Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
நினைவலைகள்
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை|பிப்ரவரி 2009|
Share:
கலாநிதி - துணைவேந்தர் ஆன கிராமத்து இளைஞர்

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

கரூருக்கு அருகிலுள்ள புஞ்சைப் புகளூர் என்ற சிறிய கிராமத்தில் 1948ம் ஆண்டில் பிறந்தவர் கலாநிதி. கலாநிதியின் தகப்பனார் ஒரு நகராட்சிப் பொறியியலாளர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அவருக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தனர். பின் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுநேரப் பொதுஜன சேவையில் ஈடுபட்டார். சிறுவன் கலாநிதி எப்போதாவது தான் அவரைப் பார்க்க முடியும். தன் குடும்ப விஷயங்களை அவர் கவனிப்பதும் அபூர்வமாகத்தான். குடும்பத்தின் சகல பொறுப்புகளும் கலாநிதியின் தாயாருடையதுதான். அவர் ஆன்மீகத்தில் மிகுந்த பற்றுள்ளவர். பக்தி, யோகம், வைத்திய முறையில் ஆழ்ந்த ஞானமுள்ளவர். அவருக்கு மூன்று குமாரர்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். பெரிதினும் பெரியவை பற்றியே சிந்திக்க அவர் தன் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தார். தனக்கு மிகப் பிரியமான யோகாசனம், தியானம், இந்திய வைத்தியம் ஆகியவற்றில் கலாநிதிக்குப் பயிற்சி அளித்தார்.

கலாநிதி தினமும் ஆறுமைல் தூரம் நடந்து சென்று கல்வி பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பொறியாளராக வர விரும்பினார். கோயம்புத்தூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். குடும்பத்தில் பண நெருக்கடி கடுமையாக இருந்ததால் கலாநிதியின் கல்லூரி வாழ்க்கை பரிதாபமாகவே இருந்தது. தமிழ்நாடு அரசின் கல்விக் கடனாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது. பணம் இன்றி, எவ்வித வழிகாட்டுதலும் இன்றி, தன்னை வருத்திக் கொண்டு கடுமையாக உழைத்து முதல் வகுப்பில் B.E. பட்டம் பெற்றார். பின்னர் வேலை தேடிச் சென்னை வந்தார். அங்கிருந்த உறவினர்கள் ஒருவரும் அவருக்குத் தங்க இடம் தரவில்லை. பின் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாதம் ரூபாய் இருநூற்றைம்பது கல்வி உதவித்தொகை கிடைத்தது. விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அஹமதாபத்தில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அடையாறு நதியில் படகு ஓட்டி முதுநிலைப் படகோட்டி ஆனார்.

முதுநிலைப் பட்டம் பெற்றதும் சிறிது காலம் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரிப் பயிற்சி பெறுபவராக இருந்தார். பின் சேலம் பொறியியல் கல்லூரியில் இணை விரிவுரையாளர் பதவி கிடைத்தது. அடுத்த பதினைந்து நாள்களில் அதைவிட்டு விட்டு சென்னையிலுள்ள ஏ.சி. தொழில் நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அதுவே வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியது.

அந்தச் சமயத்தில் ஏ.சி. கல்லூரி மிக முக்கியமான நிறுவனமாக விளங்கியது. கல்லூரியின் இயக்குனராக இருந்த முனைவர் கணேஷ் சங்கரதாஸ் லட்தா கட்டுப்பாடு, ஒழுங்கை நிர்வகிப்பவராக இருந்தார். அதனால் மாணவர்கள் ஆசிரியரிடம் மரியாதையுடன் நடந்து கொண்டனர். கலாநிதி மாணவர்களின் மனம் கவர்ந்தவரானார். தனது நண்பர்களுக்கு முன்னதாக 1978லேயே Ph.D. பட்டம் பெற்றார். கல்லூரியில் மாணவர்களிடையே ஒழுங்கு, கட்டுப்பாட்டை அமலாக்கவும், தனது உடல் தகுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்ளவும் தாமாகவே முன்வந்து என்.சி.சி. அதிகாரியானார். கல்லூரியில் ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாகக் கட்டுப்பாட்டுடன் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காக என்.சி.சி/என்.எஸ்.எஸ்/என்.எஸ்.ஓ. ஏதாவது ஒன்றில் சேர வேண்டுமென்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இக்கொள்கை பின்னர் துணைவேந்தர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களால் பல்கலைக்கழக மானியக் கமிஷனின் முன்வைக்கப்பட்டு, தேசியக் கொள்கையாகப் பரவியது. என்.சி.சி. அதிகாரி என்ற முறையில் மாணவர்கள் உதவியுடன் கண் தானத்திற்கும், கிராமப்புற சாலை அமைக்கவும், சைக்கிள் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்தார்.
அவர் அகில இந்திய நிர்வாக சபைகளில் தொழில் நுட்பக் கல்வியை புதிய மாட்சிமை பெறச் செய்தார். நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்கள் கல்வித்துறையில், பின்தங்கிய பகுதிகளில் வளர உதவினார்.
பின் கலாநிதி காமன்வெல்த் ஆய்வாளராக இங்கிலாந்து செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு அடுத்துள்ள படிப்பை முடித்தார். ஐரோப்பிய கலாசாரம், அதன் கல்வித்துறை முன்னேற்றம் ஆகியவற்றின் மீது அவர் கவனம் சென்றது. நாடு திரும்பியதும் பல்கலைக் கழக நிர்வாகம், ஆராய்ச்சித்துறை இரண்டிலும் பெரும் பங்களித்தார். பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துத் துறையில் பல சீரமைப்புகளைச் செய்தார். கடல் நீரிலிருந்து உப்பு நீக்கத்திற்கான உத்தியைக் கண்டறிந்தார். ஒரே நேரத்தில் பெறப்பட்ட உப்பினை பல்வேறு பொருளாக்கத்திற்கும் பவர்பிளாண்ட் அருகிலேயே உபதொழில் அலகுகள் அமைத்து, உப்பு, சோடியம், மாங்கனீசு போன்றவற்றை உற்பத்தி செய்யவும் முடியும் என்றும் அறிவித்தார். திரவரூப நைட்ரஜனைப் பயன்படுத்தி மிகக்குறைந்த தன்மையுள்ள குளிர்சாதன உருவாக்கத்திற்கு உதவியுள்ளார். திரவரூபக் காற்றினைத் தெளிப்பதன் மூலம் மாற்றுக் குளிர்சாதன வசதியைத் திறன் கொண்டதாக அமைக்க முடியுமெனக் கண்டறிந்தார்.

பல ஆண்டுக் காலம் குளிர்சாதனத் தொழில்நுட்பத்திலும் கிண்டியிலும் கழித்த பின்னர் டாக்டர். கலாநிதி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலில் சேர்ந்து அதன் தொடர்கல்வி அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றினார். நூற்றுக்கணக்கில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்கினார். இதனால் நேரடியாக கல்வியைப் பெற முடியாத தொழில் திறனாளர்கள் பலர் பயன்பெற்றனர். இரண்டு ஆண்டு பணிக்காலத்தில் அவர் அகில இந்திய நிர்வாக சபைகளில் தொழில் நுட்பக் கல்வியை புதிய மாட்சிமை பெறச் செய்தார். நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்கள் கல்வித்துறையில், பின்தங்கிய பகுதிகளில் வளர உதவினார். தொழில் நுட்பக்கல்வி வளர்ச்சிக்கு இவ்வரிய முறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பின், நாட்டில் முதல் நிலை வகிக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்கலைக்கழக வளர்ச்சிக்காகத் தீவிரமாக உழைத்தார்.

கலாநிதியின் மற்றொரு பேரார்வம் பிராணாயாமம் செய்வதும் அதைப்பற்றி விளக்க உரையாற்றுவதும்தான். அவரது தாயார் வழியே அவருக்கு யோகாப்பியாசம் அறிமுகமாகி இருந்தது. ஆனால் அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டபோது தான் அது பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பிராணாயாமம் பற்றிய விஷயங்களை பெங்களூர் விவேகானந்தா கேந்திரா மூலம் தெரிந்து கொண்டார். சிறுவயதில் படித்த 'திருமந்திரம்' நூலை மீண்டும் படிக்க ஆரம்பித்தார். பிராணாயாமப் பயிற்சி செய்வதுடன் அதன் விஞ்ஞான அடிப்படையையும் ஆராய்ந்தார். ஆய்வின் மூலம் தான் கண்டறிந்த கோட்பாடுகளை நிரூபிக்கும் நூல் ஒன்றையும் எழுதினார். இந்த நூலுக்காக ஸ்ரீலங்கா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் டி.எஸ்சி. பட்டம் வழங்கியது. இந்தக் கொள்கையை மேலும் வளர்க்க இதுபற்றி நூற்றுக்கு மேற்பட்ட விளக்க உரைகள் நிகழ்த்தினார். அவருக்கு பிராணயாமம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன் உயிர் மூச்சாகவும் இருந்தது.

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை
Share: 
© Copyright 2020 Tamilonline