Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
ஹரிமொழி
துரியோதனனைத் தூக்கிச் சென்ற தைத்யர்கள்
- ஹரி கிருஷ்ணன்|செப்டம்பர் 2020||(1 Comment)
Share:
அர்ஜுனன் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எய்ததும் அவனுக்கு தேவலோகத்தில் நடனமும் பாட்டும் கற்பித்த நண்பனான சித்திரசேனன் என்ற கந்தர்வன், "அர்ஜுனா! என்னைத் தெரியவில்லையா! நான் உன் நண்பன்" என்று சொன்னவாறே வெளிப்பட்டான். சித்திரசேனன் அர்ஜுனனுக்கு நண்பன் மட்டுமல்லாமல் தேவலோகத்தில் நடனமும் பாடலும் கற்பித்தவன்; அஸ்திரப் பயிற்சியும் அளித்தவன். பாண்டவர்கள் ஏகசக்ரபுரத்திலிருந்து பாஞ்சாலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக கங்கையைக் கடந்த சமயத்தில் அவர்களை வழிமறித்துப் போர் புரிகையில் அர்ஜுனனிடம் தோற்று அவனுக்கு எப்போதும் குறையாத நூறு வெள்ளைக் குதிரைகளைக் கொடுத்து, அர்ஜுனனுக்கு 'ஸ்வேதவாஹனன்' என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தவன். தனது நீண்டநாள் நண்பனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன், தன் அண்ணனான துரியோதனனை மனைவியரோடு கயிற்றால் கட்டித் தேரில் இழுத்துக்கொண்டு போனதன் காரணத்தைக் கேட்டான். சித்திரசேனன் சிரித்துக்கொண்டே 'இது இந்திரனுடைய உத்தரவு' என்று பதில் சொன்னான். "நிலை தப்பினவர்களான இந்தப் பாண்டவர்களையும் கீர்த்தியுள்ளவளான திரெளபதியையும் பரிஹஸிப்பதாக இவர்கள் வந்திருக்கிறார்கள்' என்கிற இவர்களுடைய கருத்தை அறிந்து தேவராஜன் என்னைப் பார்த்து, 'போ. துரியோதனனை மந்திரிகளுடன் கட்டிக்கொண்டுவா. யுத்தத்தில் தனஞ்சயனை ப்ராதாக்களுடன் நீ காக்கவேண்டும். அந்தப் பாண்டவன் உனக்கு ப்ரியனான தோழன். உனக்கு சிஷ்யனாகவுமிருக்கிறான்' என்று சொன்னான்." (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம் அத். 247, பக். 925)

"வனவாசத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற உங்களைக் கேலிசெய்து மகிழ்வதற்காக துரியோதனன், கர்ணனுடைய துர்போதனையின் பேரில் காட்டுக்கு வந்திருப்பதை அறிந்த இந்திரன், இவர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வருமாறு உத்தரவிட்டார். ஆகவே நான் இங்கே வந்தேன்" என்று தெரிவித்தான். அர்ஜுனன், சித்திரசேனனை பீமனுக்கும் நகுல சகதேவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அர்ஜுனன், "தர்மராஜருடைய உத்தரவுப்படி இவர்களை விட்டுவிடு" என்று கேட்டுக்கொண்டான். சித்திரசேனன் அதற்குச் சம்மதிக்கவில்லை. இறுதியில் அர்ஜுனன் அவனை தர்மபுத்திரரிடத்திலேயே அழைத்துச் சென்றான். தனக்கு எத்தனை துன்பம் விளைத்தவன் என்றாலும் தன்னுடைய இளையவனை எப்போதும் பொறுத்துக்கொள்பவரான யுதிஷ்டிரரும் அவர்களை அவிழ்த்து விட்டுவிடும்படி சித்திரசேனனிடத்தில் கேட்டுக்கொண்டார். சித்திரசேனனும் துரியோதனனையும் அவனுடைய மந்திரிகளையும் மனைவியரையும் விடுவித்தான்.

"துரியோதனா! இனி இப்படிச் செய்யாதே" என்று பலவிதமான நல்லுரைகளைச் சொன்ன தருமபுத்திரர் விடுவிக்கப்பட்ட அவர்களை அவர்களுடைய ரதங்களில் ஏறிச் செல்ல அனுமதித்தார். இந்த இடத்தில் வியாச பாரதம் இப்படிச் சொல்கிறது: "துரியோதனராஜன் அப்பொழுது தர்மபுத்திரரைத் தண்டனிட்டு, வியாதியுள்ளவன்போல் இந்திரிய சக்தியை இழந்தவனாகவும் (துக்கத்தால்) பிளக்கப்படுகின்றவனாகவும் நகரத்தைக் குறித்துச் சென்றான்." (மேற்படி இடம், பக். 927). யாரைப் பரிகசிப்பதற்காக வந்தானோ அவனுடைய காலில் விழவேண்டிய நிலை; அவனால் மன்னிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலை. துரியோதனனுக்கு இது எப்படிப்பட்ட வலியைத் தந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியதே இல்லை. பொறுக்க முடியாத அவமானத்தை அடைந்த துரியோதனன் துக்கமும் வெட்கமும் மேலிட குனிந்த தலை நிமிராமல் நகரத்துக்குத் திரும்பினான். வழியில் ஓரிடத்தில் பரிவாரங்களுடன் தங்கினான். அந்த இடத்துக்குக் கர்ணன் வந்தான். துரியோதனனைப் பார்த்ததும், (தான் அவனைக் கைவிட்டுவிட்டு களத்தைவிட்டே ஓடிப்போன போதிலும்) துரியோதனன் கந்தர்வர்களோடு போரிட்டு வென்று வந்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டு, அவனைப் புகழத் தொடங்கினான். "அவ்வளவு பராக்கிரமசாலிகளான கந்தர்வர்களோடு போரிட்டு நீயும் உன் தம்பியரும் வென்றது உங்களுடைய பாக்கிய விசேஷமே. நானோ, நீ பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே எல்லாக் கந்தர்வர்களாலும் எதிர்த்துத் தாக்கப்பட்டவனாகிப் பிளக்கப்படுகிற சேனையை நிலைநிறுத்துவதற்குச் சக்தியற்றவனானேன். பாணங்களால் உடம்பு காயப்படுத்தப்பட்டவனும் எதிர்த்து அடிக்கப்பட்டவனுமாகி யுத்தத்தைவிட்டு ஓடிவிட்டேன்." என்றான். (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம், அத். 248, பக். 929)

இது துரியோதனனுக்குத் தெரிந்த ஒன்றுதான். கர்ணனே சொல்வதைப் போல, துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்த போதேதான் அவன் களத்தைவிட்டு ஓடினான். பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் யாராக இருந்தாலும் இத்தகைய புகழ்ச்சியுரை கேட்டுக் கோபப்படுவார்கள். ஆனால் துரியோதனனோ, "நடந்ததை அறியாத காரணத்தால் நீ இப்படிச் சொல்கிறாய். ஆகவே எனக்கு உன் சொற்கள் கொஞ்சம்கூட வருத்தத்தை ஏற்படுத்தவில்லை" என்று தொடங்கி, தானும் தம்பியரும் எதிர்த்தும் கந்தர்வர்களிடம் தோற்றுப் போக, அவர்கள் தங்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டி, தேரோடு இழுத்துக்கொண்டு போனதைச் சொன்னான். இறுதியில் அர்ஜுனனும் பீமனும் வந்து தங்களை விடுவித்ததைதையும், தருமபுத்திரன் சொன்னதன் பேரில் சித்திரசேனன் சங்கிலிகளை அவிழ்த்துவிட்டதையும் சொன்னான். அர்ஜுனனும் சித்திரசேனனும் குசலம் விசாரித்துக்கொண்டதைச் சொன்னான். அவனால் பொறுத்துக்கொள்ளமுடியாத ஒன்றல்லவா அது! வெட்கமும் அவமானமும் பொங்க, தான் விடுவிக்கப்பட்ட விதத்தைக் கர்ணனுக்குச் சொன்னான். கணப்போதில் சுதாரித்துக்கொண்ட கர்ணன், "ஆமாம். அவர்கள் உன்னுடைய அடிமைகள்தானே! மன்னனுக்கு ஒரு துயர் நேரிட்டது என்றால் அவனுடைய உதவிக்கு வரவேண்டியது குடிமக்களுக்கும் அடிமைகளுக்கும் கடமைதானே" என்றெல்லாம் பேசி துரியோதனனைச் சமாதனப்படுத்த முயன்றான்.

அதற்குச் சற்றும் பலனில்லாமல் போயிற்று. தான் பீமனாலும் அர்ஜுனனாலும் விடுவிக்கப்பட்ட அவமானத்தை துரியோதனனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கர்ணனும் துச்சாதனனும் எவ்வளவோ சமாதனம் சொல்லியும் அவனால் அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிராயோபவேசம் செய்யத் தீர்மானித்தான். ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் 'சாகும்வரை உண்ணாவிரதம்' என்று இக்காலங்களில் அறிவிக்கிறார்களே, அதுதான் பிராயோபவேசம். தர்ப்பைப் புல்லை விரித்து அமர்ந்து சாவு நேரும் வரையில் உண்ணாமல் இருப்பது. அரசுப் பொறுப்பை துரியோதனன், தம்பியான துச்சாதனனிடத்தில் ஒப்படைத்தான். "நான் பகைவரின் நகைப்புக்கு ஆளாகியிருக்கிறேன். ஆகவே உண்ணாமல் இருந்து உயிரை விடப் போகிறேன். நீ அரசனாக இரு. கர்ணனாலும் சகுனியாலும் பாதுகாக்கப்பட்டதும், செல்வ வளம் நிரம்பியதுமான அரசை நீ ஆள்" என்று தொடங்கி, இன்னாரைப் பாதுகாத்து வா, இப்படிச் செய், இதைச் செய்யாதே என்று விரிவாகச் சொன்னான். துச்சாதனனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அண்ணனுடைய காலைப் பிடித்துக்கொண்டு "அண்ணா, கருணை செய்யவேண்டும், கருணை செய்யவேண்டும்" என்று கதறினான். கர்ணன் இருவரையும் சமாதானப்படுத்தி, முன்போலவே, "பாண்டவர்கள் சூதுப் போரில் உனக்கு அடிமைகளாகி பன்னிரண்டு வருடங்களாகின்றன. அந்த அடிமைகள் தங்கள் கடமையைச் செய்தார்கள். இதில் வருத்தப்படவோ அவமானமடையவோ என்ன இருக்கிறது" என்று மீண்டும் சொன்னான்.
இந்தச் சமயத்தில் சகுனி இடையிட்டான். சிலசமயங்களில் சகுனியிடம் தென்படும் நியாயமான போக்கு ஆச்சரியப்பட வைக்கும். எப்போதோ ஒருசில சமயங்களிலேனும் சகுனியிடம் தென்படும் நியாயமான போக்கைக்கூட கர்ணனிடம் காண முடியாது. அவன் துரியோதனனைப் பார்த்து, "இப்போது என்ன நடந்துவிட்டது என்று இப்படி நடந்துகொள்கிறாய்? உன்னுடைய இந்தச் செய்கை விபரீதமாக இருக்கிறது. தயவுசெய்து உயிரை இழக்காதே. பாண்டவர்கள் உனக்குச் செய்த நன்மையை நினை. ஸந்தோஷமுள்ளவனாக நன்றியை நினைப்பாயாக. பார்த்தர்களுக்கு* ராஜ்யத்தைக் கொடு. கீர்த்தியையும் தர்மத்தையும் அடைவாயாக. இந்தக் காரியத்தை நீ நன்றாக அறிந்திருந்தால் நன்றி மறந்தவனாக மாட்டாய். பாண்டவர்களோடு ஸஹோதர ஸ்நேகத்தைச் செய்துகொண்டு அவர்களை நல்ல நிலைமையில் இருக்கும்படிச் செய்து அவர்களுக்குத் தங்கள் பிதாவைச் சேர்ந்ததான ராஜ்யத்தைக் கொடுத்துவிடு. பிறகு ஸுகத்தை அடைவாய் என்று கூறினான்." [*பார்த்தர்களுக்கு: தர்மன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரையும் குறிக்கும் பெயர் என்றாலும் இந்த இடத்தில் ஐவரையும் குறிக்கும்] (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம், அத். 252, பக். 937) ஆச்சரியமான இடம். இதைக் கிஸாரி மோஹன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: . When thou shouldst joy and reward the Pandavas, thou art grieving, O king? Indeed, this behaviour of thine is inconsistent. Be cheerful, do not cast away thy life; but remember with a pleased heart the good they have done thee. Give back unto the sons of Pritha their kingdom, and win thou both virtue and renown by such conduct. By acting in this way, thou mayst be grateful. Establish brotherly relations with the Pandavas by being friends, and give them their paternal kingdom, for then thou wilt be happy!'"

துரியோதனன் செவியில் அது விழவா போகிறது! தன் காலில் விழுந்திருந்த துச்சாதனனைத் தூக்கி நிறுத்தி அவனை அன்புடன் தழுவிக்கொண்டு உச்சி மோந்தான். "எனக்கு எல்லாப் பற்றும் இற்றுவிட்டது. என் உறுதியைக் குலைக்க முயலாதீர்கள். என் விருப்பப்படி விட்டுவிடுங்கள். நீங்கள் நகரத்துக்குத் திரும்புங்கள்," என்று சொன்னான். "நீ இல்லாமல் நாங்கள் திரும்பமாட்டோம்" என்று சகுனியும் கர்ணனும் மறுத்தார்கள்.

வனத்தில் இவ்வாறெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை தைத்யர்கள்--அல்லது அசுரர்கள்--அறிந்தார்கள். தேவர்களால் வெல்லப்பட்டு பாதாளத்தில் வசிக்கிற தங்களுடைய தரப்பை முன்னிலைப்படுத்தும் துரியோதனன் அழிந்தால், அது தங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தார்கள். பாரதம் சொல்கிறது: "அவனுடைய அந்த நிச்சயத்தை அறிந்து, பாதாளத்தில் வஸிக்கிறவர்களும் பயங்கரமான உருவமுள்ளவர்களும் முற்காலத்தில் தேவர்களால் ஜயிக்கப்பட்டவர்களுமான அந்த தைத்யர்களும் தானவர்களும் தங்களுடைய பக்ஷத்திற்கு நாசமுண்டாகும் என்று அறிந்து துரியோதனனை அழைப்பதற்காக அப்பொழுது பல அக்னிகளால் செய்வனவான நவகுண்டீ (navakuntee) முதலிய கிரியைகளைச் செய்தார்கள். மந்திரங்களில் தேர்ந்தவர்கள் உபநிஷத்துக்களால் சொல்லப்பட்டவையும் மந்திர ஜபங்களோடு கூடினவையுமான அந்த எல்லாக் கிரியைகளையும் பிருஹஸ்பதியினாலும் சுக்கிராசார்யராலும் சொல்லப்பட்டவையும் அதர்வணவேதத்தில் சொல்லப்பட்டவையுமான மந்திரங்களால் அப்போது செய்தார்கள்." (வனபர்வம், கோஷயாத்ராபர்வம், அத். 252, பக். 939).

யாகத்தின் முடிவில் க்ருத்யை எனப்படும் ஒரு பெண்பேய் கொட்டாவிவிட்டுக்கொண்டே தோன்றியது. (க்ருத்யை என்றால் ஏவியதைச் செய்பவள் என்று பொருள். அசுரர்களில் கிங்கரர் என்று சொல்வதுபோல, 'என்ன செய்யவேண்டும்' என்பதை மட்டும் கேட்கின்ற, 'ஏன் செய்யவேண்டும்' என்று கேட்காத பேய் இது.) அசுரர்களைப் பார்த்து, "நான் என்ன செய்யக் கடவேன்" என்று கேட்டது. "தைத்யர்கள் மிகமகிழ்ந்த மனத்தோடு க்ருத்யையைப் பார்த்து, 'பிராயோபவேசம் செய்திருக்கிற திருதராஷ்டிர புத்திரனான துரியோதன ராஜனை இங்கே கொண்டு வா" என்று சொன்னார்கள். க்ருத்யையானது, 'அப்படியே' என்று பிரதிஜ்ஞை செய்து புறப்பட்டது." (மேற்படி அத்தியாயமும் பக்கமும்) ஒரே நிமிடத்தில் துரியோதனன் இருக்குமிடத்தை அடைந்து அவனை எடுத்துக்கொண்டு பாதாளத்துக்குத் திரும்பியது. இரவு நேரத்தில் நடந்ததால் துரியோதனனைச் சுற்றியிருந்த மற்றவர்கள் இதனை அறியவில்லை.

மஹாபாரதத்தின் authentic versions என்று அறியப்படுகிற எல்லாப் பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ள இந்தப் பகுதியை மற்ற பதிப்புகளிலும் சரி; காலட்சேபம் போன்ற பிரசங்கங்களிலும் சரி யாரும் சொல்வதில்லை. துரியோதனனிடம் அசுரர்களின் தலைவன், கர்ணனை (அதற்குக் கொஞ்சகாலம் முன்னால் கொல்லப்பட்ட) நரகாசுரனுடைய ஆத்மா அடைந்திருக்கிறது என்பது உட்பட ஆச்சரியமான பல விவரங்களை எடுத்துச் சொல்லி, அவனை தைரியப்படுத்துகிறான். நரகாசுரனுடைய ஆத்மா கர்ணனை அடைந்திருப்பதால், இந்திரன் அவனுடைய கவச குண்டலங்களைப் பெறப்போகிறான் என்று பல விவரங்களைச் சொல்கிறார்கள். கர்ணன் தன் கவசகுண்டலங்களை இந்திரனுக்குக் கொடுப்பதற்கு முன்னதாகவே அவன் கொடுக்கப் போகிறான் என்ற விவரம் துரியோதனனுக்குத் தெரிந்திருந்தது. இறுதியில் துரியோதனன், உயிரைவிடும் எண்ணத்தைக் கைவிடுகிறான். கர்ணன் சிலகாலம் கழித்து, 'அர்ஜுனனைக் கொல்லும் வரைக்கும் இன்னின்னது செய்ய மாட்டேன், யார் என்ன கேட்டாலும் மறுக்காமல் கொடுத்துவிடுவேன்' என்றெல்லாம் சபதம் செய்கிறான். இந்தச் சபதம் அவனுடைய கவச குண்டலங்களை இந்திரனுக்கு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline