Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நினைவலைகள்
மனதைக் கவர்ந்த சலவைக்கல் பாறைகள்
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeஆங்கில மூலம்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

1997 பிப்ரவரியில் ஜபல்பூரில் நடந்த அகில இந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி மாநாட்டில் 'விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்' பற்றிய கட்டுரை வாசிக்கச் சென்றிருந்தேன். அப்போது மிக அரிதான சலவைக்கல் பாறைகளைப் பார்க்க நேர்ந்தது. அந்த அனுபவத்தை அமெரிக்காவிலுள்ள கிராண்ட் கேன்யன் (Grand Canyon), ஆஸ்திரேலியாவிலுள்ள கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) போன்றவற்றுடன் ஒப்பிடலாம். 'பேடா கட்டம்' (Bheda Ghat) என்னும் இந்த இடம் ஜபல்பூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. நர்மதை நதியின் வழியில் உள்ள பாறைகளாலான இந்தக் குறுகிய இடத்தை ஓர் ஆடு எளிதில் தாவிக் கடந்துவிட முடியும். அந்தக் குறுகிய இடைவெளியில் நர்மதை மிகுந்த விசையோடு பாய்ந்து ஓடுவது வியப்பான ஒன்றாகும். இது எனக்கு ஆக்ஸ்ஃபோர்டை நினைவுபடுத்தியது. இதே காரணங்களுக்காகத்தான் அது ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். தேம்ஸ் நதி லண்டனில் மிக அகலமாக ஓடுகிறது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்டில் ஒரு சிறுபாலத்தின் வழியாக ஓர் எருது கடந்துவிடும் அகலத்துக்குக் குறுகிவிடுகிறது. அதனால்தான் Oxford என்று பெயர் ஏற்பட்டது. பேடா கட்டம் பற்றி மற்றொரு கதையும் உண்டு. அங்கே 'பேடா சுவாமி' என்ற துறவி வசித்து வந்ததாகவும், இறுதியாக அதே இடத்தில் அவர் சமாதி அடைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரது சமாதியும் அங்கிருக்கிறது.

வெள்ளைச் சலவைக் கற்களுடன், இளஞ்சிவப்பு, பச்சை, நீலம், சாம்பல், கறுப்பு, பழுப்பு நிறங்களிலும் சலவைக்கற்களைக் காணமுடிந்தது. பெளர்ணமி இரவில் அந்த இடம் மேலும் ஜொலித்தது. பாறைகளின் மீது பால் நிலவொளி படர்ந்து அதற்கு மேலும் அழகூட்டியது. ஆயிரம் பிரதி பிம்பங்கள் நீரில் தெரிந்தன.
உண்மையில் பேடா கட்டம் இயற்கையின் விநோதம். அங்குள்ள பாறைகளுக்கிடையில் படகுச் சவாரி செய்வது துணிகரமான செயலாகும். நாங்கள் எட்டுப் படகோட்டிகளால் வலிக்கப்படும் பெரிய படகில் புறப்பட்டோம். அவர்கள் நீரின் விசையை எதிர்த்துப் படகை ஓட்டிச் சென்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் போக அனுமதி. மிக அதிக ஆபத்தான பகுதிக்குப் போக அனுமதிப்பதில்லை. இந்தக் குறுகிய நீர்ப்பாதையில் செல்லும்போது, இரு புறத்திலும் உள்ள வசீகரமான சலவைக்கல் பாறைகள் பல வண்ணங்களிலும் தங்க நிறத்திலும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. வழக்கமான வெள்ளைச் சலவைக் கற்களுடன், இளஞ்சிவப்பு, பச்சை, நீலம், சாம்பல், கறுப்பு, பழுப்பு நிறங்களிலும் சலவைக்கற்களைக் காணமுடிந்தது. பெளர்ணமி இரவில் அந்த இடம் மேலும் ஜொலித்தது. பாறைகளின் மீது பால் நிலவொளி படர்ந்து அதற்கு மேலும் அழகூட்டியது. ஆயிரம் பிரதி பிம்பங்கள் நீரில் தெரிந்தன. நாங்கள் மெய்மறந்த நிலையில் இருந்தோம்.

பாறைகளின் அமைப்பு யானை, கார், கோபுரம், மனிதர்கள் என வெவ்வேறு வடிவங்களில் இருந்தன. ஒவ்வொருவரின் கற்பனைக்கேற்ப அத்தனை உருவங்களும் பாறைகளில் தெரிந்தன. இந்த இடத்தில் தான் புகழ்பெற்ற ஹாலிவுட் படம் Mackenna's Gold படமாக்கப்பட்டது. நாங்கள் சென்றிருந்தபோது அங்கு ஒரு ஹிந்திப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மேலே, வெகு தூரத்தில் நர்மதை நதி புகைசூழ்ந்த அருவியாக விழுகிறது. இதை மூடுபனி நீரோடை (Dhua Dhar) என்று அழைக்கிறார்கள். இங்கு உணவருந்த அழகான இரண்டு இடங்கள் உள்ளன. அங்கிருந்து அருவியைப் பார்த்துக் கொண்டே உணவருந்தலாம்.

அருவியிலிருந்து சில நுறு அடிகள் நடந்தால் சமவெளியை அடையலாம். இங்கு நதி அகலமாக விரிந்து அமைதியாகி முற்றிலும் தன் குணத்தை மாற்றிக் கொள்கிறது. ஒருவர் நதிக்கரையில் வெகுதூரம் நடந்து செல்லலாம். அல்லது கரையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து விடலாம். நம் பார்வைக்குத் தெரியும் தொலைவில் பல கோவில்களும் உள்ளன. அங்கிருக்கும் ஒரே ஓட்டல் மத்தியப்பிரதேச சுற்றுலாத் துறைக்குச் சொந்தமானது. அது குன்றின் உச்சியில் இருக்கிறது. நதியின் சத்தத்தை உற்றுக் கேட்பவர்களுக்கும் இயற்கையை நேசிப்பவர்களுக்கும் இது மிகவும் விரும்பத்தக்க இடம்.
சுறுசுறுப்பான கருப்புப் பூனைகள்

1999 பொதுத் தேர்தலின்போது சிக்கிம் மாநிலத் தேர்தல் பார்வையாளராக நான் இருந்தேன். அப்போது சிக்கிம் ஆயுதக் காவல்படை அதிகாரிகளையும், காவலர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களது தலைமை நிலையம் கேங்டாக்கின் புறநகர்ப் பகுதியில் இருந்தது. அங்கு கேப்டன்அக்ஷய் சச்தேவா அவர்களைச் சந்தித்தேன். அவர் பஞ்சாபில் பிறந்தவர். சிக்கிம் மக்களின் மொழியான நேபாளியில் பாண்டித்யம் பெற்றவர். தமது படைவீரர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1975ல் சிக்கிம் இந்தியாவின் இருபத்து இரண்டாவது மாநிலமாக அமைக்கப்பட்டபோது, சிக்கிம் ஆயுதக்காவலர் படை உருவாக்கப்பட்டது. இது மாநில ஆயுதத் தளவாட நிலையமாகச் செயல்பட்டு, தேவைப்பட்டால் சாதாரணக் காவலர்களுக்கும் ஆயுதங்களை வழங்குகிறது. அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறந்த கழகமாகச் செயல்படுகிறது. இங்கு சுங்க அதிகாரிகளுக்கும், வனக்காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கலகங்களை அடக்கவும், பயங்கரவாதிகளை எதிர்க்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியக் குற்றவியல் குற்ற நடைமுறைப் பிரிவு, இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை இங்கே காவல்துறை அதிகாரிகளுக்குக் கற்பிக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் புத்திக்கூர்மைமிக்க கருப்புப்பூனைப் படைக்கும் இங்கே பயிற்சி அளிக்கிறார்கள்.

1994ம் ஆண்டுத் தேர்தல் சமயத்தில் சிக்கிம் ஆயுதக் காவலர்களிடமிருந்து தபால் வாக்குகள் அரசியல்வாதிகளால் மிக உயர்ந்த விலைக்கு வாங்கப்பட்டன. சிக்கிம் போன்ற ஜனத்தொகை குறைந்த இடங்களில் ஒரு வாக்குச்சீட்டு நூறு ரூபாய்க்கும் விலைபோனது. இந்த சமயங்களில் ஐந்து, பத்து வாக்குகள் கூட வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாக இருந்தது. காவலர்கள் தமக்கெனச் சங்கம் அமைக்க அனுமதித்ததே அரசியலாகி, இது வாக்குச் சீட்டுகள் விற்பனைக்கான காரணமாகியது. அரசியல்வாதிகள் ஆயுதக் காவலர்களை அணுகி அஞ்சல்வழி வாக்குச் சீட்டுகளை விலைக்கு வாங்குவது சாத்தியமானது. இது பெரும் பிரச்சனைக்குள்ளாகி இறுதியில் நாற்பத்து மூன்று காவலர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். காவலர் சங்கமும் கலைக்கப்பட்டது.

இம்முறை தேர்தல் ஆணையத்தின் கட்டளைப்படி, அரசியல்வாதிகள் தபால் வாக்குச்சீட்டுகள் வாங்குவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. படைவீரர்கள் தங்களுடைய வாக்குகளைச் சுதந்திரமாகவும் நேர்மையுடனும் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரியவைக்க ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. திறந்த வெளியில் அனைத்துக் காவலர்களும் திரண்டிருந்த கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் அதுபற்றி விரிவாக விளக்கினார்கள். நானும் சிக்கிம் மக்கள்மீது எனக்குள்ள நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொண்டேன். கூட்டத்தில் விளக்கங்களைக் கேட்ட பிறகு அனைவரும் தங்கள் விருப்பப்படி வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.

இன்று சிக்கிம் ஆயுதக் காவலர்கள் சிறந்த கட்டுப்பாடுள்ள சக்தியாகவும், நாட்டின் வலிமையான கருப்புப் பூனைகளாகவும் பணிபுரிகின்றனர். 1994 சம்பவங்கள் பழங்கதையாகி மறக்கப்பட்டு விட்டன.

ஆங்கில மூலம்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline