்சமாகும். மொகலாய அரச குடும்பத்தினரால் இந்தவகைப் பக்குவம் கண்டுபிடிக்கப் பட்டது. இது அரிசிக்களி, பிட்டு போன்றது தான். அரிசி மாவுடன் பால்கலந்து ஆவியில் வேகவைத்து அதனுடன் சுவை கூட்ட பாதாம் பருப்புகள் சேர்த்து வெள்ளிரேக்குகளால் மூடப்பட்டிருக்கும். முலாம்பழ வகையைச் சேர்ந்த, கெட்டியானதும் சாறு நிறைந்ததுமான சர்தா என்ற பழமும் பரிமாறினார்கள்.

கடைசி நாள் விருந்தோம்பலுக்காக பண்டூகான் விடுதிக்குச் சென்று அமர்ந்தோம். வாடிக்கையாளர்கள் நிரம்பி வழியும் இடம் அது. அங்கு நடைபாதையில் ஐந்து பெரிய கரியடுப்புகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். கைதேர்ந்த சமையல்காரர்கள் கோழிக்கால்களையும், இறைச்சித் துண்டுகளையும் திறந்த தீயில் வறுத்துக் கொண்டிருந்தனர். இங்கு பண்டங்களின் பட்டியல் சிக்கல் இல்லாதது. ஐந்தே அயிட்டங்கள்தாம். அதாவது கபாப், கோழிக்கறி வறுவல், பராத்தா, குர்ஃபி மற்றும் அல்வா. விருந்தின் முத்தாய்ப்பாக விசேஷ இனிப்புத் தாம்பூலமும் உண்டு. ஆனால் கராச்சியில், தாம்பூலம் சுவைப்பது மிக அதிகச் செலவாகும் பழக்கமாகும். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, தாம்பூலம் சுவைப்பது இந்தியாவில் அன்றாடம் பழக்கமான ஒன்று. ஆனால் கராச்சியில் தாம்பூலம் மெல்வது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. கராச்சியில் வெற்றிலை, பாக்கு அரிய பொருளாகிவிட்டது. நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதாக இருந்தால் உங்களை விருந்தோம்புகிறவர்களுக்கு தாராளமாக வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு செல்லுங்கள்.

ஹர்ஷர், அசோகர், சந்திரகுப்தர், அடிமை வம்சம், லோடி, துக்ளக் போன்ற முகலாய அரசர்களின் நாணயங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள எந்தக் காட்சி சாலைகளிலும் இவற்றைக் காண முடியாது. பாகிஸ்தானில் இவை நன்கு பராமரிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுடன் கராச்சியின் மிகப் பெரிய பிரமுகர்களும் பண்டூகான் விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நான் கண்டேன். நகரத்தில் பண்டூ மிகவும் செல்வாக்குள்ள பிரமுகர் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு முக்கிய நபரும், அவர் மந்திரியோ அல்லது உயர் அதிகாரியோ, யாராக இருந்தாலும், அவர்களிடமிருந்து யாருக்கும் எந்த உதவியும் பெற்றுக்கொடுத்து விடுவார் பண்டூ. உதாரணமாக ஓர் அரசு ஊழியர் மாறுதல் விரும்பினால், அவருக்கு உதவுகிறவர் பண்டூகான்தான். சுவையான கபாப், குர்ஃபி பரிமாறிக் கொண்டு இருக்கும் போது, உரிய சமயத்தில் மந்திரி அல்லது செயலாளர் காதில் சிபாரிசு விஷயத்தை பாண்டூ நயமாக ஓதிவிடுவார். நீங்கள் கராச்சிக்குச் செல்ல நேர்ந்தால் பண்டூகான் விடுதியில் உணவு அருந்தத் தவறாதீர்கள்.

கராச்சியில் நான் கலந்துகொண்ட மறக்க முடியாத இரண்டு விருந்துகள் உண்டு. ஒன்று தளபதி நாசிம் செளத்ரி அளித்தது. இவர் கிராம அபிவிருத்திக்கான சமஷ்டிச் செயலாளர். இவரது தந்தைவழி குடும்பப் பூர்வீகம் ஹரியானா. உணவுப் பட்டியலில் மற்ற உகந்த பொருள்களுடன் நாவில் நீரூறும் கோழிக்கறி, ஷம்மி கபாப், 'ஷீயர் சாய்' என்ற உப்பிட்ட காஷ்மீரி தேநீர் - பாதாம் பருப்பும் ஏலக்காயும் கரைக்கப் பட்டது - ஆகியவைகளும் அடக்கம். அரைமணி நேரத்துக்கு மேல் தேயிலை வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்டு கெட்டியான கருப்புக் கஷாயம் தயாராகிறது. இதில் உப்பு, பால், பாலாடை கலக்கப்பட்டு உப்புத் தேநீர் தயாராகிறது. இந்த தேநீர் பானம் சத்து நிறைந்துள்ளதால், மூளையைச் சுறுசுறுப்பாக்குவதுடன் ஜீரணசக்தியையும் அளிக்கிறது. நான் காஷ்மீரில் அனுபவித்துப் பருகிய உப்புத் தேநீரை மீண்டும் கராச்சியிலும் பரிமாறுவார்கள் என்று நினைக்கவேயில்லை.

அடுத்த விருந்து எங்கள் மாநாட்டை முன்னின்று நடத்தியவரும், CIRDAP இயக்குனருமான ஷம்ஷூல் ஹக் நடத்தியதாகும். இந்த விருந்து கடற்கரை ஆடம்பர ஹோட்டலின் புல்வெளியில் நடந்தது. இங்கு பலவகையான கடல் உணவுகளும் எல்லைப்புற கடாஹி கோஷ்ட் என்ற மாமிசத் தயாரிப்புகளும் பரிமாறப்பட்டன. இந்த விருந்தின் போது கராச்சியின் உயர்ந்த மனிதர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்களுள் இசைப்பாடல்கள் பதிவு செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் ஒருவர். அவரிடம், இசை ராணி நூர்ஜஹான் எனது தந்தையின் அருமை நண்பர் என்று நான் தெரிவித்தவுடன் அவர் நிறுவனம் தயாரித்த, நூர்ஜஹான் பாடல்கள் அடங்கிய இரண்டு ஒலி நாடாக்களை எனக்கு அன்பளிப்பாக வழங்க ஏற்பாடு செய்து விட்டார். நான் இப்போதும் என் தந்தையை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாடல்களைப் போட்டுக் கேட்கிறேன்.

இந்த விருந்தின்போது கராச்சி மண்டல ஆணையரை நான் சந்தித்தது எனக்கு வாய்த்த பெரும்பேறு. ஆணையரின் குடும்பம் ஹைதராபாதிலிருந்து அங்கு குடிபெயர்ந்ததாகும். பாகிஸ்தானுக்குக் குடியேறிய சமயம் அவருக்கு ஒன்பது வயது. ஹைதராபாத்தைப் பற்றிய இனிய இளமை நினைவுகள் அவர் மனதில் பதிந்துள்ளன. பாகிஸ்தானின் விருந்தோம்பலின் இன்சுவையை எனக்கு அளிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். நான் விரிவாக பல இடங்களுக்குச் சென்று பார்க்கவும் ஏற்பாடு செய்தார்.

கராச்சியில் கடைசி நாள்
மறுநாள் அதிகாரிகளுடன் நான் கராச்சி அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். அதன் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி எங்களுக்கு அறிமுகமான ஹரிநாராயணாவின் (சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனர்) நண்பர் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு பயிலரங்குகளிலும், சர்வதேச மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார்கள். சிந்துச் சமவெளி நாகரீகத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கராச்சி அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளதால் அதை அனைவரும் சென்று பார்ப்பது மிக அவசியம். புராதன பெளத்தமத பல்கலைக்கழகம் இருந்த இந்திய தட்சசீலப் பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட ஏராளமான பொருள்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பண்டைய பாரம்பரிய கலாசாரப் பொருள்கள் கராச்சி அருங்காட்சியகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்று நான் எண்ணவேயில்லை. காந்தாரக் கலைப்பாணியைச் சார்ந்த புத்தமதச் சிற்பங்களைச் சேகரித்து வைத்திருக்கும் பெருமையும் கராச்சி அருங்காட்சியகத்தையே சேரும்.

கராச்சி அருங்காட்சியகம் சிந்துவெளி சேகரிப்புகள் அனைத்தையும் அசலாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சேகரிப்பில் பாதியளவே இந்தியாவில் இன்று இருக்கிறது என்பதே உண்மை. பிரிவினைக்குப் பிறகு இந்தியப் பகுதியில் மிஞ்சியது இந்தியாவுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருந்தது பாகிஸ்தானுக்கும் சொந்தமாகிவிட்டது. மற்ற சிந்துவெளி கலைப்பொருள்கள் டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் காட்சியகம் வியத்தகு நாணயச் சேகரிப்பைக் கொண்டுள்ளது. இதில் ஹர்ஷர், அசோகர், சந்திரகுப்தர், அடிமை வம்சம், லோடி, துக்ளக் போன்ற முகலாய அரசர்களின் நாணயங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள எந்தக் காட்சி சாலைகளிலும் இவற்றைக் காண முடியாது. பாகிஸ்தானில் இவை நன்கு பராமரிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சேகரிப்புகளில் அநேக தங்க நாணயங்களும் அடங்கும். இங்கு சித்திரவகை எழுத்துக்களால் (calligraphy) ஆன அபூர்வ நூல்களும், அழகான கையெழுத்துக்களால் ஆன புனித குரானும், உலகத்தின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட புனித குரானும் அழகாக வைக்கப்பட்டுள்ளன. எனக்கு, மொஹஞ்சதாரோ மதகுருவின் சிலையையும் புத்தரின் தலை உருவச் சிலையையும் காட்சியக அதிகாரிகள் பிரியத்துடன் வழங்கினர். நான் இந்தியா திரும்பியதும் மதகுருவின் சிலையை தலைமைச் செயலரின் அறையிலும், புத்தர் சிலையை எனது கணவரின் மேஜையிலும் வைத்தேன்.

பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கராச்சியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சிறுதொழிலில் ஈடுபட்டுள்ளனர். அநேக இந்துக் குடும்பங்கள் சிந்து, பலுச்சிஸ்தான் மாநிலங்களில் தொலைதூர கிராமங்களில் வாழ்கின்றனர். நிலவொளி என்ற ஒரு உணவு விடுதியில் நான் குல்ஃபி, ஃபலூடா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த விடுதி ஓர் இந்துக் குடும்பத்துக்குச் சொந்தமானது என்று சொன்னார்கள். நான் கராச்சி விமானத்தில் பயணம் செய்தபோது, இந்தியாவில் புனித இடங்களில் தங்கள் யாத்திரையை முடித்துக்கொண்டு பாகிஸ்தானிலுள்ள தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த மூன்று இந்துக் குடும்பத்தினரைக் கண்டேன். அவர்கள் தங்களுடைய பயணம் சம்பந்தமான படிவங்களை நிரப்பிக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்ட போதுதான், அவை அனைத்தும் இந்து பெயர்கள் என்பதை அறிந்தேன்.

நான் கராச்சியிலிருந்து திரும்பியபோது முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை தரும் சில உற்சாகமிக்க கிறிஸ்தவ மத சந்நியாசினிகளைச் சந்தித்தேன். கோவாவிலுள்ள போம் ஏசுநாதர் மாதா கோவிலுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். கராச்சியிலுள்ள தமது கன்னிகா மடப் பள்ளியில் பல இந்துக் குழந்தைகள் படித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். மறக்க முடியாத அனுபவமாகக் கராச்சி விஜயம் அமைந்திருந்தது.

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline